Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 13

13

” அட போதும்பா …பூலோகத்திற்கு வாங்க …” ரேச்சலின் கோவில் மணியோசை குரலோடு கிண்டல் கலந்த கண்ணனின் கை தட்டலோசையும் சேர இருவரும் வேகமாக சுய உணர்விற்கு வந்தனர் .

” என்ன சத்யா …என்ன பண்ணிட்டிருக்கீங்க …? ” காதலர்களின் ஏகாந்தங்களை கிண்டல் செய்வதில் தனி சுவை உண்டு .ரேச்சல் அதனை ஆர்வமுடன் செய்தாள் .

” அவள் இவ்வளவு நேரமாக கைகளை மெடிக்யூர் , பெனிக்யூர் ..்எல்லாம் பண்ணிக்கொண்டிருந்தாள்  …”

” என்னது …? ” மூவரும் கோரஸாக கேட்க …

” அட ஆமப்பா …கை விரல்களை சொடுக்கினாள் , நகங்களை தேய்த்து சைஸாக்கினாள் …இதோ இப்போதுதான் எல்லாம் சரியாக இருக்கிறதான்னு செக் பண்ணிக்கொண்டிருந்தாள் .நீங்கள் வந்துவிட்டீர்கள் “




சத்யா முறைக்க …முறைக்க கிறிஸ்டியன் அளந்த அளப்பில் இருவரும் சிரித்தனர் .

” சத்யா கொஞ்சம் இந்தப்பக்கம் வாங்களேன் ” கிறிஸ்டியன் அமர்ந்திருந்த பெஞ்சிற்கு அவளை அழைத்தான் கண்ணன் .

” ஏன் …? ” புரியாமல் பார்த்தவளின் கையை பிடித்து எழுப்பி கிறிஸ்டியன் அருகே தள்ளிவிட்டு அவன் சத்யாவின் இடத்தில் அமர்ந்து கொண்டு தன்னருகே ரேச்சலை இழுத்து அமர்த்திக் கொண்டான் .

” இதற்குத்தான் ….நீங்கள் ஒரே வீட்டில் இருக்கிறீர்கள் .நினைத்த போது பார்த்துக் கொள்ளலாம் .எங்களுக்கு கிடைப்பதே சிறிது நேரம்தான் .அதனை நாங்கள் வீணாக்க மாட்டோம் .” ரேச்சலுடன் நெருங்கி அமர்ந்து கொண்டான் .

முகம் சிவக்க திரும்பிய சத்யா கிறிஸ்டியனின் விழிகள் சொன்ன சேதியை புரிந்து கொள்ள மறுத்து தள்ளி அமர்ந்து கொண்டாள் .

” உங்கள் காதலை சீக்கிரமே உங்கள் அம்மா , அப்பாவிடம் சொல்லிவிடலாமே ரேச்சல் …? ” சூழ்நிலையை மாற்ற ஏதோவொரு கேள்வியை போட்டு வைத்தாள் .

” எனக்கெதற்கு அந்த கவலை …? அதற்குத்தான் இவன் இருக்கிறானே .அந்த பொறுப்பையெல்லாம் இவனுக்கு கொடுத்தாச்சு .நான் கவலையில்லாமல் காதல் மட்டும் செய்து கொண்டிருக்க போகிறேன் …” கிறிஸ்டியனின் புறம் கையை நீட்டிவிட்டு கண்ணனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள் .

சத்யா ..கிறிஸ்டியனை பார்க்க …அவன் என்ன செய்வதென தெரியவில்லையென உதட்டை பிதுக்கினான் .

அந்த பாவனையில் சத்யாவிற்கு வந்த கவலை அந்த காதலர்களுக்கு வரவில்லை .அவர்கள் ஏதோ நாளையே திருமணம் என்பது போன்ற கவலையற்ற தன்மையோடு தங்களை கொண்டாடிக் கொண்டிருந்தனர் .




” கிறிஸ்டியன் நினைத்தால் முடிச்சிடுவான் சிஸ்டர் .அதனால் எங்களுக்கு அந்த கவலையெல்லாம் இல்லை …” கண்ணன்.

” உங்களை பார்த்த பிறகு எங்களுக்கு அந்த நம்பிக்கை அதிகமாகிவிட்டது …” ரேச்சல் .

” என்ன …? என்னை பார்த்த பிறகா ….? “

” ஆமாம் .நீங்களும் எங்களைப் போலத்தானே . வேறு மாநிலம் …வேறு மதம் .உங்களை கிறிஸ்டி விட்டுவிட மாட்டான்தானே .அது போல் எங்களையும் விட்டு விட மாட்டான் …”

எளிதாக சத்யா – கிறிஸ்டியனின் காதலையும் போட்டு உடைத்த ரேச்சல் …

” வாங்க கண்ணன் நாம் இன்னொரு ரவுண்ட் பறந்துட்டு வரலாம் …” கண்ணனின் கை கோர்த்தபடி போய்விட்டாள் .

தனக்கு திருமணம் செய்ய வீட்டில் நிச்சயம் செய்த பெண்ணின் மூலமாகவே தன் காதலை காதலியிடம்  வெளிப்படுத்திய முதல் ஆள் இவனாகத்தான் இருக்கும் .அடிப்பார்வையாக அவனை முறைத்தாள் .

” இதற்குத்தான் வரச் சொன்னீர்களா …? “

” இல்லை .கண்ணனும் , ரேச்சலும் இங்கே இருப்பார்களென்றே நான் எதிர்பார்க்கவில்லை .இதனை நான் திட்டமிடவில்லை .நான் உன்னை இங்கே அழைத்து வந்த காரணம் வேறு .என் மன அமைதிக்காக ….”

கவலை தெறித்த அவன் குரலில் துணுக்குற்ற சத்யா அவன்புறம் நன்கு திரும்பி அமரந்து கொண்டு …” சொல்லுங்கள் ….,” ஆதரவாக கேட்டாள் .

” இந்த பாரா கிளைடிங்கை ரேச்சல்  அறிமுகப்படுத்திய உடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது .இங்கு டேவிட்டை நான்தான் அழைத்து வந்தேன் .அவனுக்கு இதில் அவ்வளவு விருப்பமில்லையென்றாலும் எனக்காக என்னுடன் வருவான் .எங்களுடைய வார இறுதி நாட்கள் பெரும்பாலும் இங்கேதான் கழியும் ….”

” இப்போது நான் இந்தப் பக்கம் வந்து நான்கு வருடமாகிவிட்டது . டேவிட் உன் அக்காவை திருமணம் செய்து கொண்டு அங்கே வந்த்தும் …ஒரே ஒரு முறை அவனில்லாமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை இங்கே வந்துவிட்டு எங்கு திரும்பினாலும் வெறுமையை உணர்ந்து உடனே திரும்பிவிட்டேன் …”

” அந்த எரிச்சலில்தான் மறுநாளே ப்ளைட் பிடித்து அங்கே உங்கள் வீட்டிற்கு  வந்து உடனேயே உடன் வந்து விடும்படி டேவிட்டை அழைத்துக்கொண்டிருந்தேன் ….”

” அந்த பிச்சிக்கொடி சாய்ந்து விடாமலிருக்க சுற்றி வட்டமாக அடுக்கி வைத்திருந்த கற்கள் மொத்தமாக பத்து இருக்கும் .அதில் எதை தூக்கி உங்கள் மண்டையில் போடலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன் …”

சத்யமித்ராவின் இந்த பேச்சில் சட்டென சிரித்த கிறிஸ்டியன் ” ஓ…பேபி .இதை நான் அன்றே உணர்ந்து கொண்டேன் .தன்னிடம் குறும்பு செய்யும் பக்கத்து வீட்டு குழந்தையை அடிக்க கல் எடுக்குமே சிறு பிள்ளை ,அந்த பாவனையை அன்றே உன் கண்களில் கண்டேன் “

” அன்று அண்ணன் கொஞ்சம் உள்ளே போனதும் …வந்த வேலை முடிந்துவிட்டால் வாயை பொத்திக்கொண்டு போவதுதானே ….என்று முணுமுணுத்தாயே …அப்போது …” என்றவன் நிறுத்தி அவள்புறம் லேசாக சரிந்து …

” மடியில் இழுத்து அமர்த்தி கொஞ்ச தோன்றியது …” என்றான் மென்குரலில் .

கூச்சத்தில் சிவந்த கண்களை விரித்து அவனை முறைக்க …

” குழந்தையைத்தான்மா …அதுபோல் கல்லெடுக்கும் குழந்தையை பார்த்தால் அப்படி தோன்றியதென்றேன் …”

சட்டென அவன் பேச்சை மாற்றியதால் எழுந்த சிரிப்பை மறைக்க முகத்தை திருப்பிய சத்யாவின் மனதில் சங்கமித்ரா , டேவிட்டும் அவள் பெற்றோர்களும் நினைவு வந்தனர் .தொடர்ந்து அன்று அவளனுபவித்த துயரங்களும் ….

” அம்மாவிடம் டேவிட்டை மீண்டும் அழைத்து வந்துவிடுவதாக உறுதியளித்துவிட்டு அன்று வந்தேன் சத்யா .டேவிட்டின் உறுதியை பார்த்ததும் இதை …இந்த காதலை …இன்று வரை எங்களோடு உயிருக்கு உயிராக பழகி வந்த எங்கள் வீட்டு பிள்ளையை சட்டென மாற்றிய இந்த காதலை உடைத்தே தீரவேண்டுமென்று வேகம் வந்த்து எனக்கு …,”

” எவ்வளவு தைரியம் உங்களுக்கு …? உயிருக்கு உயிராக பழகி பெரும் போராட்டத்திற்கு பின் இணைந்திருந்தவர்களை பிரிக்க வேண்டுமென்றீ  நினைத்தீர்கள்…? “

சத்யாவின் இடையீட்டை கவனிக்காதவன் போல் …

” ஆனால் கையில் இல்லாத கல்லை கண்ணில் கவண் கொண்டு எறிந்தபடி வந்து நின்ற அந்த சிறு பெண்ணை பார்த்ததும் நான் வந்த விசயம் மறந்து போனது .இன்னும் கொஞ்சம் அவளை சீண்டி நிஜம்மாகவே கல்லாலே இரண்டு அடி வாங்கினால்தான் என்ன …? அதென்ன அப்படியா வலித்து விட போகிறது ….? என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக தோன்ற ஆரம்பித்துவிட்டது .டேவிட்டின் பக்கமும் ஏதோ நியாயமிருப்பதாக தோன்ற ஆரம்பித்து விட குழப்பத்துடன் வந்துவிட்டேன் …”

” இங்கே வந்த்தும் புலம்பிக்கொண்டிருந்த அம்மாவை எப்படி சமாதானப்படுத்துவதென தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த போது , இங்கிலாந்து யுனிவர்சிட்டியில் படிக்க அனுப்பிய எனது அப்ளிகேசனை ஏற்றுக்கொண்டு அந்த யுனிவர்சிட்டி என்னை படிக்க அழைத்தது .அம்மா  , அப்பாவின் துயரத்தை பக்கத்திலிருந்து பார்க்க முடியாமலும் , அந்த படிப்பு மிக அரிதானதென்பதாலும் நான் இங்கிலாந்து கிளம்பிவிட்டேன் .என்னுடைய படிப்பை முடித்து விட்டு வருவதற்குள் அம்மாவையும் , அப்பாவையும் சமாதானப்படுத்தி இங்கே வந்து விடுவதாக டேவிட் உறுதியளித்தான் .அதனால் …..”

” என் கேரியர் எனக்கு முக்கியம் .யார் எப்படி போனாலென்ன …என்று சுயநலத்தோடு கிளம்பி போய் விட்டீர்கள் …”

சத்யமித்ராவின் திடீர் குற்றச்சாட்டில் குழம்பி …” சத்யா ..என்னடா ..? ” என்றான் .

” பிறகு …இங்கே அ…அந்த  ஆக்ஸிடென்டிற்கு பின் ….” குரல் தழுதழுக்க நிறுத்தினாள் .

” அந்த ஆக்ஸிடென்டை அப்பா எனக்கு தெரியப்படுத்தவில்லை சத்யா “

” என்ன …? “

” ஆமாம் அப்போது எனக்கு முக்கியமான பரீட்சை ஒன்று இருந்த்து .அதனால் எனது படிப்பு முக்கியமென்று …அப்பா அம்மாவை கூட அங்கே அழைத்து வரவில்லைதானே ….,”

” ஆமாம் .தனியாக வந்தார் .உங்கள் அண்ணனை மட்டும் எடுத்துக்கொண்டு ….”மீண்டும் உதடு கடித்து அழுகையை நிறுத்தினாள் .

” நீ சொல்லு சத்யா .மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிவிடு .நமது மனத்துயரங்களை கொட்டிக்கொள்வதற்காகத்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன் ….”

” சாந்தனு பிறந்து நாற்பது நாட்கள் ஆகியிருந்த்து .குழந்தை பிறந்த நாற்பதாம் நாள் தீட்டு கழிந்த்தும் குலதெய்வம் கோவிலுக்கு போகவேண்டுமென்று அப்பா , அம்மா , அக்கா , அத்தான் ,குழந்தை எல்லோரும் காரில் போயிருந்தனர் .எனக்கு அன்று கடைசி செமஸ்டர் .அதனால் நான் காலேஜ் போய்விட்டேன் ….”

” பரீட்சை முடிந்து வெளியே வந்தவுடன் எனக்கு தகவல் வருகிறது . ஆக்ஸிடென்ட் என்று .நான் வரும் வரை எல்லோரும் அங்கே ரோட்டிலேயேதான் கிடந்தார்கள் .நசுங்கிய காருக்கிடையேயும் , ஆங்காங்கே ரோட்டிலேயுமாக என் குடும்பத்தார் கிடந்ததை பார்த்தபோது …அப்படியே அங்கேயே என் உயிரும் போய்விடாதா …என்றிருந்த்து “

கிறிஸ்டியனின் கை சத்யாவின் கைகளை அழுத்தி பிடித்தது .இயல்பாக அவளை அணைக்க எழுந்த கைகளை கட்டுப்படுத்தியவன் ….

” சத்யா …தவறான எண்ணத்தில் இல்லையம்மா .நம்மை வாட்டும் துயரத்திற்கு ஆதரவாக ….இந்த ஒரு சாதாரண அணைப்பு நமது துயரங்களின் வேகத்தை குறைக்ககூடும் …..ம் ….அதனால்தான் ….”

என அவளிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவளை இழுத்து தன் மீது சாய்த்துக்கொண்டான் .மெல்ல தலையை வருடியபடி கரகரத்த குரலில் ” சொல்லு …” என்றான் .

சத்யாவிற்குமே அப்போது அந்த இணைப்பு தேவையாயிருந்த்து .முன்பு இந்த துன்பம் பட்டபோது அருகிருந்து கை பற்றி ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லாத தனிமை கொடுமை இப்போது நினைவு வர , அதே துயரை திரும்ப படும் தெம்பில்லாது அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் .




” ஒரு மணிநேரமாக ஒவ்வொரிடமாக போய் கதறியழுத பின்தான் குழந்தை நினைவிற்கு வந்தான் .அதுவும் போலீஸ்கார்ர்கள் யாரையும் என்னை தொடவிடவில்லை .யார் யார் வந்தார்களென அவர்கள் என்னைக் கேட்டதும்தான் குழந்தை நினைவு வந்த்து .பதறிக்கொண்டு தேட , கொஞ்சம் தள்ளி ஒரு புதருக்குள் அழுதழுது மயங்கி உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த சாந்தனுவை பார்த்தேன் அந்த நேரம் …..”

உடல் முழுவதும் நடுங்கிய சத்யாவை அழுத்தி அணைத்து தன் மார்பில் புதைத்துக்கொண்டான் .

” சொல்லுடா …..இன்னும் உன் மனதை …உன் துயர உணர்வுகளை எல்லாம் கொட்டிவிடு ….இனி ஒரு முறை இந்த துயர்த்தை நீ நினைக்க கூடாது ” முதுகை ஆறுதலாக வருடினான் .

” அம்மாவும் , அப்பாவும் காதல் திருமணம் செய்தவர்கள் .அதனால் இருவர் வீட்டு பக்கமும் சரியான ஒட்டுதல் கிடையாது .எல்லோரும் கடனே என்று ஆஸ்பிடல் வந்து நின்றார்கள் .நம்மை எல்லாம் எதிர்த்து கல்யாணம் பண்ணி வாழ்ந்து காட்டுவோம்னு வந்தாங்கள்ல …அதுக்குத்தான் இந்த தண்டனைன்னு கூட பேசிக்கிட்டாங்க .நான் தொந்து போயிட்டேன் ….”

” அந்த நேரத்தில் நான் என் உண்மை சொந்தமாக உணர்ந்த்து , என் கையில் இருந்து கதறிக்கொண்டிருந்த சாந்தனுவின் சொந்தங்களைத்தான் .என் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் உங்கள் தந்தை ஆஸ்பிடலுக்கு ஓடி வந்தார் .எல்லா காரியங்களையும் முன்னால் நின்று பார்த்தார் . என் கை தங்காமல் கத்திக்கொண்டிருந்த குழந்தையை அமர்த்த ….பெண் துணையாக உங்கள் அம்மாவை தேடினேன் ….”

” அப்பா …அம்மாவிற்கும் தகவல் சொல்லவில்லை சத்யா .அண்ணனின் உடலோடு அப்பா வந்த பிறகுதான் அம்மாவிற்கே தெரிந்திருக்கிறது ….”

” என் அம்மா , அப்பா , அக்கா உடல்களை என் வீட்டில் சேர்த்துவிட்டு உங்கள் அண்ணன் உடலுடன் எங்களை திரும்பியும் பார்க்காமல் போய்விட்டார் .நான் அப்போதிருந்த மனநிலையில் அவர் முன் குழந்தையோடு போய் நின்று அவனையும் அழைத்து போய் விடுமாறுதான் கெஞ்சினேன். குப்பை புழுவை போல் பார்த்து விட்டு போய்விட்டார் “

” தாய்பால் மட்டுமே அருந்த தெரிந்த தலை கூட தூக்காத பச்சை குழந்தை .நான் என்ன செய்வேன் ? குழந்தையை அதன் தாத்தா மறுத்துவிட்டால் ஏதாவது அநாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடுமாறும் , இருக்கும் வீட்டை விற்று பேங்கில் போட்டுவிட்டு நானும் ஏதாவது ஹாஸ்டலில் சேர்ந்த  கொள்ளுமாரும் அறிவுரை கூறிவிட்டு உறவினர் கும்பல் கலைந்துவிட்டது ….”

” அப்போது செல்வராஜ் அங்கிள்தான் எங்களுக்கு ஆதரவாக இருந்து , வீட்டை விற்க ஏற்பாடு செய்து அந்த பணத்தை பேங்கில் போட்டு குழந்தையோடு என்னையும் அவரது ஊருக்கே அழைத்து சென்றார் .அங்கே அவர் வேலை பார்த்த பள்ளியிலேயே எனக்கும் டீச்சர் வேலை வாங்கி தந்தார் “

தனது துயர கதையை சத்யமித்ரா முடித்த பின்பும் இருவரின் நிலையிலும் மாற்றமில்லை .கொஞ்சநேரம் ஒருவரின் அணைப்பில் அடுத்தவர் ஆறுதல் கண்டபடியே சற்று நேரம் இருந்தனர் .

பிறகு சத்யாவை எழுப்பி அங்கிருந்த குழாயில் முகம் கழுவ வைத்த கிறிஸ்டியன் …” நீ இங்கே இவ்வளவு துயரங்களோடு இருந்த போது நான் அங்கே படிப்பென்ற பெயரில் உட்கார்ந்து கொண்டிருந்த்தை நினைத்தால் ..எனக்கே வெட்கமாக இருக்கிறது சத்யா ” என்றான் .

” ம்ப்ச் ….தெரிந்தா செய்தீர்கள் .விடுங்கள் ….”

ஒருவருக்கு ஒருவர் சமாதான வார்த்தைகளை பேசியபடி துயரம் களைந்த புன்னகை முகத்துடன் இருவரும் வீட்டினுள் நுழைந்தபோது கடும் கோபத்துடன் இருவரையும் எதிர்கொண்டாள் ஜெபசீலி .
” முதலில் இவளை இந்த வீட்டை விட்டு வெளியேற்று …” உத்தரவாக கிறிஸ்டியனிடம் கத்தினாள் .

What’s your Reaction?
+1
3
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!