Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 13

13

 

 

” நாம் சேது மாமா வீட்டுக்கு போய்விடுவோம் தானே சிவா …? ” நீலவேணியின் பேச்சு கேள்வியாக இருந்தாலும் , அதனுள் இருந்த்து  …இப்படித்தான் எனும் அறிவிப்பாகத்தான் இருந்த்து .இப்படி கூறு எனும் கட்டளையாக இருந்த்து .சிவபாலன் தாயை கவனிக்காமல்  ஜீவிதாவை பார்த்தபடியே நின்றான் .

” டேய் …சிவா , இங்கே பார் .உன் அத்தை என்னை …நம்மை எப்படி பேசுகிறார்கள் பார் .இனியும் நாம் இங்கே இருக்கத்தான் வேண்டுமா ….? “

” இல்லை ….வேண்டாம் …” கம்மிய குரலில் இதை சொன்ன சிவபாலனின் பார்வை ஜீவிதாவை விட்டு நகரவில்லை .




” அப்போ நாம் கிளம்பிடுவோம் …வா ..சேது மாமா வீட்டுக்கு போகலாம் ….”

” நீலா …நீ என்ன சொல்ற …? யோசித்து பேசு …,” சபாபதி தங்கையை அதட்டினார் .

” இப்போதாங்க உங்க தங்கச்சியோட சுயரூபம் தெரியுது .சொத்துக்களை நாம் பிரித்துக்கொண்டு ஒரு வாரம்தான் ஆகிறது .உங்கள் அருமை தங்கை , அவள் இன்ஜினியர் மகனுடன் சேர்ந்து போட்ட கணக்கில் அந்த பக்க சொத்து அளவு கூடிடுச்சு போல .அதனால்தான் அம்மாவும் , மகனும் அங்கிட்டு கிளம்பி விட்டார்கள் ….”

” நீ வாயை மூடுடி …அவளை நோகடித்து இந்த நிலைக்கு கொண்டு வந்த்தே நீதான் …”




” ஆஹா …இந்தம்மா ஒண்ணுந்தெரியாத பப்பா …இவளை நான் நோகடிச்சிட்டேன் .இவளை என்று நம்ம வீட்டுக்குள்ளே ஏத்துனீங்களோ …அன்னைக்கே நம்ம குடும்பத்தோடு சீரழிவு ஆரம்பமாயிடுச்சு .  நீங்க வேணும்னா பாருங்க , இவள் நம் குடும்பத்தை மொத்தமாக ஓய்க்காமல் ….” பேசிக்கொண்டே போன சௌதாமினியின் கன்னத்தில் அறைந்தார் சபாபதி .

” குடும்பத்தை சீரழிக்கிறது நீதான்டி .நீ முதலில் வீட்டை விட்டு வெளியே போ ….” அவள் கழுத்தை பிடித்து வெளியே தள்ள முயல , நீலவேணி இருவருக்குமிடையே வந்தாள் .

” என்னண்ணா இது …? வயதிற்கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள் .உங்களை போல் சேதுவும் என் அண்ணன்தானே .நான் அவர் வீட்டில் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு வருகறேன் .சிவா கிளம்புடா …” மகனின் பக்கம் திரும்பனாள்.

” நான் ஜீவா கூட பேசனும்மா …” சுற்றிலும் நடந்து கொண்டிருந்த இத்தனை கலாட்டாக்களிலும் பாதிக்க படாமல் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றிருந்தனர் சிவபாலனும் , ஜீவிதாவும் .

” அவள் கூட உனக்கென்ன பேச்சு …? ” வேகமாக வந்த சௌதாமினி , சபாபதியின் பார்வையில் பின்வாங்கினாள் .

” வா ஜீவா …” மாடியேறிய சிவபாலன் பாதி படியில் நின்று ” அவள் படிப்பைத்தான் பேசப் போகிறேன் …” என சௌதாமினிக்கு தகவல் கொடுத்து விட்டு சென்றான் .

சபாபதியின் எதிர்பார்ப்பு முகம்  ஏமாற்றத்தில் வாட , ” படிப்பை பேச மாடிக்கு ஏன்டா போகிறாய் …இங்கேயே பேசுவதுதானே ….” தனக்குள் புலம்பியபடி தவித்திருந்தாள் சௌதமினி .

” சித்தப்பா வீட்டிற்கு போக போகிறீர்களா பாலா …? ” கண் கலங்க கேட்ட ஜீவாவை மிக நெருங்கி அருகில் நின்றான் சிவபாலன் .




தலையை மட்டும் அசைத்தான் .தன் இரு கைகளால் அவள் இரு கைகளின் மணிக்கட்டை அழுத்தி பற்றினான்.அவள் கண்களுக்குள் பார்த்தான் .

” நான் சூழ்நிலை கைதி ஜீவி ….” அவன் குரல் நடுங்கியது .

இந்த கலக்கத்துடன் அவனை பார்க்க மனம் ஒப்பவில்லை ஜீவிதாவிற்கு .” அம்மா உங்களை ,  அத்தையை எப்போதும் திட்டிட்டே இருக்காங்கல்ல …. சரி பாலா நீங்க கொஞ்ச நாள் அங்கே இருங்க .நீங்க   ஒரு முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் பாலா .கவலைப்படாதீர்கள் .” அவன் தோள்களை வருடி ஆறுதலளிக்க முடியாமல் அவள் கைகள் அவன் கைகளுக்குள் இருக்க , ஆறுதலாக மெல்ல தன் தலையை அவன் தோள்களில் சாய்த்தாள் .

அந்த நேரத்தில் ஏதோ கலக்கத்தில் இருக்கும் தன் பாலாவை தேற்ற வேண்டுமெனத்தான் ஜீவிதாவுக்கு தோன்றியது .அவனது பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் கூட அவளுக்கு வரவில்லை .அதே ஆறுதல்தான் சிவபாலனுக்கு தேவைப்பட்டது போலும் .அவன் தன் தோள் சாய்ந்திருந்த ஜீவிதாவின் தலை மேல் தலையை சாய்த்துக் கொண்டான் .

” உனக்கு படிப்பு முக்கியம் ஜீவி . வேறு எதைப் பற்றியும் பேசவோ , நினைக்கவோ இப்போது கூடாது .நீ …இப்போது …இன்னமும் சின்ன பெண்தான் .வேறு பிரச்சினைகள் உனக்கு வேண்டாம் .படிப்பை மட்டும் எந்த நிலைமையிலும் விடமாட்டேன் என எனக்கு வாக்கு கொடு .பிறகு …நம் வாழ்வு ….அது …நிச்சயம் நல்லபடியாகவே அமையும் என நம்புவோம் …”

” நிச்சயம் பாலா …” தன் தலையை அவன் தோள்களில் அழுத்தி தன் ஆதரவை அவனுக்கு தெரிவித்தாள் .




” ம் …” என அவளை விட்டு விலகியவன் , அவள் கைகளை விட்டு கன்னங்களை பற்றினான் .உணர்வு பொங்கும் முகத்துடன் அவளை பார்த்தான் .ஜீவிதாவின் விழிகள் பட்டாம்பூச்சியாய் சிமிட்டி அவன் முகம் பார்த்தது .ஏதோவோர்  எண்ணத்துடன் ,துடிக்கும் இதழுடன்  அவள் முகம் நெருங்கினான் .ஏதோ எதிர்பார்ப்புடன் ஜீவிதா அவனை படபட நெஞ்சுடன் எதிர.கொள்ள தயாராக பார்த்திருக்க  , திடீரென தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவள் நெற்றியோடு தன் நெற்றியை பொருத்திக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டான் .

ஆழ்ந்து வெளி வந்த அவனது கதகத மூச்சினை தன் நாசி வாங்கி சுவாசித்தபடி , அவன் அருகாமையை அனுபவித்தபடி நின்றாள் ஜீவிதா .விரிந்திருந்த அவள் விழிகள் இதழ் பிரியாத்தால் விழாமலிருந்த அவன் கன்னக்குழி இருந்த இடத்தில் ஆணியடித்தது போல் நிலைத்திருந்த்து .

” ஜீவி …”

” ம் …”

” எனக்கு வேறு வழி தெரியவில்லை “

” ம் …”

” இந்த முடிவு எதில் போய் நிற்குமெனவும் தெரியவில்லை “

” ம் …”

” ஆனால் இதனை நான் செய்தே ஆக வேண்டும் “

” ம் ….”

” அதனால் ..நான் …நம் …வாழ்வை எதிர்காலத்திடம் விட்டு விட்டு ….”

நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான் ” உன்னை விட்டு பிரிகிறேன் …” அவன் கைகள் அவள் கன்னங்களை வருடியபடி பிரிந்தன .

” சித்தப்பா வீட்டிற்குத்தானே போகிறீர்கள் .பக்கத்து வீடுதானே… பிரிவதாக ஏன் சொல்கிறீர்கள் …? ” தன்னை விட்டு விலகிப் போனவனின் கையை பிடித்துக் கொண்டு கேட்ட ஜீவிதாவின் குரலில் அழுகை வந்திருந்த்து .




திடுமென தோன்றிய வேகத்துடன் அவளை இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான் .பதிலேதும் சொல்லாமல் இருந்தாலும் , வினாடிக்கு வினாடி இறுகிக் கொண்டே போன அணைப்பில் உடல் வலித்தாலும் , அந்த அணைப்பு ஜீவிதாவிற்கு இனம் காண முடியாதோர் நிம்மதியை கொடுத்தது .மனம் லேசாகி பறக்க தொடங்க அவனுக்குள் ஒடுங்கிக் கொண்டாள் .

விநாடிகளோ …நிமிடங்களோ …ஆனந்த நடமாடிய அந்த கயிலை சிவனின் அருகாமையிருந்த உமாதேவியின் பரவச நிலையில் இருந்தாள் ஜீவிதா .திடுமென அணைத்தது போன்றே திடுமென அவளை விலக்கியவன் …” எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உன் படிப்பை விடாமல் படித்து நம் ஊருக்கே டாக்டராக வரவேண்டும் .ஓ.கேவா ….? ” என்றான் .

ஜீவிதா தலையசைக்கவும் பிறகு திரும்பியும் பாராமல் படபடவென படிகளில் இறங்கி கீழே போய்விட்டான் .

” இது கான்பரஸ் ஹால் .இங்கு தினமும் கூட்டம் நடக்கும் …” 
இன்னமும் கூட அன்றைய சிவபாலனின் தேக சூட்டினை தன் உடலில் உணர்ந்து கொண்டிருந்த ஜீவிதா , இப்போதைய அவனின் குரலில் கலைந்து நிகழ்வுக்கு வந்தாள் .

” ஓ…தினமும் கான்பரன்ஸா ….? அவ்வளவு வேலை இங்கு உண்டா …? ” கைலாஷ் கேட்டுக் கொண்டிருந்தான் .

.சிவபாலன் காட்டிய அறை முழு சுவரும் கண்ணாடியாலான ஒரு கண்ணாடி கான்ப்ரன்ஸ் அறை. அதில் கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. அது தினம் நடக்கும் கூட்டமாம், முதல் நாள் நடவடிக்கைகளை ஆய்ந்து மறுநாள் நடவடிக்கைகளை திட்டமிடும் கூட்டம். இது போன்ற கூட்டம்  முன்பு அவர்கள் ஆலையில் மாதம் ஒரு முறைதான்  நடைபெறும் .இப்போதோ …தினமும் .சிவபாலன் எதையும் திட்டமிட்டு செய்கிறவன். வெற்றிகரமாக முடிப்பவன் .

தொழிலைப் போல் வாழ்க்கையையும் திட்டமிட்டானா ….என்ன மாதிரி திட்டமிடல் …அன்று ஏதோ சொன்னானே …சூழ்நிலை கைதி என்றான் .விலக மனமில்லாமல் இறுகி அணைத்து நின்றான் .ஏதோ புரிவது போன்றும் …புரியாத்து போன்றும் ஜீவிதாவின் மனம் குழம்பியது .அப்போதெல்லாம் அவனது அன்றைய அணைப்பையும் , தவிப்பையும் ஒரு உறவினனுக்கானதாகத்தான்   நினைத்திருந்தாள் .ஏனென்றால் அவளது மனம் அன்று காதலோ , ஆசையோ போன்ற எந்த கல்மிசங்களுமற்ற கன்னி நிலமாக இருந்த்து .  

ஆனால் இன்று நினைத்து பார்த்தால் அந்த அணைப்பு காதலை தவிர வேறு எதையும் அவளுக்கு சொல்லவில்லை .தன்னுடைய காதலையே அவள் சிவபாலன் , சுகன்யாவுடன் மாலையும் , கழுத்துமாக வந்து நின்ற போதுதான் உணர்ந்தாள் எதிர்காலமே இருண்டு போய்விட்டது போல் …இனி வாழ்வே தனக்கு கிடையாது போலொரு நிலையில் அப்போது இருந்த போதுதான் தனது காதலை உணர்ந்தாள் .சிவபாலனின் காதலையோ இதோ ….இப்போதுதான்…அவனது இன்றைய பார்வையும் , அன்றைய அணைப்புமாக உணர்ந்தாள் .




” தேங்க்ஸ் கைலாஷ் ….” என்றாள் .அவன் விழித்தான் .

” எதற்கு இந்த தேங்க்ஸ் ஜீவிதா …? “

எது …எப்படியோ …இன்றைய சூழலில் இந்த காதல் சரியோ …தவறோ …அதனை தனக்கு  உணர வைத்த தன் தோழனுக்கு நன்றி சொன்னாள் .இந்த காதல் நிறைவேறாத ஒரு தோல்வி காதலாகவே இருந்து விட்டு போகட்டும் .ஆனாலும் இந்த கணத்தில் ….அதனை உணர்ந்த கணத்தில் ஆயிரம் பூக்கூடை சொரியலை அனுபவித்தாள் .

” இதுவரை உணராத நிறைய விசயங்களை நான் உணர உதவியிருக்கிறாய் .அதற்காக ….”

பளிச் மின்னல்கள் கண்களில் தெறிக்க பரவசமாக பேசியவளை கைலாஷினால் சத்தியமாக புரிந்து கொள்ள முடியவில்லை .ஆனால் சிவபாலன் புரிந்து கொண்டான் .அதே மின்னல் மின்னும் கண்களை அவனிடமும் கண்டான் கைலாஷ் .தீவிர யோசனையுடன் இருவரையும் பார்த்தான் .

” இந்த பேக்டரி பின்னாடி ஒரு நதி ஓடிக்கொண டிருக்கிறது .பார்க்க வருகிறீர்களா கைலாஷ் …? “

” போகலாமே ….அதில் என்ன விசேசம் ….?”

” ஒன்றும் பெரிய விசேசமில்லை …எங்கள் குழந்தை பருவங்கள் பெரும்பாலும் அந்த நதிக்கரையில்தான் கழிந்திருக்கின்றன …இல்லையா ஜீவா …? “

” ம் …ஜீவா …நீங்கள் ஜீவிதாவை இப்படித்தான் அழைப்பீர்களா சிவா …? அவளுக்கு அவள் பெயரை சுருக்கி அழைத்தால் பிடிக்காதே ….” கைலாஷ் மீண்டும் இருவரையும் ஆழம் பார்த்தான் .

” நான் அவள் சிறு வயதிலிருந்து அவளை அப்படித்தான் அழைத்து வருகிறேன் ….”

” ஓ…நீங்கள் அவளுடைய மாமன் மகனாயிற்றே …சிறு வயதிலிருந்தே உங்கள் இருவருக்கும் பழக்கம் இருந்திருக்கும் இல்லையா …? ” கைலாஷின் கேள்வி வில்லங்கமாய் பட சிவபாலன் அவனை யோசனையாக பார்த்தான் .பிறகு ஜீவிதாவை பார்க்க அவளோ இவர்கள் இருவரின் வாதங்களை கவனிக்கவே இல்லை . அவளின் சிந்தனை வேறாக இருந்த்து .




சிவபாலன் பட்டென நதிக்கரைக்கு அழைத்து விட , ஜீவிதாவின. இதயம் மத்தளம வாசிக்க தொடங்கிவிட்டது . அந்த நதிக்கரை அவர்கள் இருவரின் சிறு வயது விளையாட்டு பூமி தான் .இத்தனை நாட்களாக அந்த இடத்தில் சிவபாலன் ஜீவிதாவின் அத்தை மகனாக , சிநேகிதனாக , பாடம் கற்று தரும் குருவாக மட்டுமே இருந்திருக்கிறான் .இன்றுதான் காதலனெனும் புது அவதாரமொன்றை அவள் மனதினுள் எடுத்திருக்கிறான் .இப்போது …அந்த தங்களது சிறு வயது உற்சாக காலங்களுக்கு இட்டு செல்லும் அந்த இடத்திற்கு போனால் …ஒருவேளை தன் மனம் கட்டிழந்து விட்டால் …

தங்கையின் கணவனாக இருக்கும் காதலனிடம் இம்மி அளவும் தன் காதலை வெளிக்காட்ட விரும்பவில்லை ஜீவிதா .இப்போது அவர்களது பழைய வாழ்வை நினைவு படுத்தும் எந்த இடத்திலும்  …தன்னை தானே நம்ப தயாராக இல்லைஅவள் .தன் பார்வையில் கூட  தன்னை கட்டுக்குள் அவள் நிறுத்த வேண்டிய தருணமிது   .எனவே ” வேண்டாமே …” கெஞ்சுதலோடு கூடிய ஒரு பார்வையை சிவபாரனுக்கு கொடுத்தாள் .அவன் விழிகளால் ஏனென்று விசாரித்து கொண்டிருந்தான் .




” நாம் இங்கே எதற்காக வந்தோம் ஜீவிதா …? வந்த வேலையை தவிர …என்னென்னவோ புரிபடாத வேலைகள் நிறைய நடந்து கொண்டிருக்கிறதே ….? நாம் பேக்டரி எம்ளாயிஸை செக் பண்ண போகிறோமா இல்லையா …? “

கைலாஷ் கேட்ட கேள்வியில் நிறைய எரிச்சல் இருந்த்து.

             

What’s your Reaction?
+1
6
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
ஆயிஷா. கே
ஆயிஷா. கே
3 years ago

சபாஷ் சரியான இடத்தில் நிறுத்தியிருக்கிறீர்கள்.. கைலாஷ் வில்லனாக மாறிவிடுவான் போலயே.. அருமையான நகர்வு..

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!