Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 12

12

” இதறகு முன்பு எங்கே வேலை பார்த்தாய் கமலினி …? ஏதாவது நகைக்கடையிலா …? “

.” அது எதற்கு உங்களுக்கு …? இங்கே வேலை பார்க்க எக்ஸ்பீரியன்ஸ் வேண்டுமா …? அப்படி எதுவும் வேலையில் சேரும் போது நீங்கள் சொல்லவில்லையே …? “

” இல்லை .அதற்காக கேட்கவில்லை .இன்று நகைகளை பற்றிய   உன் விளக்கங்களை கேட்டதும் உன்னை பற்றி கொஞ்சம்  தெரிந்து கொள்ளலாமென்றுதான் …இங்கே நம் கடையில் வேலைக்கு சேருபவர்களுக்கு மிகத் தெரிந்த  யாராவது ஒருவரின் கேரன்டி கண்டிப்பாக வேண்டும் . உனக்கு  மேனேஜர் சதாசிவம் கேரன்டி கொடுத்தார் .மிக நல்ல பெண் .நம்பி நகைகளை கொடுக்கலாம் எனபது அவரளித்த உறுதி . உன் அழகான தோற்றத்திற்காகவும் , அவரது உறுதிக்காகவுமதான் இந்த வேலையை கொடுத்தோம் .இப்போது இன்னமும் உனக்கு வேறென்ன தெரியும் …? “

விஸ்வேஸ்ரனின் கேள்வி முடியும் முன்பே கமலினி இடையிட்டாள் .” முதல் நாளே உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை சார் .மேடம் செலக்ட் செய்து வைத்திருந்த என்னை அன்றே மற்றவர்கள் முன்பே ரிஜக்ட் செய்தீர்கள் .அந்த உங்களது முடிவே சரியானதாக இருக்கட்டும் .நான் என் வேலையை ரிசைன் பண்ணுகிறேன் …” உறுதியாக பேசிவிட்டு எழுந்து நின்றவளை புருவம் சுருக்கி விஸ்வேஸ்வரன் பார்த்தான் .பின் பாரிஜாதம் பக்கம் திரும்பி கன்னம் தாங்கிக் கொண்டிருந்த அவள் கையில் மெல்ல தட்டினான் .

” என்ன வேடிக்கை …? இரண்டு பேரும் இங்கே வித்தையா காட்டிக் கொண்டிருக்கறோம் ..?எனக்கு  ஹெல்ப் பண்ணலாமில்ல …? “

பாரிஜாதம் வேகமாக எழுந்தாள் .” இங்கே பார் கமலினி .உனக்கு எங்களோடு ஒரு வருட வேலை ஒப்பந்தம் இருக்கிறது .அப்படியெல்லாம் நினைத்த உடனே வேலையை விட்டு போக முடியாது .ஒழுங்காக சொன்ன பேச்சு கேட்கவில்லையென்றால் நான் எங்கள் வக்கீலிடம் பேச வேண்டியதிருக்கும் .சரிதானே விஸ்வா …? ” மனனம் செய்த குழந்தையாய் ஒப்புவித்தாள் .

” பேசிய வரை சரிதான் தாயே . இனி நானே பார்த்துக் கொள்கிறேன் .கொஞ்சம் வெளியே …” விஸ்வேஸ்வரன் கையெடுத்து கும்பிட்டு பாரிஜாத்த்திற்கு வாசலை காண்பிக்க …

” சௌமியை ஸ்கூலிலிருந்து கூப்பிட வேண்டும் .நான் வருகறேன் ….” கிட்டதட்ட அறை வாசலுக்கு ஓடி வெளியேறினாள் பாரிஜாதம் .

” என் மேல் கேஸ் போடுவீர்களா …? ” கமலினி அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக நின்றாள் .

” நீ முதலில் உட்கார் கமலினி .உன் கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் நான் தருகிறேன் . முதல்நாள் உன்னை வேலைக்கு வேண்டாமென்றதற்கான விளக்கம் நான் முன்பே சொல்லியிருக்கறேன் .அதில் மாற்றமெதுவுமில்லை .உனது இந்த வேலைக்கு தேவை அதீத அலங்காரமும் , ஆடம்பர தோற்றமும் .அது அன்று உன்னிடம் இல்லை . சொன்னாலும் அப்படி அலங்கரித்துக் கொள்பவள் போல்  அப்போது நீ தோன்றவில்லை .அதனால் அன்று வேண்டாமென்றேன் .பிறகு அன்று பங்சனில் உன்னை.. உன் அலங்காரத்தை பார்த்த பிறகோ உன்னை விட மனதில்லை .மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பகுளத்தின் நடுவே மிதக்கும் சொர்ண தாமரையை நீ அடிக்கடி எனக்கு நினைவூட்டினாய் .இந்த தாமரையை நமது கடையில் ஜொலிக்க விடுவோமென்றே உன்னை வேலைக்கு சேர்த்தேன் …”




விஸ்வேஸ்வரனின் விளக்கம் தந்த சங்கடத்தை  விட அவ் விளக்கத்திறகு பொருத்தமான அவனது பார்வையே கமலினியை மிகவும் இம்சித்தது .கமலினியின் அழகான தோற்றத்தினால் அவள் மேல் விழும் ஆண்களின் பார்வைகளை நிறையவே சந்தித்திருக்கிறாள் . நிறைய நேரங்களில் அருவெறுத்திருக்கிறாள் . அப்படியே துணிமூட்டையாக தனக்குள்ளேயே குறுகிப் போய்விட மாட்டோமா …என வெறுத்திருக்கிறாள் .ஆனால் இவனது பார்வை அப்படியில்லை .மலை உச்சியில் பூத்திருக்கும் ஒற்றை ரோசாவை ஆர்வமும் , பிரமிப்புமாக பார்ப்பானே மலையடிவாரத்தான் .அது போலொரு பார்வை .குழந்தையின்   அழகான கையெழுத்தை விழி விரித்து பாராட்டும் ஆசிரியரின் தட்டிக் கொடுக்கும் பார்வை . வளைவுகளுடன் சிறபி வடித்த ஆரணங்கு சிலையை விழி வருடி ரசிக்கும் ரசிகப் பார்வை .
மென் வருடலாய் அவள் மேல் படிந்த அவனது பார்வையில் தென்றலின் வாசத்தை உணர்ந்தாள் கமலினி .

” மறு நாள் உன்னை நம் கடை அலங்காரத்துடன் பார்க்கும் ஆவலுடன் மாடியில் டிவி முன்பு அமர்ந்திருந்தேன் .திரையில் தெரிந்த உன் உருவம் திருப்தியளிக்காது ஏழாவது மாடியிலருந்து இறங்கி வந்து இரண்டாவது மாடிப்படி வளைவில் மறைவாக நின்று கொண்டு உன் அலங்காரத்தை , தோற்றத்தை பார்த்து திருப்திபட்டேன் .கூடவே உனது இனிமையான பேச்சும் , திறமையான நடவடிக்கைகளும் .எனது தேர்வு தவறில்லையென்ற திருபதியில் இருந்த போது, நீ  வேலை வேண்டாமென்று வந்து நின்றாய் .அதற்கான உன் காரணம் என் தொழில் முறையை சீண்ட அன்றும் உன்னிடம் கோபமாக பேச வேண்டி வந்துவிட்டது .தேவையில்லையென்றால் போயேன் என்று விட்டு நேற்று இரவு முழுவதும் நீ வேலையை விட்டு விடுவாயோ என்ற பரிதவிப்பிலேயே இருந்தேன் …”

கமலினி அவனை என்னதிது …என்பது போலொரு அதட்டல் பார்வை பார்க்க அவன் இரு கையுயர்த்தி சரண் செய்கை சொன்னான் .

” தவறான எண்ணமில்லை கமலினி .ஒரு தொழிலை வெற்றியடைய வைக்க வேண்டுமானால் ஒவ்வொரு சிறு சிறு விசயங்களையும் கவனித்து செய்ய வேண்டும் . நீ ஏற்றிருக்கும் இந்த ” கோல்டன் லோட்டஸ் ” வேலை என்னுடைய ஐடியா .முதன்முறையாக இப்போதுதான் அறிமுகம் செய்திருக்கிறேன் “

” கோல்டன் லோட்டஸ் …? “

” ம் .உன்னுடைய வேலைக்கு நான் வைத்திருக்கும் பெயர் .தங்கம் போல் மினுங்கும் ஒரு பெண் என் கடையின் நகைகளை அணிந்து கொண்டு மலர்ந்த தாமரை போன்ற முகத்துடன் வாடிக்கையாளர்களை கவரும்படி பேச வேண்டும் .அதனால் இந்த வேலைக்கு பெயர் கோல்டன் லோட்டஸ் “

விஸ்வேஸ்வரனின் விளக்கத்தில்…ரசனையில் கமலனியின் விழிகள் ஆச்சரியமாக விரிந்தன .இவனிடம் இவ்வளவு ரசனைகளும் , கற்பனைகளுமா …?

” கற்பனைகளும் , ரசிப்புகளும் இல்லாமல் புது புது நகைகளை வடிவமைக்க முடியாது கமலினி .இது என்னுடைய தொழில் .இந்த தொழிலில் என் கடை வாசலில் வைக்கப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக் பொம்மையிலிருந்து , கடையின் ஷோகேசில் வைக்கப்பட்டிருக்கும் வைர ஒட்டியாணம் வரை எனது மனக் கற்பனையில் உண்டானதுதான் .அப்படித்தான் உன் வேலையும் …” அவள் மன ஓட்டத்திற்கு பதில் சொன்னான் .

” ஒரு தொழிலின் ஆணிவேர் முதலாளி என்றால் அந்த தொழிலை விழுதுகளாக பரப்பி நிலைக்க செய்பவர்கள் தொழிலாளிகள் .எனக்கு என் கடையின் ஒவ்வொரு தொழிலாளியும் மிக முக்கியம் .அதுவும் உன்னை போல் அர்ப்பணிப்பான நியாயமான பெண்கள் மிக அவசியம் .அதனாலேயே உன் பணி விலகலை நான் விரும்பவில்லை .இன்று கடைக்குள் வரும் போதே உன்னை பார்த்துவிட்டேன் .ஹப்பாடி நம் தங்க தாமரை வேலைக்கு வந்து விட்டதென்ற மன நிம்மதியுடன் மாடிக்கு போனேன் .அப்போது என் மனதில் இன்று வரப் போகும் சுதாகர் குடும்பத்தினரை பற்றிய யோசனை ஓடிக் கொண்டிருந்த்து .அவனது வருங்கால மாமனார் வீட்டினர் தங்கம் வாங்க மட்டும் இங்கே வரப் போவதாக சொல்லியருந்தான் . அவர்களை நம்மிடம் வைரமும் வாங்க வைக்க வேண்டுமே …என்ன செய்யலாமென்ற யோசனையில் இருந்தேன் . அவர்கள் வைரங்கள் வாங்க ஏழாவது தளத்திற்கு வரும் போது உன்னையும் அழைத்துக் கொண்டு உனக்கும் வைரங்களை பற்றிய விளக்கங்களையும் , வாடிக்கையாளர்களிடம்  எப்படி பேசி வைரங்கள் வாங்க வைக்க வேண்டுமென்பதையும் காட்ட நினைத்திருந்தேன் .ஆனால் என்னுடைய விளக்கங்களுக்கோ …படிப்பனைக்கோ உன்னிடம் எந்த அவசியமும் இருக்கவில்லை .நீ மீன்குஞ்சாய் நீந்திக் கொண்டிருந்தாய் .நான் பிரமிப்பாய் உள்ளிருந்து உன்னைக் கவனித்தபடி இருந்தேன் …”

உள்ளார்ந்த உணர்வுடன் நாம் செய்து முடித்த செயலுக்கு கிடைக்கும் பாராட்டு எப்பேர்பட்ட மனிதரையும் மனம் மயங்க வைக்கும் .அதிலும் கமலினி அன்று காலையிலிருந்தே தனது முதலாளியின் பாராட்டினை பெற்று விட துடித்துக் கொண்டிருந்தாள் .முகத்திற்கு நேராக அப்பாராட்டு திகட்ட திகட்ட கிடைக்க அவள் உடல் இலகுவாகி சிறகு முளைத்து பறப்பது போன்ற உணர்வினை பெற்றாள் .தன்னிடம் வேலை பார்க்கும் சாதாரண தொழிலாளிக்கு இத்தனை விளக்கங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இவனுக்கென்ன இருக்கிறது …? ஆனாலும் அதனை செய்கறானென்றால் …அவனது நியாய உணர்வில் உள்ளம் நெகிழ்ந்தாள் .

” ஆனாலும் அங்கே வைத்து வெளியே போ …கீழே போ …என்று ஏன் சார் விரட்டினீர்கள் ..? ” அத்தனை நெகிழ்விலும் தனது நியாயத்தை கேட்க தவறவில்லை கமலினி .

” அது …” இவ்வளவு நேரமாக மடை திறந்த வெள்ளமாக இருந்தவன் இப்போது சற்று தடுமாறினான் .கமலினி அவன் முகத்தை கூர்ந்தாள் .தன் உதட்டை நாவினால் நனைத்துக் கொண்டு தயக்கத்துடன் பேச ஆரம்பித்தான் விஸ்வேஸ்வரன் .

” இந்த விசயம் இப்போது எனக்கே பாதகமாக கூட அமையலாம் கமலினி .இன்று சுதாகருடன் வந்திருந்த ஒருவன் உன்னை பார்த்துக் கொண்டே இருந்தான் .அ …அதாவது என் கடை தங்க தாமரையை பார்க்கும் வியாபார பார்வை இல்லை .அது வேறு மாதிரி பொறுக்கி பார்வை .நகை டிரேயை கீழே தள்ளிவிட்டு அதனை எடுக்க நீ குனியும் போது அவன் போனில் ரகசியமாக போட்டோ எடுக்க தயாராக இருந்தான்  .இப்படியெல்லாம் நடக்க கூடுமோ என்றுதானே நீ இந்த வேலையையே வேண்டாமென்றாய் . இப்போது உன்னைக் காப்பது என்னுடைய கடமை இல்லையா …? அதனால்தான் உன் வேலை முடிந்த்தும் உன்னை அந்த இடத்தை விட்டு விரட்டினேன் …..”

கமலினி முகம் வாட அநிச்சையாக தன் தோள் சேலையை சரி செய்தாள் . அவள் தேக குறுகலை உணர்ந்தவன் மெல்ல தலையசைத்தான் .

” முன்பே இது போன்ற நிறைய பார்வைகளை நீ சந்தித்திருக்ககூடும் கமலினி .இதனை இனங்கண்டு நீ ஒதுங்கிக் கொள்வாயென நினைத்திருந்தேன் . ஆனால் நீயோ சுற்றுப்புறத்தை கவனிக்காது உன் வேலையிலேயே கவனமாக இருந்தாய் .விடை கொடுத்து அனுப்பும் போது அந்த ரவுடியிடமும் கை குலுக்க தயாராக இருந்தாய் .எனக்கு அப்போது உன் மீது மிகுந்த கோபம்தான் .அதென்ன தன்னிலை மறந்த வியாபாரம் …?ம் …” அப்போதைய கோபத்தில் இப்போதும் அதட்டினான் .




தன்னிலை மறந்தேனா …இருக்கலாம் அப்போது என் எண்ணமெல்லாம் இந்த வியாபாரத்தை நல.லபடியாக முடித்து கொடுத்து விஸ்வேஸ்வரனின் பாராட்டை பெற்று விட வேண்டுமென்று மட்டும்தானே இருந்த்து .கொஞ்சம் கவனம் பிசிகி விட்டேன் .தலையசைத்து தன் தவறை ஒப்புக்கொடுத்தாள் .

“:நியாயமாக நன்றி சொல்லவேண்டும் சார் .கோப்ப்பட்டு விட்டேன் .சாரி சார் …நன்றி சார்…”

” ம்ஹூம் சாரியோ …நன்றியோ உன்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை “

” நான் என் கோல்டன் லோட்டஸ் பதவியை விட்டுத் தருவதாக இல்லை …” பளிச்சென்ற கமலினியின் புன்னகையில் விஸ்வேஸ்ரனும் முகம் மலர்ந்தான் .

” தேங்க்ஸ் கமலினி “

” நான் சொல்ல வேண்டியது ” எழுந்தவளுடன் தானும் எழுந்து நின்றவன் கை நீட்டினான் .

” ப்ரெண்ட்ஸ் …? “

ப்ரெண்டா …? அதெப்படி …இவன் எனக்கு சம்பளம் தரும் முதலாளியல்லவா …உள்ளம் முரண்டினாலும் இப்போதைக்கு விஸ்வேஸ்வரனை அதிருப்தி படுத்த விரும்பாது புன்னகையோடு அவன் கை குலுக்கினாள் .

ஒன்றுக்கொன்றென செய்த்து போன்ற கச்சித்ததுடன் பாந்தமாக இணைந்திருந்தன இருவரது கைகளும் .




What’s your Reaction?
+1
23
+1
19
+1
2
+1
0
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!