Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 27

27

 

 

 

 

“இந்த இரண்டு டாகுமென்டையும் டைப் செய்து பி.டி.எப்ல போட்டு வைங்க..” திவாகர் நீட்டிய பைல்களை வாங்கிய சஸாக்கியின் கைகளில் எந்திரத்தனம் இருந்தது..
“ஏதாவது பிரச்சனையா..?”
சஸாக்கி பதில் சொல்லாமல் திரும்ப போனாள்..
“சஸாக்கி உங்களிடம்தான் கேட்கிறேன்.. ஏதாவது பிரச்சனையா..?”
நிமிர்ந்து அவனை பார்த்தவள் மௌனமாக திரும்பி வாசலை நோக்கி நடக்க, அறைக் கதவை திறந்து கொண்டு பாலகுமரன் உள்ளே வந்தான்..




“பாலா.. உன்னை இங்கே வரக் கூடாதுன்னு சொன்னேன்ல..” திவாகரின் அதட்டலை கொஞ்சம் கூட கவனிக்காமல் சஸாக்கியின் முகத்தில் பார்வையை பதித்தபடி நின்றான்..
சஸாக்கியும் அவனையே பார்த்தபடியே, அவன் கண்களோடு தன் கண்களை கோர்த்தபடியே நின்றிருந்தாள்..
“பாலா..” திவாகர் திரும்ப கண்டிப்பாக அழைக்க..
பாலகுமரன் வேகமாக உள்ளே நடந்து வந்தவன் சஸாக்கியின் அருகே வந்ததும் அவளை இழுத்து இறுக்கி தன்னோடு அணைத்துக் கொண்டான்.. அவள் முகத்தை திருப்பி தன் மார்பில் அழுத்திக் கொண்டு மெல்ல தலையை வருடிக் கொடுத்தான்.. சஸாக்கி அசையாமல் நின்றாள்.. ஆனால் பாலகுமரனின் அணைப்பை தடுக்கவில்லை.
“டேய்..” திவாகருக்குத்தான் பெரிய அதிர்ச்சி..
“பாலா என்ன பண்ணிட்டிருக்கிற..?” பற்களை நறநறத்தான்..
“உஷ்..” சஸாக்கியின் அணைப்பை விடாமல் ஆட்காட்டி விரலை உதட்டில் வைத்து பாலகுமரன் சைகை காட்ட, திவாகர் தலையில் கையை வைத்துக் கொண்டு டேபிளில் சாய்ந்து முகத்தை மூடிக் கொண்டு விட்டான்..
ஐந்து நிமிடங்கள் அவளை அணைத்தபடியே நின்ற பாலகுமரன் பின் மெல்ல விடுவித்தான்..
“இப்போது பரவாயில்லையா..?” இரு விரல்களால் அவள் நெற்றியை வருடியபடி கேட்டான்..
தன் நெற்றி மேல் தவழ்ந்த அவனது விரல்களை எடுத்து விட்டு விட்டு சஸாக்கி மௌனமாக வெளியே போனாள்.. அவள் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, மீண்டும் முன்னால் திரும்பிய பாலகுமரன் விழித்தான்..




திவாகர் காதில் பொருத்தியிருந்த போனை எடுத்து “இந்தா பேசு..” என நீட்டினான்..
“யாருடா மாப்பிள்ளை..?” பாலகுமரன் முகத்தில் கொஞ்சம் பயம் கூட இருந்தது..
“பேசுடா மச்சான் தெரியும்..” வன்மம் குடி கொண்டிருந்தது திவாகரின் கண்களில்..
போனை வாங்கி காதில் வைக்க எதிரிலிருந்து கார்த்திகாவின் குரல் காரசாரமாக அவன் காதில் விழுந்தது.. கண்களை இறுக மூடிக் கொண்டு அந்த கத்தல்களை “ம்” கொட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தான் பாலகுமரன்..
பாலகுமரன் போன பின்பு திவாகரின் அறைக்கு வந்தாள் சஸாக்கி..
“திருமணம் எப்போது..?”
“அடுத்த மாதம் எதற்கு கேட்கிறீர்கள் சஸாக்கி..?”
“எங்கே..? என்றைக்கு..?”
திவாகரின் முகம் மாறியது..
“உங்களுக்கு இந்த விபரங்களெல்லாம் எதற்கு சஸாக்கி..? இவையெல்லாம் உங்களுக்கு சம்பந்தமற்ற விபரங்கள்.. என் மச்சான் திருமணம்.. கண்டபடி திருட்டுத்தனமாக நடக்காமல் முறைப்படி நடக்க போகிறது.. நாங்கள் எல்லோரும் மிகுந்த சந்தோசத்துடன் இருக்கிறோம்..”
“உங்கள் யாருக்கும் மனசாட்சி உறுத்தவில்லை..” நேரடியாக முகத்தில் அடித்தாற் போல் கேட்ட இந்த கேள்விக்கு திவாகர் சிறிதும் அஞ்சவில்லை..
“ஒரு ப்ரசென்ட் கூட இல்லை..”
“நான் நினைத்தால் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுவேன் தெரியுமா..?”
“அட அப்படியா..? நினைத்துத்தான் பாருங்களேன்..”
நீயெல்லாம் ஒரு மனுசனா.. என்பது போல் சஸாக்கி அவனை பார்க்க.. அவன் சிறிதும் அஞ்சாமல் நின்றான்..
சஸாக்கி வெறுத்து போய் போகவும், திவாகரன் தன் போனை எடுத்து நம்பர்களை அழுத்தினான்.. எதிர்முனையில் போனை எடுத்தது அகல்யா..




“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? நான் சொன்னபடி செய்கிறீர்களா.. இல்லையா..?”
“சார் நீங்க சொன்ன பயிற்சிகள், கொடுத்த மருந்துகள் எல்லாமே அந்த பெண்ணிற்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் சார்..”
“சரி இன்னமும் இரண்டு நாட்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக கொடுங்கள்..” போனை கட் செய்துவிட்டு கார்த்திகாவிற்கு அழைத்தான்.
“திருமணத்தை நிறுத்த போகிறார்களாம்..” என்று அவளுக்கு தகவல் சொன்னான்..
கார்த்திகா மறுபுறமிருந்து சில விபரங்கள் சொல்ல, இருவருமாக வேறு சில திட்டங்கள் போட்டுக் கொண்டனர்..
“நாளை நமது கம்பெனிக்கு ஒரு முக்கியமான ஆள் வருகிறார்.. அவரது வரவேற்பு ஏற்பாடுகள் மிகவும் கிராண்டாக இருக்க வேண்டும்..”
திவாகரன் அந்த முக்கிய விருந்தாளியை வரவேற்பதற்கான விபரங்களை தனது ஊழியர்களுக்கு சொன்னபடி இருந்தான்.. சஸாக்கி விழி மூடி அமர்ந்திருந்தாள்.. அவள் மனதில் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது..
“சார் எனக்கு நாளை லீவ் வேண்டும்..” திவாகரிடம் வந்து நின்றாள்.
“நிச்சயம் கிடையாது..”
“சார்..”
“நாளை வரும் விருந்தாளியை வரவேற்க நீங்கள்தான் முக்கியம்.. லீவ் என்ற பேச்சே பேசாதீர்கள்.. போங்க போய் வேலையை பாருங்க..” அழுத்தமாக பேசியவனை முறைத்தபடி சென்றாள்..
அப்படி எதற்கு நான் முக்கியமாம்..? பொறுமியபடி காரில் அமர்ந்திருந்தவள் அருகாமை சலனத்தில் திரும்பி பார்த்து அதிர்ந்தாள்..
அவளருகில் உரசியபடி பாலகுமரன் அமர்ந்திருந்தான்.. இவனா எப்படி..?
சஸாக்கியே அந்த முக்கிய விருந்தினரை வரவேற்க ஏர்போர்ட் போக வேண்டுமென கூறி காரில் ஏறச் சொல்லியிருந்தான் திவாகர்.. பிடித்தமில்லாமல் காரில் அமர்ந்திருந்தவள் அவளுடன் ஏறிக்கொண்ட பாலகுமாரனை பார்த்து விழித்தாள்..
“நீங்களா..? நீங்கள் எதற்கு என்னுடன் வருகிறீர்கள்..?”
“வார்த்தைகள் தவறு சகி.. நீதான் என்னுடன் வருகிறாய்..”
“அதுதான் எதற்கென்றேன்..?”




“என்னம்மா நம்ம கம்பெனி கெஸ்ட் வரவேற்க நானும் வர வேண்டாமா..?” அவன் பேசிக் கொண்டிருந்த போதே வெளியே திவாகர்.. “பாலா.. பாலா..” என அழைத்தபடி இவனை தேடுவது தெரிந்தது..
“திவா நான் இங்கே இருக்கிறேன்..”
வேகமாக வந்து காருக்குள் எட்டிப் பார்த்தவன் முறைத்தான்..
“டேய்.. உன் கார் என்ன ஆச்சுடா.. எதற்கு இங்கே உட்கார்ந்திருக்கிறாய்..?”
“என் காரில் ரிப்பேர்டா மாப்பிள்ளை..”
“சரி வா.. என்னோட காரில் போகலாம்..”
“இல்லடா வேண்டாம்.. இந்த உன் கம்பெனி காரே ரொம்ப வசதியாக இருக்கிறது.. நான் இதிலேயே வருகிறேன்.. நீ உன் காரில் ஏர்போர்ட் வா..” சொல்லிவிட்டு காரின் பின்சீட்டில் அழுத்தமாக சாய்ந்து கொண்டான்.
திவாகர் ஒன்றும் பேச முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு போனான்..
“எதற்கு என் பின்னாலேயே வருகிறீர்கள்..?” சஸாக்கி எரிந்து விழுந்தாள்.
“உன் பின்னால் வருகிறேனா..? எங்க கம்பெனி முக்கியமான கெஸ்ட்டும்மா.. அவரை வரவேற்க வருகிறேன்.”
“நான் யாரிடம் வேலை பார்க்கிறேன்..? திவாகரிடமா.. உங்களிடமா..?”
“இரண்டு பேர் கம்பெனியும் ஒன்றோடென்று தொடர்புடையதுதான் சகி..”
“முதலில் இந்த சகியை நிறுத்துங்கள்.. முழு பெயர் சொல்லி கூப்பிடுங்கள்..”




“அது என்ன முழு பெயர்..? அப்படி ஒரு பெயரே எனக்கு தெரியாதே.. எனக்கு நீ எப்போதும் சகிதான்.. என் எண்ணங்களின் சகி, என் வாழ்கையின் சகி..”
அவன் அடுக்கியபடி சொல்ல சஸாக்கி முறைத்தாள்.
“முறைக்காதே சகி.. சகியென்றால் தோழிதானே.. என் தோழியாய் இருப்பதில் உனக்கு என்ன கஷ்டம்..?”
சஸாக்கி பார்வையை காருக்கு வெளியே திருப்பிக் கொண்டாள்.. கலங்கிவிட்ட அவள் கண்களை பாலகுமரன் பார்த்து விடக் கூடாதே என்ற பதட்டம் கூட அதன் காரணமாயிருக்கலாம்..
“இன்று உன்னை வற்புறுத்தி அழைத்து போவதற்கு இன்னொரு காரணம் கூட இருக்கிறது சகி..” பாலகுமரனின் பேச்சிற்கு அவள் திரும்பவில்லை.. விபரங்கள் கேட்க வில்லை..
ஆனால் ஏர்போர்ட்டில் அவரை பார்த்ததும் அவள்.. விழிகள் விரிந்தன.. நம்பிக்கையின் ஒளி ஒன்று அவளுள் பரவியது..
வந்தவர்.. அகிரோட்டோ..

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!