ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 10

10

முடிந்து கொண்டிருந்த சிகரெட்டிலிருந்து அடுத்ததை பற்ற வைத்தவனை எரிச்சலுடன் பார்த்தாள் நிலானி .இப்போது இவன் எதற்கு காதல் தோல்வி போல் சோகம் கொண்டாடுகிறானாம் ? சோபாவில் சரிந்து கிடந்தபடி புகை பிடித்துக் கொண்டிருந்தவன் பார்க்க பாவமாக தோன்றினான் அவளுக்கு .முகம் கறுத்து நான்கு நாட்களில் உடல் இளைத்தாற் போல் தெரிந்தான்.

பாவம் அலைச்சல் என பரிதாபப்பட்டு கொண்டவள்… அவன் எப்போது சாப்பிட்டான் என யோசித்தாள். அன்று முழுவதுமே வெளியே தான் சுற்றிக் கொண்டிருந்தார்கள் .வெளியே கிடைத்ததை கிடைத்த இடத்தில் சாப்பிட்டார்கள். இந்த சிறிய ஊரில் வெளியே பெரிதாக  என்ன கிடைக்கும் ? பழம் பன் காபி இப்படித்தான் அவர்களது அன்றைய உணவு இருந்தது.

நிலானி  கிச்சனுக்குள் நுழைந்தாள் . அது அவளுக்கு பழக்கமற்ற இடம். ஆனால் இப்போது வேறு வழி இல்லை.

தோசைமாவு இருந்தது. இரண்டு தோசை சுட்டு எடுத்தாள் . பிரிட்ஜில் இருந்த கட்டித் தயிரில் கடுகு வெங்காயம் வத்தல் போட்டு தாளித்து உப்பு போட்டு அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டாள் .இரண்டையும் கொண்டு போய் அவன் முன்னால் வைத்தாள்.

” எப்போதும் என்ன சிகரெட் ..? ” அவன் வாயில் இருந்த சிகரெட்டை பிடுங்கி எறிந்தாள். ”  சாப்பிடுங்க ” 

தன் முன்னால் இருந்த தட்டை அபி ஆச்சரியமாக பார்த்தான். ”  நீயே செய்தாயா  ? இதெல்லாம் உனக்குத் தெரியுமா ? தி கிரேட் சென்ட்ரல் மினிஸ்டர் திருக்குமரனின் ஒரே செல்ல மகள் தி கிரேட் நிலானிக்கு தோசை சுட தெரியுமா ? ” 

கையிலிருந்த தோசை கரண்டியை அப்படியே அவன் மூஞ்சிக்கு திருப்பலாம் போல் இருந்தது நிலானிக்கு .” உனக்கெல்லாம் பாவம் பார்த்தேன் பார் என்னை சொல்லணும் ” என்று காய்ந்து விட்டு கிச்சனுக்குப் போனாள். தனக்கும் தோசைகள் ஊற்றிக் கொண்டாள்.




” சைட் டிஷ் சூப்பர் .யார் சொல்லித் தந்த்து  இது…? ”  ஹாலில் இருந்து அவன் கத்தல் கேட்டது

” காலேஜில் செஃப் க்ளாஸ்  உண்டு .அப்போது உடனடியாக செய்யக்கூடிய சில உணவுவகைகளை கற்றுக்கொண்டேன் .அப்படி படித்தது இது. நல்லா இருக்கா  ? ” கேட்டபடி தனக்கும் பரிமாறிக் கொண்டாள் . அவன் சொன்னபடியே உண்மையிலேயே நன்றாக இருப்பதாகத்தான் தோன்றியது.

” டெலிஷியஸ் …” தோசையை தயிரில் பிரட்டி உண்டான் அவன். பெரிய கப் நிறைய ஹார்லிக்ஸ் கலந்து வந்து அவனுக்கு கொடுத்தாள் .டீப்பாய் மேல் அவன் வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டை அவன் பார்க்காத போது எடுத்துக் கொண்டு வந்து கிச்சன் குப்பைக்கூடையில்  போட்டாள்.

இனி தூங்க வேண்டியது தான் …நிலானிக்கு கண்களை சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. அன்று முழுவதும் வெளியே அலைந்து திரிந்த களைப்பு . கை கால்களில் எல்லாம் வலி இருந்தது .அடிபட்ட இடுப்பு காயம் வேறு சிறிது அசைந்தாலும் ஊசிக் குத்தலாய்  இம்சித்தது .மேலே போய் படுக்கலாம் இயல்பாக நினைத்தவள் திடுக்கிட்டாள் .

இவன்… இரவில்..இ… இதை எப்படி இவ்வளவு நேரம் மறந்தேன் ?நிலானியுனுள் பதட்டம் அலையலையாக பரவத்துவங்கியது.

கனத்த கால்களை மெல்ல  எடுத்து வைத்து மீண்டும் அவள் ஹாலுக்குள் வந்தபோது அவன் சுற்றுமுற்றும் தேடிக் கொண்டிருந்தான் .அவன் தேடும் பொருளை அறிந்தாலும் கண்டு கொள்ளாதது போல் மெல்ல மாடிப்படி பக்கம் நகர்ந்தாள்.

” நில் …” அவனது அதிகாரக் குரலில் திடுக்கிட்டு நின்றாள் .” என் சிகரெட் பாக்கெட்டை பார்த்தாயா ? ” ரொம்ப முக்கியம் பார் … சலித்துக் கொண்டவள் இல்லையென  தலையசைத்தாள்.

” சரி நீ போய் படு ” அவன் அனுமதி அவளுக்கு மட்டுமானதாக இருக்க  ஆச்சரியமானாலும் அவனது நிலையை உறுதி செய்துகொள்ள அந்தக் கேள்வியை எழுப்பினாள் 

” நீ …நீங்கள்…? ” 

” எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது .அதை முடித்துவிட்டு வருகிறேன் ” அவன் சோபாவிலேயே சரிந்து கொண்டான்.

ஆளை விட்டால் போதுமென்று மேலே அறைக்குள் ஓடி வந்து விட்டாள் நிலானி. படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்தது அவளுக்கு .ஆனால் சிறிது நேரத்திலேயே விழிப்புத் தட்டியது .அதன் காரணம் ஏதோ சுற்றுப்புறச் சப்தம் என  விழித்த பின்னால் உணர்ந்தாள் .யோசனையோடு புரண்டவள் சோபாவில் இருந்து கீழே கார்பெட்டில் விழுந்துவிட்டாள் . உடனே  அவளுள் அபி அவளை முன்பு கீழே விழாமல் தாங்கிய ஞாபகம் வந்தது.

வேகமாக கட்டிலுக்கு பார்வை போக அங்கே அவன் இல்லை. வெளியே கேட்ட சத்தத்திற்கு வேகமாக எழுந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வீட்டைச் சுற்றி இருந்த பகுதிகள் முழுவதும் ஆட்கள் நிறைந்திருந்தார்கள் .பெரிய சக்தி வாய்ந்த விளக்குகளை கொண்டு வந்து வைத்து சுற்றுப்புறம் முழுவதும் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள்.

முதலில் குழம்பிய நிலானி விரைவிலேயே தெளிந்துவிட்டாள் 

. இவர்கள் ஆயுதங்களை தேடுகிறார்கள் .முன்தினம் புதருக்கு இடையே அவள் கண்டுபிடித்த துப்பாக்கிகளை போல வேறு எங்கேயும் மறைத்துவைக்கப் பட்டிருக்கிறதா  என தேடுகிறார்கள் .இதுதான் அவன் சொன்ன வேலையா …? நிலானி கவனித்துப் பார்க்க அங்கே விளக்குகளின் ஒளி வெள்ளத்தின் நடுவே அபியும் தெரிந்தான்.

அனுமானமாக சில இடங்களை அவர்களுக்கு காட்டிக் கொண்டிருந்தான் .சிறிது நேரம் இவற்றை வேடிக்கை பார்த்தவளுக்கு தூக்கம் வர மீண்டும் போய் படுத்துக்கொண்டாள். நிமிடத்தில் தூங்கியும் போனாள்.

நிலானி  கண்விழித்தபோது நன்றாக விடிந்து விட்டிருந்தது .சுற்றுப்புற சத்தங்கள் மறைந்து போயிருந்தன .ஆனால் கீழிருந்து யாரோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர் .நிலானி  மாடியிலிருந்து எட்டிப் பார்த்தாள் .அழகான பெண்ணொருத்தி ஹாலில் அமர்ந்துகொண்டு அபியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

யார் இந்த பெண் …? சிறிது யோசித்த அவளுக்கு உடனே அடையாளம் தெரிந்து விட்டது. அவள் ராஜலட்சுமி .போலீஸ் இன்ஸ்பெக்டர் . அவளை அடையாளம் தெரியாமல் போனதற்கு காரணம் இருந்தது .ராஜலட்சுமி முதல் நாள் போல் ஜீன்ஸிலோ மறுநாள் போல் யூனிபார்மிலோ இல்லாமல் அழகாக சேலை கட்டியிருந்தாள் . பாப் செய்திருந்த தலை முடியை அயன் செய்து ஸ்ட்ரெயிட்டனிங்  பண்ணி இருந்தாள் .பேபி பிங்க் நிற சேலையும் பப் கை வைத்த ஊதா ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள்.

இது என்ன காவல்துறைக்கான நேரத்தில் இப்படி ஒரு அலங்காரம் தேவையா  ? நிலானியின் மனது சுருங்கியது .பல் தேய்த்து முகம் கழுவி அவள் குளிக்கப் போகும் முன் தன் பெட்டியை ஆராய்ந்து உடைகளை தேர்ந்தெடுத்தாள்.

“உனது வேலைகள் முடிந்ததும் நீ பின் வாங்குவது போல் எனக்குத் தோன்றுகிறது ராஜி ” 

” அபி நீ என்னுடைய இடத்தில் இருந்து யோசித்துப் பார் .எனக்கு கவர்மெண்ட் தான் சம்பளம் கொடுக்கிறது .நான் அவர்களுக்கு நியாயமாக இருந்துதான் தீர வேண்டும் ” 

” உன்னுடைய சட்டத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கும் .அது எனக்கு தெரியும் .அதைப் பற்றித்தான் உன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ” 

” சட்டத்திற்கு உட்பட்டு எல்லாவற்றையும் நான் உனக்கு செய்து விட்டேன் .அதற்கு மேலும்  , எனது ஊர் மக்கள். நீ உள்ளே வர வேண்டாம் .நானே அவர்களிடம் தவறு இருந்தால் பிடித்து கொடுப்பேன் என்று நீ கேட்டுக்கொண்டதற்காக பத்து  நாட்களுக்கும் மேலாக இந்தப் பக்கமே வராமல் இருந்தேன் ” 

” உனக்கு கொடுத்த வாக்கிற்கு கட்டுப்பட்டுத் தான் தவறு இருக்கிறது என்று தெரிந்ததும் அவர்களை பிடித்துக் கொடுத்தேன் .ஆனால் அதற்காக அதிகபட்ச தண்டனையோ … மரணதண்டனையோ அவர்களுக்கு அமைய நான் விடமாட்டேன் “

” குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை தடுக்கிறாயா நீ ? ” 

” இவர்கள் முக்கிய குற்றவாளிகள் இல்லை .வெறும் கருவிகள் மட்டும் தான் .யாருக்காகவும் இவர்கள் பலியாக விடமாட்டேன். அறியாமையால் இவர்கள் செய்த தவறு இது. அதனை இவர்களுக்கு உணர்த்தி இவர்களை விரைவில் வெளியே கொண்டு வருவேன் ” 

” காபி குடித்துவிட்டு பேசுங்களேன் ” காரசாரமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் முன் நீண்ட டிரேயை ஆச்சரியமாக பார்த்தனர்.

” நிலா நீ  ஏன் கஷ்டப்படுகிறாய் ? ” என்றபடி காபி கப்பை அபி எடுக்க , ” நிலா அருமையான பெயர் ” சிரித்தபடி தானும் ஒரு கப்பை எடுத்தாள்  ராஜலட்சுமி.




” என் பெயர் நிலானி .காபி போடுவதில் என்ன கஷ்டம் ? ”  சொன்னபடி தனது கப்பை எடுத்துக்கொண்டு அவர்கள் அருகே அமர்ந்து கொண்டாள் நிலானி.

” நிலானியும் அழகான பெயர்தான் .உங்கள் பெயருக்கேற்றார் போல் நிலவு போல் ஜொலிக்கிறீர்கள் ” ராஜலட்சுமி  புகழ்ந்து புன்னகைத்தாள்.

” நீங்களும் அழகு தான். உங்கள் பெயருக்கேற்றபடி கம்பீரமான அழகு ” நிலானி உணர்ந்து தான் இதைச் சொன்னாள் .

” அடடா …எங்கே எந்த பொசிசனில் ,  எந்த வேலையில் இருந்தாலும் என்ன …இந்தப் பெண்களின் முதல் அறிமுக பேச்சு அழகை பற்றியதாகத்தான் இருக்கிறது ” சலித்தான் அபி.

” அது எங்களது பிறவிக்குணம் அபி .அதனை மாற்ற முடியாது ” இலகுவாக ராஜலட்சுமி சிரிக்க…

 உனக்கு இப்போது யார் மீது எரிச்சல் ? அழகைப் பற்றி பேசிய் அவள் மீதா  அதனை எடுத்துச் சொன்ன என் மீதா ?  குதர்க்கமாக அவனைப் பார்த்தாள் நிலானி .

” அந்த துப்பாக்கிகளை தவிர வேறு எதுவும் இல்லை அபி .உங்கள் வீட்டைச் சுற்றி முழுக்க சல்லடை போட்டாயிற்று .ஆனாலும் உன் இடத்திலேயே கொண்டு வந்து துப்பாக்கிகளை ஒளித்து வைக்க எவ்வளவு தைரியம் அவர்களுக்கு ? ” ராஜலட்சுமி தனது கடமைக்கான பேச்சிற்கு மாறி இருந்தாள்.

” இங்கே தான் பாதுகாப்பு என்று நினைத்திருக்கிறார்கள் .எனக்கே தெரியவில்லை .இதோ நிலானிதான்  அவற்றை கண்டுபிடித்து எடுத்தாள் ” 

” குட் ஜாப் நிலானி ” ராஜலட்சுமி பாராட்ட நிலானி விழித்தாள். இதில் அவளுடைய பங்கு என்ன இருக்கிறது…?  அவள் வேறு எதற்கோ ஓட …..அப்போதுதான் திடுமென்று நிலானிக்கு தான் என்ன காரணத்திற்காக அன்று ஓடினாள் என்ற நினைவு வந்தது. கலக்கத்துடன் அபியை பார்க்க அவனோ வேறு சிந்தனையில் இருந்தான்.

இருக்கட்டும் இந்த சிந்தனை மாறியதும் அவனது கவனம் தன் மீது தான் திரும்பும் என நினைத்த நிலானி ராஜலட்சுமியை நோக்கினாள்.

” உங்களிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டுமே மேடம் ” இனிமையான அவள் குரலுக்கு ராஜலட்சுமி எழுந்தாள்.

” பேசலாமே …வாருங்களேன். அப்படியே வெளியே நடந்து கொண்டு பேசலாம் ” 

எழுந்து போகும் பெண்களைப் பார்த்தபடி யோசனையில் இருந்தான் அபி.

What’s your Reaction?
+1
4
+1
6
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!