Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 13

13

யாரிவன் …? கண்களாலேயே சேகரை குத்தியபடி தனலட்சுமி யிடம் திரும்பி புருவம் உயர்த்தலிலேயே கேட்டான் மனோகரன்.

” பக்கத்து வீட்டுக்கார்ர் ..” மனோகரனின் ஜாடைக் கேள்விக்கு தன்னையறியாமல் பதிலளித்த தனலட்சுமி ” இப்போது அவளுக்கு பரவாயில்லை .தூங்குகிறாள் …” என சேகருக்கு பதிலளித்தாள் .

” ஓ…என்ன ஆயிற்று ஆன்ட்டி …என்னிடம் சொல்லியிருக்கலாமே ..நான் ஒருவன் இருப்பதையே மறந்து விட்டீர்களா ..? சரி விடுங்க …இப்போது வைசுவை எழுப்பி கூட்டி வாருங்கள் .ஆஸ்பிடல் கூட்டிப் போகிறேன் ….” சட்டமாக அமர்ந்து கொண்டான் .




‘ இப்படித்தான் எப்போதும் தொல்லை பண்ணுவானா …? என்ற மனோகரனின் விழிக் கேள்விக்கு தலையசைத்தபடி …தனலட்சுமி ” பரவாயில்லை …நீங்கள் போங்கள் .நான் பார்த்துக்கொள்கிறேன் ” என்றாள் சேகரிடமும் கூடவே மனோகரனிடமும் …

பதிலாக தன் முழுக்கை சட்டையின் கை பட்டனை சுழற்றியபடி கோபமாக சேகரை பார்த்தபடி நெருங்கிய மனோகரனை ” இவர் பக்கத்து வீட்டுக்கார்ர் .பெயர் சேகர் .சும்மா படபடவென பேசுவாரே தவிர மனதில் கல்மிசம் கிடையாது ” என விஜயாவை மனதில் நினைத்தபடி  அவசரமாக நிறுத்தினாள் .

” ஓஹோ…” என்ற மனோகரன் ” ஹலோ பிரதர் …” என அவனுக்கு கை கொடுத்தான் .

” நீங்க யார் சார் …? ” சேகர் .

” நான் …வாங்க சொல்றேன் .” அவன் கையை பிடித்து எழுப்பினான் மனோகரன் .

” வர்றேன் .கொஞ்சம் கையை விட்டுடுங்களேன் …” அவசரமாக மனோகரிடமிருந்து விடுபட்ட தனது கையை சேகர் தடவிப் பார்த்துக் கொண்டிருந்த போது ” அட ..வாங்க பிரதர் …” என அவன் தோள்களில் கை போட்டுக்கொண்டு தனலட்சுமியை பார்வையால் ஜாக்கிரதை கதவை பூட்டிக்கொள்ளுங்கள் என எச்சரித்து விட்டு வெளியேறினான் மனோகரன் .

அவனது இந்த அணுகுமுறை மனதிற்கு இதமாக இருக்க , மெல்ல புன்னகைத்தபடி கதவை பூட்டிவிட்டு அறையினுள் நுழைந்தாள் தனலட்சுமி .மனோகரன் போகவும் அறைக் கதவை திறந்துவிட்ட வைசாலி சன்னலின் வழியாக கீழே பார்த்துக் கொண்டிருந்தாள் .

அங்கே இருந்த ஐஸ்கிரீம் பார்லரில் எதிரெதிராக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் மனோகரனும் , சேகரும் .தன் கையிலிருந்த ஐஸ்கிரீமை நிதானமாக சுவைத்தபடி மனோகரன் பேசிக்கொண்டிருந்தான் .தன் கையிலிருந்த ஐஸ்கிரீமை சாப்பிட முடியாமல் உருக வைத்தபடி விழித்துக் கொண்டிருந்தான் சேகர் .




” இனி இவனால் நைநையென்ற தொந்தரவு நமக்கு இருக்க்காது என நினைக்கிறேன் …”  மகளை பார்த்தபடி கூறினாள் தனலட்சுமி .

” நிச்சயம் இருக்காது …” பார்வையை அங்கே பதித்தபடி கூறினாள் வைசாலி .

” வைசு …அவர் ….” என்ற அன்னைக்கு கைகாட்டிவிட்டு ” நான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான்மா இருந்தேன் ” என்றவள் …” நான் கொஞ்சநேரம் படுக்கிறேன்மா ” என கட்டிலில் படுத்து விழிகளை மூடிக்கொண்டாள் .மகளுக்கு இதமாக சன்னலை பூட்டி அறையை இருளாக்கிவிட்டு வெளியேறினாள் தனலட்சுமி .

மூடிய வைசாலியின் விழிகளுக்குள் அன்றைய காட்சி அப்படியே படம் போல் ஓடி உடலை தூக்கிப் போட வைத்தது .ஒருவரோடொருவர் முத்தமிட்டபடி நின்ற அம்ருதாவும் , மனோகரனும் ….அன்று அந்த கன்றாவி காட்சியை பார்த்ததும் அப்படியே கண்கள் இருள நின்றவள் மூளை செயலிழந்து மயக்க நிலைக்கு போய் கொண்டிருப்பதை உணர்ந்தாள் .அதே நேரம் நிமிர்ந்த மனோகரனும் அவளைப் பார்த்து அதிர்ந்தான் .

சொருகிக் கொண்டு சென்ற தன் விழிகளை விரித்தவள் …இல்லை இந்த நேரத்தில் , இந்த இடத்தில் மயங்க கூடாது மனது மூளைக்கு கட்டளையிட , அந்த இடமே அடுப்பாக  மாறி அவளை எரிக்க துவங்க , உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட வேண்டுமென முடிவெடுத்தவள் , தலைதெறிக்க பைத்தியக்காரி போல் பின்புறமாக தனது வண்டியை நோக்கி ஓடினாள் .

யாரோ பின்தொடர்வது போல் தெரிய , அப்படி யாரேனும் அழைத்து விடுவார்களோ , என பயந்து திரும்பியும் பாராமல் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணியவள் அதன் பிறகு எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே புதிர்தான் .கை பழக்கத்தில் வண்டியை ஓட்டியிருக்கிறாள் .நரகமொன்றின் வாசனையிலேயே நெடுநேரம் இருந்த பிறகு , சுரணை வந்த முதல் விநாடி அவள் அன்னையின் மடியில் , அவளின் பாச வருடலில் இருந்தாள் .நிதர்சனத்தை அவளுக்கு புரிய வைக்க முயன்று கொண்டிருந்தாள் அவள் அன்னை .வைசாலி அம்மாவிற்காக் , தம்பி , தங்கைக்காக மெல்ல மெல்ல தன்னை மீட்டெடுத்துக் கொண்டாள் .

தன்னுணர்வு மீண்டதும் இப்போது யோசித்து பார்த்தால் அம்ருதாவின் விளக்கங்கள் அனைத்தும் இப்போது அப்படியே மனோகரனுக்கு பொருந்திப்போனது .அந்த ஸ்டுடியோ …அது மனோகரனுடையதுதான்.அதாவது அவனது தந்தையுடையது  .வைசாலி மனோகரனின் தந்தையைத்தான்  பார்த்து அம்ருதா சொல்லும் ஆள் அவர்தானென தவறாக நினைத்துவிட்டாள் .ஆனால் திருமணம் முடிக்காத வெகு இளமையான இந்த மனோகரனைத்தான் தன் வசமிழுத்து விட வேண்டுமென அம்ருதா முயன்று கொண்டேயிருந்திருக்கிறாள் .




முதலநாள் திடீரென வந்த மனோகரனை பார்க்கத்தான் அம்ருதா ஓடியிருக்கிறாள் .அவன் இவளை பார்க்காமலேயே சென்றதால்தான் அந்த அழுகை .பிறகு அவன் திடீரென சைனா சென்றதும் அதைத்தான் அன்று அம்ருதாவும் , வேதாவும் பேசியிருக்கின்றனர் .இதில் தேவையில்லாமல் நுழைந்து வைசாலி வேறு அவனுக்கு சப்போர்ட் பண்ணியிருக்கிறாள் .

பிறகு எப்படியோ போனிலேயே அவனை பேசி வளைத்து தனக்கென அந்த பங்களாவை வாங்கிவிட்டாள் .இப்போதும் சைனாவிலிருந்து வந்த்தும் , அவளை பார்க்க போக வேண்டியிருந்ததால் தான் வைசாலியை ஏர்போர்ட்டுக்கு வர வேண்டாமென கூறிவிட்டான் .இவன் நிதானமாக அவளை கொஞ்சிவிட்டு என்னை பார்க்க வருவான் .நானும் இளித்துக்கொண்டு நிற்பேனென நினைத்தான் போல …இப்படி நினைத்தவளை …நீ அப்படித்தானே அவனிடம் இளித்துக் கொண்டு நின்றாய் என குத்தியது மனசாட்சி .
இதயம் வலிக்க கண்ணீர் வடிந்த்து வைசாலிக்கு .அவ்வளவு தூரம் தள்ளியிருந்து கொண்டு போனிலேயே ஒருபுறம் என்னிடமும் , மறுபுறம் அவளிடமும் கொஞ்சிக் கொண்டிருந்திருக்கிறான் . அவன் அங்கிருக்கும் போதே இங்கே அந்த பங்களாவை அவளுக்கென வாங்கி விடும் அளவு இருந்திருக்கிறது அவர்களது உறவு .இதையெல்லாம் அறியாது நான் ஒருபுறம் அவனை கொஞ்சிக்கொண்டு ….சே..சே…

அன்று போனில் மனோகரன் அளித்த முத்தம் நினைவு வர, அப்போது சந்தனமாய் குளிர்ந்த மேனி இப்போது தனலாய் எரிந்த்து . எப்படி ஏமாந்துவிட்டேன் என தன்னிரக்கம் மேலோங்க …தீயாய் எரியும் மேனியை குளிர்விக்க , பாத்ரூமிற்குள் சென்றவள் ஷவரை திருப்பி விட்டு அப்படியே அதன் கீழ் நின்றாள் .

சில்லென்று குளிர்ந்தபடி அவள்  உடலை குளிர்வித்தாலும் , கொதிக்கும் வைசாலியின் மனதினை ஆற்றும் திடம் அந்த நீருக்கு இல்லாது போயிற்று .

_—————

” ஒரு வாரமாயிற்று நீங்கள் ஆபீஸிற்கு வந்து .என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் வைசாலி …? ” கேட்ட கரணை பார்க்காமல் சுவரை பார்த்தாள் .

” ப்ளீஸ் என்னைப் பார்த்து பதில் சொல்லுங்கள் .இந்த தொழிலுக்காக கோடிக்கணக்கில் வாரி இறைத்திருக்கிறோம் .இன்னமும் ஒரு வாரத்தில் திறப்புவிழா .நிறைய வேலைகளை உங்களை நம்பித்தான் , உங்களுக்கேற்றபடிதான் செட் செய்திருக்கிறோம் .நீங்களானால் ஒரு வாரமாக அந்த பக்கமே வரவில்லை .எங்களுக்கு வேறு தொழில்கள் இருக்கின்றன வைசாலி .இதனை உங்களை நம்பித்தானே கொடுத்தோம் …? பதில் சொல்லுங்கள் ….”

” நீங்கள் வேறு ஆளை போட்டுக்கொள்ளுங்கள் .என்னால் உங்களிடம் வேலை பார்க்க முடியாது ,”

கரணின் கண்கள் கோபத்துடன் ஜொலித்தது .

” என்ன விளையாடுகிறீர்களா …? நீங்கள் எங்களுடன் இரண்டு வருடம் பாண்ட் போட்டிருக்கிறீர்கள் .நீங்களே சொல்லுங்கள் அம்மா .அன்று உங்கள் முன்னாலேயே இங்கே இதே இடத்தில் வைத்துதானே கையெழுத்து போட்டோம் .இப்போது உங்கள் மகள் இப்படி சொல்கிறாரே …திடீரென இது போல் ஒரு விவரமான ஆளுக்கு நாங்கள் எங்கே போவோம் ..?  ” தனலட்சுமியிடம் திரும்பி கேட்டான் .




தனலட்சுமி தயங்கி வைசாலியை பார்த்து ” வைசாலி …” என்றாள் .

” கரண் ..சிஸ்டர் யோசிக்கட்டும் விடுடா .நாம் நாளை வரலாம் ” ஆதரவாக பேசினான் சுரேஷ்.

” நாளை வந்தாலும் இதே பதில்தான் .நான் உங்கள் கம்பெனி வேலைக்கு வரப்போவதில்லை ” உறுதியாக சொன்னாள் வைசாலி .

” அப்போது நான் இந்த பிரச்சினையை சட்டப்படி அணுக வேண்டியதிருக்கும் …” கோபமாக கூறினான் கரண் .

அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு ” செய்யுங்கள் ” என்றுவிட்டு திரும்பிக் கொண்டாள் வைசாலி .இருவரும் வேகமாக வெளியேறினர் .

” ஏய் என்னடா , ரொம்ப ஓவராக  பேசிவிட்டாய் …? ” சுரேஷ் வெளியே வந்த்தும் கரணை கடிந்தான் .

” மனோ சார் எப்படியாவது சிஸ்டரை வேலைக்கு அழைத்து வர வேண்டுமென சொன்னாரே .மறந்துவிட்டாயாடா …? ” என்றபடி நடந்தான் கரண் .

” சட்டம் …நடவடிக்கை …என அந்த தம்பி பயமுறுத்துகிறாரே வைசு ….? ” கவலையாக கேட்டாள் தனலட்சுமி .

” அதெல்லாம் ஒன்றும் செய்ய மாட்டார்களம்மா “

” எப்படிம்மா அவ்வளவு உறுதியாக சொல்கிறாய் …? “

” என் கணிப்புபடி அந்த மனோகர் அனுப்பிதான் இவர்கள் வந்திருக்க வேண்டும் .அப்படியில்லையென்றாலும் , இந்த கரண் சட்டப்படி என் மேல் நடவடிக்கை எடுக்கும் அளவு மனோகரன் விட மாட்டார் ” எவ்வளவு உறுதி குரலில் .மகளை ஆச்சரியமாக பார்த்தாள் தனலட்சுமி .தாயின் பார்வையை சந்திக்காமல் உள்ளே எழுந்து போனாள் வைசாலி .

உண்மையாகவே தனலட்சுமியிடம் சொன்னது போலவே , மனோகரன் அவ்வளவு எளிதில் தன்னை விட்டு விட மாட்டான் என்பதில் இன்னமும் அவளுக்கு நம்பிக்கைதான் .பக்கத்து வீட்டு சேகரை …அவளை பார்த்தாலே ஜொள் விட்டுக் கொண்டிருந்தவனை அவளை பார்த்தாலே செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டுவிட்டு ஓட வைத்திருக்கிறானே …

ஆனால் இவனது இந்த கண்காணிப்பு வளையம் சுகமாக இருக்கிறதென இதனுள்ளேயே இருந்து விடக்கூடாது .இது எனது அறிவை மழுங்கடித்து விடும் .எப்படியாவது வெளி வரவேண்டும் .என்னையறியாமலேயே என் மீதான வளையத்தை இறுக்கி கொண்டிருக்கிறானே …மீள என்ன செய்வது …? வைசாலியின் தீவிர சிந்தனைக்கு பதில் மறுநாள் காலை தானாகவே வீடு தேடி வந்த்து .




மறுநாள் காலை கோபத்தோடு வீட்டிற்கே வந்து நின்றாள் வேதா .

” உன் போன் என்ன ஆச்சு ..? ஏன் வேலைக்கு பத்து நாட்களாக  வரவில்லை …? அம்ரு உன்னை தேடிக்கொண்டேயிருக்கிறாள் .என்னை நேரிலேயே போய் பார்த்து விட்டு வரச்சொன்னாள் .என்ன செய்ய போகிறாய் …? “

அம்ருதாவிடம் வேலை பார்த்தால் மனோகரனுக்கு பிடிக்காது . இவளிடம் வேலை பார்த்தால் அவனுக்கு கோபம் வரும் .முதலில் இருந்தே இங்கே வேலை பார்க்காதே என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான் .இந்த நினைவுகள் வைசாலிக்கு சந்தோசத்தை தர நிமிர்ந்து வேதாவை பார்த்தாள் .

” சாரி வேதாக்கா .எனக்கு உடம்பு சரியில்லை .போன் தொலைந்து விட்டதால் தகவல் சொல்ல முடியவில்லை. நாளையிலிருந்து வேலைக்கு வருகிறேனென மேடமிடம் சொல்லி விடுங்கள் ” என்றாள் .

What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!