Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 12

12

உயிரற்ற உடல் போல் சலனமின்றி விழுந்து கிடந்த மகளை துயரத்துடன் பார்த்தாள் தனலட்சுமி .அடிக்கடி எழும் சிறு கேவல்கள் மட்டும் இல்லையெனில் மகளுக்கு துடிப்பில்லை என்ற முடிவிற்கே வந்திருப்பாள் .என்ன ஆயிற்று ..? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு .காலையில் சந்தோசமாகவே வீட்டை விட்டு சென்ற மகள் .நேரமாகிவிட்டதென காலை உணவை உண்ணாமல் ஓடினாள் .




மதியம் வீடு வந்த மகளை பார்த்து திடுக்கிட்டாள் .தலை கலைந்து , விழிகள் நிலை குத்த , பைத்தியக்காரி போல் , நிலைத்த பார்வையுடன் வந்து நின்றாள் .தனலட்சுமியின் கேள்விகள் எதற்கும் பதிலில்லை .இந்த நிலையில் எப்படி ஸ்கூட்டியை ஓட்டி வந்தாளென தெரியவில்லை .வெறித்த பார்வையுடன் ஹாலில் அப்படியே தரையில் சரிந்துவிட்டாள் .பற்றி எழுப்பிய போது அவளிடம் எந்த சலனமும் இல்லை .

மகளுக்கு நடக்க கூடாத எதுவோ நடந்து விட்டதோ ..?? என தவித்து விட்டாள் தனலட்சுமி .மாலை பள்ளியிலிருந்து வந்த  ராதாவும் , ரவீந்தரும் அக்காவின் நிலையைக் கண்டு திகைத்தனர் .வீட்டினர் யாருடைய கேள்விகளையும் …அவர்களின் அருகாமையையும் கூட வைசாலி உணர்ந்த்தாக தெரியவில்லை .

இரவு கஷ்டப்பட்டு அவளை எழுப்பி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு , காலை பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிக் கொண்டிருந்த போது விஜயா வந்தாள் .

” ஆன்ட்டி வைசாலி ஏன் இன்னைக்கு பால் வாங்க வரலை …? நீங்களும் வரலையே …பாலுக்கு என்ன பண்ணுனீங்க …? என்கிட்ட கொஞ்சம் இருக்கு கொண்டு வரட்டுமா …? ” வளவளத்தபடி வந்தாள் .

” வைசாலிக்கு உடம்பு சரியில்லைம்மா ..அதுதான் .பழைய பால் கொஞ்சம் இருந்த்து .சமாளித்துவிட்டேன் ”
” என்ன உடம்புக்கு …? காய்ச்சலா …? ” என்றபடி உள்ளே நுழைந்த விஜயா …கண்களை இறுக மூடிக்கொண்டு கட்டிலில் சுருண்டருந்த வைசாலியை பரிதாபமாக பார்த்தாள் .

” வைசாலி …” என அவளை எழுப்ப முயன்றவள் ” விஜயா அவள் இரவு முழுவதும் தூங்கவில்லை .தூங்கட்டும்மா .எழுப்பாதேம்மா ” என தனலட்சுமி கூறவும் சரியென்று விட்டு  சென்றாள்  .




ராதாவும் , ரவீந்தரும் பள்ளிக்கு செல்லவும் , வைசாலியிடம் வந்து அவளருகே அமர்ந்து அவள் தலையை எடுத்து தனது மடியில் வைத்துக்கொண்டாள் தனலட்சுமி .

” வைசும்மா ..அப்பா போனபிறகு , நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம்  .திக்கு தெரியாமல் நாங்கள் எல்லோரும் நின்றபோது , நீதானேம்மா ..அப்போது தைரியமாக நின்று நமது குடும்பத்தை நிமிர்த்தினாய் .இப்போது நீயே உடைந்து போனால் எப்படிம்மா …? உன்  அப்பா நம்மை விட்டு போனதை விட பெரிய துக்கம் நமக்கு என்னம்மா வந்துவிட போகிறது ..? அந்த கொடுமையிலிருந்தே நாம் வெளியே வந்துவிட்டோம் .இப்போது இந்த துக்கத்தை நீ மறப்பதா பெரிய விசயமாயிருக்க போகிறது …? ராதாவையும் , ரவீந்தரையும் நினைத்துபார் .என்னை நினைத்து பார் .அம்மாவிற்கு உன்னை விட்டால என்ன தெரியும் .வெளியுலகமே தெரியாமல் இருந்துவிட்டேன் .நீ இப்படி உடைந்துபோய்விட்டால் நாங்கள் என்னம்மா செய்வோம் …? “

மகளின் தலையை வருடியபடி தனது ஒவ்வொரு வார்த்தையும் மகளின் மனதினுள் இறங்கும் வகையில் அழுத்தி மெல்ல சொன்னாள் .இதற்கு பலனிருந்த்து .தாயின் வார்த்தைகளை மெல்ல உள்வாங்கிக் கொண்ட வைசாலி , ஒரு கட்டத்திற்கு மேல் மெல்ல விசும்ப ஆரம்பித்து , பின் சத்தமாக அழத்துவங்கினாள் .தன்னுணர்வின்றி கதறும் மகளை அணைத்தபடி நெஞ்சு வலிக்க பார்த்திருந்தாள் அன்னை .

” அழுதுவிடும்மா .எவ்வளவு பெரிய துக்கத்திற்கும் கண்ணீர்தான் வடிகால் .அழுதுவிடு ….” தனது கண்ணீரை துடைத்தபடி மகளை அவள் போக்கில் விட்டாள் .அழுதழுது தொண்டை காய்ந்து , கண்ணீர் வற்றி கண்களும் காய்ந்த்தும் சிறு கேவல்களில் வைசாலி வந்து நிற்கும் வரை அவளை விட்ட தனலட்சுமி , பாத்திரத்தில் தண்ணீருடன் வந்து , டவலால் நனைத்து மகளின் முகத்தை துடைத்தாள் .




இளஞ்சூட்டுடன் இருந்த சத்துமாவு கஞ்சியை மகளின் வாயில் வைத்தாள் .முகம் சுளித்து மறுத்தவளை ” நேற்று முழுவதும் நீ சாப்பிடவில்லை .இப்போது இந்த கஞ்சியை குடிக்கவில்லையென்றால் நடப்பதே வேறு …” என அன்னையாக மாறி மிரட்டி பாதியையாவது விழுங்க வைத்தாள் .

” எந்த பிரச்சினையும் இல்லை .நிம்மதியாக தூங்கும்மா …” மகளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு , வெளியே வந்து ஹாலிலிருந்த முருகன் படத்தை பார்த்தபடி ” முருகா என் மகளை இந்த பிரச்சினையிலிருந்து மீட்டு கொண்டு வாப்பா …” என வேண்டியபடி அப்படியே கீழே அமர்ந்தாள் .

பத்து நிமிடங்களில் உள்ளிருந்து வந்த வைசாலி தாயின் மடியில் தலை வைத்து படுத்தாள் .மெல்ல மகளை வருடினாள் .

” அம்மா ..நான் ஏமாந்து விட்டேன்மா …” தனலட்சுமிக்கு சுரீரென்றது .

” வைசு …என்னம்மா சொல்கிறாய் …? “

தாயின் பதட்டத்தை உணர்ந்து கொண்ட வைசாலி ” உடம்பால் ஏமாறுவதை விட மனதால் ஏமாறுவது கொடுமைம்மா .அது ஒரு மனிதனை …அவனின் உணர்வுகளை சாகடித்துவிடும் .என் உணர்வுகள் செத்துவிட்டதும்மா .இனி நான் எப்படி வாழ போகிறேன். ” மீண்டும் அழ ஆரம்பித்தாள் .

” மனம் என்பது நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதும்மா வைஷு .எப்போதும் அதனை நமது வேலையாளாகத்தான்மா வைத்துக்கொள்ள வேண்டும் .எஜமானனாக விடக்கூடாது …நீ தைரியமான பெண் ..தளர்ந்து விடாதேம்மா…” இப்போது வைசாலி அவளது ஹேன்ட்பேக்கில் வைத்தருந்த போன் ஒலிக்க துவங்கியது .உடனே வைசாலியின் உடல் விறைத்தது .

” நேற்று நீ வீட்டிற்கு வந்த்திலிருந்து போன் வந்து கொண்டேயிருக்கறதும்மா .எடுத்து பேசு …” போனை எடுத்து கொடுத்தாள் தனலட்சுமி .

” இல்லை …வேண்டாம் .நான் பேசமாட்டேன் …” தாயின் மடியில் முகம் புதைத்துக்கொண்டாள் வைசாலி .போன் நின்று போனது .

” சரிம்மா நீ கொஞ்சநேரம் தூங்கு .நான் துணிகளை துவைத்துவிட்டு வருகிறேன் …” தனலட்சுமி எழுந்த போது போன் மீண்டும் ஒலித்தது .அவள் நின்று திரும்பி பார்க்க போனை கையில் எடுத்து பார்த்த வைசாலியின் முகம் கோபத்தில் துடிக்க போனை ஓங்கி சுவற்றில் வீசினாள் .அது துண்டு துண்டாக உடைந்து வீடு முழுவதும் சிதறியது .

தனலட்சுமி அதிர்ந்தாள் .இந்த போனை வைசாலி எவ்வளவு ஆசையாக வாங்கினாளென்பதை அவள் அறிவாள் .மிகவும் பத்திரமாக பொக்கிசமாக அதனை பாதுகாத்து வந்தாள் .இப்போது ஏனிப்படி….????

மகளுருகே அமர்ந்து அவளை அணைத்தபடி ” ஏன்மா …???” என்றாள் .

” இதுதான் …இந்த போன்தான் எல்லாவற்றிற்கும் காரணம் ” வைசாலி மீண்டும் அழுகைக்குள் விழுந்தாள் .இப்போதும் தேற்றும் வகையறியாது மகளை வருடியபடி அமர்ந்திருந்தாள் தனலட்சுமி.

வாசலில் காலிங்பெல் அழைத்தது .ஒரு பரபரப்புடன் எழுந்த வைசாலி ” அம்மா யாரையும் பார்க்கும் நிலையில் நான் இல்லை .யாராக இருந்தாலும் வெளியில் வைத்து பேசியே அனுப்பிவிடுங்கள் ….மீறி யாராவது வந்தால் நான் உயிரை விட்டுவிடுவேன் ” என்றுவிட்டு அறையினுள் சென்று கதவை பூட்டிக்கொண்டாள் .




தனலட்சுமி போய் கதவை திறந்தாள் .” வணக்கம் ஆன்ட்டி .நான் மனோகரன் .உங்கள் மகள் வேலை பார்க்க போகும் கார் கேர் சென்டர் முதலாளி .” என்று கை கூப்பியபடி நின்றிருந்தான் மனோகரன் .

யோசனையோடு அவனை பார்த்தபடி ” அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையே …” என்றாள் .

” ஓ…” என்றவன் தயங்கி ” நான் அவர்களை பார்க்கலாமா ….? ” என்றான் .

” அவள் தூங்குகிறாள் .நாளை வாருங்களேன் ….”

” சரி இப்போது எனக்கு கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்களேன் ….” என்றான் .

மகளின் முதலாளி .இதற்கு மேல் நாசூக்காக போ என்று எப்படி சொல்வது …?தனலட்சுமி வேறு வழியின்றி ” உள்ளே வாருங்கள் ….” என்றுவிட்டு தண்ணிருக்காக அடுப்படிக்கு சென்றாள் .

மனோகரன் உள்ளே நுழையவுமே அவன் கால்களில் சுருக்கென எதுவோ குத்த , குனிந்து பார்த்தான் .செல்போனின் சிதறிய துண்டுகளில் ஒன்று .தொடர்ந்து தரை முழுவதும் கிடந்த போனின் பாகங்களை வேதனையுடன் பார்த்தான் .நிமிர்ந்து மூடி தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த கதவையும் பார்த்தான் .

ஒரு முடிவுடன் கதவை நோக்கி நடந்தவனை ” நில்லுங்கள் சார் ….” என்ற தனலட்சுமியின் அதட்டலான குரல் நிறுத்தியது .

கையில் தண்ணீர் டம்ளருடன் வந்தவள் ” இங்கே உட்காருங்கள் .உங்களுடன் பேச வேண்டும் ” என்றாள் .பதில் சொல்லாமல் மௌனமாக அமர்ந்தவனின் முகத்தை ஆழமாக பார்த்தாள் .

” யார் நீங்கள் …? நேற்று என் மகள் குற்றுயிரும் , குலையுயிருமாக உணர்வின்றி வந்து சேர்ந்தாளே .அதில் உங்கள் பங்கு எதுவும் இருக்கிறதா …? ” குரலை உயர்த்தி கம்பீரமாக கேட்டாள் .

பதில் சொல்ல முடியாமல் தலையை அசைத்தான் மனோகரன் .

” அப்போது உங்களுக்கு இந்த வீட்டில் இடமில்லை .வெளியே போங்கள் …” வாசலை காட்டினாள் .

” ஆன்ட்டி …நான் சொல்வதை கொஞ்சம் ….”

” வேண்டாம் …உங்கள் பக்க நியாயம் எதுவும் வேண்டாம் .எனக்கு என் மகளே நியாயவாதி .அவள் உங்களைப் பார்க்க விரும்பவில்லை .நீங்கள் போகலாம் ….”

” ஆன்ட்டி ப்ளீஸ் …பேசாமல் தீரக்கூடிய பிரச்சினையில்லை இது .வைசாலியிடம் நான் என்னை விளக்கியே தீரவேண்டும் ….”

” விளக்க போகிறீர்களா …? உங்களைப் பார்த்தாலே உயிரை விட்டு விடுவேன் என்கிறாள் .நீங்களானால் அவளுக்கு விளக்கம் கொடுக்க போகிறேன் என்கிறீர்கள் …. “

இதற்கு அவனது முகம் எல்லையில்லா வேதனையை காட்டியது .கண்களை இறுக மூடிக்கொண்டான் .




” இரண்டு வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்த போது கை நிறைய கடனை விட்டு சென்றார் .கடன் விபரம் தெரிந்ததும் துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் வாசல்படியிலேயே நின்றுவிட்டு , வாய் வார்த்தையிலேயே கடமையை ஆற்றிவிட்டு போய்விட்டனர் .சூன்யமாகிவிட்ட எதிர்காலத்தை நினைத்து நான் பித்து பிடித்தது போல் இருந்தபோது , உடனடியாக அந்த துக்கத்திலிருந்து வெளியே வந்து , தொழிலொன்றை ஆரம்பித்து , எங்கள் குடும்பத்தை காப்பாற்றியவள் வைசாலி .இவ்வளவிற்கும் அவள் அப்பாவிற்கு செல்லபெண் .எப்போதும் அவர் பின்னாலேயேதான் திரிவாள் .அப்படிப்பட்ட தைரியசாலியை ஒரு நாளில் உடைத்து போட்டு விட்டீர்களே …”

” நேற்று என் மகள் எப்படி கதறினாள் தெரியுமா …? மீண்டும் என் மகள் எனக்கு மகளாக கிடைப்பாளென்ற நம்பிக்கையே எனக்கு இல்லை .அவ்வளவு வேதனை …துக்கம் …உயிரற்ற பிணம் போல் கிடந்தாள் …”தனலட்சுமி அழுகையுடன் கூற …

” ஆன்ட்டி ப்ளீஸ் …அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் .எனக்கு …ஒரு பத்து நிமிடம் மட்டும் டைம் கொடுங்கள் .நான் வைசாலியிடம் ….”

” எதற்கு அவளது உடலில் பெயருக்கு மெல்லியதாக ஓடிக்கொண்டிருக்கிறதே …அந்த மூச்சுக்காற்றையும் நிறுத்தவா …? “

இந்தக் கேள்வியில் பதறி எழுந்தவன் ” இந்த வார்த்தையை என்னை காயப்படுத்த வேண்டுமென நீங்கள் கூறியிருந்தால் …சாரி உங்களுக்கு தோல்வி .ஏனென்றால் நான் ஏற்கெனவே மரணகாயத்தோடு போராடிக்கொண்டிருக்கிறேன் .என்னை வெளியே அனுப்ப வேண்டுமென்பதற்காக சொல்லியிருந்தீர்களானால் …இப்போதைக்கு இதனை உங்கள் வெற்றியாக எடுத்துக் கொள்ளுங்கள் .நான் போகிறேன் ” என்றவன் குனிந்து வீடு முழுவதும் சிதறிக் கிடந்த போன் துண்டுகளை பொறுமையாக சேகரித்து எடுத்து வைத்தான் .

” வைசாலியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் .ஏனென்றால் அவள் என் உயிர் …” என்றுவிட்டு வாசல் கதவை திறந்தான் .

” என்ன ஆன்ட்டி …நம்ம வைஷுக்கு உடம்பு சரியில்லையாமே ….நீங்க சொல்லவேயில்லையே .இப்போது எப்படி இருக்கிறாள் …? வைஷு….வைஷு ….” என உரிமைப்பட்டவன் போல் கத்தியபடி உள்ளே வந்தான் சேகர்.

கோபமாக அவனை முறைத்தபடி வெளியேறாமல் நின்றான் மனோகரன்.

What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!