Serial Stories

சரணடைந்தேன் சகியே – 10

10

“வணக்கம்.. என் பெயர் அன்னலெட்சுமி.. எல்லோரும் அன்னம்னு கூப்பிடுவாங்க.. என் ஊர் ஸ்ரீரங்கம்.. என் கணவர் மிடாச்சோ.. ஜப்பானியர்.. நாங்கள் ஜப்பானில் இருந்தோம்.. அங்கே பாலகுமரன் தம்பி வந்த போது என் மகளும், அவரும் ஒருவரையொருவர் விரும்பினர்.. நாங்கள் அவர்களுக்கு மணம் முடித்து வைத்தோம்.. அம்மாவிடம் சம்மதம் வாங்கவென அவர் இங்கே வந்தார்.. என் கணவர் சில மாதங்களுக்கு முன் இறந்து போனார்.. அதன் பிறகு தனியாக இருக்க வேண்டாமென பாலகுமரன் எங்களை இங்கே அழைத்து வந்துட்டார்..” அழகான தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில், மறுப்பு சொல்ல முடியாத வகையில் கையெடுத்து வணங்கியபடி சீஸூகோ பேச எல்லோருமே கண்சிமிட்டாமல் இருந்தனர்.. பிறகு சத்தமாக கை தட்டி தங்கள் உற்சாகத்தை வெளிக்காட்டினர்..

முன்னதாக சீஸூகோவும், சஸாக்கியும் கையில் குழந்தையோடு அந்த அகன்ற படிக்கட்டுகள் வழியே இறங்கி வந்த போதே அனைவருக்கும் திருப்தியை கொடுத்திருந்தனர்..




சஸாக்கி அழகான அந்த தங்க கலர் சேலையில் பொன் தகடு வேய்ந்த கோவில் சிலை போல் இருந்தாள்.. பட்டு சேலையில் கனத்தினாலோ என்னவோ அவளது உடல் மெலிவு மறைந்து கொஞ்சம் தடித்து தெரிந்தாள்.. நீளமான அவளது கூந்தலில் கத்தையாய் மல்லிகை பந்து.. மெரூன் நிற நடுநெற்றி ஸ்டிக்கர் பொட்டு காது, கழுத்து, கைகளென உடல் முழுவதும் அபிராமி கொடுத்த நகைகளென பெண்மையின் அடையாளமாக மங்கலகரமாக தெரிந்தாள்.. அவள் கைகளில் ஏந்தியிருந்த குட்டிக் கண்ணன் அவளுக்கான கூடுதல் பொலிவு..

சஸாக்கியின் தோற்றம் அனைவருக்குமே மிக திருப்தி..

“ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி.. எங்கள் சொந்தங்களுக்காக ஒரு கதையை கற்பனையாக சொன்னதற்கு..” பாலகுமரன் சீஸூகோ அருகில் வந்து முணுமுணுப்பாக பேசினான்.. அவன் கண்கள் சஸாக்கி மீதே இருந்தது..

“கதையா..? இல்லை பாலா.. இதுதான் உண்மை.. நான் தமிழ் பெண்தான்.. என் பெயர் அன்னலட்சுமி.. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றிப் பார்க்க வந்த மிடாச்சோவும் நானும் ஒருவரையொருவர் விரும்பினோம்.. திருமணம் முடித்து ஜப்பான் போனோம்.. எல்லாமே உண்மைதான்..”

“ஓ.. ஆனால் இதை ஏன் முன்பே சொல்ல வில்லை..?”

“சொல்வதற்கான நேரம் இப்போதுதான் வந்திருக்கிறது.. நீங்கள் விருந்தாளிகளை கவனியுங்கள்.. மீத விபரங்களை பிறகு சொல்கிறேன்..”

பாலகுமரன் நகரவும் அபிராமி வந்தாள்.. அழகாக தன் உறவுகளை சமாளித்ததற்காக அவளும் நன்றி சொல்ல.. சீஸூகோ புன்னகைத்தாள்..

“நான் உண்மையை மட்டுமே சொன்னேன்.. இனி என்னை அன்னம் என்றே அழையுங்கள்.. அக்கா..”

இவர்களின் இந்த நெகிழ்தலை, உருகலை கவனித்தபடி இருந்த சஸாக்கி அலட்சியமாக புன்னகைத்துக் கொண்டாள்.. மிகவும் ஒல்லியாக,
சிறு பிள்ளை போல் இருக்கிறாளே.. இந்தப் பெண் விருந்தினரின் பார்வை சஸாக்கி மீதே குவிந்திருந்தது..




பெயர் என்னம்மா..?

“என்ன படித்திருக்கிறாய்..?”

“அப்பா, அம்மா பெயர் என்ன..?”

“ஊர் எது..?”

போன்ற துருவுவதற்காகவே அவளிடம் கேட்கப் பட்ட கேள்விகள் பெரும்பான்மைக்கு வெறுமனே உதடிழுத்து வைத்துக் கொள்ளல் மட்டுமே சஸாக்கியின் பதிலாக இருந்தது.. அவர்கள் கேள்விகளின் பதில்கள் பாலகுமரன், அன்னம், அபிராமியிடமிருந்து பெறப்பட்டன..

மிக அமைதியான குடும்பத்திற்கேற்ற பெண் என்ற பெயரை மிகச் சுலபமாக சஸாக்கி வாங்கி விட்டாள்..

ஓரிடத்தில் நிற்காமல் வீடு முழுவதும் தேனீ போன்ற ரீங்காரத்துடன் சுற்றி வந்து கொண்டிருந்த கார்த்திகாவை உறவினர் ஒருவர்.. “அதோ உன் அண்ணியை பார்.. அவளை போல் அமைதியாக கொஞ்ச நேரம் ஓரிடத்தில் உட்காரேன்..” எனக் கூறிவிட, கார்த்திகா விட்ட கொதி மூச்சு உலைகலனாகி அந்த வீட்டை சுற்றி சுற்றி வந்தது..

“கிரி நாம் உடனே நம் வீட்டிற்கு போகலாம்..”

“ஏன்டா கார்த்தி.. இன்னும் பங்சன் ஆரம்பமாக வில்லையே..”

“இங்கே எனக்கு மரியாதையே இல்லை கிரி.. என்னை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க.. எல்லோரும் அந்த பெண்ணையும், குட்டிப் பையனையும் தான் பார்க்கிறாங்க.. எனக்கு இங்கே பிடிக்கவில்லை வாங்க நம்ம வீட்டிற்கே போகலாம்..”

“முட்டாள்.. மாதிரி பேசாதே கார்த்தி.. இது உன் அண்ணன் மகனுக்கான பங்சன்.. இங்கே உன் அண்ணியையும், குட்டிப் பையனையும்தானே கவனிப்பார்கள்..? இதை கூட புரிந்து கொள்ள முடியாதா உன்னால்..?”

“அட்லாஸ்ட் ஐ ஹேவ் பிகேம் எ பூல் டூ யூ.. ரைட்..?” பெருமலோடு கார்த்திகா கேட்க தனது நாக்கை கடித்துக் கொண்டான் கிரிதரன்..

இவள் அவனது அழகான இளம் மனைவி.. அவளது மனம் நோகும் ஒரு வார்த்தையை அவன் சொல்லலாமா..? மனம் தாங்காமல் அவன் மனைவியை கெஞ்ச தொடங்கினான்..

“ஆம்படையானும், பார்யாளும் பக்கத்தில் பக்கத்தில் உட்காருங்கோ..” வேதம் சொல்ல வந்த ஐயர் சொல்ல, பாலகுமரனும், சஸாக்கியும் அருகருகே அமர்ந்து மந்திரங்களை சொல்ல தொடங்க சம்மணமிட்டிருந்த, பாலகுமரனின் கால் சஸாக்கியின் மீது பட, தீச்சுட்டது போல் தன் கால்களை நகற்றினாள் அவள்..

அந்த விலகலை உணர்ந்து வெறுமை விழிகளால் பார்த்தவனுக்கு வெறுப்பு விழிகள் தந்தாள்.. பாலகுமரன் ஒதுங்கி அமர்ந்து கொண்டான்..

சடங்குகள் முடிந்து குழந்தைக்கு பெயர் சூட்டி தொட்டிலில் இடும் வைபவம்.. அழகாக அலங்கரித்து நடு வீட்டில் வைத்திருந்த அந்த வெள்ளி தொட்டிலில் பாலகுமரனின் மகனை படுக்க வைத்தனர்..

“என்ன பெயர்..?”




“சசிரூபன்..” மகனின் பெயரை சபையில் அறிவித்து விட்டு குனிந்து அவனது காதுகளில் சொன்னான் பாலகுமரன்..

“நீயும் குழந்தையின் காதில் சொல்லு சஸாக்கி..” விலகி நின்றான்..

தொட்டிலுக்கு குனிந்தவளின் காதுக்கு சஸியின் ரூபன் சசிரூபன் என முணுமுணுத்தான்.. சிறிது தயங்கி விட்டு குனிந்து மகனின் காதில் அவன் நாமத்தை ஓதினாள் சஸாக்கி..

வந்திருந்த அனைவருக்கும் விதம் விதமான அசைவ உணவுடன் பெரிய விருந்து தரப்பட, வயிறார சாப்பிட்டு வாயார குழந்தையையும், அதன் தாயையும் வாழ்த்தி விடை பெற்றனர் விருந்தினர்கள்..

“டயர்டாக தெரிகிறாய் சஸாக்கி.. கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொள்..” உபசரித்தவனை கண்டுகொள்ளாமல் நடந்தாள் சஸாக்கி.. ஆனாலும் இந்த அதிகப்படி வேலை அவளது பிள்ளை பெற்ற உடலை தளர வைத்தது..

கை கால்கள் நடுங்க, அவன் சொன்னதற்காகவே உட்காரக் கூடாதென்ற வைராக்கியத்துடன் இருந்தவளின் உடல் தளர்ந்து கால்கள் பின்னியது.. கண்களை சுழற்றி தன் அன்னையை தேட, அவள் ஏதோ வேலையாக தள்ளி நின்று கொண்டிருந்தாள்.. அங்கே வரை நடந்து போக தன்னால் முடியுமா என்ற சந்தேகம் சஸாக்கிக்கு வந்தது..

திடுமென தனது அமைதியில்லாமல் சரிய ஆரம்பித்து விட்ட தனது உடலை இயலாமையுடன் அவள் உணர்ந்த போது இதமாக தாங்கப்பட்டது அவள் உடல்..

லிப்டை ஆன் செய்து உள்ளே அவளுடன் நுழைந்தவன் மாடியேறி அவளுடைய அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுக்க வைத்தான்.. துவண்ட கொடியாய் படுக்கையில் கிடந்தவளை நின்றபடி பார்த்தான்..

இதமாக படுக்கையில் சாய்ந்ததும் ஆசுவாசமான சஸாக்கி விழி திறந்து பார்த்தபோது அவளை பார்த்து நின்ற பாலகுமரனை கண்டாள்.. கோபம் வந்தது..

“நான் ரெஸ்ட் எடுக்கனும்.. வெளியே போங்க..”

“ம்.. போகிறேன்.. உனக்கு கொஞ்சம் உதவி விட்டு..”

“என்ன உதவி..?”

“இதோ இத்தனை அலங்காரங்களை சுமந்து கொண்டு நீ எப்படி தூங்குவாய்..?” சொன்னபடி சஸாக்கி போட்டிருந்த நகைகளை அவள் உடலிலிருந்து கழட்ட ஆரம்பித்தான்..

“இ.. இதனை அம்மா பார்த்துக் கொள்வார்கள்.. நீங்க போங்க..”

“ஆன்ட்டி வேலையாக இருந்தார்கள்.. அவர்கள் வரவும் நான் போய்விடுவேன்..” ஒவ்வொரு வளையலாக கைகளிலிருந்து உருவ ஆரம்பித்தான்..

மம்மா ப்ளீஸ் கம் சூன்.. சஸாக்கி மனதிற்குள்ளாக தாயை வேண்ட ஆரம்பித்தாள்.. அன்னலட்சுமி பாலகுமரன் சஸாக்கியை தூக்கி போகும் போதே பார்த்து விட்டாள்.. சிறு பதட்டத்துடன் படியேறி அவள் மாடி அறையை அடைந்த போது அங்கே பாலகுமரன் சஸாக்கிக்கு உதவுவதாக கூறிக் கொண்டிருக்க, அவர்களது தனிமையை கலைக்க விரும்பாது, மீண்டும் கீழே இறங்கி வந்துவிட்டாள்..




“உன் நீளக் கூந்தலின் ரகசியம் இதுதானா சகி…” புன்முறுவலுடன் கேட்டபடி அவளது இரண்டு பின்னலுக்கு மட்டுமே இருந்த கூந்தலுடன் சேர்த்து பிணைத்திருந்த சவுரி முடியை தூக்கி காட்டினான்..

“நீள முடி இருந்தால்தான் பூ வைக்க முடியுமென அம்மாதான்..” முணுமுணுத்தவளின் செயற்கை பின்னலை கலைத்து, கட்டியாக தலையில் கனத்துக் கொண்டிருந்த பூச்சரத்தையும் நீக்கினான்.. கம்மல், ஜிமிக்கி, மாட்டல் என ஒவ்வொன்றாக நீக்கியவன்..

“உன் வெயிட்டை விட நான்கு மடங்கு வெயிட் இருக்கும் நீ அணிந்திருப்பதெல்லாம்..” என்றபடி இயல்பாக அவளது தோள் சேலையில் கை வைக்க பட்டென அவன் கையை தட்டி விட்டு முறைத்தாள் சஸாக்கி..

“என்ன செய்கிறீர்கள்..?”

“நைட்டி போட்டுக் கொள் சகி.. ப்ரீயாக இருக்கும்..”

“நான் மாற்றிக் கொள்வேன்.. வெளியே போங்க..”

ஒரு விதமாக அவளை பார்த்தபடி வாசல் கதவு வரை போனவன் திரும்பி “பழையவற்றை மறந்து விட்டாயென்று நினைக்கிறேன்..” என்று விட்டு இறங்கி போனான்..




மறக்க முடியுமா..? இதுபோல் ஒரு சேலை கட்டும் தருணம் வந்ததும் அப்போது பாலகுமரன் அவளுக்கு உதவியதும்.. அப்போதெல்லாம் மிக இனிதாக இருந்தது.. அவளுக்கு எல்லாமே.. மிக இனியவனாக இருந்தான் இந்த பாலகுமரன்..

கனத்த மனத்துடன் தலையணையில் முகம் பதித்து கொண்டாள் சஸாக்கி..

அதே கனத்த மனத்துடன் கீழே இறங்கி வந்த பாலகுமரன் அங்கே தன்னை எதிர்பார்த்து காத்திருந்த அன்னையையும், தங்கையையும் பார்த்தான்..

பெருமூச்சோடு அவர்கள் அருகே போய் அமர்ந்து கொண்டவன் பேச ஆரம்பித்தான்..

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!