karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 35

35

ஏகாந்தங்களை வழங்கி செல்லும் 
தங்கநிலா பொழுதுகளை 
தவழ்ந்தள்ள துடிக்கும் உனக்கு 
என்ன பெயரிட முடியும் ? 
கள்வன் என்பதை தவிர …

அவளது இந்த பரிதாப தோற்றத்தில் கரைந்த வீரேந்தர் தானும் அவளருகில் கீழே சரிந்து அமர்ந்தான் .அவள் கைகளை தன் கைகளுக்குள் பதித்து கொண்டு ஆதரவாக வருடியபடி ” இப்போது உன்னை பெற்றவளை தெரிந்து என்ன செய்ய போகிறாய் பேபி …? உன் வருங்கால கணவனுக்கு உன் அம்மா உத்தமி என காட்டத்தானே அவளை தேடினேனென்றாய் .இதோ உனக்கு முன்பே நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் .உன் தாய் தெய்வத்திற்கு நிகரானவள் .அவள் எங்கோ இருக்கிறாள் . பிறகென்ன விட்டுவிடேன் ….” அன்பாக கூறினான் .

” எங்கே இருக்கிறாள் …? ஏன் என்னை விட்டு விட்டாள் ….? கையில் வாங்கிய பச்சைக்குழந்தையை குப்பைத்தொட்டியில் எறியும் ஆவேசத்தை யாரோ ஒரு சிறு பையனுக்கு கொடுக்கும் அளவில் என்னை நிறுத்திவிட்டு அவள் எங்கே போனாள் …?

வீரேந்தர் பெரு மூச்சுவிட்டான் .”  உன்னை பெற்றவளுக்கு  அறியாத வயதில் தெரியாமல் நடந்த விபத்து நீ உருவானது .அவள் இப்போது தனது கசப்பான கடந்த காலத்தை மறந்துவிட்டு கணவன் , குழந்தையென புது வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் .அவளை விட்டு விடு சாத்விகா .”

” விட்டு விடுகிறேன் .ஒரே ஒரு முறை அவளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் . நான் பேசக்கூட மாட்டேன் . அ…அவளை …அவளின் விழிகளை ஒரு தடவை , நேருக்கு நேர் சந்தித்து விட்டு , பிறகு அவளை விட்டு விலகிவிடுவேன் .அதன் பின் அவளை சந்திக்க முயற்சிக்கவே மாட்டேன் ….”

” முடியாது .உன்னை சண்முகபாண்டியன் மிகவும் சுதந்திரம் கொடுத்து சுயநலமாக வளர்த்துள்ளார் சாத்விகா .உனக்கு அடுத்தவர் உணர்ச்சிகளை மதிக்க தெரியவில்லை .நீ நிச்சயம் உன்னை பெற்றவளை சந்தித்தால் காயப்படுத்தி விட்டுத்தான் வருவாய் .நான் அதற்கு அனுமதிக்க மாட்டேன் ….”

” சரி …வேண்டாம் .நானே கண்டுபடிக்கிறேன் ….” அவன் கையை உதறிவிட்டு எழுந்து நின்றாள் .




” எதை கண்டுபிடிக்க போகிறாய் …? “

” என்னை பெற்றவளை .நிச்சயம் கண்டுபிடிக்கத்தான் போகிறேன் .எப்படி …யார் மூலம் என்னை பெற்றாய் …? என்னை பலியிட்டுவிட்டு புது வாழ்வு வாழ்கிறாயா ….? அது உன் உடம்போடு ஒட்டுகிறதா ….? என அவளிடம் கேட்கத்தான் போகிறேன் ்இந்த கேள்வகளுக்கெல்லாம் எனக்கு அவளிடமிருந்து பதில் தேவையில்லை .ஆனால் நான் கேட்பது முக்கியம் .அப்போது அவள் முகம் போகிற போக்கை நான் பார்க்க வேண்டும் …”

சட்டென எழுந்த வீரேந்தர் அவளை அடிக்க கையை உயர்த்திவிட்டான் .தன் முகத்திற்கு நேராக உயர்ந்து நின்ற அவன் கைகளை பார்த்த சாத்விகா ” பதிலுக்கு அடிக்க மாட்டேனென்ற தைரியமா …? ” என்றாள் .

” சை …” என கைகளை இறக்கியவன் …” நீ செய்வாயடி …உனக்கு அன்பையும் , பாசத்தையும் ….காதலையும் கூட புரிந்து கொள்ள முடியாது ்உனக்கு தெரிந்த்தெல்லாம் வீம்பும் , அடமும்தான் .உன் மனதிருப்திக்காக யாரையும் , எப்படியும் காயப்படுத்த நீ தயங்கமாட்டாய் ….” என்றான் வெறுப்பு நிறைந்த குரலில் .

” ப்ச் …அன்பு , பாசம் …காதல் எல்லாமே என் வாழ்க்கையில் அர்த்தமில்லாத சொற்கள் .யாரோ ஒருவருக்கு பயந்தாற்போல் என் மேல் அன்பு போல் பாசம் போல் வேடமிட்டவர்கள் ..யாரையோ காப்பாற்றுவதற்காக காதல் நாடகமாடி என்னை வசப்படுத்த நினைத்தவர்கள் …எல்லோருமே வேடதாரிகள் ்என்னை சுற்றி எல்லாமே போலிகள் ….” பேசிக்கொண்டிருக்கும் போதே அழுகை வந்துவிட வேகமாக அறையை விட்டு வெளியே வந்து எதிரேயிருந்த தன் அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டாள் சாத்விகா .

————————

சாத்விகா கண் விழித்த போது கடிகாரம் எட்டு மணி காட்டியது . வெளியே வெயில் வர ஆரம்பித்து விட்டது .கிட்டததட்ட இரவு முழுவதுமே தூங்காமல்தான் படுக்கையில் உருண்டிருந்தாள் .உடல் முழுவதும் அலுப்பால் வலிக்க , மனம் முழுவதும் துக்கத்தால் வலித்தது .திகு திகுவென எரிந்து கண்களுடன் எழுந்த போது , வெளியே சாந்தினி கதவை தட்டும் சத்தம் கேட்டது .வேகமாக கதவை திறந்த போது அவள் எதிர் ரூமை …வீரேந்தர் அறையை …இவர்கள் முதலிரவு அறையை கையில் காபி டிரேயுடன் தட்டிக்கொண்டிருந்தாள் .

நான் அங்கே இருக்க மாட்டேனே இவன் எப்படி சமாளிப்பானென் யோசித்தவள் …எப்படியும் சமாளிக்கிறான் எனக்கென்ன என

எண்ணியபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் .இனி அவள் வீரேந்தர் அறையில்தான் தங்க போகிறாளென இங்கிருந்த அவளது சாமான்களையெல்லாம் ஒன்று விடாமல் எடுத்து போய் எடுத்து போய் அவனது அறையில் அடுக்கியாயிற்று .இப்போது பல் தேய்க்க ப்ரஷ் கூட இல்லை .முதல் வேலையாக அங்கிருக்கும் சாமான்களை திரும்ப இங்கே கொண்டு வர் வேண்டும் .பல்லை கடித்து கொண்டு நினைத்தபடி ஓரளவு தன்னை திருத்திக் கொண்டு அவள் வெளியே வந்த போது

” குட்மார்னிங் …” என்றபடி அவள் அறையினுள் சோபாவில் அமர்ந்திருந்தான் வீரேந்தர் .அவன் முன் டீபாயில் காபி டிரே .

” உள்ளே ஏன் வந்தீர்கள் .வெளியே போங்க …” கத்தினாள் .

” இதை கொடுக்க வந்தேன் ….” அவள் டூத் ப்ரஷ்ஷை நீட்டினான் .கூடவே அவளுக்கு மாற்று உடைகள் .துண்டு .

” நீ பல் தேய்க்காமல் காபி குடிக்க மாட்டாயே. அதுதான் எடுத்து வந்தேன் .தேய்த்து விட்டு …குடி …” காபி டிரேயை காட்டிவிட்டு வெளியே போய்விட்டான் .

சிறிது நெகிழ்ந்த மனதை அதட்டியபடி குளித்து கிளம்பி அறையை விட்டு வெளியே வந்த போது அவனது அறை வாசலில் கைகளை கட்டிக்கொண்டு நின்றபடி அவளுக்காக காத்திருந்தான் .

” உன்னுடன் பேச வேண்டும் …”

” எனக்கு பேச எந்த விசயமும் இல்லை ….” அவனை கடந்து போக போனவளின் கையை பிடித்து நிறுத்தியவன் ” நாம் பேசியே ஆகவேண்டும் சாத்விகா ” என்றான் .

” தேவையே இல்லை …” நகர போனவளின் இடையில் கை கோர்த்து எளிதாக அவளை தூக்கியவன் , அவள் திமிற , திமிற அவனது அறையினுள் கட்டிலில் கொண்டு வந்து போட்டான் .

” சொன்னதை கேட்கவில்லையென்றால் நான் இப்படித்தான் முரட்டுத்தனம் காட்ட வேண்டியதிருக்கும் …”

” ஏய் …எந்த தைரியத்தில் இப்படியெல்லாம் செய்கிறாய் …? ” சாத்விகா கத்தினாள் .

” இந்த தைரியத்தில் …” அவளருகே அமர்ந்து அவள் கழுத்து மாங்கல்யத்தை வெளியே எடுத்து காட்டினான் .

” ஓ….மறந்துவிட்டேன் .என்னை உன் கட்டுப்பாட்டுக்குள்  வைக்கத்தானே இதை என் கழுத்தில் கட்டினாய் .அதிக நாட்கள் இதை சமந்து கொண்டு இருக்கமாட்டேன் .டைவர்சுக்கு அப்ளை பண்ண போகிறேன் .அது வந்தவுடன் இந்த தாலியை கழட்டி உன் கையில் கொடுத்து விட்டு போய்விடுவேன் …”

” ஓஹோ …” தலையாட்டினான் .ஏதோ கதை கேட்பது போல் அவன் தலையாட்டிய விதம் எரிச்சலூட்ட ” கதையா சொல்லிக் கொண்டிருக்கிறேன் …? ” எரிந்து விழுந்தாள் .

” அப்போ கதை இல்லையா …? ” நக்கலாக கேட்டு அவளுக்கு மேலும் கடுப்பேற்றினான.




” வீரேந்தர் …” அதட்டியவளை …

” ஏய் ஒழுங்காக பேசு .நான் இங்கு மேஜர்.இங்குள்ளோர் எனக்கு கொடுக்கும் மரியாதை தெரியுமல்லவா …? ஒழுங்காக அதற்கேற்றாற் போல் பேசு ….” அவளுக்கு மேல் அதட்டினான் .

” பெரிய மேஜர் ..பெரிய மரியாதை …இவர்கள் உன் சுயரூபம் தெரியாதவர்கள் …”

” நீ வேண்டுமானால் போய் என் ரூபத்தை எல்லோரிடமும்  சொல்லி பாரேன் …” இது போன்ற பதிலுக்கு பதில் சீண்டல்களில் முன்பு அவனுக்கு வாயால் பதில் சொல்ல முடியாத போது அவனை அடித்தோ , கிள்ளியோ தனது ஆட்சேபத்தை செல்லமாக சொன்னது நினைவு வர , இப்போதும் பழைய பழக்கத்தில் உயர்ந்து விட்ட கையை கட்டுப்படுத்தி அழுத்திக் கொண்டாள் .

” அதை கவனித்து விட்டவன் ” இயல்பான உணர்வுகளை அடக்கிக் கொள்ளாதே சாத்விகா ….” என்றபடி அவள் கைகளை எடுத்து தன் தோள்களில் வைத்துக் கொண்டான் .

இவன் இப்படித்தான் …என்னை இது போன்ற தீண்டல்களில்தான் அடக்க நினைக்கிறான் .இதே முறையில்தான் அவளை திருமணம் வரை இழுத்து வந்தான் .அவன் தன்னிடம் திருமணத்நிற்கு சம்மதம் வாங்கிய முறை நினைவு வர , அவளையும் மீறி சாத்விகாவின் கன்னங்கள் கனிய தொடங்கியது .

” நாம் இருவரும் கணவன் , மனைவி பேபி .இது நமது தனிமையான நேரம் . இந்த நேரத்தில் நம் மீது ஒருவருக்கொருவர் இயற்கையாய் எழும் உணர்ச்சிகளை நாம் மறைத்து கொள்ளவோ , அடக்கிக் கொள்ளவோ வேண்டியதில்லை ….” வீரேந்தரின் விரல்கள் சாத்விகாவின் இடையில் சுற்றியிருந்த சேலையை மீறி வெற்றிடுப்பில் பயணித்து வருடியது .

தாள முடியா தவிப்பில் இதயம் தாறுமாறாக துடிக்க …தன் கைகள் ஸ்பரிசித்திருந்த அவன் திண்ணென்ற தோள் மீது சாய இருந்த தன் நிலையை கடைசி நிமிடத்தில் வென்று நமிர்ந்த சாத்விகா ….” நீ …நீ …சாகசக்காரன் .என்னை …நீ …உடலால் …ஜெயிக்க நினைக்கிறாய் .இப்படித்தான் ஏதேதோ செய்து என்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டாய் ….என்னை ஏமாற்றிவிட்டாய் …”

” நான் …ஏமாற்றினேனா …? ஏன் அந்த சுகுமாருடன் நீ இந்த மாதிரி பழகி …அதனால் உங்கள் திருமணம் நடந்திருந்தால் ” சட்டென அவன் தோள்களில் அறைந்தாள் .

” சை ….தப்பாக பேசாதே …அப்படியெல்லாம் என்னால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை .” சாத்விகாவின் உதடுகள் அருவெறுப்பில் நெளிந்தன.

” உன்னை உனக்கு தெரியப்படுத்தத்தான் அப்படி பேசினேன் பேபி .ரிலாக்ஸ் …” அவள் முதுகை வருடி சமாதானப்படுத்தினான் .

” நம் இருவருக்கிடையே எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் ….நமக்கிடையே நம் காதல் அந்த எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கறது பேபி …”

” காதலா ….யாருக்கு ..்யார் மேல் ….? “

” உனக்கெப்படியோ …எனக்கு உன் மேல் தீராக்காதல் இருக்கிறது .மிகவும் தீவிர காதல் ….”

” ஹா ….யாராவது காதில் பூச் சொருகி இருப்பவரை பார்த்து இதை சொல்லுங்கள் .நீ …நீங்கள் குப்பை கூடையில்  எறிந்து விட நினைத்த குழந்தை நான் ….” கண்களின் நீரை முகத்தை திருப்பி மறைத்து கொண்டாள் .

அவசரத்தில் அந்த வார்த்தைகளை வெளிப்படையாக சொல்லி விட்டதற்காக அந்நேரம் மகவும் வருந்தினான் வீரேந்தர் .சாத்விகா பெரியவர்களை வருத்தி பேசிய பேச்சுக்களில் அவனையறியாமல் அன்றைய அந்த வார்த்தைகள் அவனிடமிருந்து வந்துவிட்டிருந்தன.

” ஏதோ ஒரு இக்கட்டான நேரத்தில் ஒரு பதினோரு வயது சிறுவன் அன்று எடுத்த முடிவை …அதனையும் உன்னிடம் மறைக்காமல் சொன்ன ஒரே குற்றத்திற்காக , அவன் மனதை புரிந்து கொள்ளாமல் அவனை பேச விடாமல் அடிப்பாயா சாத்வகா  …? ” வீரேந்தரின் குரலில் சிறிது வேதனையும் இருக்க , இது போன்ற ஒரு குரலை முன்பு அவனிடம் கேட்டிராத சாத்விகா அமைதியானாள் .

” உங்களை பேச விட்டாலே அது எனக்கு பாதகமாகத்தான் முடிகிறது ….” முணுமுணுத்தாள் .

” பழவாயில்லை .கொஞ்சம் நான் பேசி முடிக்கும் வரை இடையிடாமல் கவனி …நான் உன்னை மிக விரும்பித்தான் திருமணம் முடித்திருக்கிறேன் சாத்விகா . நீயும் அப்படித்தான் .ஆனால் உன் அகம்பாவத்தால் அதை நீ மறைக்கறாய் .ஒருவருக்கொருவர் ஆசை கொண்டு மணந்த நாம் ஒருநாளும் பிரியப் போவதில்லை .அதனால் டைவர்ஸ் …அது …இதுவென்று உளறிக் கொண்டிருப்பதை உடனே நிறுத்தி விடு .நம் மண வாழ்வில் முறிவு வருவதை நான் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன் .அதே போல் நீ வீட்டில் பெரியவர்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்வதையோ …என்னை தவிர்ப்பதையோ …நான் விரும.பவில்லை …”

பேசி முடி அப்புறம் உன்னை பேசிக்கொள்கிறேன் என வாயை மூடியிருந்தவள் …” தவிர்ப்பதென்றால் ….” அவசரமாக சந்தேகம் கேட்டாள் .

” ஒரு கணவனாக உன்னை நெருங்குவதை தவிர்ப்பதை ….” அழுத்தி சொன்னவனை முறைத்தாள் .

” அதை நான் விரும்பவில்லை ….” உயர்ந்த குரலில் அவள் அறிவிக்க ” அட …அப்படியா …? ” என அவன் அநியாயத்திற்கு ஆச்சரியப்பட்டான் .

இவனை… பல்லை கடித்த சாத்விகா …” சரி இப்போது என்ன செய்ய வேண்டும் …? ” நேரடியாக விசயத்திற்கு வந்தாள் .

” நம்முடைய பிரச்சினைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கட்டும் .அதற்காக நாம் …ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு மணந்த நாம் தள்ளி இருக்க வேண்டுமென எந்த கட்டாயமும் இல்லை அல்லவா ….? ” வீரேந்தர் கேட்டு முடித்தபோது , சாத்விகாவிற்கு மூச்சு திணற ஆரம்பித்துவிடத்தான் …அவனது இதழ்களுக்குள் சிக்கிக் கொண்ட தன் உதடுகளை உணர்ந்தாள் .

சில நிமிட இடைவெளியின் பின் பெரு முயற்சியுடன் அவனை தள்ளியவள் …” நீங்கள் பெரிய ராணுவ கேப்டன் என சொல்லிக் கொள்கிறீர்கள் ்உங்கள் காரியம் சாதிக்க இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறீர்களே …? ” புலம்பினாள் .

,” கணவன் மனைவியிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்வது கீழ்த்தரமானதா …? ” மீண்டும் நெருங்கியவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள் .கட்டிலிலிருந்து இறங்கி நின்றாள் .

” பாருங்கள் வீரேந்தர் .நம்மிடையே காதல் இருக்கிறதென்பதை இன்னமும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .அவளை கட்டுக்குள் வைக்கத்தானே கல்யாணம் செய்தான் என்ற உங்கள் அப்பாவின் பேச்சை கேட்டவள் நான் .”

” இல்லை …அது அப்படியில்லை …”

” எப்படியில்லை .உங்கள் அப்பா பொய் சொன்னார் என்கிறீர்களா ..? “

” இல்லை .அவர் சொன்னது உண்மைதான் .ஏனென்றால் என் பெற்றோர்களிடம் அப்படி சொல்லித்தான் உன்னை மணமுடிக்க அனுமதி வாங்கினேன் .ஆனால் உண்மை அதுவல்ல ….”

சாத்விகாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்த்து .

” இப்போது எந்த உண்மையைத்தான் சொல்ல வருகிறீர்கள் ..? “




” நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேனென்பதுதான் உண்மை …நீயும் …”

” உங்களை பற்றி நீங்கள் என்னவானாலும் உண்மை  சொல்லிக்கொள்ளுங்கள் .என்னை சொல்ல உங்களுக்கு உரிமையில்லை .அந்த அளவு நீங்கள் உண்மையுமில்லை .இப்போது வரை உங்கள் மீது இருப்பது ஒரு வகை ஈர்ப்பு என்றுதான் எனக்கு தோன்றுகிறது .அதனால் …என் லட்சியமென்று நான் நினைக்கும் என்னை பெற்றவளை கண்டுபிடித்த பின்னால் …நமக்குள் காதலா …கத்தரிக்காயா …என ஆராய்ந்து முடிவிற்கு வருவோம் ….”

” அது வரை …”

” இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் ….” என்றபடி வாசலை நோக்கி நடந்திள் .

” என்னை விட்டு ….” என்றபடி அவளை நோக்கி கையை நீட்டினான் வீரேந்தர் .

” என் லட்சியம் நிறைவேறிய பிறகுதான் …நான் நம்மை பற்றி யோசிக்கவே போகிறேன் …” அவர்களிருவரையும் சைகையால் காட்டிவிட்டு வெளியேறினாற் சாத்விகா .

” உன் லட்சியம் நிறைவேறவே போவதில்லை பேபி .உன்னை நான் விடப்போவதுமில்லை ….” புன்னகை பூத்திருந்த்து வீரேந்தரின் முகத்தில் .

What’s your Reaction?
+1
22
+1
9
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!