Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 13

13

சத்தம் வேண்டாமென நீ சாத்தி வைத்த பொழுதுகள் 
ஜலதரங்கம் மீட்டுகிறது என்னுள் .

                 ஒரு வாரமாக சரளாவின் முகம் பார்க்கவே வேதிகாவிற்கு சங்கடமாக இருந்த்து .கலங்கிய கண்களுடன் வேதிகாவின் அபய புன்னகை ஒன்றிற்காய் அவள் காத்திருந்தாள் .அவளுக்கான நல்ல பதிலை தர வேதிகாவால் முடியவில்லை .வீட்டில் சாமிநாதனும் , அமரேசனும் …கோபத்தில் தள்ளிய அவளது அன்றாட தேவைகளை பாசமாய்    கவனித்தார்களே தவிர …அதை தாண்டி பாண்டியன் சம்பந்தமாக எதையும் சொல்லவோ …செய்யவோ மறுத்தார்கள். வேதிகா அரை குறை சாப்பாடும் , கடிந்த சொல்லும் ,மிரட்டல் பார்வையுமாய் வீட்டினுள் வலம் வந்து கொண்டிருந்தாள் .

” உன் அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் பேசி பாரேன் …” கௌரி ஐடியா சொன்னாள் .




” என் அம்மாவா ….அவுங்களுக்கு என் அப்பாவே பெட்டர். நான் முழுதும் பேசும் வரை கேட்டுட்டு பிறகு அது சரி வராது வேதாம்மா என்பார். என் அம்மாவிற்கு நான் வாயை திறப்பதே உளறுவதற்காகத்தான் என்ற உறுதியான எண்ணம் இருக்கும் .எனக்குன்னு வந்து சேருதுகள் பார் …அப்பாவிலிருந்து புருசன் வரை …ஒன்று போல் ..”

கௌரி வாய் பொத்தி சிரித்தாள் .” ஒரு பெண்ணுக்கு சிறந்த கொடுப்பினை என்ன தெரியுமா …? அவளை போற்றும் அப்பாவும் , கணவனும் அமைவது .அந்த வகையில் நீ பாக்கியசாலி வேதா .எனக்கு உன்னை பார்த்தால் பொறாமையாக இருக்கிறதடி …'”

” ஏன்டி நீ வேற , கடுப்பேத்திட்டு இருக்க ..ஒரு வாரமாக சரியாக சாப்பிடாமல் வீட்டில் ஸ்டிரைக் அடிச்சிட்டு இருக்கேன் .என் அப்பாவும் , புருசனும் கண்டுக்காம போறாங்கங்கிறேன் ் நீ என்னவோ என்னை போற்றி புகழுறாங்கன்னு அளந்து விட்டுட்டு இருக்கிறாய் ….”

” கண்டுக்காம போறவங்கதான் டிபனை தூக்கிட்டு காலையிலும் , மதியமுமாக இங்கே ஓடி வர்றாங்களா …? “உண்மைதான்  வேதிகா கோபத்துடன் காலையில் சாப்பிடாமல் வரும் டிபனை ஒரு முறையும் , மதியம் சூடாக அடைத்த சாத்ததை ஒரு முறையுமென நேரம் தவறாமல் கொண்டு வந்து கொடுத்து கொண்டிருந்தான் அமரேசன் .அவளை சாப்பிட வைக்க சொல்லி  வீட்டிலிருந்து   தினமும் ஒருவரிடமிருந்து கௌரிக்கு போன் வேறு .

” இவ்வளவு பண்ணுவதற்கு அந்த ஸ்டேசன் போய் கம்ளைன்டை வாபஸ் வாங்கி விடலாமேடி …”

” அது அவர்கள் தொழில் சம்பந்தப்பட்டதுடி .அதில் நீ ஏன் தலையிடுகிறாய் …? “

வேதிகாவிற்கு தலைவலி மண்டையை பிளந்த்து .” கௌரி கொஞ்சம் இங்கே பார்த்துக்கோடி .நான் வீட்டிற்கு போகிறேன் ….” என்றுவிட்டு வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டாள் .அங்கே வீட்டின் சூழ்நிலை இன்னமும் தலைவலியை கூட்டியது .

மங்கையர்கரசி வழக்கம் போல் டிவி முன்னால் இருக்க ,திலகவதியும் , விசாலாட்சியும் அடுப்படியில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தனர் .விசாலாட்சி காலாட்டியபடி ஒரு ஸ்டூலில் உட்கார்ந்திருக்க , ஏதோ ஒரு பண்டத்திற்கான விளக்கத்தை கொடுத்தபடி திலகவதி கரண்டியொடு அடுப்பில் நின்றிருந்தாள் .இந்த அம்மாவிற்கு திலகவதி வந்த்திலிருந்து சோம்பேறித்தனம் வந்துவிட்டது .வேலைகளையெல்லாம் அவர்கள் தலையில் கட்டிவிட்டு ….காலாட்டிக்கொண்டு ….பற்களை கடித்தவள் படியேறிக்கொண்டே …” அம்மா ….” எனக் கத்தினாள் .




மங்கையர்கரசி கண்களை லேசாக டிவியிலிருந்து  திருப்பி இவளை பார்த்துவிட்டு மீண்டும் டிவிக்கே திரும்பிக் கொண்டாள். விசாலாட்சி ஒரு சின்ன ” ம் ” கூட இல்லாமல் தொடந்து திலகவதியுடன் சலசலத்து கொண்டிருந்தாள் .நான் ஒருத்தி இருக்கிறேனென யாராவது , கொஞ்சமாவது நினைக்கிறார்களா …வெறுத்து போய் மீண்டுமொரு கத்தினாள் ” அம்மா “

” ஏன்டி கத்துகிறாய் …? இன்னைக்கு ஏன் அதுக்குள்ளே வந்துவிட்டாய் …? ” நிதானமாக வந்து நின்று கொண்டு கேட்டாள் விசாலாட்சி .

” ஏன் வந்தாய்னு கேட்குறீங்களா …? திரும்ப போக சொல்றீங்களா …? ” என்ற வேதிகாவை ஏற இறங்க பார்த்தாள் விசாலாட்சி .

” சனியன் உச்சந்தலையில் உட்கார்ந்திருக்கு போல …” முணுமுணுத்தபடி திரும்பி நடந்த தாயின் கையை பிடித்து இழுத்தாள் .” என்ன சொன்னீங்க …? சனியனா ….? யாரு …நானா …? ” கைகளை  தாயின்  கழுத்தை நெரிப்பவள் போல் வைத்துக் கொண்டாள் .

” ஹி …ஹி …நீ என் செல்லம்டா தங்கம் .உன்னை போய் அம்மா அப்படி சொல்லுவேனா …பட்டுக்குட்டி …தங்க குட்டி …” விசாலாட்சி வழிந்தாள் .

” அம்ம்ம்மா …சப்புன்னு கன்னத்தில் நாலு அறை வச்சிடுங்க .இந்த செல்லம் , தங்கத்தை தயவுசெய்து விட்டுடுங்க …எனக்கு அந்த அம்மா ஞாபகம் வந்து தொலையுது …” திலகவதி அன்பு ஒழுக இப்படித்தான் ஏதாவது ஒரு கொஞ்சல் வார்த்தையை போடுவாள் .

” எந்த அம்மா கண்ணு …கொஞ்சம் கையை எடுத்துடேன் .அசந்தா கழுத்தை நசுக்கிடுவ போல …” கழுத்தை  குறி வைத்திருந்த   மகளின்  கைகளை தள்ளினாள் .

” திரும்ப ஒரு கண்ணா …சாதாரணமா பேசுங்கன்னு சொல்றேன்ல .அவுங்க கூட பழகி …பழகி உங்களுக்கு அந்த அம்மா புத்தி ஒட்டிக்கிடுச்சு போல …”

” எவுங்க …எந்த அம்மா …உனக்கு நான் மட்டும்தான்டி அம்மா …” 
” உங்க உடன் பிறவா சகோதரி ஒருத்தரோடு கொஞ்சி பேசுறீங்களே .அவுங்க யாரு எனக்கு …சின்னம்மாவோ …? “

” அடியேய் …இந்த உடன் பிறவா சகோதரி , அம்மா , சின்னம்மா வார்த்தையெல்லாம் சொல்லித் தொலையாதேயேன்டி ்உடம்பு நடுங்கி குளிர் ஜுரம் வர்ற மாதிரி இருக்குது .”

பட்டென கையெடுத்து கும்பிட்டவள் ” அம்மா உங்களுக்கும் கொஞ்சம் அரசியல் தெரியும் .ஒத்துக்கிறேன் .ஆளை விடுங்க .நீங்க மட்டும் கொஞ்சம் அவுங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க ” என்றாள் .

” அடியேய் நான் உன் அம்மாடி .எனக்கு எல்லாம் தெரியும்.அந்த திலகவதியை போனா போகுதுன்னுதான் என் அடுப்பு கிட்ட அனுமதிச்சிருக்கேன் .எப்போது வேணுமனாலும் கரண்டியை பிடுங்கிடுவேன் ….நான் பட்டத்தை பறக்க விடுவேன் .ஆனால் நூலை என் கையில்தான் வைத்திருப்பேன் .எப்போ எனக்கு பட்டம் போகிற திசை பிடிக்கலையோ , அப்போ சுருட்டி பைக்குள்ளே போட்டு அமுக்கிடுவேன் .உன்னை மாதிரி பறக்குதேன்னு பட்டம் விட பயந்துட்டே உட்கார்ந்திருக்க மாட்டேன் .புரியுதா …? “

வேதிகா உண்மையிலேயே வாய் பிளந்து நின்றாள் .படிப்பில்லாத மக்கு என அவள் நினைத்திருக்கும் அவள் அம்மாவிடம் இவ்வளவு விபரங்கள் இருக்கின்றனவா …? அவள்தான் விபரமில்லாமல் இருக்கிறாளா …?




விசாலாடசி அவள் பிளந்திருந்த வாயை மூடினாள் .” புத்திங்கிறது படிப்பினால் மட்டும் வருவது கிடையாது .வாழ்க்கையில்தான் தெரிய வரும் .வாழவே மாட்டேன்னு அடம் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதை பற்றி என்ன தெரியும் …? நீ போய் முகத்தை கழுவிக் கொண்டு வா .காபியும் , டிபனும் தருகிறேன் ….” கீழே போய்விட்டாள் .

வேதிகா பிரமித்து விட்டாள் .நேரிடையாக  வாழ்க்கை பாடம் எடுப்பது மகளுக்கு பிடிக்காது .அதனை உணர்ந்து கொண்டு பட்டும் படாமல் அறிவுரை சொல்லி சென்ற அன்னையை புதிதாக பார்த்தாள் .இவர்களை போலொரு எதார்த்த வாழ்வை என்னால் ஏன் வாழ முடியவில்லை …? .எந்த காரணத்தை காட்டி எனக்கான வாழ்வை நான் வாழாமலிருக்க வேண்டும் ….  இப்போது தனக்காக கொஞ்சம்     சிந்தி க்க தொடங்கினாள் வேதிகா .

தீவிர சிந்தனையின் விளைவால் கணவன் மீதான அவள் கோபத்தை மிகஙும் கஷ்டப்பட்டுத்தான் இழுத்து வைத்திருக்க ஙேண்டியிருந்த்து .இருந்தாலும் சரளாவின் அண்ணனின் விவகாரத்தில் அவளுக்கு அமரேசனின் மேலிருந்த மனத்தாங்கல் அப்படியேதானிருந்த்து .

” அக்கா எனக்கு மேல் படிப்பிற்கு சென்னைக்கு போகனும்னு ஆசையாக இருக்கிறது .அனுப்பி வைக்கிறீர்களா …? ” அவளருகில் வந்து அமர்ந்து கொண்டு கேட்டாள் மௌனிகா .

சாமிநாதனுக்கு கால் கட்டை அவிழ்த்து விட்டார்கள் . கால் மீண்டும் இயல்பாக வருவதற்காக அவர் பிஸியோதெரபி போய் வந்தார் .விசாலாட்சியும் , சாமிநாதனும் அங்கே போய்விட , தங்கள் வீட்டில் ஏதோ சாமான் எடுக்க வேண்டுமென திலகவதியும் , மங்கையர்கரசியும் போயிருந்தனர் .வீட்டில் வேதிகாவும் , மௌனிகாவும் மட்டும்தான் இருந்தனர் .

” ஏன்மா இங்கே படித்தால் என்ன …? ” கேட்ட போதே தனது ஹைதராபாத் படிப்பு ஆசை நினைவு வந்த்து .அந்த படிப்பிற்காக அப்போது அப்பாவிடம் எவ்வளவு போராடி சென்றாள் …பெரிய ஊர்களில் உயர் படிப்பதென்பது எல்லா இளம் பருவத்தினரின் கனவு போலும் .

” இல்லைக்கா ..எனக்கு அண்ணா யுனிவர்சிடில படிக்கனும் .ப்ளீஸ்கா ஹெல்ப் பண்ணுங்க …”

” நானா …? நான் என்ன செய்ய முடியும் …? “

” உங்களால்தான் ஏதாவது செய்ய முடியும் .அம்மா என்னை சென்னைக்கு அனுப்ப மறுத்துக் கொண்டிருக்கிறார்கள் . அதனால் அத்தானும் வேண்டாமென்கிறார் .நீங்கள் சொன்னால் அத்தான் கேட்பார் .அதனால் ப்ளீஸ் …”

ஆமாம் நான் சொல்றதையெல்லாம் உன் அத்தான் கேட்பானில்ல .கல்யாணமே வேண்டாம்டான்னேன் .அதையே கேட்கலை .நேற்று வரைக்கும் நான் சொல்றது எதையுமே கேட்டதில்லை .இப்போ இதை மட்டும் கேட்டுட போறானாக்கும் …எரிச்சலாக நினைத்தாள் .

” உன் அத்தானா …நல்லா கேட்பாரே …என்னை தவிர மற்ற எல்லார் பேச்சையும் கேட்பார் .சிபாரிசுக்கு நல்ல ஆள் பிடித்தாய் நீ …”

” என்னக்கா விளையாடுறீங்களா …? அத்தான் இப்போல்லாம் உங்களை தவிர வேறு யார் பேச்சையும் கேட்பதில்லை .யாரையும் பார்ப்பது கூட இல்லை தெரியுமா …? ” வயதுப் பெண்ணிற்குரிய கேலி .

” ஏய் …உனக்கு எல்லாம் தெரியுமா …? ” வெட்கம் மறைக்க பெரியவளாகி அவளை அதட்டினாள.

” எனக்கு வேலையே அதுதானே .இங்கே வீட்டிற்கு வந்த்திலிருந்து உங்கள் இரண்டு பேரையும் நோட்டம் விடுவதைத்தானே என் முக்கிய வேலையாக வைத்தருக்கறேன் …அட…அட …சும்மா சொல்லக் கூடாது என்ன ரொமான்ஸ் …நம்ம இந்தி சீரியல்களெல்லாம் தோற்று போகும் தெரியுமா …? “

” ஏய் கழுதை நீ இந்த ஙேலைதான் பார்த்து கொண்டிருக்கிறாயா …? ” மௌனிகாஙின் காதுகளை திருகினாள் .

” அதென்ன அக்கா .அத்தான் முகம் உங்களை பார்த்த உடன் அப்படியே பிரகாசிக்க ஆரம்பித்து விடுகிறது . உங்கள் முகம் அப்படியே சிவக்க ஆரம்பித்து விடுகிறது .   நீங்கள் இரண்டு பேரும் பொருத்தமான ஜோடி அக்கா ” மௌனிகா கேலியை தொடர …

” பின்  அன்று ஏன் அப்படி பேசினாய் மௌனிகா …? ” வேதிகா அவள் முகத்தை கூர்ந்து பார்த்து கேட்டாள் .




” என்று …? எப்படி …? “

” எங்கள் திருமணம் முடிந்த மறுநாள் .நான் அங்கே உங்கள் வீட்டிற்கு வந்த போது …ஏதேதோ சொன்னாயே …”

” என்னக்கா சொன்னேன் …? அத்தான் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர் என்று சொன்னேன் .அது உண்மைதானே …”

” ஒரு வயதுப்பெண் ..இது போல் அத்தை மகன் உறவுள்ளவனை …அவன் மனைவியிடமே …சொல்லலாமா …? “

” இதிலென்ன தவறுக்கா …?உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் அப்பா முக்கியமானவரில்லையா …? ” மௌனிகாவின் கேள்வி வேதிகாவின் உச்சந்தலையில் ஆணியடித்தது போல் இறங்கியது .

” நான் பிறந்த்திலிருந்து அப்பாவை பார்த்ததில்லை. அந்த இடத்தில் எனக்கு அத்தான்தான் இருந்தார் . நீங்கள் அப்போதுதான் புதிதாக மணமுடித்து எங்கள் வீட்டிற்குள் வந்திருந்தீர்கள் . எங்கே உங்களால் எங்களுக்கிடையே பிரிவு வந்து விடுமோ என்ற பயம் எனக்கும் இருக்குமல்லவா …? அதனால்தான் எனக்கு அத்தான் மேலிருந்த உரிமையை கொஞ்சம் ஸ்ட்ராங்காக உங்களிடம் கூறினேன் .நீங்கள் ஏதேதோ …நினைத்திருந்தால் நான் பொறுப்பில்லை …”

பாவி …தவறாக நினைத்தாயா எங்களை …? மௌனிகாவின் பார்வை கத்தியாய் வேதிகாவை குத்தியது .தவறுதான் …இந்த சிறு பெண்ணையும் ,அவள் கணவனையும் …அது போல் நினைத்தது மிகத் தவறுதான் .ஒத்துக் கொண்ட வேதிகாவின் மனம் உடனே கணவனிடம் பறந்த்து .இதற்காக நிச்சயம் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் .

நினைவுகளை கணவனுக்கு செலுத்திய பலனோ …என்னவோ அவன் திடுமென பிரசன்னமாகும் தேவன் போல் அங்கே தோன்றினான் .ஆனால் கருணை கரம் நீட்டி அல்ல …கோபம் கொப்பளிக்கும் ருத்ரமூர்த்தியாக .

” ஏய் வேதா …உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதாடி …? ” உறுமியபடி வந்து நின்றான்.

What’s your Reaction?
+1
2
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!