Serial Stories கன்னம் வைத்த கள்வனே

கன்னம் வைத்த கள்வனே – 71

    71

வீடு முழுக்க பரவி உலர்ந்து கொண்டிருக்கிறது
பயங்களும் …தயங்கங்களும் …
உள் நுழைவேனென அடம் பிடிக்கும்
வானுக்கு மறுத்து …சன்னல் சாத்துகிறேன் .
என்  ஈர மனதில் பதிந்து விட்ட
உன் பாதசுவடுகளை அழித்து விட்டு
போய் விட டா ராட்ச்சா …




நடராசன்தான் …கலைவாணியுடன் சேர்ந்து சாமியாடி முன் நின்றிருந்தார் .

சாமியாடிகள் சுடுகாட்டு சாம்பலில் உருண்டு புரண்டு எழுந்து வந்து பயமுறுத்தும் தோற்றத்தில் நின்றிருந்தனர் .இரண்டு பேர் கையில் எலும்பு துண்டு கூட வைத்திருந்தனர் .சுற்றியிருந்த கூட்டம் பய பக்தியோடு அவர்களை கையெடுத்து கும்பிட்டபடி பார்த்தபடி இருந்தனர் .

” உன் அப்பா சென்னைக்குத் தானே போயிருந்தார் . எப்போது வந்தார் மகரா ..? “

” இப்போதான் வந்திருப்பார் போல .ஆனால் குறி கேட்கிறாரே …? ” ஜோதி ஆச்சரியமாக பார்த்தாள் .

” ஏன் மகரா …உன் அப்பா இதற்கு முன் குறி கேட்டதில்லையா …? “

” இல்லை .அதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கை கிடையாது …இப்போது எப்படி …? ” ஜோதி வேகமாக முன்னால் நடக்க போக …அவள் கைகளை பிடித்து இழுத்தான் ஹர்சவர்த்தன் .

” எங்கே ஓடுகிறாய் …? நான் இங்கேதானே இருக்கிறேன் . இங்கேயே நில் .இங்கிருந்தே உன் அப்பா பேசுவது கேட்கிறது …”

” நீங்கள் இருந்தால் ..நானும் இங்கேதான் இருக்க வேண்டுமா …? “

” நிச்சயமாக …உன்னை நகர விட மாட்டேன் …” அவள் தோள்களை அழுத்தி பிடித்தான் .

” முடியாது .நான் அப்பாகிட்ட போறேன் …” திமிறியவளின் தோள் பட்டையை வலிக்கும்படி அழுத்தினான் .

” இங்கே இரு என்றேன் .வீட்டிறகு போவதாக சொல்லி விட்டு திடுமென அவர்கள் முன் போனால் எப்படி …?”




இந்த நியாயத்தில் திமிறல் அடங்கினாலும்   முரண்டும் மனதுடன்தான் ஹர்சவர்த்தனை முறைத்தபடி  அப்பாவை கவனக்கலானாள் ஜோதி .அவள் தோள்  மேல் கிடந்த அவன் கரத்தை எடுக்க முயல , இன்னமும் அழுத்தமாக பதிந்தன அக்கரங்கள் .

நடராசனின் பேச்சை கவனித்தபடி இருந்த கரங்கள் மேலும் மேலும் அவள் தோளில் இறுகி காயப்படுத்தின .அவற்றிலிருந்து விடுபட முயன்றும் ஜோதியால் முடியவில்லை .

நடராசனும் , கலைவாணியும் ….அவர்களது மகள்களின் எதிர்கால வாழ்வை பற்றி குறி கேட்டுக் கொண்டிருந்தனர் .

நிறைந்த செல்வமும் , நீண்ட வாழ்வுமாக வாழ்வார்களென கிருபாகரன் – சுவாதிக்கு ஆரூடம் சொல்லி , ஆசீர்வாதமும் செய்தார் சாமியாடி .

இப்போது நடராசன் தனது இரண்டாவது மகளை பற்றிக் கேட்க …ரத்தச் சிவப்பாக உருண்ட விழிகளுடன் அவரை பார்த்தார் சாமியாடி .

” இல்லாததாக இருந்த ஒன்றை இருப்பதாக்கி வைத்திருக்கிறாய்  ,
இல்லாமல் போக அது …உறவு தேடி மாறும் அது …
உன் உள்ளங்கை ரேகை கூட உருவிழந்த்தென   தோணும் அப்போது …ம் …போ …” சாமியாடி புறங்கையை வீசினார் .

” சாமி என்ன சொல்றீங்க ஒண்ணும் புரியலை …” கலைவாணி கை கூப்பினாள் .

” புரியும் …புரியும் போ .காலம் வந்துடுச்சு …” சாமி உறுமினார் .

” சாமி நான் என் மகள் வாழ்க்கையை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் …” நடராசன் விடாமல் மீண்டும் கேட்டார் .

” போராடி…போராடி …வாழ பிறந்தவள் அவள் . தன்னை தானே மீட்டெடுக்கவே பெரிய அளவில் போராடும் வாழ்க்கை அவளுக்கு .அவ்வளவுதான் போ …போ …”




” சாமி நீங்க ஒரு நல்ல வார்த்தை சொல்வீங்கன்னு வந்தால் …” கலைவாணி மனம் கலங்க கையெடுத்து கும்பிட , திருநீறை அள்ளி இருவர் நெற்றியிலும் பூசிய சாமியாடி …

” நகருங்க …நகருங்க …” என்றபடி சாமியாட பின்னால் நின்றவர்கள் குறி கேட்க நெருக்க நடராசனும் , கலைவாணியும் நகர்ந்து வந்தனர் .அவர்கள் முகம் சோபையிழந்து கூம்பியிருந்த்து .

” அ…அவர் …என்னை பற்றியா சொன்னார் ஹர்சா …? ” ஜோதியின் குரல் நடுக்கமாக ஒலித்தது .

ஹர்சவர்த்தன் ஜோதியின் தோள்களை அணைத்து தன்னுடன் சேர்த்துக் கொண்டான் .

” ப்ச் .இதையெல்லாம் நம்பாதே மகரா .இதெல்லாம் சும்மா …”

” ஏதேதோ சொல்கிறாரே …? “

” நான்தான் நம்பாதே என்றேனே .வா ..போகலாம் …” அவள் தோள் பிடித்து திருப்ப முயன்றான் .

” இல்லை ஹர்சா .இவர்களுடைய பூஜையை இவ்வளவு நேரம் நாம் பார்த்தோமே .முழுதுமாக பொய்யென்று இவர்களை ஒதுக்கி விட முடியாது ….”

” ஒதுக்க முடியவில்லையென்றால் அவர்கள் சொன்னதை தலை மேல் சுமந்து கொண்டே அலைந்து கொண்டிரு.எனக்கென்ன வந்த்து …? “

விட்டேத்தியாய் பேசியவனை வெறித்தாள் .அவன் கைகளை உதறிவிட்டு திரும்ப முனைந்தாள் .

” எங்கே போகிறாய் …? “

” விடுங்க .நான் அப்பாகிட்ட போறேன் …”

” பல் முளைக்காத பப்பாவா நீ …ஓடிப்போய் அப்பா தோள்களில் ஏறிக்கொள்ள …? ” அவள் கை விரல்களுக்குள் விரல் கோர்த்து நெறித்தான் .




” என் அப்பா .என் அம்மா .என் குடும்பம் .இதில் நீங்கள் தலையிடாதீர்கள் …” அவன் நெறித்த விரல்களின் வலு தாங்காமல் பேசினாள் .

நிதானமாக அவள் கண்களுக்குள் கூர்ந்தான் .” அச்சா …” நக்கலும் நையாண்டியுமாக சொன்னான் .

பின் அவள் கையை உதறினான் .அவள் தோள்களை பிடித்து தள்ளினான் .

” ஏய் ….போடி .உன் அப்பாகிட்டேயே போ.  இன்னும் இங்கேயே நின்ன மூஞ்சியை பேத்துடுவேன் .போ …போடி …” தடுமாறி நின்றவளை மீண்டும் வேகமாக தள்ளினாள் .

ஜோதி கால்கள் பின்னி கீழே விழ , அதனை கண்டு கொள்ளாமல் பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்தபடி ஸ்டைலாக நடந்து போய்விட்டான் .

அவனது வேக தள்ளலில் அப்படியே தரையில் அமர்ந்து விட்ட ஜோதி உடல் பதற அவனது செய்கையை நம்ப முடியாமல் பார்த்தாள் . இவன் கொஞ்ச நேரம் முன்பு காட்டிய அனபும் , அனுசரணையும் …இப்போது காட்டும் கோபமும் , ஆவேசமும் …ஒன்றும் புரியவில்லை அவளுக்கு .

அதற்குள் தூரத்தில் தளர்ந்த நடையுடன் கலைவாணியும் , நடராசனும் வர வேகமாக எழுந்து நின்று கொண்டாள் .

” அம்மா …அப்பா …” ஆதரவான குரலில் அழைத்தாள் .

” ஜோதிம்மா இங்கேயாடா இருக்கிறாய் …? ” இருவரும்  வேகமாக அவளருகே வந்தனர் .

” நீ வீட்டிற்கு போகவில்லையா ஜோதி ..? “

” போனேன்மா .அங்கே தூக்கம் வரலை .அதுதான் திரும்ப இங்கே வந்தேன் .நீங்க குறியெல்லாம் கேட்டு முடிச்சாச்சா …? ” சோர்ந்து கிடந்த அவர்கள் முகத்தை பார்த்தபடி கேட்டாள் .

” அ…அது ..முடிஞ்சதும்மா .நீ எப்போ வந்தாய் …? ” நடராசனின் குரலில் பதட்டம் தெரிய ஜோதி புன்னகைத்தாள் .

” இதோ இப்போதுதாம்பா வந்து நிற்கிறேன் . நீங்கள் என்னப்பா இந்த வருடம் குறியெல்லாம் கேட்கறீர்கள் …? உங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதே …”

” இல்லைம்மா .நான் ஒன்றும் கேட்கவில்லை .உன் அம்மாதான் …ஏய் கண்டதையும் கேட்காதடி …இதெல்லாம் பொய் .உன். அம்மாவிற்கு அறிவே கிடையாதும்மா .நீ வா நாம் வீட்டிற்கு போகலாம் …”




தன் தோள்களை அணைத்த தந்தையின் கையில் நடுக்கத்தை உணர்ந்தாள் ஜோதி .ஆதரவாக அந்த கையை பற்றிக்கொண்டாள் .மூவரும் வீடு நோக்கி நடந்தனர் .

” நம்ம  வீட்டு ஆளுங்களையெல்லாம் எங்கேம்மா …? “

” அவர்கள் அங்கே அந்தப் பக்கம் குறி கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் …”

” அவர்கள் மெதுவாக வரட்டும் .வாங்க நாம் போகலாம் ” அம்மா , அப்பா இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு நடந்தாள் ஜோதி .

” அப்பா  எனக்காக ஒன்று செய்வீர்களா …? “

” என்னம்மா …? “

” அ …அது ..வ..வந்து , இந்த கல்யாணத்தை …மஹிந்தருடனான கல்யாணத்தை நிறுத்தி விடுகிறீர்களா …? “

கலைவாணியும் , நடராசனும் நடப்பதை நிறுத்திவிட்டனர .அதிர்ச்சியாக அவளை நோக்கினர் .

ஜோதி நடப்பதை நிறுத்தவில்லை .

” நடந்துட்டே போசலாம் வாங்க .இதோ நம்ம வீடு வந்துடுச்சு ….” வீட்டு  வாசலில் நுழைந்தாள் .

நடராசனும் , கலைவாணியும் சோர்ந்து திண்ணையில் அமர்ந்தனர் .

” எனக்கு அந்த மஹிந்தரை பிடிக்கவில்லைப்பா .உங்களிடம் எப்படி சொல்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன் .இப்போது சொல்லும் தைரியத்தை நம் சாமி கொடுத்து விட்டது .எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்பா ப்ளிஸ் …”

” ஜோதிம்மா …” கண் கலங்க ஏதோ சொல்ல வந்த கலைவாணியை கை பற்றி தடுத்தாள் .

” நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்மா .எந்த விளக்கமும் எனக்கு கொடுக்க வேண்டாம் .இந்த கல்யாணம் மட்டும் வேண்டாம் .அவ்வளவுதான் …”

கலைவாணி மகளை இழுத்து அணைத்துக் கொண்டாள் . ” தேவதை பெண்ணடி நீ …” அழுகையோடு மகளை கன்னத்தில்  முத்தமிட்டு  கொஞ்சினாள் .

” ஏய் கலை கிடைச்ச சந்தர்ப்பத்தில் உன்னை தேவதைன்னு சொல்லிக்கிற பார்த்தியா ….? பார்த்தீங்களாப்பா உங்க பொண்டாட்டியோட சுய தம்பட்டத்தை …? தேவதையோட பொண்ணாம் நான்  ” ஜோதியின் கிண்டலில் இருவரும் சிரித்தனர் .




அதை மனநிறைவோடு பார்த்த ஜோதி என் திருமணம் நின்றுவிட்டதை எனக்கு சொல்லும் கஷ்டம் இனி உங்களுக்கு இல்லை…இது இப்படியே நான் நிறுத்தியதாகவே இருந்துவிட்டு போகட்டும் …மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் .

இருவர் கைகளையும் பிடித்துக் கொண்டவள் ” தாத்தா , பாட்டி , மாமா , அத்தைக்கெல்லாம் இந்த விசயம் தெரிய வேண்டிமென்ற கட்டாயம் இல்லைப்பா .இதை இப்படியே விட்டு விடுவோம் ….” என சொல்லி மேலும் அவர்கள் மன பளுவை குறைத்தாள் .

இருவரும் கலங்கிய கண்களுடன் அவளையே பார்த்தபடி இருந்தனர. .

” சரி …சரி அழுத து போதும் வாங்க உள்ளே போகலாம் …” இருவர் கைகளையும் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்

குடும்பத்தில் எல்லோரும் இன்னமும் சாமியாடிகளை வேடிக்கை பார்த்தபடி அங்கே இருக்க , இவர்கள் மட்டும் பேசியபடி நடந்து வந்திருந்தனர் .வீட்டு வாசலில் நுழையும் முன் பெற்றவர்கள்   இருவரும்  சோர்ந்து திண்ணையில் அமர்ந்து விட ஜோதி அவர்களை ஆறுதல் படுத்தி உள்ளே அழைத்து போனாள் .

சிறு நெருடல் ஒன்று அவள் மனதை உறுத்தியபடி இருந்த்து .கொஞ்ச நேரத்திலேயே வீட்டினர் அனைவரும் வந்து விட , எல்லோருமாக படுக்க சென்றனர் .ஏதோ ஓர் வித அமைதியில் வீடு இருப்பது போல் ஜோதிக்கு தோன்றியது .இது புயலுக்கு முன்னான அமைதியா …?

ப்ச் எதற்கு வீணான கற்பனை ….ஜோதி தூங்க முயன்றாள் .அவள் போனில் மெசேஜ் சத்தம் வந்த்து .இந்நேரத்தில் யார் …? எடுத்து பார்த்தாள் .

ஹர்சவர்த்தன் தான் .”வீட்டின் பின்பக்கம் வா ..” உத்தரவாக மெசேஜ் பண்ணியிருந்தான் .

என்னை கீழே தள்ளி விட்டு போனவன்தானடா நீ …நான் ஏன் வரணும் …?? இவனுக்கு இவன் எதிர்பார்ப்பெல்லாம் புள்ளி மாறாமல் நடக்கனும் .இல்லைன்னா இப்படித்தான் அராஜகம் பண்ணுவான்.ராட்ச்சன்…..

” முடியாது …” என மெசேஜ் அனுப்பினாள் .

” ஏய் வாடி .உன்கிட்ட முக்கியமாக பேசனும் …”  ஹர்சவர்த்தனின் அடுத்த மெசேஜ் உரிமையான அதட்டலை சுமந்து வந்த்து .

அட …கட்டின பொண்டாட்டி கிட்ட மாதிரி அதிகாரத்தை பார் …நினைத்துவிட்டு ,

” முடியாதுடா ….போடா …டா..டா…டா…” என மெசேஜ் அனுப்பி விட் டே அதை உணர்ந்தாள் .கட்டின பொண்டாட்டி மாதிரியா …அப்படியா நினைத்தான் …

அவன் நினைத்தானா ….? அவளாக நினைத்துக் கொண்டாளா ….?




ஜோதியினுள் சுடுகாட்டில் அவன் நடந்து கொண்ட விதங்கள் , காட்டிய நெருக்கங்கள் நினைவு வர உடல் சிலிர்த்தது .உண்மையிலேயே என் பயத்தை போக்க வேண்டுமென்றுதான் அப்படி நடந்து கொண்டானா …சிலிர்ப்போடு குழப்பமும் வந்து சேர்ந்து கொண்டது .

” எத்தனை ” டா ” ..நீ நேரில் வாடி .உன்னை வச்சுக்கிறேன் …” அழைப்பு விடுத்த அவனது அடுத்த மெசேஜ் இதமாக ஜோதியினுள் இறங்கியது .

பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் தூக்கம் கலைக்காது மெல்ல எழுந்து பின்வாசலை அடைந்தாள் .அது முன்பே திறந்திருந்த்து .ஹர்சவர்த்தன் பின்னால் நின்றிருந்தான் .

மெலிதான அவளது கொலுசு சத்தத்தில் திரும்பியவன் தீர்க்கமாக அவளை பார்த்தான் .

” மஹிந்தர் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தியது உன் தாத்தா , மாமாவிற்கெல்லாம் தெரியுமா மகரா …? “

குறுவாள் ஒன்றை அவன் தன் கழுத்தில் பதித்து நிற்பதாக உணர்ந்தாள் ஜோதி .

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!