Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 18

18

” ஏதாவது ஒரு ஜவுளிக் கடையில் நிறுத்துகிறேன் சாலி .உனக்கு ஒரு டாப் வாங்கிவிடலாம் .இந்த டி ஷர்ட்டோடு நீ வீட்டிற்கு போக முடியாதே …” ஆதரவாய் ஒலித்த மனோகரனின் குரல் சற்று முன்பு குரூரமாய் ஒலித்த குரல் இவனதுதானா ..?? என சந்தேகம் கொள்ள வைத்தது .

அவளிடமிருந்து பதிலில்லாமல் போக திரும்பி அவளைப் பார்த்து விட்டு அவள் கைகளோடு தன் கைகளை கோர்த்துக்கொண்டான் .

” என்னடா …? ம் …? ” என்றான் .

” ம் …” என்றாள் வைசாலி . அவள் கைகளை கோர்த்தபடியே காரை ஓட்ட தொடங்கினான் .




” நீ என்னைப் பார்த்தாலே மிகவும் துன்பப்படுவது போல் தெரிந்ததுடா சாலி .அதனால்தான் கொஞ்சம் உன்னை விட்டு தள்ளியிருப்போமென்று நான்கு நாட்கள் உன்னை விட்டு தள்ளியிருந்தேன் .ஆனால் உன் மீதிருந்த கண்காணிப்பை அகற்றவில்லை .அப்படியிருந்தும் ….இன்னும் கொஞ்சம் முன்னாலேயே வராமல் போனேன் ….,” வருந்தினான் .

பதிலின்றி அவன் கைகளில் அழுத்தி தன்னை உணர்த்தினாள் வைசாலி .

அந்த ஜவுளிக்கடை பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன் .” நீ இங்கேயே இரு .நான் போய் வாங்கி வருகிறேன் .எப்படி சொல்லி கேட்க …? ” என்றான் .

” எக்ஸ் .எல் ( xl ) சைஸ் என்று கேளுங்கள் .எனக்கு சரியாக இருக்கும் ” என்றாள் .தலையசைத்து சென்றான் .

பத்து நிமிடங்களில் வந்தவன் அவளிடம் டாப்பை நீட்டி ” உள்ளேயே மாற்றிக்கொள் ” என கார் கதவை மூடிவிட்டு வெளியே நின்றான் .கிழிந்த டாப்பை சுழட்டிவிட்டு புதியதை போட்டுக்கொண்டு கார் கதவை திறந்தாள்  வைசாலி .

வைசாலியின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் .” உன் அம்மாவிடம் நடந்த எதையும்  சொல்ல வேண்டாம் சாலி .மிகவும் வருத்தப்படுவார்கள் .பிறகு சொல்லிக்கொள்ளலாம் ,” என்றான் .

வைசாலியின் அபார்ட்மென்ட்  அருகே காரை நிறுத்தியவன் ” ஒரு இரண்டு நாட்கள் நிம்மதியாக வீட்டில் படுத்து ஓய்வெடு சாலி . எதையும் நினைத்து மனதை உளப்பிக் கொள்ளாதே …” என்றபடி தனது டி ஷர்ட்டுக்காக கையை நீட்டினான் .

புது டாப்பை போட்ட பிறகு மனோகரனின் டி ஷர்ட்டை சுழற்றியிருந்தாள் வைசாலி. ஆனால் அதனை சுழற்றியவுடன் ஏனோ ஒரு பாதுகாப்பற்ற உணர்வு உண்டாக , அதனை கீழே வைக்கவும் மனமின்றி தனது மடியிலேயே வைத்து இறுக்க பிடித்திருந்தாள் .மனோகரன் இப்போது தனது டி ஷர்ட்டை எடுக்க முயல , விடாமல் இறுக்க பிடித்து தன்புறம் இழுத்தாள்.

” என்னடா சாலி …? ” ஆச்சரியமாக பார்த்தான் .

” இ…இது …என்னிடம் இருக்கட்டுமே .இது இருந்தால் எனக்கு தைரியமாக இருக்கிறது …”

தனது பிடியை விட்டவன் , சட்டென அவளை இழுத்து இறுக அணைத்தான் .

” மை ஸ்வீட் சாலி ….” என்றான் அவளது மை ஸ்வீட் மனு போல் .அவளது கன்னத்தில் அழுத்தமாக இதழ்களை பதித்தவன் ” நிஜமாகவே ஸ்வீட்தான் … ” என்றபடி அவளது இதழ்களை பார்க்க , வைசாலி சிறு மறுப்புடன் தலையை நகர்த்தினாள் .




” சாலி …இந்த ஒரே ஒரு முத்தத்திற்காக ஆறு மாதங்களாக காத்திருக்கிறேன் தெரியுமா …? இப்போது எல்லாம் கூடிவரும்போது மறுக்காதேடா ப்ளீஸ் ….வாங்குவது உனக்கு எளிதாயிருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன் .சரியா ..? ” எனக் கெஞ்சிக்கொண்டே கொஞ்சியபடி தனது தேவையை சாதித்துக்கொண்டான் .

” அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லைதானே …” என அவளை சீண்டினான் .

சிவந்து தடுமாறிய தனது முகத்தை அவனுக்கு காட்ட முடியாது , அவன் மார்பிலேயே முகத்தை புதைத்துக்கொண்டாள் வைசாலி .

அவள் தலையை வருடியபடி ” திங்கட்கிழமை நம் கார் கேர் சென்டர் திறப்பு விழா .நீ இரண்டு நாட்கள் வீட்டில் ரெஸ்ட் எடு.திங்கட்கிழமை காலை கார் அனுப்புகிறேன் .வந்துவிடு …ஓ. கே  ..? ” என்றான் .

” காரா …? அண்ணாந்து அவனை பார்த்தபடி  கேட்டாள் .

” ம் …ஆமாம் . இவ்வளவு பெரிய கார் கேர் சென்டர் மேனேஜர்  .இனி ஸ்கூட்டியிலெல்லாம் போக முடியுமா…? இது சுரேஷ் , கரண் நாங்கள் மூவரும் சேர்ந்து பேசி முன்பே முடிவு செய்த்துதான் சாலி .சொல்லுடா எந்த கார் வேண்டும் உனக்கு .நமது சென்டருக்கென்றே  மூன்று கார்களை நிறுத்த முடிவு செய்திருக்கிறோம் …அதில் உனக்கு பிடித்ததை எடுத்துக்கொள் .இந்த காரை மட்டும் கேட்டுவிடாதேடா ..இதை நான் யாருக்கும் தரமாட்டேன் .உனக்கு கூட ….” ஒரு கையால் அந்த காரின் ஸ்டியரிங்கை வருடினான் .

” ஏன் …இந்த காரில் என்ன ஸ்பெசல் …? “

” இந்த கார்தான் எனக்கு உன்னை அறிமுகப்படுத்தி வைத்தது .உன் மூலமாக எனக்கு என்னை தெரிய வைத்தது . உன்னைப் போல இதுவும் முக்கியம் எனக்கு நீ சொல்வது  போல் இந்த காரை முறையாக பராமரித்து வருகிறேன் ” என்றான் .

” எதையாவது உளறிக்கொண்டேயிருங்கள் .” அவன் மார்பினுள் மேலும் புதைந்துகொண்டாள் .

” நீ பக்கத்திலிருந்தாலே இப்படி என்னென்னவோ உளறத்தான் வருகிறது ” சொல்லியபடி அவள் முகத்தை நிமிர்த்த முயன்றான் .அவனது எண்ணம் புரிந்தவள் சட்டென அவனை தள்ளிவிட்டு கார்கதவை திறந்து இறங்க முயன்றாள் .ஆனால் ரிமோட் அவன் கைகளில் …

” கதவை திறங்க மனு ..ப்ளீஸ் …” சிணுங்கினாள் .

” ம்ஹூம் …” என மறுத்தபடி அவளை அருகேயிழுத்தவன் தன் தேவையை தீர்த்துக்கொண்டே விடுவித்தான் .சிவந்து விட்ட இதழ்களை துடைத்தபடி கீழிறங்கினாள் வைசாலி .

” திங்கட்கிழமை சந்திக்கலாம் …பை …” என இதழ் குவித்துவிட்டு கிளம்பி போனான் .மாறிவிட்ட டாப்பிற்காக தனலட்சுமி நம்பும்படி ஏதோ சொல்லிவிட்டு உள்ளே வந்து படுத்தவள்தான் .இதோ இப்போது வரை தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தாள் .




ம்ஹூம் …எவ்வளவு முயன்றும் தூக்கம் வருவதாக தெரியவில்லை .எழுந்து ஜன்னல் வழியாக நிலவை கொஞ்சநேரம் பார்த்தாள் .பார்வை கீழே போனது .அபார்ட்மென்ட்டின் அருகிலிருந்த பார்க் கண்ணில் பட்டது .மங்கலான நிலவொளியில் ஏதோ மாயலோகம் போல் தோற்றமளிக்க கொஞ்சநேரம் அங்கே போய் உட்கார்ந்திருந்து விட்டு வந்தாலென்ன …? தோன்றியவுடனேயே எழுந்து கிளம்பிவிட்டாள் .சத்தமின்றி கதவை திறந்து கொண்டு , வெளியே வந்து கதவை வெளியிலிருந்து பூட்டிக்கொண்டு கீழேயிறங்கினாள் .

சிறுகுழந்தைகள் விளையாடும் சறுக்கில் சறுகுவது போல் காலை நீட்டி அமர்ந்தாள் .அப்படியே பின்னால் சாய்ந்து படுத்துக்கொண்டு வானத்தை பார்த்தாள். மனம் முழுவதும் மனோகரன் சிரிக்க , உடல் முழுவதும் அவனது ஸ்பரிசம் இதமான சூடாக பரவியது .தனது இதழ்களை மடித்து அவனது முத்தத்தை நினைவுறுத்திக்கொண்டாள் .வெட்கத்தில்  முகத்தை கைகளால் மூடிக்கொண்டாள் .

திடீரென்று அதை உணர்ந்தாள் .அவளைத் தவிர வேறு யாரோ அங்கே இருக்கிறார்கள் .வேகமாக எழுந்தவள் அந்த சறுக்கின் பின்புறம் போனாள் .அதன் படிக்கட்டில் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தாள் விஜயா .மிகுந்த துயரத்தில் இருந்தாற்  போலிருந்தாள் .வைசாலியை கவனிக்கவில்லை .

” விஜயா ..இங்கே என்ன பண்ற …? “

சட்டென நிமிர்ந்து இவளை பார்த்தவள் தன் கண்களை துடைத்துக்கொண்டு ” ஏய் வைசாலி ..நீ எங்கே இங்கே …? ” என்றாள் .

” எனக்கு தூக்கம் வரலை .அதுதான் கொஞ்சநேரம் இங்கே உட்கார்ந்நிருக்கலாம்னு வந்தேன் .நீ ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் …? “

” எனக்கும் தூக்கம் வரலை .அதனால்தான் இங்கே வந்தேன் “

” பொய் …உன் ஆசை கணவனை விட்டுவிட்டு இப்படி நடுராத்திரி இங்கே வந்து உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியம் என்ன …? “

இதைக் கேட்டதும் விஜயா அழத்துவங்கி விட்டாள் .

” என்னால் முடியலை வைசாலி .எத்தனை நாட்கள்தான் ஒரு நல்ல வாழ்க்கை வாழுறேன்னு வேசம் போட்டுட்டே இருப்பேன் .இப்படி எல்லாரிடமும் வேசம் போட்டு போட்டு என் உண்மையான மனமே எனக்கு மறந்தடும் போல ….”

” என்னம்மா என்ன சொல்ற …? ” ஆதரவாக அவளது கைகளை பிடித்துக்கொண்டாள் வைசாலி .

” உனக்கு அவர் குணத்தை பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை .அவர்தான் மரத்திற்கு சேலை கட்டினாலும் சுத்தி வர்ற ஜாதியாச்சே .உன் பின்னாலும் நிச்சயம் சுற்றியிருப்பார் .இவர் எனக்கு தூரத்து சொந்தம் .விவரம் தெரிந்த  வயதிலிருந்தே இவர் மீது எனக்கு ஒரு மையல் .இவரது பட்டாம்பூச்சி குணம் தெரிந்து என் அப்பா , அம்மா , அண்ணன் எல்லோரும் இவர் வேண்டாமென்று என்னிடம் எவ்வளவோ கூறினர் .நான் மறுத்து அடம்பிடித்து இவரையே கல்யாணம் பண்ணிக்கொண்டேன் .திருத்திவிடலாமென்று நினைத்தேன் .ஆனால் ….

திருந்தி விட்டதாகத்தான் ஒவ்வொரு முறையும் சொல்லுவார் .என் தலையிலடித்தே சத்தியம் செய்வார் .என்னுடன் இருக்கும்போது எல்லாம் என் மனம் போல் பேசி , எனக்கு பிடித்தவாறு நடந்து கொள்வார் .வீட்டைவிட்டு வெளியே போகவும் மாறிவிடுவார் .என்னை  மறந்து போவார்.பிறகு இங்கே வந்து என்னை சாமாளிக்க ஏதேதோ கதை கூறி , என்னை …” மேலே பேச முடியாமல் நிறுத்தி விம்மினாள் விஜயா .

” முதலில் என்னை சமாதானப்படுத்தத்தான் இந்த அணைப்பெல்லாம் என்று எண்ணியிருந்தேன் .ஆனால் இப்போதெல்லாம் இது அவருடைய தேவை .ஏதேதோ சர்க்கரை காரணங்களை சொல்லி என்னை ஏமாற்றி , அவரது தேவைகளை தீர்த்து கொள்கிறார் என இப்போது தோன்றுகிறது .ஆனாலும் அவரை மறுக்க என்னால் முடியவில்லை .இதையெல்லாம் பிறகு நினைத்தால் மிகவும் அவமானமாக இருக்கிறது .எனது அந்த அவமானத்தைதான் இதோ இப்படி தனிமையில் உட்கார்ந்து ஆற்றிக்கொண்டிருக்கிறேன் .




வைசாலி உனக்கு ஒன்று சொல்கிறேன் .இந்த ஆண்கள் எல்லோரும் ஒன்று போலத்தான் .நமது பலவீனத்தை பயன்படுத்தி அவர்கள் தேவைகளை நிறைவேற்றி விட்டு நம்மை உதறிவிட்டு போய்க்கொண்டேயிருப்பார்கள் .நாம்தான் முழுவதுமாக அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .இது போலெல்லாம் நீ மாட்டிக்கொள்ளாதே …”

தனது துயரத்தை கூறியதன் மூலம் வைசாலியின் நெஞ்சில் தீ வைத்துவிட்டதை அறியாத விஜயா ” நேரமாகிவிட்டது .வா ..போகலாம் …,” என அவள் கைகளை பற்றி இழுத்து போனாள் .

கீ கொடுக்கப்பட்ட பொம்மையாக அவளுடன் போனாள் வைசாலி .அவளது சொற்கள் ஒவ்வொன்றும் வைசாலியின் மனதினுள் இடியாக இறங்கியது .இதோ இந்த விஜயாவுக்கும் , எனக்கும் என்ன வித்தியாசம் ..அவளை அறிவில்லாமல் அவள் கணவன் மேல் அளவில்லாத காதல் வைத்திருக்கிறாள் என எத்தனை முறை இகழ்ச்சியாக நினைத்திருக்கிறேன் ்இப்போது நானும் அதையேதானே  செய்து கொண்டிருக்கிறேன் .

இல்லையென்றால் என் கண் முன்னாலேயே இன்னொருத்திக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவனை , நன்றாக பார்த்தும் , அவன் சொன்ன ஏதேதோ காரணங்களை நம்பி …இப்போது அவன் பின்னாலேயே ….




மனோகரன் அவளுக்களித்த இதழ் முத்தம் இப்போது நெருப்பாய் இதழெரிக்க , எவ்வளவு தைரியமாக இவன் என்னை முத்தமிடுவான் …? நான் …அப்போது ஏன் அப்படி சும்மாயிருந்தேன் .எப்படி நெருப்பாக உலா வந்தவள் நான் .இவன் என்னை எவ்வளவு பலவீனமாக்கி விட்டான் .இவனை திருமணம் முடித்தால் இதே கதிதானே எனக்கு தினமும் ..இதோ இந்த விஜயாவை போல் தினமும் அவனது தேவைகளை நிறை்வேற்றிவிட்டு பிறகு தனிமையில் கிடந்து புலம்ப வேண்டும் .

இல்லை …அப்படி ஒரு கேவலமான வாழ்விற்கு நான் தயாரில்லை …வைசாலி ஒரு முடிவுக்கு  வந்தபோது விடிந்துவிட்டது .அயரவுடன் தன்னையறியாமல் கண் மூடி உறங்க ஆரம்பித்தாள் .

What’s your Reaction?
+1
3
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!