Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 38

38

” எங்கே கூட்டி போகிறீர்கள்..? ”  திடுமென சந்தேகம் வந்து கேட்டாள். ஏனென்றால் வீட்டை நோக்கி போகும் பாதையில் நடக்காமல் பக்கவாட்டு தோட்டத்திற்கு அவளை அழைத்து சென்றுகொண்டிருந்தான் விஸ்வேஸ்வரன்.

“அங்கே வா. உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும் ”  ஓரமாக அமைக்கப்பட்டிருந்த கல் பெஞ்சை காட்டினான்.

” முடியாது. நான் வீட்டிற்குள் போக வேண்டும் ” 

“வேண்டாம் கமலினி. அம்மாவிடம் நீ பேச வேண்டாம் ” 

அவனது கணிப்பை மனதிற்குள் மெச்சியபடி ”  ஏனோ ? ” என்றாள்

” சொல்கிறேன் வா ”  பெஞ்சில் அமர்ந்தான்.

” அம்மா அந்தக் காலத்து மனுசி . பழைய கால பழக்க வழக்கங்களில் ஊறியவர் .கிட்டத்தட்ட இப்போது அண்ணி இருக்கும் வயதிலேயே அப்பாவை இழந்து என்னையும் அண்ணனையும் தைரியமாக ஒற்றை மனுஷியாக இருந்து ஆளாக்கியவர். இந்தக் கால புதுமைகளுக்கு நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார்” 




” காலங்காலமாக சில பழக்கவழக்கங்களில் ஊறி இருப்பவர்கள் உடனடியாக மாறுவது கடினம்தான் விஸ்வா. ஆனால் நாம் எடுத்துச் சொன்னால் உங்கள் அம்மா நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது” 

” இல்லை இல்லை அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அப்படியே என்றாலும் அதனை நானே அம்மாவிடம் பேசிக் கொள்கிறேன் நீ பேச வேண்டாம்” 

” அதுதான் ஏன் என்று கேட்கிறேன் ” 

விக்னேஸ்வரன் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான். கமலினி கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அவனது பதிலுக்காக முகத்தை உறுத்தபடி இருந்தாள். அவளது பிடிவாதத்தை உணர்ந்தவன் ”  அம்மாவிடம் சிறு கெட்ட பெயரும் நீ வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை . அம்மாவின் மனம் கோணாமல் நீ நடந்து கொள்ள நினைக்கிறேன் .அம்மாவிடம் நீ எப்போதும் நல்ல முறையிலேயே அறிமுகமாகி இருக்க  விரும்புகிறேன் ” மெல்லிய குரலில் கூறினான்

விஸ்னேஸ்வரனின் குரலில் நிறைந்திருந்த ஆதங்கமும் அன்பும் கமலினி யின் மனதை தொட்டது. இவனது தாயிடம் எனது அறிமுகம் அவர்கள் விரும்பும் எதிர்பார்க்கும் ஒரு அக்மார்க் குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். அந்த நினைப்பின் காரணத்தையும் உணர்ந்தவள் மனதில் தென்றல் அடித்தது. வாஞ்சையாய் அவனை ஒரு நிமிடம் நோக்கியவள் மறுகணமே முகம் இறுகினாள்.

” நீங்கள் ஒரு சுயநலவாதி ”  குற்றம் சாட்டினாள் .

விஸ்வேஸ்வரன் தோள்களை குலுக்கினான். ”  இருக்கலாம். நான் கட்டுக்கோப்பாக பழமைகள் சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு கட்டுப் பெட்டியான ஆண். எனது சிந்தனைகள் இப்படித்தான் இருக்கும் ” 

 அவனது வெளிப்படையான    ஒப்புதலில் கமலினிக்கு எரிச்சல் வந்தது . ” நாளையே உங்கள் அண்ணியின் நிலைம எனக்கும் வந்தால்…. ” 

” இல்லை….”  ஒரு பரிதவிப்புடன் கூடிய சிறு கத்தலுடன் விஸ்வேஸ்வரன் அருகில் அமர்ந்திருந்தவளை அணைத்து கொண்டிருந்தான்.

”  வேண்டாம் கமலி .இப்படி பேசாதே. இதனை என்னை வைத்து நான் நினைக்கவில்லை .எங்கிருந்தாலும் நீ எந்தத் துயரமும் வாழ்க்கையில் வராமல் பல்லாண்டு காலம் சுமங்கலியாய் வாழ வேண்டும். எந்த துயரமும் உனக்கு வர நான் நிச்சயம் அனுமதிக்க மாட்டேன் . என்னை வருத்தப்பட வைக்க வேண்டுமென்றால் இரண்டு அடி கூட அடித்து விடு. இது போன்ற வார்த்தைகளை சொல்லாதே…” 

கமலினிக்கு அப்போது அவனை உண்மையிலேயே  குனிய வைத்து முதுகில் மொத்த வேண்டுமென்றுதான் தோன்றியது .” என்ன சுயநலம் …? ” பொருமினாள் .

” உனக்கு ஓர் மன பாதிப்பென்றால் உடலெல்லாம்  நோகிறது ? அடுத்தவரென்றால் சாஸ்திரமும் , சம்பிரதாயமும் பேச தோன்றுகிறதோ ? சீச்சி என்ன மனுசன்டா நீ ? உன்னைப் போல் ஒருத்தனை சில நிமிடமாவது மனதில் நினைத்திருந்தால் அந்த நிமிடங்களுக்காக மிகவும் வருந்துகிறேன் .உனக்கு ஒரு வாரம்தான் கெடு .அதற்குள் உன் அம்மாவிடம் பேசி பாரிஜாத்த்தின் வாழ்வை நல்லபடியாக முடிவு செய்ய வேண்டும் .இல்லாவிட்டால் நானே நிச்சயம் உன் அம்மாவிடம் பேசுவேன் ” 




பரிதவிப்புடன் அவன் இழுக்க இழுக்க அவனை உதறிவிட்டு … தோள் சுற்றிய கைகளை…விலக மறுத்து கைகளை வருடியபடி இறங்கி விரல் பற்றி   இறுதியாக  அழுத்தமாக அவனது பிடிக்குள் நசுங்கிய தன் ஆட்காட்டி விரலையும் விரல் வலிக்க வலிக்க பிடுங்கிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தாள் .

வாசலை அடையும் போது சர்ரென அவள் முன் வந்து , பணிவுடன் கதவு திறந்து நின்ற காரையும் , டிரைவரையும் புறங்கையால் அலட்சியப்படுத்தி விட்டு வீட்டை விட்டு வெளியேறினாள் .பெரிய இவன் …இவனது காரை காட்டி என்னை மயக்க பார்க்கிறான் போல …பணத்திமிர் பிடித்தவன் .பொண்ணுங்க எல்லோரும் இவன்கிட்ட இருக்கிற பணததிற்காக இவன் காலடியில் கிடப்பார்கள் என்று நினைக்கிறானோ …? இதோ பாரிஜாதம் இல்லை …நான் இல்லை .நாங்கள் இவன் பணத்திற்கு மயங்கியா இவனுக்கு கட்டுப்பட்டு  சுத்திக் கொண்டு இருக்கிறோம் …? 

அகலமும் , ஆகிருதியுமாக ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்றபடி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு ஒரு உயர்தர கனவானாக வலம் வரும் இவனது மனது இத்தனை குறுகலாக இருக்குமென்று யாரேனும் நம்புவார்களா ….? இவனெல்லாம் இவ்வளவு படித்து  என்ன பிரயோஜனம் …? முட்டாள் …ஆத்திரம் மிக பஸ் முன் சீட்டை குத்தியவள் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் ஓரு மாதிரி பார்க்கவும் தன்னைத்தானே அடக்கிக் கொண்டாள் .

அங்கிருந்து ஸ்வர்ணகமலம் வரும் வரை கமலினியின் மனம் இப்படி பலவிதமாக கொதித்துக் கொண்டிருந்தது . சாதகமான முடிவு சொல்லும் வரை விஸ்வேஸ்வரன் முகத்திலேயே விழிக்க கூடாது எனும் முடிவை அவள் எடுத்தாள் .

பாரிஜாத்த்தையும் அவனிடம் பேச அனுமதிக்க கூடாது .இவன் எதையாவது 

பேசி அவள் மனதை புண்படுத்தி விடுவான் .இந்த எண்ணத்துடன் பாரிஜாதம் வந்த உடனேயே அவளை போய் சந்தித்தாள் . 

நேரிடையாக அல்ல …பாரிஜாதம் மிகவும் பயப்படுவாள் என்று தெரியுமாதலால் , பட்டும் படாமலேயே விஸ்வேஸ்வரனை சந்திப்பதை தவிர்க்கும்படி கூறினாள் .உடனேயே பாரிஜாத்த்தின் விழிகள் கலவரத்தில் கலங்கின .

” ஏன் கமலினி ? விஸ்வா என்ன சொன்னார் ? ரொம்ப திட்டினாரா ? எனக்கு பயமாக இருக்கிறது .அவருக்கு ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவர்களை அப்படியே துவம்சம் செய்து விடுவார் …நான் …எ…என்னை …” 

பாரிஜாத்த்தின் நடுக்கம் கமலினிக்குள்ளும் ஏறிக் கொண்டாலும், உதடு மடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு , ” என்ன மேடம் …அப்படி அவர் உங்களை என்ன செய்து விடுவார் ? ஏன் இப்படி பயப்படுகிறீர்கள் ? ” தேறுதலாக  அவள் கைகளை பற்றிக் கொண்டாள் .

” என்னை இல்லை கமலினி .நான் பயப்படுவது  சந்தானத்திற்காக . விஸ்வா சூறாவளி …சந்தானம் அவர் முன் சிறு செடியை போன்றவர் .அவருக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டுமென்று விஸ்வா நினைத்து விட்டாரானால் …” 

பாரிஜாத்த்தின் நடுங்கிய கை அவள் பயத்தின் அளவை சொல்ல , அவள் சொன்ன பய காரணம் அவள் பால் பச்சாதாபமாய் வழிந்த்து  , மனம் விரும்பும் வாழ்வு வாழ எண்ணும் ஒரு பெண் எத்தனைவித இடையூறுகளை எதிர் கொள்வது … பொங்கிய ஆறுதலுடன் பாரிஜாத்த்தின் தோள் அணைத்துக் கொண்டாள் கமலினி .

” ஷ் …என்ன அக்கா இது …? சௌபர்ணிகா போல் பயப்படுகிறீர்களே ? நானில்லையா என்ன ? நாம் இரண்டு பேருமாக சேர்ந்து இந்த விஸ்வாவையும் , அவரது அம்மாவையும் இரண்டில் ஒன்று பார்த்து விட மாட்டோம் …ம் …? ” 

கமலினியின் தேறுதலுக்கு அவள் தேர்ந்தெடுத்த சொற்களில் பாரிஜாத்த்தின் விழிகள் மகிழ்வாய் விரிந்தன . ” எப்படி அழைத்தாய் ? ” 

ஷ் …மனதிற்குள் நினைத்ததை வெளியிலும் உளறிவிட்டேனா ? நாக்கை கடித்தவள் ” உங்களை என் உடன் பிறவா அக்காவாக நினைக்கறேன் .அப்படி அழைக்கலாம்தானே ? ” தன் உளறலை சமாளிக்க முயன்றாள் .




பாரிஜாதம் அவளை இழுத்து மென்மையாக அணைத்துக்  கொண்டாள் . ” ரொம்ப சந்தோசம் கமலினி .என் மனதை ஜஸ்ட் சொல்லி புலம்பக் கூட இது வரை எனக்கு ஆளிருந்த்தில்லை . என் அம்மா , அப்பா அண்ணன் அனைவரும் விஸ்வாவுடன் தொழில் தொடர்புடையவர்கள் . எக் காரணத்திற்காகவும் விஸ்வாவை எதிர்க்க அவர்கள் தயாராக இல்லை .எனக்கு உடன் பிறந்த அக்காவோ …தங்கையோ இருந்திருந்தால் சும்மா என் புலம்பல்களை காது கொடுத்தாவது கேட்டிருப்பார்களே ..என பல முறை நினைத்திருக்கறேன் .இன்று நீ அந்த ஏக்கத்தை தீர்த்து விட்டாய் .இனி நீ என் உடன் பிறவா தங்கை ” 

உணர்ச்சி வசப்பட்டு அழுகை ஆரம்பமாக தொடங்கிய பாரிஜாத்த்தை சமாதானப்படுத்த அவளை தானும் ஆதரவாக அணைத்துக் கொண்டாள் கமலினி . ” அன்பு அக்காவே இனி இந்த அழுகையெல்லாம் உங்க கண்களில் எட்டிக் கூட பார்க்க கூடாது .இனி வரும் நாட்களில் அந்த விஸ்வா எனும் கடுவன் பூனைக்கு மணி கட்டும் பொறுப்பை உங்கள் அன்பு தங்கை ஏற்றுக் கொண்டு விட்டதால் …நீங்கள் எந்த கவலையுமின்றி உங்கள் சந்தானம் , சௌபர்ணிகாவுடனான எதிர்கால  வாழ்க்கையை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும்படி பாசமுடன் கேட்டுக் கொள்கிறேன் ” 

கமலினியின் தூய தமிழ் பாரிஜாத்த்தை சிரிக்க வைக்க இரு பெண்களும் ஒருவர் தோளில் ஒருவர் கை வைத்துக் கொண்டு நேருக்கு நேர் நின்று சிரித்துக் கொண்டிருக்க , அறைக் கதவு படாரென ஆத்திரத்துடன் திறந்த்து .

இரையை ஒரே அடியில் அடித்து கவ்வும் வேங்கையின் வெறியுடன் நின்றிருந்தான் விஸ்வேஸ்வரன் .” அந்த முதல்நாள் …இதே போல் உங்களது முதல் நாள் சந்திப்பை அன்றே தடுத்திருந்தால் இன்று எங்கள் குடும்பத்திற்கு இந்த நிலைமை வந்திருக்கவே செய்யாது ” இடியாய் இருவர் மீதும் இறங்கினான் .




What’s your Reaction?
+1
22
+1
17
+1
0
+1
5
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Santhiya
4 years ago

mam next ud podunga

Kurinji
Kurinji
4 years ago

Enge pugsitathu Inge erikiraan.ivangammavidam sonnale Visayan subamaa mudinjidum pole.

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!