Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 20 ( Final )

20

மனோகரன் தள்ளிய வேகத்தில் மணலில் விழுந்து , முகம் , மூக்கு , கண் , வாயெங்கும் மணல் அப்பிக்கொள்ள கண்களை திறக்க முடியாமல் தவித்து , தொண்டை வரை போய்விட்ட மணலை செருமி …வெளியே உமிழ்ந்து , கண்களை கஷ்டப்பட்டு விரித்து பார்த்த போது , பள்ளத்தினுள் இறங்கிய காரினை பார்த்தாள் வைசாலி .




அதைப்பற்றி கவலை கொள்ளாமல் அங்குமிங்குமாக குவித்து வைக்கபபட்டிருந்த மணல் குவியல்களில் மனோகரனை தேடினாள் .அவன் …இல்லை .ஒரு வேளை அந்தப்பக்கம் தள்ளியிருக்கும் மணலில் குதித்திருப்பானோ …இல்லையே கார் இங்கேதானே விழுந்து கொண்டிருக்கறது .பத்து நிமிடமாக ஒவ்வொரு மணல் குவியலாக அலசியபிறகுதான் மனோகரன் காரினுள் இருக்கிறானோ …என தோன்ற மனதிற்குள் அலறியபடி அந்த பள்ளத்தினுள் இறங்க துவங்கினாள் வைசாலி .

ஒரு பத்து அடிக்கு மேல் அந்த பள்ளம் மேலும் சரிய , அந்தப் பக்கம் முதலில் ஒன்றும் தெரியவில்லை .மேலும் அங்கே மரங்களும் , செடிகளும் அடர்த்தியாக இருக்க ஒன்றும் தெரியாமல் தவித்தாள் .ஆனால் பிறகு கவனித்தபோது கார் உராய்ந்து இறங்கிய இடம் தெளிவாக தெரிய , அதன் வழியே இறங்கிய போது ஒரு பத்தடி தூரம் இறங்கியதுமே தள்ளி ஒரு மரத்தில் மோதி நின்றிருந்த கார் தெரிந்த்து .

கால்களை சிறு சிறு கற்கள் உருட்டி விட பலமுறை  கீழே விழுந்து , எழுந்து உடல் முழுவதும் சிராய்த்துக் கொண்டு , மனு …மனு …என கத்தியபடி அந்த காரை நோக்கி ஓடினாள் வைசாலி .அது ஆழமான பள்ளமில்லை .கார் மோதி நின்றிருந்த இடத்திலிருந்து அந்தப்பக்கம் கிட்டதட்ட சமதளமாகவே இருந்த்து .எனவே பெரிதாக பயமில்லையென்றாலும் , துடிக்கும் நெஞ்சை கைகளால் இறுக பிடித்தபடி காரினுள் எட்டிப்பார்த்த வைசாலி , மனு …என அலறிவிட்டாள் .

உள்ளே …ஸ்டியரிங் மேல் கவிழ்ந்திருந்தான் மனோகரன் .கார் மரத்தில் மோதியதும் , காருடன் இணைந்திருந்த பலூன் வெளியாகி அவனை காத்திருந்த்து .இருந்தும் முன் கண்ணாடி உடைந்து அவன் மீது துகள்களாக கிடந்த்து. தலையிலிருந்து ரத்தம் வடிந்திருந்த்து . ஒரு மாதிரி கோணலான நிலையில் ஸ்டியரிங் மேல் கிடந்தான் .

மயக்கமென்று பார்த்ததும்  தெரிந்தாலும்  , எப்போதும் சுறுசுறுப்பாக பேச்சும் , சிரிப்புமாக இருபபவனை இப்படி பார்த்ததில் நெஞ்சு வலித்தது .கார் கதவை படபடவென தட்டி ” மனு …மனு …” என கத்திப் பார்த்தாள் .அவனிடம் அசைவில்லை .உள்ளே எட்டிப் பார்த்த போது மனோகரனின் காலில் காயம் பட்டு ரத்தம் வடிந்து கொண்டிருந்த்து தெரிந்த்து. கதவு திறக்க முடியாமல் லாக் ஆகியிருந்த்து .

மிக ..உடனே …மனோகரனுக்கு ட்ரீட்மென்ட் அவசியமென்பதை உணர்ந்த வைசாலி பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள் .கண்ணாடியை உடைத்தாலும் கதவை திறக்க முடியுமா தெரியவில்லையே ….!!

நீ  சொன்னபடி காரை பராமரித்து வருகிறேன் …மனோகரன் சொன்னது நினைவு வர , முருகா டிக்கி லாக் ஆகியிருக்க கூடாதே …வேண்டியபடி பின்னால் வந்தாள் .மோதிய வேகத்தில் டிக்கி திறந்து கிடக்க உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு , அங்கே இருந்த சிறு டூல்ஸ் பெட்டியை பார்த்து திருப்தியாகி , அதனை தூக்கிக் கொண்டு முன்னால் வந்தாள் .எல்லா காரிலும் அத்யாவசியமான சில டூல்களுடன் ஒரு பாக்ஸ் வேண்டுமென்பது அவளது வலியுறுத்தல் .இதோ அவள் சொன்னபடி ஒரு பாக்ஸை மனோகரன் வைத்திருக்கிறான் .




அந்த டூல்ஸ் உதவியுடன் கார் கதவை சுழட்ட துவங்கினாள் .கண்களில் நீர் வழிய …வழிய இடையிடையே மனோகரனை பார்த்து அழுது கொண்டே …மனு …மனு …என அழைத்தபடி கார் கதவை சுழட்டி எடுத்து விட்டாள் .மனோகரனின் கன்னத்தில் தட்டி ..அவனை அழைக்க அவனிடம் சலனமில்லை .அவனது போனை எடுத்து பார்த்தாள் .அது வெறுமையாக கறுப்பு திரையை காட்டியது .

மேலே போய் சாலையில் போகும் வாகனங்களை நிறுத்தி உதவிக்கு  அழைத்து வர வேண்டியதுதான் .நான்கெட்டு நடந்த்தும் .ஒரு வேளை கார் மோதிய வேகத்தில் பயர் ஆகிவிட்டால் …ஏதாவது நாய் , நரி ..வந்து மனோகரனை கடித்து போட்டுவிட்டால்  , இல்லாத சந்தேகமெல்லாம் தோன்ற ஆரம்பிக்க ..அவனை விட்டுச்செல்ல மனமில்லாமல் யோசித்தாள் .பிறகு ஒரு முடிவுடன் அவனை நெருங்கினாள் .

வைசாலியின் கண்ணில் சாலையின் விளிம்பு பட்டு அங்கு போன லாரி ஒன்று வைசாலியை பார்த்து வண்டியை நிறுத்தி , அதிலிருந்த ஆட்கள் அவளை நோக்கி ஓடி வருவதை பார்த்ததும் அவள் நினைவு தப்பி கீழே மயங்கி விழுந்தாள் .

வைசாலி கண் விழித்ததும் அவள் பார்வையில் முதலில் பட்டது ஒரு அறிமுகமற்ற முகம் .மிகுந்த அன்புடன் அவள் தலையை வருடி ” இப்போது எப்படி இருக்கிறாயம்மா …? ” என்றாள் அவள் .

” ம் …” என்று தலையசைத்த வைசாலி உடல் முழுவதும் வலியை உணர்ந்தாள் .

” இதை குடிம்மா …கொஞ்சம் தெம்பு வரும் …” தன் வாயில் பொருத்தப்பட்ட ஜூஸ் டம்ளரை தள்ளினாள் .

” மனு …எ..எப்படி இருக்கிறார் ..?

” மனோவுக்கு ஒன்றுமில்லைம்மா .அவன் எதிர் அறையில்தான் இருக்கிறான் .நன்றாக இருக்கிறான் .நீதான் என் மகனை  காப்பாற்றி விட்டாயே …” ஓ…இவர் மனோவின் அம்மாவா …!!

” நான் மனுவை பார்க்கவேண்டும் ” பெட்டிலிருந்து இறங்கினாள் .

” இரும்மா ..உன்னால் நடக்க முடியாது .நான் போய் வீல்சேர் எடுத்து வருகிறேன் ” அவள் போனவுடனேயே ரணமாய் வலித்த பாதங்களை தரையில் ஊன்றி , முயன்று நடந்து எதிர் அறையை அடைந்துவிட்டாள் .மூடியிருந்த அறைக்கதவை தள்ளினாள் .

அங்கே கட்டிலில் படுத்திருந்த மனோகரன் திரும்பி ” சாலி ..பார்த்து ” என அவசரமாக எழுந்து அமர, அவனருகில் நின்று ஏதோ கலக்கிக் கொண்டிருந்த தனலட்சுமி ” வைசும்மா …” என வேகமாக வந்து அவளை தாங்கினாள் .

அம்மாவிடமிருந்து தடுமாறி கட்டிலில் அமர்ந்த வைசாலி ” மனு ..” என அவன் முகத்தை தாங்கி அவன் உடலை பார்வையால் ஆராய , அதையே மனோகரன் ” சாலி ” என்ற அழைப்புடன் அவளுக்கு செய்து கொண்டிருந்தான் .இருவரையும் கண்ணில் நீருடன் பார்த்தபடியிருந்தாள் தனலட்சுமி .

” சரிதான் …அண்ணி வீல்சேர் எடுத்து வரும் வரை உங்கள் பொண்ணால் பொறுக்க முடியவில்லை பார்த்தீர்களா …? ” கோபம் போல கூற முயன்ற கௌசல்யாவின் குரலில் மிகுந்த பெருமிதம்தான் இருந்த்து.

” உங்க பையனை பாருங்க அண்ணி .கொஞ்சநேரம் முன்னால் வரை தலையை தூக்க முடியாமல் படுககையில் கிடந்தார் .இப்போது எப்படி புத்துணர்ச்சியாக உட்கார்ந்நிருக்கிறார் பாருங்கள் ..” தனலட்சுமியின் குரலிலும் பெருமிதம் .

தங்களை பெற்றவர்களின் பெருமிதங்களை உணரும் நிலையில் இரு இளம் உள்ளங்களும் இல்லை .அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி, ஒருவர் கன்னத்தை மற்றவர் வருடியபடி , தங்களுக்குள் தனி உலகில் மூழ்கியிருந்தனர் .




” இனி ஒரு முறை இப்படி செய்வாயா ..? ” என மனோகரனும் ….” நீங்களும் இனி இப்படி செய்யக்கூடாது ” என வைசாலியும் ஒருவரையொருவர் உலுக்கிக் கொள்ள , கௌசல்யா தனலட்சுமியை பார்த்தாள் .

” அண்ணி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயிருந்தால் நம் பிள்ளைகளே நம்மை வெளியே போ என்று விரட்டி விடுவார்கள் .நம் மரியாதையை நாமே காப்பாற்றிக் கொள்வோம் வாருங்கள் ..” தனலட்சுமியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறிவிட்டாள் .

” ஏய் உன் சந்தேகமெல்லாம் தீர்ந்த்தா …? இல்லை இன்னும் கொஞ்சம் மிச்சம் ஏதாவது இருந்தால் அதை  தீர்ப்பதற்காக நான் இன்னும் ஒருமுறை பள்ளத்தில் காருடன் உருளவேண்டுமா …? ” மனோகரனின் வாயை மூடிய வைசாலி கதறிவிட்டாள் .

” சாரி …சாரி ..மனு .நான் தப்பு பண்ணிட்டேன் .ஆனால் நீங்கள் ஏன் கீழே குதிக்கவில்லை …? ” உயிரை விடவா எனக் கேட்டானே ….அதற்காக இப்படி பண்ணினானோ …என்ற பயம் வைசாலிக்கு .

” உன்னை பிடித்து தள்ளிய வேகத்தில் ் கார் கட்டுப்பாட்டை இழந்து , பள்ளத்தை நோக்கி விழ ஆரம்பித்து விட்டதுடா ….எனக்கு கீழே குதிக்க சான்ஸ் கிடைக்கவில்லை .”

” நீங்கள் முதலில் குதித்திருக்கலாமில்லையா …? “

” என்ன …? பள்ளத்தில் விழுந்து கொண்டிருக்கும் காரில் உன்னை விட்டுவிட்டு நான் கீழே குதிப்பதா …? அதற்கு பதில் என் கழுத்தை நானே அறுத்துக் கொண்டிருப்பேன் . எனக்கு இரண்டும் ஒன்றுதான் .” இயல்பாக அவன் கூற பெரிய விம்மல் வெடித்தது வைசாலியிடமிருந்து .

” ஏன்டா ..ஏன் இப்படி பண்ணுகிறாய் …? நான் உனக்கு அப்படி என்ன செய்தேன் …? ஏன்  இப்படி என்னை காப்பாற்றி உன் உயிரை விட துணிந்தாய் ..? ” அவன் சட்டைக் காலரை பற்றி இழுத்தபடி கேட்டாள் .

” ஏனென்றால் நான் உன்னைக் காதலிக்கிறேன் .” மனோகரனின் அலட்டலில்லாத இந்த பதில் வைசாலியை மேலும் காயப்படுத்த அவள் தொடர்ந்து விம்மினாள் .

” உங்களது இந்த அன்புக்கு நான் தகுதியானவள்தானா ….மனு …? “

” ஏன் …இல்லை …அந்த பள்ளத்தில் மயங்கிக் கொண்டிருந்த என்னை மேலே வரை , உன் தோள்களில் சுமந்து கொண்டு வந்து சேர்த்தாயே ..இதனை ..இந்த அன்பினை எதனுடன் சேர்க்க சாலி …? சொல்லுடா …? ” மனோகரனின் குரல் கரகரத்தது .

அவன் இதனை சொன்னதும்தான் வைசாலிக்கே அந்த நிகழ்வு நினைவு வந்த்து .அவனை தனியே விட்டுப் போக மனமில்லாது , தூக்கிப் போவோம் என முடிவு செய்து , தன்னால் முடியுமா ..என வைசாலி யோசித்தது இரண்டே விநாடிகள்தான் .முடியவேண்டும் …மனோகரனின் சிரித்த உருவத்தை தன் நெஞ்சம் முழுவதும் நிரப்பி தனக்கு உரமேற்றிக் கொண்டவள் , அதன் பிறகு அவனை தூக்கிய போது பாரமெதுவும் அவளுக்கு தெரியவில்லை .விரைவில் சாலை விளிம்பை அடைந்து உதவி அடைய வேண்டுமென்ற ஒரு எண்ணம் மட்டுமேயிருந்த்து .

” இதெல்லாம் பெரிய சாதனை சாலி .இவ்வளவு அன்பை மனதில் வைத்துக்கொண்டு என்னை பிரிய எண்ணினாயே …? நான் எப்போதும் சொல்வது போல் உன்னை நீ அறியவில்லைடா சாலி …”




” என்னை மட்டுமல்ல மனு .உங்களையும் அறியவில்லை .ஆனால் இப்போது அறிந்துகொண்டேன் .என்னை …ஓரளவு .உங்களை முழுதாக ..பரிபூரணமாக …” மனோகரனை ஆரத்தழுவிக்கொண்டாள் .

அறை வாசலில் கிடந்த ஸ்டீல் நாற்காலிகளில்  ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த கௌசல்யாவையும் , தனலட்சுமியையும் பார்த்து திகைத்தார் கதிரேசன் .

” என்ன ..இரண்டு பேரும் வெளியே இருக்கிறீர்கள் ..? பிள்ளைகளை பார்க்கலையா …? அவுங்க எப்படி இருக்கிறாங்க …? ” என்றபடி அறைக்கதவை திறக்க முயல அவர் கையை பிடித்து தடுத்தாள் கௌசல்யா .

” வேண்டாங்க .உள்ளே போனால் அடித்து விரட்டினாலும் விரட்டுவாங்க .அப்படி ஒரு எண்ணத்தில்தான் எங்களை பார்த்தார்கள் .நாங்கள் பயந்து போய் இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் ….”

தனலட்சுமியும் ,கதிரேசனும் சிரிக்க …கரணும் , சுரேஷும் வந்தனர் .

” வணக்கம் சார் .மனோ சாரை பார்க்கனுமே …” தடுக்கும் முன் சுரேஷ் கதவை தட்டிவிட்டான் .

” எஸ் …கமின் ….” மனோகரனின் குரல் ஒலிக்கவும் எல்லோரும் உள்ளே நுழைந்தனர் .

” எப்படியிருக்கீங்க சார் ..? ” என்று விசாரித்தபடி கரண் மனோகரனிடம் கொடுத்த பொருளை கண்டதும் வைசாலியின் முகம் கறுத்தது .மனோகரனை முறைத்தாள் .

அவனோ அவள் பார்வையை சந்திக்காமல் கரண் , சுரேஷின் நல விசாரிப்புக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான் .இருவரும் விடை பெற்று சென்றபிறகும் அவளது பார்வையை சந்திக்க மறுத்து திரும்பிக் கொண்டிருந்தான் .

” வைஷு …நீ உன் ரூமிற்கு போய்விடலாமேம்மா …மாப்பிள்ளை வசதியாக படுப்பார் ….” தனலட்சுமி கூறினாள் .

” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் .அவள் இங்கேதான் இருப்பாள் .அம்மா இந்த அறையிலேயே இன்னொரு கட்டில் போட சொல்லுங்கள் .டாக்டர் இரண்டு நாட்கள்தானே இங்கே இருக்க சொல்லியிருக்கிறார் .அதுவரை நாங்கள் ஒரே அறையில்தான் இருப்போம் ” என்றான் மனோகரன் .

” நாங்கள் இங்கே இருக்கலாமா …இல்லை வெளியே போய்விடவா மகனே …? ” போலிப் பணிவுடன் கேட்ட கௌசல்யாவிற்கு ….

” அதை பிறகு யோசித்து சொல்கிறேன் ” என பதில் சொன்னபடி , வைசாலியை பின்னால் சாய்த்து அமர வைத்துவிட்டு , தானும் சாய்ந்து அமர்ந்து கொண்டான் .

” நேரம்டா மகனே …” என்றவள் அவன் தலையில் செல்லமாக கொட்டினாள் .

” நான் போய் டாக்டரை  பார்த்து வருகிறேன் ” கதிரேசன் வெளியேறியதும் …பின்னாலேயே தனலட்சுமியும் , கௌசல்யாவும் வெளியேறினர் .

” மனு …அதைக் குடுங்க …” கை நீட்டினாள் வைசாலி .

” மாட்டேன் …” தலையணைக்கடியில் மறைத்தான் அவன் .

” வேண்டாம் மனு …அது நமக்கு வேண்டாம் …”

” இல்லை எனக்கு வேண்டும் …”

அதே அறையில் இன்னொரு பெட்டை கொண்டுவந்து போட்டு அதில் வைசாலி படுக்க ஏற்பாடு பண்ணிய பிறகு , இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு இருப்பதை ஆச்சரியமாக பார்த்தனர் அன்னையர் இருவரும் .

” வைஷு …என்னம்மா …? ” என்ற தனலட்சுமியிடம் , 
” அண்ணி வேண்டாம் , இவுங்க சண்டையில் தலையிட்டால் நம்ம  மண்டைதான் உருளும் …” என்று தடுத்தாள் கௌசல்யா .




இரவு தனலட்சுமி வீட்டிற்கு சென்றுவிட , உடன் தங்கியிருந்த கௌசல்யா தூங்கியதும் மனோகரன் மெல்ல வைசாலியை எழுப்பினான் .வெளியே வா ..என ஜாடை காட்டினான் .

மாட்டேன் …எனக்கு கோபம் ..என பதில் சைகை காட்டினாள் அவள் .எழுந்து அவளருகில் கட்டிலில் அமர்ந்தவன் ” ஏய் நீயாக வரவில்லையென்றால் உன்னை அப்படியே தூக்கி போய்விடுவேன் ” கிசுகிசுத்தான் .

” ஐய்யே …ஓட்டை காலை வைத்துக்கொண்டு பேச்சை பார் …” சிணுங்கியவளை , ” பார்க்கிறாயா …? ” என தூக்க முயல ” நானே வருகிறேன. …” என எழுந்தாள் .

” சொல்ல சொல்ல கேட்காமல் ஏன் இவ்வளவு பிடிவாதம் மனு உங்களுக்கு ..? ” குறைபட்டபடி லிப்ட்டில் உடன் வந்த வைசாலியை மனோகரன் அழைத்து போன இடம் அந்த ஹாஸ்பிடல் கார் பார்க்கிங் .

அங்கே ரிப்பேர் செய்து சரி பார்க்கப்பட்டு , முதன்முதலில் வைசாலி பார்த்தாலே அதே புது மெருகுடன் , ஊதாவும் ….வெண்மையுமாய் நின்றிருந்த்து …அந்த ரோல்ஸ்ராய் கார் .இந்த காரைத்தான் பழுது பார்த்து இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு , கார் சாவியை மனோகரனிடம் தந்திருந்தான் கரண் .

அந்த காரை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள் வைசாலி .” இதை பார்த்தால் எனக்கு எரிச்சலாக வருகிறது மனு “

” எனக்கு ஆனந்தமாக இருக்கிறதுடா சாலி .வா …உள்ளே கொஞ்சநேரம் உட்கார்ந்திருக்கலாம் ” அவன் அழைக்க மறுத்தவளை குனிந்து தன் கைகளில் தூக்கிக் கொண்டான் .

” மனு …பார்த்து ..என் பாரம் …உங்களுக்கு ..” பதறிய  வைசாலியை ” ஒன்றும் செய்யாது …என காரினுள் விட்டு தானும் ஏறினான் .

” இந்த கார் உங்களை என்னிடமிருந்து பிரிக்க பார்த்தது இதை எனக்கு பிடிக்கவில்லை …” வைசாலி முகம் சுளித்தாள் .

” இந்த கார்தான் முதலிலிருந்து கடைசி வரை உன்னை என்னுடன் சேர்த்திருக்கிறது .அதனால் எனக்கு ரொம்ப பிடிக்கிறது “

” என்ன …எப்படி சேர்த்தது …? “

” இந்த காரை பார்த்துதானே நீ என்னை அன்று ரோட்டில் நிறுத்தினாய் ..இல்லையென்றால் நீ பாட்டுக்கு உன் வழியில் போயிருப்பாய் .நானும் என் வழியில் போயிருப்பேன் .”

” இந்த காரில்தானே நாம் சண்டையிட்டுக் கொண்டோம் .அதனால்தானே ….,” என முடிக்காது மனோகரனின் நெற்றிக் காயத்தை வருடினாள் .

” அந்த சண்டையினால்தானே நம்மை நாமே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது ..”

” ஐயோ…எப்பேர்பட்ட  மோசமான வாய்ப்பு அது .வேண்டாம் மனு அதனை நினைவு படுத்தாதீர்கள் .” அவன் மார்பில் சாய்ந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் .

” அதற்கு முன் ஒரு சம்பவத்தை மறந்து விட்டாயேடா சாலி  ..?இந்தக் காரில் வைத்துத்தான் முதன்முதலில்  நாம் ….” என்றபடி அவள் இதழ்களை வருடினான் மனோகரன் .

அன்றைய முத்த நினைவில் முகம் சிவக்க தலை குனிந்தாள் வைசாலி .” முதல் முத்தத்தை மறக்க முடியுமா சாலி ..? இந்த கார் இல்லையென்றால் அந்த சந்தர்ப்பம் அன்று நமக்கு வாய்ப்பதேது . என் வான்நிலவு தரையிறங்கி வந்து அன்று என் பிடியில் நெகிழ்ந்திருந்த்தே ….அதை மறக்க முடியுமா ..? என்னைப் பொறுத்த வரை இந்த கார் என் நிலவுக்கான தேர் .இந்த நிலவு தினமும் ஏறி  பவனி வரவேண்டிய தேர் .இதனை நம் வாழ்விலிருந்து என்றுமே பிரிக்க முடியாதுடா சாலி …”




மனோகரனின் ஆழ்ந்த காதலில் கரைந்த வைசாலி நிலவென ஜொலித்தபடி  இன்றும்  அவன் கைகளுக்குள் நெகிழ தொடங்க மனோகரன் ஆவலுடன் அவள் இதழ் நோக்கி குனிந்தான் .

காரின் கூரையில் மின்னிய செயற்கை நட்சத்திரங்கள் , இந்த நிலவின் ஒளியில் கூசி பின் , முத்த சத்தங்களுக்கு சிரித்து கண் சிமிட்டி …சிமிட்டி ஒளிர துவங்கின .

                     – இனிமை –

 

 

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
13
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!