karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 34

34

 

தலைகோதிய சமாதானங்களுக்குப் பின் 
திடுமென தொடங்கிவிட்ட இந்த சண்டைக்கு
என்ன பெயரிட …????
மின்மினிப்பூச்சிகளை ஒட்ட வைத்திருக்கும் 
உன் விழாக்கால வீட்டிலிருந்து கொண்டு ….

பட்டு வேட்டி சட்டையுடன் அறைக்குள் நுழைந்த வீரேந்தர் , முன்பே அங்கே கட்டிலில் அமர்ந்திருந்த சாத்விகாவை கண்டதும் உதடு குவித்து விசிலடித்தான் .

” ஹேய் பேபி எனக்கு முன்னாலேயே உள்ளே வந்துவிட்டாயா…? சே நான் லேட் பண்ணிட்டேனே ….” ஒரு துள்ளலுடன் கட்டிலில் அவளருகே குதித்து அமர்ந்தான் .அவள் கைகளை பிடித்து தன் கைகளோடு கோர்த்து கொண்டவன் …'” கமான் பேபி ….” போதை நிரம்பிய குரலில் அவளை தன்புறம் இழுத்தான் .

” கையை விடுங்க ….”

” ம்ஹூம் …இனிமேல் நீ சொல்வது எதையுமே நான் கேட்க போவதில்லை ….” வீரேந்தரின் கைகள் ஆவலுடன் அவள் உடலில் பதிய தொடங்கியது .

” கையை எடுடா ….” திடுமென தெறித்த சாத்விகாவின் ஆக்ரோசத்தில் அதிர்ந்தான் வீரேந்தர் .

” சாத்விகா …என்ன ஆச்சு …? “

” அந்த லெட்டரையெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய் …உடனே என்னிடம் கொடு …” கைகளை நீட்டினாள் .

” எந்த லெட்டர் …? ” வீரேந்தர் முதல் அதிர்வை சமாளித்து கொண்டது தெரிந்த்து .

” என் அப்பாவிடமிருந்து நான் எடுத்த லெட்டர்கள் , அப்புறம் பாகிஸ்தானில் இருக்கும் அந்த ஆயா ரேணுகாதேவியின் அட்ரஸ் …உன்னை நம்பி உன்னிடம் நான் ஒப்படைத்த ஆதாரங்கள் இவை .இப்பொழுதே எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்து விடு ….”

நிதானமாக கட்டிலில் சாய்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு ” என்ன லெட்டர்கள் , எந்த ரேணிகாதேவி ….நீ சொல்வது ஒன்றுமே எனக்கு புரியவில்லை சாத்விகா .எதை பற்றி , யாரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய் ….? நாம் இருவரும் இன்று காலையில்தான் மணமுடித்த புது மண தம்பதி. இது நமது முதல் இரவு .காதல் மொழிகள் பேச வேண்டிய இந்த இடத்நில் ஏதேதோ பாகிஸ்தான் , அமெரிக்கா என்று பேசிக்கொண்டிருக்கிறாயே …உனக்கே நியாயமா …? ” ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாக நிதானித்து கூறினான் .அதுதான் உண்மை போல ….

சாத்விகா அயர்ந்தாள் .அவன் பேச்சு சாத்விகா குன்னூரிலிருந்து டில்லி வந்த்து வரை எந்த சம்பவங்களும் நடக்காத்து போலவும் , அவர்களின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த்து மாதிரியும் , இது சம்யிரதாயப்படியான முதலிரவு போலவும் இருந்த்து .

” யூ ராஸ்கல் ….” அவன் சட்டையை பிடித்தாள் .” நீ எப்படி என்னை ஏமாற்றிவிட்டாய் …? நான் உன்னை நம்பி …இவ்வளவு தூரம் வந்து ….சொல்லு ஏன் இப்படியெல்லாம் செய்தாய் …? ” அவன் சட்டையை உலுக்கினாள் .

” உன்னை பெற்றவளை தேடுவதை நிறுத்திக் கொள் .அதை நான் அனுமதிக்கமாட்டேன் ….” வீரேந்தரின் குரலில் அதிகாரம் .




” நீ சொல்வதை கேட்டே ஆக வேண்டுமென்று எனக்கென்ன தலையெழுத்து …? “

” கேட்டுத்தான் ஆகவேண்டும் .நான் உன் கணவன்.நீ என் மனைவி .மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் .ஒரு நல்ல கணவன் , மனைவியாக நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும் “

” தாலி கட்டி விட்டதாலேயே உன்னோடு நான் சேர்ந்து வாழத்தான் வேண்டுமா ….இருபத்தியிரண்டு வருடங்கள் என்னை உள்ளங்கையில் வைத்து வளர்த்தவர்களையே உதறிவிட்டு வந்தவள் நான் .நீ கட்டிய தாலியை கழட்டி எறிந்துவிட்டு போக எவ்வளவு நேரமாகும் ….? “

” அந்த அளவு தைரியம் உனக்கு உண்டென்று எனக்கு தெரியும்டி .ஆனால் அதற்கு நான் அனுமதிக்கவே மாட்டேன் …”

” இதற்கெதற்கு உன் அனுமதி …? கண்ணை மூடி முழிப்பதற்குள் அதை சுழட்டி விட என்னால் முடியும் .ஆனால் இப்பொது என் தேவை அது அல்ல .எனக்கு தேவை காரணம் .ஏன் இப்படி செய்தீர்கள் …? என் அப்பாவிலிருந்து உன் அப்பா வரை இரண்டு குடும்பங்களும் சேர்ந்து என்னிடமிருந்து மறைத்திருக்கிறீர்கள். அந்த காரணம் எனக்கு தெரியவேண்டும் ….”

” முதலில் இது எப்படி உனக்கு தெரிந்த்து …அதை சொல்லு …”

” எந்த காரணம் கொண்டும்  சாத்விகாவிற்கு அவளை பெற்றவளை பற்றிய விபரங்கள் தெரிய கூடாது ….கவலைபடாதீர்கள் அதை வீரா பார்த்துக்கொள்ளுவான் .இவ்வளவு நாட்கள் சமாளித்துவிட்டான் .இனியும் சமாளிப்பதற்காகத்தானே அவளை திருமணமே செய்து எங்கள் வீட்டிற்குள்ளேயே கூட்டி வந்திருக்கிறான் .இனி சாத்விகா கேப்டன் வீரேந்தரின் மனைவி மட்டுமே ….இந்த விசயத்தில் உங்களை விட நாங்களே அதிக உறுதியுடன் இருக்கறோம் …..இப்படி பேசிக்கொண்டிருந்தனர் ….நம் அப்பாக்கள் .”

” எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அப்போதே போய் அவர்கள் சட்டையை பிடுத்திருப்பேன். ஆனால் அவர்கள் வயது ….அதை நினைத்துத்தான் பேசாமல் வந்துவிட்டேன் …”

” அட பரவாயில்லையே வயதுக்கேற்ற மரியாதை தரவேண்டுமென்று உனக்கு கூட தோன்றியிருக்கிறதே ….”

அவனை வெறித்தாள் .” இப்போதும் கிண்டலா ….? இப்பொழுதே எனக்கு நீ உண்மையை சொல்லாவிட்டால் , நான் யாரிடமும் வயது வித்தியாசம் பார்க்கமாட்டேன் …”

” இல்லை சாத்விகா .நம் வீட்டு பெரியவர்கள் மீது உனது தீச்சொற்கள் விழுவதை இனி நான் அனுமதிக்கவே மாட்டேன் .அவர்கள் அப்பாவிகள் .நடந்தவை அனைத்திற்கும் நான்தான் பொறுப்பு .இனி உன்னுடைய தாக்குதல் முழுவதும் என் மீதுதான் இருக்க வேண்டுமே தவிர , அவர்கள் பக்கம் திரும்பி கூட பார்த்தாயானால் ….” ஒற்றை விரலை ஆட்டி எச்சரித்தான் .

” என்ன பொறுப்பு …..? என்னை சிறு குழந்தையாக நீதான் தூக்கிப் போய் குப்பைத்தொட்டியில் போட்டாயோ ….? ” சாத்விகா நக்கலாக கேட்டாள் .

அவளது எள்ளல் முகத்தை சிறிது நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு ” ஆமாம் ….” என்றான் .

” என்ன …? ” விதிர்விதிர்த்தாள் .

” நான்தான் .உன்னை நீ பிறந்தவுடன் இந்த கைகளால்தான் தூக்கினேன் . அன்றிருந்த சூழ்நிலைக்கு உன்னை குப்பைத்தொட்டியில்தான் எறிந்திருக்க வேண்டும் .ஆனால் தெய்வம் போல் சண்முகபாண்டியன் சார் வந்தார் .அதனால் அவர் கையில் கொடுத்துவிட்டேன் .”

சாத்விகாவிற்கு தலை சுழல தொடங்கியது .கட்டிலில் சாய்ந்து அமர்ந்து சாவகாசமாக பேசிக்கொண்டிருந்த வீரேந்தர் மேல் எரிச்சல்பட்டு அவனெதிரில் எழுந்து நின்று பேசிக்கொண்டிருந்தாள் அவள் .இப்போது அவளது காலடி பூமி மட்டும் தனியாக சுழல்வது போன்ற உணர்வில் தடுமாறியவள் கட்டிலை பிடித்தாள் .தலையை உலுக்கி வந்த மயக்கத்தை உதற முனைந்தாள்.கைகளை கட்டிக்கொண்டு அவளது முயற்சிகளை நிதானமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் அவன் .

மேலே பாய்ந்த அதிர்ச்சி அலையின் தீவிரம் கொஞ்சமேனும் குறைவாக இருக்குமெனில் , வீரேந்தரின் கன்னத்திலேயே நிச்சயம் ஒரு அறை வைத்திருப்பாள் சாத்விகா .ஆனால் சுற்றிலும் இருள் சூழ்ந்து விட்டது போன்ற பாவனை தோற்றத்தில் அங்கமெல்லாம் நடுங்க கட்டிலில் சரிந்துவிட்டாள் .

” பொய் .என்னை திசை திருப்ப ஏதேதோ சொல்கிறாய் ….” கைகளை கட்டிலில் ஊன்றி தலையை குனிந்து தன்னை சமாளிக்க முயன்றபடி பலகினமாக முனகினாள் .

மிக லேசாக வீரேந்தரின் கண்களில் தோன்றிய சிறிய பரிதாபம் கூட உடனடியாக மறைய ….” நான் உண்மையை மறைத்திருக்கேன் .சில நன்மையான தருணங்களுக்காக .ஆனால் வாயார பொய் சொன்னதில்லை .சொல்ல மாட்டேன் .உனக்கும் , எனக்கும் பதினோரு வயது வித்தியாசம் சாத்விகா …உனக்கு தெரியும்தானே ….”

தங்கள் திருமணத்தற்கு சம்மதமென சாத்விகா வீரேந்தரிடம் தலையசைத்ததுமே , அவன் அடுத்து அவளுக்கு கவனப்படுத்தியது இதைத்தான் .” நம் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் சாத்விகா .எனக்கு முப்பத்தி மூன்று வயது .உனக்கு இருபத்தியிரண்டு .இந்த நாளில் இது பெரிய வயது வித்தியாசம் .இதில் உனக்கெதுவும் ஆட்சேபனை இல்லையே ….? “

அவன் கேட்டு முடிக்கும் முன்பே இல்லை இல்லையென தலையசைத்தாள் சாத்விகா .” அவ்வளவு அவசரமாக தலையாட்ட வேண்டாம் பேபி .நான் உன்னை புரிந்து கொண்டேன் ….” அவள் மூக்கு நுனியை வருடியவனின் கரங்களில் கரை காணா காதலிருந்த்து .அப்போது அப்படித்தான் நினைத்தாள் .அது காதலென்றுதான் நம்பினாள் .ஆனால் இவன் அவனது ஏதோ ஒரு தேவையை நிறைவேற்ற ….இந்த காதலை தூண்டிலாய் பயன்படுத்தி , அவளை இழுத்து ….இல்லை வேண்டாம் .இதை இப்போது நினைக்க கூடாது ….முகத்தை கல்லாக்கிக் கொண்டு அவனை நிமிர்ந்து நோக்கி ….

” ம் …சொல் …” என்றாள் .

” நீ பிறந்து அறையை விட்டு வெளியே வரவுமே …என் கையில்தான் உன்னை வாங்கினேன் .எனக்கு அப்போது பதினோரு வயது .உடனேயே அங்கிருந்த ஆஸ்பத்திரி குப்பை தொட்டியில்தான் உன்னை போட்டு விட என் மனது மிகஙும் துடித்தது .ஆனால் அப்போது அங்கு வந்த உன் அப்பா உன்னை என் கையிலிருந்து வாங்கி கொண்டார் .அருகிலிருந்த உன் அம்மாவின் கையில் கொடுத்தார் .உன் அம்மா உனக்கு ஆவலாக முத்தமிடுவதை எரிச்சலாக பார்த்தபடி நான் அந்த இடத்தை விட்டே போய்விட்டேன் .பிறகு உன்னை உங்கள் குன்னூர் வீட்டில்  என் மீது கார் ஏற்ற வந்த போது பார்க்கும் வரை அந்த குழந்தையன் மீதிருந்த கோபம் அப்படியேதான் இருந்த்து ….”

” ஏன் …எதற்கு அப்படி நினைத்தாய் …? நானோ என்னை பெற்றவளோ என்ன பாவம் செய்தோம் உனக்கு ….? ” தன் சட்டைக்காலரை பிடித்திழுத்தவளின் கையை அலட்சியமாக விலக்கியவன் ….

” உன்னை பெற்றவள் தெய்வம் .அவள் உத்தமி .அவள் வாழ்வில் நீ தோன்றியதுதான் மிகப் பெரிய பிரச்சினை ….” என்றான் .

சாத்விகாவின் மனதை இந்த வார்த்தைகள் …அவளை பெற்றவள் உத்தமி என்ற இந்த வார்த்தைகள் தென்றலாக வருடியது .ஏனோ அவள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் இந்த ஒற்றை வார்த்தையே ஆறுதல் போல் தோன்றியது .

” யார் அவள் ..? என்னை பெற்றவள் யார் …? நான் உருவாக காரணமானவன் யார் …? எனக்கு தெரிந்தே ஆகவேண்டும் ….? “

சாத்விகாவின் கேள்வி வீரேந்தரிடம் அதிர்வலைகளை உண்டாக்கியது .” அதை நீ நிச்சயம் தெரிந்து கொள்ள போவதில்லை ….” உறுதி தெறிக்கும் குரலில் கூறினான் .

” ஏன் …எனக்கு ஏன் அந்த உரிமையில்லை …? “

” சொன்னேனே ….நீ குப்பைத்தொட்டிக்கு போயிருக்க  வேண்டியவள் .சண்முகபாண்டியன் சாரின் கருணையால் இப்போது இப்படி ஒரு உயர்ந்த வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாய் .அவர் உனக்கு கடவுளை விட உயர்வானவர் .அவரை பழித்து பேசும் உன் ஒவ்வொரு வார்த்தையும் பூமராங் போல உனக்கேதான்  திரும்பி வரும் .பூமராங் பற்றி தெரியும்தானே ….? ” தீவிரமாக ஆரம்பித்து கிண்டல் கேள்வியில் முடித்தான் .

பூமராங் பற்றி வீரேந்தர் அவளிடம் விளக்கியிருக்கிறான் .அது பழந்தமிழர் ஆயுதம் எனவும் , அதை பழக்குவது ஒரு கலையெனவும், அந்த ஆயுதம் தற்போது வழக்கொழிந்து போனாலும் , அதன் மேல் அதீத பிரேமையுடைய சிலர்  இப்போதும்   அந்த கலையை பயின்று ராணுவத்தில் உபயோகிப்பதையும் கூறியிருக்கிறான் .பூமராங் ஒன்றை கொண்டு வந்து அவளுக்கு செய்முறை விளக்கமும் அளித்திருக்கிறான் .

அந்த கருவியை அவன் லாவகமாக உபயோகிப்பதில் வியந்து ,உங்களுக்கும் இதன் மீது பிரேமை போலவே என்ற இவளின் கேள்விக்கு , உன் மீதுள்ள பிரேமையை விட குறைவுதான் பேபி எனக் காதல் பார்வை பார்த்திருக்கிறான் .அந்த பார்வையெல்லாம் பொய்யா …? அது அப்படி தோன்றவில்லையே .என் மீது உண்மையான அன்பும் , காதலும் கொண்டவனின் ஆசை பார்வை போலத்தானே அது இருந்த்து .ஒரு சிறிய நினைவுறுத்தலில் கணவன் புறம் தாவி விட்ட மனதை கஷ்டப்பட்டு இழுத்து வந்து நிகழ்வில் நிறுத்தினாள் சாத்விகா .




என்னை குப்பைத்தொட்டி குப்பையே என்கிறேன் .இவனுக்கு என்ன உருகல் வேண்டியிருக்கிறது …?….

” என் பிறப்பில் நீ எப்படி சம்பந்தபடுகிறாய் ….? என்னை பெற்றவளுக்கும் உனக்கும் , உன் அப்பாவிற்கும் , என் அப்பாவிற்கும் …என்ன சம்பந்தம் …? “

” என் அப்பா ராணுவ அதிகாரியாக எல்லை பகுதியில் பணியாற்றிய போது , உன் தந்தை அங்கே போலீஸ் ஆபிசராக பணியில் இருந்தார் .அப்போது இரண்டு குடும்பங்களும் நட்பில் இருந்தனர் .அவ்வளவுதான் .இதற்கு மேல் நீ எத்தனை விதமாக துருவி ,துருவி கேட்டாலும் என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வராது …”

வீரேந்தரின் வார்த்தையிலிருந்த உறுதியை விட அதிகம் அவன் முகத்தில் இருக்க தனது கேள்விகளின் பயனின்மையை உணர்ந்து சாத்விகா , மெல்ல அப்படியே சரிந்து கட்டிலிலிருந்து தரையில் தொய்ந்து அமர்ந்தாள் .முழங்கால்களை கட்டிக்கொண்டு அதில் தலை சாய்த்து கொண்டாள் .அப்போது அவளை பார்த்தால் அப்போதுதான் அம்மா வயிற்றிலிருந்து வெளி வந்த ஆதரவற்ற பச்சை குழந்தை போல் தேன்றினாள் .

இப்போது வீரேந்தர் முகத்தில் சிறிது இளக்கம் வந்த்து .

What’s your Reaction?
+1
17
+1
12
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
lavanya
lavanya
4 years ago

super turning point…

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!