karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 8

8

 

 

“வசுமதி இன்னமும் வரலையா..?” கேள்வி கேட்ட பரமசிவத்தின் குரல் கோவில் மணியை ஒத்திருந்தது..
“தோ வந்துடறேன்னு சொல்லி விட்டிருக்காப்பா..” பதில் சொன்ன சதுரகிரியின் குரல் அசையும் யானையின் கழுத்து மணியாக ஒலித்தது..
முன்னவர் மனோரமாவின் தந்தை, பின்னவர் மூத்த சகோதரர்.. ஆர்வமும், பாசமுமாக தங்கள் முகம் பார்த்து நின்றவளை இருவரும் திரும்பியும் பார்க்கவில்லை.. கட்டைக் குத்திய வீட்டின் மேல் விதானத்தையோ, சுண்ணாம்பு உதிர்த்திருந்த கூடத்து சுவரையோ பார்த்தபடி பேசினர்..
“மனோம்மா வசு வர்றாம்மா..” அறிவித்தபடி உள்ளே வந்த மலையரசன் மனோரமாவின் இரண்டாவது அண்ணன்.. இவர் ஒருவர் தான் தன் தாயுடன் நேரிடையாக முகம் பார்த்து பேசியிருக்கிறார் என்று உணர்ந்தாள் ஆராத்யா..
இனி வரும் அந்த வசுமதி.. மனோரமாவின் தங்கை எப்படியோ..? ஆராத்யாவின் பார்வை ஆவலுடன் வாசலைப் பார்த்து நின்ற அன்னையிடம் பதிந்தது..
அவர்கள் வீட்டினுள் நுழைந்த போது எதிர்கொண்டு அழைத்தவர்கள் வீட்டுப் பெண்களே, மனோரமாவின் தாய் வரலட்சுமி வாசல்படி ஏறிய மகளை பார்த்தபடி கண்கலங்க உள்ளறை வாசலில் சாய்ந்து நின்றிருந்தாள்.. அவளுக்கு பின்னால் நின்றிருந்த சுப்புலட்சுமி சதுரகிரியின் மனைவி, மனோரமாவின் ஆசை அண்ணி தாரை தாரையாக கண்ணீர் வடிய அதனை துடைக்க கூட செய்யாமல் மனோரமாவின் மீது பார்வையை பதித்து நின்றிருந்தாள்..




“எதற்காக இப்படியே நிக்கிறீங்க..? இத்தனை வருசம் கழிச்சு நம்ம வீட்டுக்கு வந்த மகாலட்சுமிங்களை இப்படித்தான் அழுதுட்டே வரவேற்பார்களாக்கும்..?” அவர்களை கடிந்தபடி உள்ளறையிலிருந்து கையில் ஆரத்தி தட்டோடு வெளியே வந்தவள் மனோரமாவின் இளைய அண்ணி, மலையரசனின் மனைவி சௌடாம்பிகை… மலையரசனும் சௌடாம்பிகையும்தான் தங்கள் மகள் சொர்ணலட்சுமியின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க மனோரமாவின் வீடு தேடி வந்தவர்கள்..
பிரிந்து கிடந்த இந்த சொந்தங்களை இணைக்கும் பாலமாக இருந்தவர்கள்.. தாங்கள் ஆரம்பித்த இந்த உறவு துளிர்த்தலை பத்திரமாக பாதுகாத்து வளர்க்க இவர்களை முதலில் வீட்டு வாசலில் நின்று வரவேற்றவர் மலையரசனே.. இதோ இப்போது ஆரத்தியுடன் அவர்களை வரவேற்பவள் சௌடாம்பிகை..
“நான் மட்டுமா ஆரத்தி சுற்றினால் நன்றாக இருக்காது.. நீங்களும் வாங்கக்கா..” சௌடாம்பிகை சுப்புலட்சுமியின் கையை பிடித்து இழுத்து அவளையும் தன் ஆரத்தியில் சேர்த்துக் கொண்டாள்..
இன்னமும் கண்ணீரை துடைக்காமல் ஈரக் கன்னங்களுடன் தனக்கு ஆரத்தி சுற்றும் அண்ணியை நிமிர்ந்து பார்த்த மனோரமாவின் கண்களிலும் ஈரம்தான்.. ஆரத்தி சுற்றிய தட்டுடன் சௌடாம்பிகை படியிறங்கி வெளியே போக உள்ளே திரும்ப போன சுப்புலட்சுமியை..
“அண்ணி..” மெதுவாக அழைத்தாள் மனோரமா..
ஒரு நிமிடம் நின்று, பின் திரும்பி பார்த்த சுப்புலட்சுமி சட்டென மனோரமாவின் தோள்களைப் பற்றி இழுத்து அணைத்துக் கொண்டாள்.. “மனோ எவ்வளவு நாளாச்சும்மா உன்னை பார்த்து..”
தேம்பியழுதபடி அணைத்து நின்ற இருவரையும் புன்னகையும், ஆச்சரியமுமாகப் பார்த்தாள் ஆராத்யா.. எவ்வளவு அன்பு இவர்களுக்குள்..
மனோரமாவின் பார்வை இப்போது இன்னமும் கலங்கிய கண்களுடன் தன்னைப் பார்த்து நின்ற அன்னைக்கு திரும்பியது..
“அம்மா..” கை நீட்டியபடி தன்னை நோக்கி வந்த மகள் முதன் முதலாக தவழ்தலிருந்து நடைக்கு மாறி தத்தா பித்தாவென நடந்தபடி தன்னை நோக்கி கைநீட்டிய காலங்களை வரலட்சுமிக்கு நினைவு படுத்த, அவள் கை நீட்டி வந்த மகளை ஆரத் தழுவிக் கொண்டாள்..
“என் கண்ணே.. என் செல்லமே.. எப்படிடா இருக்கிறாய்..?” தன் தாயை சிறு குழந்தையாய் பாவித்து முத்தமிட்டு கொஞ்சும் பாட்டியை வியப்பாய் பார்த்தாள் ஆராத்யா.. இவர்களுக்கு அம்மா இன்னமும் சிறு குழந்தைதான் போலும்.. என நினைத்துக் கொண்டாள்..
இப்போது பெண்களின் பார்வை ஆராத்யாவின் பக்கம் திரும்பியது.. தவறாமல் அனைவருமே ஆராத்யாவை அணைத்து வரவேற்றனர்.. தாயை வரவேற்றதில் சிறு துளி குறைவில்லை மகளுக்கு.. அதே அழுகை.. அதே பாச அணைப்பு.. மென்மையாய் சில அன்பு முத்தங்கள் கூட..
“அப்படியே உன்னைப் போலவே இருக்கிறாள்..”
“உன் பெயர் என்ன..?”
“என்னம்மா படிக்கிறாய்..?”
“எங்கே படிக்கிறாய்..?”
சம்பிரதாயக் கேள்விகள் “எனக்கு இரண்டு பையன்கள்.. மூத்தவன் படித்து முடித்துவிட்டு வேலை பார்க்கிறாள்.. இளையவன் படித்துக் கொண்டிருக்கிறான்.. இரண்டு பேரும் இப்போது வந்து விடுவார்கள்..” சுப்புலட்சுமி தன் குடும்பத்தை ஆராத்யாவிற்கு விவரித்தாள்.
“எனக்கு ஒரு பொண்ணு.. ஒரு பையன்.. பொண்ணுக்குத்தான் கல்யாணம்.. பையன் படித்துக் கொண்டிருக்கிறான்..” சௌடாம்பிகை தன் குடும்ப விபரம் சொன்னாள்..
“இப்படி நம் பிள்ளைகளை நாமே அறிமுகம் செய்து கொள்ளும் கொடுமை நடந்து விட்டது பார்த்தீர்களா அண்ணி..?” மனோரமா வருத்தப்பட்டாள்..
“யாரால் இந்தக் கொடுமை வந்தது..? யார் இதற்கு காரணம்..? ம்..?” உறுமியபடி வந்து நின்றார் பரமசிவம்..
“அப்பா..” மனோரமா ஆவலுடன் தந்தை பக்கம் நடக்க முயல அவர் கையுயர்த்தி தடுத்தார்..
“மனது இன்னமும் பச்சை ரணமாகத்தான் இருக்கிறது.. ஆறட்டும்.. பிறகு பார்க்கலாம்..”
கொஞ்ச நேரமாக நின்றிருந்த மனோரமாவின் கண்ணீர் மீண்டும் ஆரம்பமானது..
“அண்ணா..” மனோரமா தந்தையருகில் நின்றிருந்த சதுரகிரியை அழைத்தாள்..
“ம்..” சதுரகிரி தலையசைத்தார்.. “அப்பா சொல்வது சரிதான்.. வருடக் கணக்காக மனதில் பட்ட காயம்.. லேசில் ஆறாது.. மெல்ல மெல்லத்தான் நிதர்சனங்களுக்கு பழக வேண்டும்.. நீயும், உன் மகளும் சொர்ணா கல்யாணம் வரை இங்கே தங்கியிருந்து விட்டு போங்கள்.. பிறகு நம் பிள்ளைகளின் விசேசங்களுக்கு வரப் போக என மெல்ல மெல்லத்தான் நாம் சமாதானமாக முடியும்..” உறுதியாக பேசினார்..
பதிலின்றி அவர்கள் இருவரையும் வெறித்த மனோரமா அவர்களை நோக்கி நடந்தாள்.. தன்னை நோக்கி வரும் மகளின் அருகாமையை விரும்பாது பரமசிவம் எரிச்சலான முகத்துடன் பின் வாங்க முயல.. “ஒரே நிமிடம் அப்பா..” இறைஞ்சலாய் தந்தையை வேண்டியபடி, அவர்களை நெருங்கி சட்டென குனிந்து அவர்கள் பாதங்களில் பணிந்தாள்.
மனோரமாவின் கைகள் தந்தை, அண்ணனின் பாதங்களை இறுக்க பற்றியிருந்தது.. அவள் கண்ணீர் அவர்கள் பாதங்களை நனைத்தது.. என்றோ தான் செய்த தவறுக்கு இன்று மன்னிப்பு கேட்டாளோ என்னவோ..? ஆனாலும் தனது அந்த மன்னிப்பை அவள் வெளிக்காட்ட விரும்பவில்லை போல..
“என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்..”
ஒருவேளை மகள் நான் செய்தது தவறுதான் என்னை மன்னித்து விடுங்கள் எனக் கேட்டிருந்தால் பரமசிவம் மனம் இளகியிருப்பாரோ என்னவோ.. காலடியில் வீழ்ந்து கிடந்தாலும் ஆசிர்வாதம் கேட்டு நிமிர்ந்து நின்ற மகள் அவருக்கு நெருடலை கொடுக்க, “ம்…ம்..” என்ற உறுமலுடன் தன் காலை மகள் கையிலிருந்து உருவிக் கொண்டு நகர்ந்து விட்டார்..
சதுரகிரி தன் கையை தங்கையின் உச்சந்தலை மீது அழுத்தமாக பதித்தார்.. “நல்லாயிரும்மா..” வாழ்த்தினார்..
மனோரமா எழுந்து நின்று அண்ணனின் முகத்தை ஆவலாக பார்க்க.. “வசுவிற்கு சொல்லி விட்டாயிற்றா..?” தன் பார்வையை தங்கையிடமிருந்து தம்பிக்கு மாற்றிவிட்டு நகர்ந்து கொண்டார்..
“மனோ அக்கா..” பாசமான அழைப்புடன் உள்ளே நுழைந்தாள் வசுமதி..
“வசு..” மனோரமா ஆவலுடன் தங்கையை நெருங்கி அணைத்துக் கொண்டாள்..
“எவ்வளவு நாளாயிற்றுக்கா உன்னைப் பார்த்து..? தினமும் உன்னை நினைத்துக் கொள்வேன் தெரியுமா..?” வசுமதி விசும்னிாள்..
“நானும் உங்கள் எல்லோரையும் நினைக்காத நாளில்லை வசு.. உன் பிள்ளைகளை எங்கே..?”
“இதோ எனக்கு இரண்டு பெண்கள்.. ஸ்ரீமதி, தேன்மொழி..” தன்னுடன் இருந்த தாவணிப் பெண்கள் இருவரை அறிமுகப் படுத்தினாள்.
“இது என் மகள் ஆராத்யா..”
பெற்றவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளின் கைகளை சேர்த்து விட்டனர்.. எண்ணெய் தேய்த்து படிய வாரிய தலையும், நீள சடையும், மஞ்சள் மின்னும் முகமுமாக விழியுருட்டி நின்ற சித்தி பிள்ளைகளை புன்சிரிப்புடன் பார்த்தாள் ஆராத்யா..
“இரண்டு பேரும் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்..” தங்கைகளின் கன்னங்களை வருடினாள்..
“ஐய்யோ நீங்களே எங்களை அழகுன்னு சொல்லிட்டீங்களா..? அப்போ நாங்க கொஞ்சம் பார்க்கும்படிதான் இருக்கிறோம் போல..”
“ஏன் அப்படி சொல்கிறீர்கள்..?”
“நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் தெரியுமா..? அப்படியே சினிமா ஹீரோயின் மாதிரி இருக்குறீங்க..” அந்த கிராமத்து இளம் பெண்களுக்கு நாகரீக தோற்றத்துடன் இருந்த பட்டணத்து பெண் மீது பிரமிப்பு இருந்தது..
“நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளவா..?” கேட்டபடி வந்தவள் சொர்ணா..
“வசு அத்தை மாதிரி நீங்க எங்களை அறிமுகப்படுத்தலையா அம்மா..?” கேட்டபடி நின்றவளின் கண்களில் புதிதாக நட்பு பேணும் ஆர்வம் தெரிந்தது..
“பரபரப்பில் மறந்துட்டேன்டி.. ஆராத்யா இதுதான் என் மகள் சொர்ணா.. கல்யாணப் பெண்ணும் கூட..” சௌடாம்பிகை தனது மகளை அறிமுகப் படுத்த ஆராத்யா அவர் கைகளை பிடித்துக்கொண்டார்..
“ஹாய் சொர்ணா.. உன் கல்யாணத்திற்கு வாழ்த்துக்கள்..”
சட்டென சொர்ணாவின் முகம் சிவந்து நாணச் சிவப்பு ஏறுவதை வியப்பாய் பார்த்தாள் ஆராத்யா..
“நாம் நால்வரும் இனிமேல் ப்ரெண்ட்ஸ்..” ஆராத்யா அவர்களுடன் கை கோர்த்துக் கொண்டாள்..




“என்னை மட்டும் தனியாக விட்டுட்டீங்களே.. பையன் கிறதாலேயா..?” கேட்டபடி வந்து நின்ற இளைஞனை யார் நீ என்பது போல் ஆராத்யா ஏறிட்டாள்..
“என் அண்ணன் தமிழரன் அக்கா..” சொர்ணா தன் அண்ணனை அறிமுகம் செய்தாள்..
“ஹாய்..” அறிமுகக் குலுக்கலுடன் நீண்ட ஆராத்யாவின் கையை யோசனையாக பார்த்தான் தமிழரசன்.. சிறு சங்கடத்துடன் பெரியவர்கள் பக்கம் பார்த்துக் கொண்டான்.
“சொர்ணாவிற்கு அண்ணனென்றால் எனக்கும் அண்ணன்தானே.. எப்படி இருக்கிறிர்கள் தமிழரசன் அண்ணா..?”
ஆராத்யாவின் உறவு அழைத்தலில் சிரித்த தமிழரசன்.. “நான் உனக்கு அத்தான் முறை ஆராத்யா.. சொர்ணா ஆராத்யா உனக்கு அக்கா அல்ல.. அண்ணி..” உறவுகளை விளக்கினான்..
அவன் தன் கையை பற்றிக் கொள்வதை இறுதி வரை தவிர்த்து விட்டதை ஆச்சரியமாக உணர்ந்தாள் ஆராத்யா..
“எல்லோர் பிள்ளைகளும் இருக்கிறார்கள் உங்கள் பிள்ளைகள் எங்கே பெரியண்ணி..?” கேட்டதோடு மனோரமாவின் கண்கள் ஆர்வமாக அங்குமிங்கும் சலித்தன..
“சின்னவன் பெங்களூரில் காலேஜில் படிச்சிட்டிருக்கான் மனோ.. அவனுக்கும் ஸ்டடி ஹாலிடே விட்டாச்சு இன்னைக்கு வந்துடுவான்.. பெரியவனும் இன்னைக்கு கிளம்பி வர்றான்.. அவன் சென்னையில் இருக்கிறான்..” சுப்புலட்சுமி சொன்னாள்..
“பிள்ளைகளா ஆராத்யாவிற்கு நம் இடத்தையெல்லாம் சுற்றிக் காட்டுங்க.. கூட்டிப் போங்க..” மலையரசன் உற்சாகமான குரலில் பிள்ளைகளைத் தூண்ட ஐவரும் உற்சாக முகங்களோடு வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.
அவர்கள் வீடு இருந்த இடம் உண்மையில் தென்னந்தோப்பு.. தோப்பின் நடுவேதான் அந்தப் பழங்காலத்து கிராமத்து வீடு இருந்தது.. தோப்பின் தென்னை மரங்களுக்கிடையே சிறிது இடத்தை ஒதுக்கி அதில் தங்கள் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தனர்.. சுற்றிலும் தென்னை மரங்களோடு, வேப்பமரங்கள் பலா மரங்கள் கூட ஒன்றிரண்டு இருந்தன.. காட்டுக்குள் குடியிருப்பது போன்றதோர் உணர்வை இந்த இடம் ஆராத்யாவின் கொடுத்தது..
புதுமையான இந்த பசுமை சூழல் அவள் மனதினை குளிர் சுனையாய் நனைக்க கண்களால் சுற்றுப்புறத்தை பருகியபடி நடந்தாள்..
“உங்கள் வீடும் இந்த தோட்டமும் மிகவும் அழகாக இருக்கிறது சொர்ணா..”
“தோட்டம் இல்லை அண்ணி தோப்பு.. சுற்றிலும் தென்னந்தோப்பு.. நம் வீட்டிற்கு பக்கத்தில் மட்டும் மாமரங்களும், பலாமரங்கள், வேப்ப மரங்கள் இருக்கும்..” சொர்ணா விளக்கினாள்.. அவர்கள் ஐவரும் தோப்பை சுற்றி நடந்து கொண்டே பேசினர்.
“சென்னையில் உங்கள் வீடு எப்படி இருக்கும் அக்கா..?” ஸ்ரீமதி கேட்டாள்..
தொட்டிச்செடிகளுடன் டைல்ஸ் மினுங்க நிற்கும் தங்கள் சென்னை வீடு ஆராத்யாவிற்கு நினைவு வந்தது.
“ம்.. இருக்கும்.. இது போல் காற்றும், வெளிச்சமுமாக இருக்காது.. இந்த அக்கா, அண்ணியையெல்லாம் விட்டுவிட்டு நாம் பெயர் சொல்லியே அழைத்துக் கொள்ளலாமே.. அப்படி ஒன்றும் நமக்கிடையே பெரிய வயது வித்தியாசம் இருக்காது.. அடுத்தடுத்த வயதுகளில்தானே இருப்போம்..?”
“அப்படித்தான் ஆராத்யா.. ஆனாலும் ஒவ்வொரு முறையும் உறவை சொல்லி அழைக்கும் போது, நமது உறவு அதிக பிணைப்புள்ளதாகிறது.. அதனால் நாம் நமது உறவுகளை சொல்லியே கூப்பிட வேண்டுமென விரும்புகிறேன்..”
தமிழரசனின் பதிலுக்கு மற்ற மூவரும் ஒத்துவிட, ஆராத்யாவும் தலையசைத்து ஒத்துக் கொண்டாள்,
“உங்கள் வீடு எங்கே இருக்கிறது தேன்மொழி..?”
“எங்கள் வீடு பக்கத்து தெரு அக்கா.. அதுவும் இது போல தோப்பிற்குள்தான் இருக்கும்.. நாம் இன்று மாலை அங்கே போகலாம்..”
“இங்கே எல்லா வீடுகளுமே இது தோப்புக்குள்தான்.. இருக்குமா அத்தான்..?”
“ம் அநேகமாக அப்படித்தான்.. தோப்புக்கள் வைத்திருப்பவர்களின் வீடுகள் எல்லாமே, தோப்புக்களை கவனித்துக் கொள்ள வசதியாக தோப்புகளுக்கு நடுவேதான் இருக்கும்..” தமிழரசன் விளக்கினான்..
நான் ராஜகுமாரி போல் வளர்ந்தேன்.. என அடிக்கடி மனோரமா.. சொல்வதன் பொருள் இப்போது புரிவது போல் இருந்தது ஆராத்யாவிற்கு இது போலொரு தோப்பு வீட்டில் சொந்த பந்தங்கள் சூழ பிறந்து வளர்ந்த பெண்ணிற்கு தானொரு அரசகுமாரி எனும் எண்ணம் எழுவதில் அதிசயமில்லை என்று அவளுக்கு தோன்றியது..
தொடர்ந்து எல்லோரும் அவரவர் படிப்பு, வேலை எனப் பேசிக் கொண்டிருந்தனர்.. சொர்ணாவின் திருமணம் பற்றிய பேச்சு வர, அவளது கல்லூரிப் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு அவளுக்கு திருமண நிச்சயம் ஆனதை கேட்டு ஆராத்யா அதிர்ந்தாள்..
“ஏன் சொர்ணா இப்படி..? உனக்கு படிப்பில் இன்ட்ரெஸ்ட் இல்லையா..?”
“எனக்கும் படிக்க ஆசைதான் அண்ணி.. ஆனால் தாத்தாதான் இந்த வரன் நல்ல இடம்.. பிறகு கை நழுவி போய் விடுமென சொல்லிவிட்டார்..”
படிப்பு பாதியில் நின்ற வருத்தத்தை விட திருமண நாணம் அவளுக்கு அதிகமிருப்பது போல் தோன்ற ஆராத்யா மௌனமாகி விட்டாள்.. ஆனாலும் சொர்ணாவின் பாதியில் நின்ற படிப்பு அவள் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருந்தது..
“மாங்காய் சாப்பிடுவாயா ஆராத்யா..?” தமிழரசன் திடீரென கேட்டான்.. அவன் தன் மன நெருடலை புரிந்து கொண்டு சூழலை மாற்றவே கேட்கிறானென உணர்ந்த ஆராத்யா புன்னகைத்தாள்..
“இந்த மாங்காய் ரொம்ப புளிக்குமா..?” அண்ணாந்த அவர்கள் நின்று கொண்டிருந்த மாமரத்தை பார்த்தபடிக் கேட்டாள்.. சிறியதும், பெரியதுமாக நிறைய மாங்காய்கள் காய்ந்து தொங்கின.. பார்த்ததும் நாவில் நீரூர வைத்தன..
“ரொம்ப புளிக்காது அண்ணி.. லேசான புளிப்பும், இனிப்பும் கலந்து வெறும் மாங்காய் தின்னவே ரொம்ப ருசியாக இருக்கும்.. அத்தான் அண்ணிக்கு ஒரு மாங்காய் பறித்து கொடுங்கள்..”
ஸ்ரீமதி சொல்ல தமிழரசன் பேன்ட்டை லேசாக மடித்து விட்டுக் கொண்டு மரத்தின் மேலே ஏறி மாங்காய்களை பறிக்க ஆரம்பித்தான்.
கீழேயிருந்த பெண்கள் அதோ அது.. இதோ இது என ஒவ்வொன்றாக காட்ட, அவன் பறித்து கீழே வீசிக் கொண்டிருந்தான்.. இவர்கள் கீழேயிருந்து அதைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.. அப்படி தமிழரசன் வீசிய மாங்காய்களில் ஒன்றைப் பிடிக்க அது மேலிருந்து வருவதைக் கவனித்தபடியே பின்னால் நகர்ந்த ஆராத்யா வலிமையான தூண் போல் எதன் மீதோ மோதிக் கொண்டாள்..
ஆனாலும் தனது கண் குறியை நகற்றாது பார்த்தபடி இரு கை உயர்த்தி அந்த மாங்காயைப் பிடித்து விட்டாள்.. “ஹை சூப்பர் கேட்ச்..” தன்னைத் தானே வாய் விட்டு பாராட்டிக் கொண்ட பின் தான் மோதிய பொருளை பார்க்க பின்னால் திரும்பினாள்..
மின்சாரக் கம்பியை மிதித்தது போல் அதிர்ந்தாள்.. அங்கே ஆர்யன் நின்றிருந்தான்.. அவன் மேல்தான் ஆராத்யா மோதியிருந்தாள்..

What’s your Reaction?
+1
5
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Vizhi
Vizhi
4 years ago

Update plzz

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!