ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 6

6

நிலானி் சோர்வுடன் எதிரே தெரிந்த மலைத்தொடர்களை பார்த்தபடி அந்த ஜன்னலில் அமர்ந்திருந்தாள். பெரிய மலைகள் ..அவற்றின் மேல் உயரமான மரங்கள்… மரங்களையும் மலையையும் தழுவிச் செல்லும் வெண்மேகங்கள். கீழே பச்சை கம்பளத்தை விரித்து வைத்தாற் போல்  தேயிலைத் தோட்டங்கள் .காற்றில் எப்போதும் உறைந்திருக்கும் குளிர் .அவன் முதலில் சொன்னது போல் தேனிலவு தம்பதிகளுக்கு ஏற்ற இடம் .மனிதர்கள் மாசுபடுத்தாத இடம் இயற்கை அன்னையின் தோள் ஏறி அமர்ந்து கொண்டு கர்வமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.ஆனால் இத்தனை அழகையும் ரசிக்கும் நிலையில் நிலானி இல்லை. 

” கதவை பூட்டிக்கொண்டு போகிறேன். இல்லாவிட்டாலும் இங்கிருந்து வாயிலுக்கு போக இரண்டு கிலோமீட்டர் தூரம் ஆகும் .அங்கே தான் வாட்ச்மேன் இருக்கிறான் .அவனுக்கு உன்னை பற்றி தெரியும் .அவன் வரை நீ ஓடிப்போனாலும் உனக்கு உதவ மாட்டான். இந்த வீட்டைச் சுற்றிலும் காடுகள் தான் .காட்டெருமைகளும் , காட்டுப் பன்றிகளும் சுதந்திரமாக நடமாடும் பகுதி இது .அவற்றிடம் மாட்டிக்கொண்டால் உன்னை நரம்பு நரம்பாக பிரித்து தின்றுவிடும் .நீ புத்திசாலி பெண் .புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன் .சமையலறையில்  சாமான்கள் இருக்கின்றன. ஏதாவது செய்து சாப்பிட்டுவிட்டு எனக்காக காத்திரு  ” கிளம்பும் முன் அவன் சொல்லி விட்டுப் போனவை இவை.

ஆனாலும் நிலானி அந்த பெரிய வீடு முழுவதும் கதவு கதவாக ஜன்னல் ஜன்னலாக வெளியேறுவதற்கான வழியைத் தேடி அலுத்துவிட்டாள் .ஒருமுறை மாடியிலிருந்து பார்த்தபோது காட்டுக்குள் தெரிந்த காட்டெருமையின் வளைந்த கொம்புகள் அவளை கலவரப் படுத்தியது .இங்கிருந்து  வாயிலுக்கு இருக்கும் இரண்டு கிலோமீட்டரில் எத்தனை காட்டெருமை இருக்குமோ ?

இவனுக்கு காட்டெருமையே மேல் என்ற முடிவு எடுத்தாலும் முதலில் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் .அதற்கான இடம் வீட்டிற்குள் இம்மிகூட  இருப்பது போல் தெரியவில்லை .அவ்வளவு பெரிய வீட்டில் தான் மட்டுமே தனியாக இருப்பதை பயமாக வேறு உணர்ந்தாள் . திடுமென தனது போன் நினைவு வந்து மாடிக்கு ஓடினாள் அங்கே டீப்பாயின் மேல் அவள் போன் இருந்தது.

அப்பா அம்மா உதவாவிட்டால் என்ன  ? அவளுக்குத் தெரிந்த எத்தனையோ நண்பர்கள் இருக்கின்றனரே .போலீஸ் துறையில் …வக்கீல்… நீதிபதியாக்க்  கூட… பரபரப்புடன் தனது ஃபோனை ஆன் செய்து பார்த்தவள் அதிர்ந்தாள். அதில் சிக்னலே இல்லை. நாட்டை விட்டு ஒதுங்கி காட்டுக்குள் இருக்கும் இந்த இடத்திற்கு செல்போன் சிக்னல் எப்படி கிடைக்கும் என உணர்ந்தவள் சோர்வுடன் போனை மீண்டும் அங்கேயே வைத்தாள்.

மீண்டும் வீடு முழுவதும் சுற்றி சுற்றி பார்த்து கால் ஓய்ந்து , ஒரு கட்டத்தில் அந்த வீட்டின் நிறைய இடங்கள் அமானுஷ்யமாகவும் காட்சியளிக்க பயந்து போய் இந்த ஜன்னலருகே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் . அப்படியே சிறிது நேரம் தூங்கி இருப்பாளாயிருக்க  வேண்டும் . உடல் குறுக்கி ஜன்னலில்   அமர்ந்திருந்ததால் வலி என்று கால் மூட்டுக்கள் சொல்லின.




 ஆனால் அவற்றை சரிப்படுத்தும் ஸ்மரணை கூட நிலானிக்கு வரவில்லை .அப்படியே வெளியே வெறித்தபடியே அமர்ந்திருந்தாள் .வெளிச்சம் மங்கி இருள் பரவத் துவங்கியது .தனது தனிமை உரைக்க இருள் அவளுக்கு பயத்தை தோற்றுவித்தது .அவளிருந்த இடம் அருகே ஒரு சுவிட்ச் தென்பட அதனை தொட அந்த அறை விளக்கு மட்டும் உயிர்த்துக் கொண்டது.

இப்போது எங்கோ கதவு திறக்கும் சத்தம் கேட்க , அவள் உடல் நடுங்கியது பசி ..குளிர்.. மயக்கம்… உடல்  தள்ளாடியது. 

”  இங்கே என்ன செய்கிறாய் ? ” அவள் முன் வந்து நின்றான் அவன்.  முகத்தில் மிதமிஞ்சிய கோபம் இருந்தது.

நிலானி  மடித்திருந்த கால்களை விரித்து எழுந்து நிற்க , மரத்திருந்த அவை அவள் பாரம் தாங்காமல் துவண்டன. ஓரெட்டில் அவளருகே வந்து விழ இருந்தவளை தாங்கினான் அவன்.

”  இன்று முழுவதும் சாப்பிட்டாயா இல்லையா ? ” 

இல்லை என்று மறுப்பாய் அவள் தலையசைக்க…”  முட்டாள்…”  முனகியபடி அவளை கைகளில் சுமந்து கொண்டு போய் சோபாவில் படுக்க வைத்தான்.

 உறக்கமும் மயக்கமாக நிலானி கிடந்த நேரம் எவ்வளவோ ?  அவள் உதட்டோரம் வெதுவெதுப்பான சூட்டோடு ஏதோ உணவுப் பொருள் வைக்கப்பட்டது. அதன் மணம்  மந்தித்திருந்த அவளது பசியை தூண்ட விழி திறக்காமலேயே அவள் இதழ்கள் பிரிந்தன.

உப்பும் உறைப்பும் அளவாக சேர்க்கப்பட்ட அரிசி கஞ்சி என்று அவள் தான் விழுங்கிக் கொண்டிருந்த உணவை உணர்ந்து கொண்ட போது , அந்த பாத்திரம் கிட்டத்தட்ட காலியாகி  இருந்தது .அப்போதுதான் அவளுக்கு நடப்பதை அறிந்து கொள்ளும் உணர்ச்சிகள் வந்திருந்தன. மெல்ல விழிகளைத் திறக்க முடிந்தது.

” கிச்சனில் எல்லா சாமான்களும் வாங்கி வைத்திருந்தேனே …எதையாவது சமைத்து உண்பதற்கு என்ன ? அதட்டி கொண்டிருந்தவனின் குரலில் கரிசனம் வந்திருப்பதை ஆச்சரியமாக உணர்ந்தாள் .அவனுக்கு பதில் சொல்லும் பிடித்தம் இன்றி முகத்தை சோபா குஷனில்  பதித்துக் கொண்டாள்.

அவளுக்கு எதிர் சோபாவில் அமர்ந்து அவளைப் பார்த்தபடியே அவனும் சாப்பிடலானான் . கிண்ணமும் ஸ்பூனுமாக அவன் சாப்பிடுவது அதே அரிசிக் கஞ்சி தான் என உணர்ந்தாள் அவள்.

 ” காலியாக கிடந்த வயிற்றுக்கு கனமான உணவு கொடுக்கக் கூடாது .இதுபோல் தான் சாப்பிட வேண்டும் ” கிண்ணத்தை உயர்த்திக் காட்டினான். நிலானி முகத்தை திருப்பிக் கொண்டாள் .அவனுக்கு பதில் பேசும் தெம்பு கூட இப்போது அவளிடத்தில் இல்லை.

சாப்பிட்டு முடித்து பாத்திரத்தை கிச்சனில் போட்டு விட்டு வந்தவன் அவளை நோக்கி வரவும் அவள் விழிகள் பயத்தில் விரிந்தன.  இப்போது அவனுக்கு எதிராக சுண்டு விரலைக் கூட அசைக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை .இந்த நிலையில் அவன் அவளை பலாத்காரம் செய்தானென்றால்  நினைவே அவளுக்குள் பயங்கரமாக இறங்கியது.

” ப்ளீஸ் என்னை விட்டுவிடு. நான் மிகவும் பலகீனமாக இருக்கிறேன் ”  இரு கை உயர்த்தி அவனை கும்பிட்டாள் .வேக நடையுடன் வந்தவன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான். பின் மீண்டும் அவளை நெருங்கி கைகளில் அவளை தூக்கிக் கொண்டான்.

” நானும் மிகவும் டயர்டாகத்தான் இருக்கிறேன்.  இன்று எனக்கும் வேறு எந்த ஐடியாவும் இல்லை.  இந்த இரவு முழுவதும் நாம் இருவரும் தூங்கி ஓய்வு எடுப்போம் ”  மென்குரலில் பேசியபடி மாடி அறைக்கு அவளை தூக்கி சென்றவன் கட்டிலை பார்த்து அவள் முகம் சுருங்குவதை கண்டோ என்னவோ சோபாவிலேயே அவளை கிடத்தினான்.

 கனத்த போர்வையால் அவளை மூடியவன் ”  தூங்கு “உத்தரவு போல் சொல்லிவிட்டு போய் கட்டிலில் படுத்தான் . ஓய்வு தேவைப் பட்ட உடல் நிலையினாலோ என்னவோ நிலானி மிக ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திற்கு போய்விட்டாள் .

மீண்டும் அவள் கண்விழித்தபோது நன்றாக விடிந்து வெளியே வெளிச்சமாக இருந்தது .பதட்டத்துடன் திரும்பி பார்த்தவள் வெற்று கட்டிலை பார்த்ததும் சிறிது நிம்மதியானாள்.

பாத்ரூம் பக்கம் விழியுருட்டி பார்த்தவள் மெல்ல சத்தமின்றி பூனை நடை நடந்து பாத்ரூம் கதவை தொட அது திறந்து கொண்டு உள்ளே ஆள் இல்லை எனக் காட்டியது. மீண்டும் நிம்மதியானாள் .ஆனால் எங்கே போனான் அவன் ?  இந்த பெரிய வீட்டிற்குள் எங்கே இருக்கிறானோ  ? உடல் நடுங்க அச்சத்துடன் அறையைச் சுற்றி பார்த்தவளின் கண்களில் டீப்பாய் மேல் இருந்த ப்ளாஸ்க்  பட்டது . அதனடியில் ஒரு பேப்பர்.

அவசர வேலையாக வெளியே போகிறேன். இதில் ஹார்லிக்ஸ் கலந்து வைத்துள்ளேன் .கீழே கிச்சனில் சமையல் செய்து வைத்துள்ளேன் .சாப்பிட்டுவிட்டு ஓய்வெடு .வெளியே போக முயற்சி செய்யாதே .செய்திக்கு கீழே அபி என்று சிறிய எழுத்தில் கிறுக்கலாக அவனது கையெழுத்து.

அபி –  இதுதான் அவனது பெயராக்கும. .இருக்கலாம் அன்று தியேட்டரில் இவனுடன் அமர்ந்திருந்த பெண்கள் அபி…அபி என்று தான் இவனை கொஞ்சிக் கொண்டிருந்ததாக இவளுக்கு ஞாபகம் .பெயரை பார் பெயரை அபி …கொபி… சபி …விபி… தனது எரிச்சல் தீர அவன் பெயரை வாய் விட்டு குதறி தீர்த்தாள்.

அவன்… அந்த அபி வீட்டில் இல்லை .நிலானிக்கு கையை உயர்த்தி உற்சாகமாக கத்தவேண்டும் போல் இருந்தது .எப்போது வேண்டுமானாலும் அவன் திரும்பி வரலாம்தான். ஆனாலும் அந்த நேரம் வரை அவளுக்கான நேரம் இருக்கிறதே. வேகமாக பேஸ்டையும் , ப்ரஷ்ஷையும் எடுத்து பல்  தேய்த்து குளித்து முடித்தவள்  சூடாக இருந்த ஹார்லிக்சை அருகில் வைக்கப்பட்டிருந்த நான்கு பிஸ்கட்டுகளுடன் சேர்த்து குடித்து முடித்தாள்.

உடலில் சுறுசுறுப்பு சேர்ந்துகொள்ள சிறு துள்ளலான நடையுடன் படியிறங்கி கீழே வந்தாள். கிச்சனுக்குள் நுழைந்து பாத்திரங்களை ஆராய்ந்து பார்த்தவள்  ஆச்சரியமானாள் . காலை உணவாக  இட்லியும் ,  சாம்பாரும்… மதிய உணவுக்காக  தக்காளி சாதமும் உருளைக்கிழங்கு சிப்ஸ்சும்  செய்து சூடு ஆறாமல் இருக்கும் வகையில் பக்குவப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இவன் சமைப்பானா ?  அவளுக்கு முதல்நாள் இரவு அவன் வெறியோடு தன் மேல் பாய்ந்த கணம் நினைவு வந்தது .தலையை உலுக்கி மீண்டாள்

. எப்போதும் பெண்களுடனே தானே சுற்றிக் கொண்டிருக்கிறான். சமையல் கற்றுக் கொண்டால் தான் அவர்களை வசியம் செய்ய முடியும் என்று கற்றிருப்பானாக இருக்கும் .உதட்டை சுளித்தபடி மீண்டும் ஒருமுறை வீட்டைச் சுற்றி வந்தாள்.

டிவியை பார்த்ததும் அதனை ஆன் செய்ய அது வெறுமனே நீலத்திரை காண்பித்தது. சேனல்களை பார்ப்பதற்குரிய தொடர்பு கொடுக்கப்படவில்லை என உணர்ந்து எரிச்சலோடு அதனை ஆப்  செய்துவிட்டு நகர்ந்தவளின் கண்களில் அது பட்டது .கருப்பு நிறத்தில் சுற்றும் டயலுடன்  இருந்த லேன்ட் லைன் டெலிபோன் .

இது வேலை செய்யுமா ? வேகமாக ஓடி போனவள் ரிசீவரை எடுத்து காதில் வைக்க நான் உயிரோடு இல்லையாக்கும் என்றது அது .சை அதனிடத்தில் வீசினாள்.

காலை உணவு சாப்பிட்டு அரை உறக்கமாய் சோபாவில் சரிந்து கிடந்தவள் ,  மீண்டும் ஒருமுறை வீட்டை சுற்றி வந்து மதிய உணவும் சாப்பிட்டு …ஆனால் ஒன்று இந்த வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாலே வயிறு நன்றாக பசிக்கிறது .வேறு உடற்பயிற்சி எதுவுமே செய்ய வேண்டாம் என்று நினைத்தபடியே மீண்டும் ஒரு நல்ல தூக்கம் முடித்து  கண் திறந்தபோது சுற்றுப்புறம் வெளிச்சம் மங்கி இருட்ட ஆரம்பித்திருந்த்து.




வெளியே வேகமாக விர்  விர்ரென காற்று வீசிக் கொண்டிருக்க , நிலானியின் மனதினுள் மீண்டும் அந்த அமானுஷ்ய பயம் வந்து அமர்ந்து கொண்டது அதேநேரம் வீட்டின் ஏதோ ஒரு புறம் எந்தக் கதவோ பட்டென்று அடித்தது .நிலானி திடுக்கிட்டு வேகமாக எழுந்து வீட்டில் உள்ள லைட்டுகளை எல்லாம் எரியவிட்டாள் . கதவு அடித்த சத்தம் வந்த இடம் நோக்கி போய் பார்க்க ,  அது ஒரு ஜன்னல் கதவு .அதனை தாழ்  போடலாம் என்று இழுத்தபோது தான்  கவனித்தாள் அந்த ஜன்னல் அப்படியே வெளிப்புறம் இறங்கி விடும் அளவுக்கு பெரியதாக இருந்தது.

முகம் பிரகாசிக்க அதன் வழியாக வெளியே காலை தொங்கவிட்டு கீழே குதித்து விட்டாள். வெளி காற்று முகத்தில் அறைய மிகச் சுதந்திரமாக உணர்ந்தாள் .

வெளிச்சம் குறைந்து கொண்டே வர பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி மெயின் வாசல் இருந்த பக்கம் இதுதான் என்று அனுமானத்துடன் நடக்கத் துவங்கினாள் .நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகமாக அவள் உடல் விரைக்க துவங்கியது.

திடீரென்று ஏதோ நடப்பது போன்றும் ஓடுவது போன்றும் சத்தம் கேட்க அது மனிதர்களுடையதா …மிருகங்களுடையதா ..? எனத் தெரியாமல் நிலானி  நடுங்கியபடி ஒரு புதருக்கு பின்னால் மறைந்தாள் .காலுக்கடியில் சிறு கல் ஒன்று அவள் பாதங்களை பிறழ வைக்க கால் மடிந்து அவள் அந்த புதருக்குப் பின்புறம் உருண்டு விழுந்தாள் . எதிலோ  அவள் உடல் பலமாக  இடித்தது .வேகமாக எழுந்து கொண்டு தனது உடலை இடித்த பொருளை புதரை விலக்கி பார்த்தவள் அதிர்ந்தாள்.

அங்கே ஒரு கோணி  நிறைய துப்பாக்கிகள் இருந்தன. நாட்டுத் துப்பாக்கிகள் . குவியலாக அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்தன .நிலானியின் கைகள் நடுங்க துவங்கியது.

இதன் அர்த்தம் என்ன ?  இவன் ஒரு தீவிரவாதி என்பதுதானே ? இத்தனை துப்பாக்கிகளை இங்கே பதிக்கி வைத்திருக்கிறானே ? இவ்வளவு பயங்கரமானவனிடமிருந்து எப்படி தப்ப போகிறேன் ? 

முதல் நாள் இரவு போலீஸ் வந்து விட்டதாக ஒரு பெண் கதறியது நினைவு வந்தது அவளுக்கு . ஆக இவன் இங்குள்ள மக்களை இவனது இந்த சட்டவிரோதமான செயல்களுக்கு உபயோகித்துக் கொண்டிருக்கிறான் .இவனை  போலீஸ் தேடுகிறது .அதிலிருந்து தப்ப தான் இங்கே வீடு தங்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறான் .இப்போது எல்லாம் தெளிவாக புரிந்து விட நிலானிக்கு அந்த குளிரிலும் வியர்த்தது.

தூரத்தில் ஏதோ வாகன ஒலி கேட்க உற்று கவனித்து அது அவனது பைக்கின் ஒலி  என உணர்ந்து வேகமாக புதரை விட்டு விலகி கண் போன போக்கில் ஓடத் துவங்கினாள் .எவ்வளவு தூரம் ஓடியிருப்பாள் என தெரியாது எதிரே வந்த ஆள் மீது மோதி நின்றாள் .

 ” எங்கே ஓடப் போகிறாய்  ? இந்த முட்டாள்தனத்தை செய்யாதே என்று சொன்னேனே ? ” ஆத்திரத்துடன் அவள் தோள்களைப் பற்றி குலுக்கியவன் அந்த அபியேதான்.

மிரள விழித்தவளை ஒரு கைப்பற்றி எளிதாக தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு , வீட்டு கதவை திறந்து உள்ளே வந்து சோபாவில் எறிந்தான் .” வயிற்றுக்கு சாப்பாடு போட்டதும் உடம்பில் திமிர் ஏறி விட்டதா ?  உன்னை பட்டினி தான் போட்டிருக்க வேண்டும்.

 வெளியே போகாதே என்று சொன்னேனே ?  எதற்காக வெளியில் வந்தாய் ? ”  கோபமாக கத்தினான் .

” ஒரு உமனைசரிடம் ஒரு டெரரிஸ்ட்டிடம் நான் சிக்கிக் கொண்டு இருக்க விரும்பவில்லை . அதனால் தப்பி ஓடினேன் ” நிலானி தைரியமாக பதிலளித்தாள்.

அவன் முகம் பயங்கரமாக மாறியது.

What’s your Reaction?
+1
4
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!