ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 2

2

” அங்கே எனக்கு பாதுகாப்பு வேண்டாமா ? ” கொஞ்சலாக கேட்ட மகளின் கேள்விக்கு விழித்த தந்தையை சிரிப்புடன் பார்த்திருந்தாள் அவள்.

” அங்கேயெல்லாம் எப்படி…? ”  தடுமாறிய தந்தையின் தோள்களை ஆதரவாக தட்டினாள் . ” சும்மா கேட்டேன் பா .ட்ரெயினில் கூடவேவா உங்க கருப்பு பூனை படையை அனுப்ப முடியும் ?  விடுங்க. அங்கே நான் ஜாக்கிரதையாக இருந்து கொள்வேன் ” 

திருக்குமரனின் முகம் தெளிந்தது. ”  ட்ரெயினில் பாதுகாப்பு தேவை இல்லை தானேடா செல்லம் ?  நீ வாகமன் போகவும் உனக்கான பாதுகாப்பு ஸ்டேஷனுக்கே வந்துவிடும் ” 

அது கூட தேவையில்லை என்றுதான் நிலானிக்கு தோன்றியது . அவள் செல்லப்போகும் கேரளா அருகில் உள்ள மலை வாசஸ்தலத்தில் அவளை தெரிந்தோர் அதாவது மந்திரியின் மகள் என அவளை தெரிந்தோர் யாரும் இருக்கப்போவது இல்லை. பின்னே எதற்கு பாதுகாப்பு ? அத்தோடு அந்த அம்பாசிடர் கார் காரனை கைது செய்து உள்ளே போட்டாயிற்று. அவனாலும் ஆபத்து இல்லை.

ஓடிய யோசனைகளின் பின்னே அன்றைய அவனது கொடூர முகம் நினைவில் வந்தது. அவளது கறுப்பு பூனை படைகள் தள்ளிக் கொண்டு போக முகம் சுருங்க அவளை பார்த்தபடி அவன் நகர்ந்த போது …நிலானியின் உடல் உள்ளூர உதறியது.ஷ்…ஷப்பா … என்ன பார்வை ? உடலை பொசுக்கி விடுவது போன்ற அந்தப் பார்வையின் தீட்சண்யத்தை இப்போதும் உணர்ந்தாள். தலையை உதறி அவனை தன் நினைவில் இருந்து தூக்கி எறிந்தாள்.




இப்போது  ஒரு ரிலாக்க்ஷேசனுக்காக இந்த ஊரை விட்டு தள்ளி போகிறேனென .. நினைத்து விட்டு , இல்லையில்லை எனது செமஸ்டர் ஹாலிடேஸ்காக ஒரு குளுகுளு பயணம் என மாற்றிக் கொண்டாள் . எதனாலோ அவளுக்கு சென்னை இப்போது மிகவும் வெப்பமாக தெரிந்தது. இங்கிருந்து சில நாட்கள் விலகி இருந்தால் தேவலாம் என தோன்றியது .தந்தையிடம் சொல்ல அவர் உடனே குளுகுளு மலைவாசஸ்தலமான கேரள வாகமன் பயணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார்.

” இந்தக் கம்பார்ட்மென்ட்தான் பாப்பா ”  அவளுடைய டிராலியை தூக்கி உள்ளே வைத்து ஜன்னல் திரைகளை இழுத்து மூடிய  அந்த முன் வழுக்கை ஆசாமி ராஜேஷ் திருக்குமரனின் வலது கை போன்றவர் . அரசியல் மற்றும் குடும்ப விஷயங்களிலும் மிக சுதந்திரமாக புழங்குபவர்.

” ஏசி போட்டுட்டாங்க பாப்பா .ஜன்னல் ஸ்கிரீனை திறக்காமல் அப்படியே தூங்கிடுங்க . விடிந்ததும் கேரளா தான் .” அகலமாய் புன்னகைத்தார். வாசலில் நின்ற டிடி ஆரிடம் தான் புக் செய்த ரயில் டிக்கெட்டை தனது போனில் காட்டி விட்டு கீழே இறங்கினார் .

” டிக்கெட் செக் செய்யும் வேலையும் இல்லை. பேசாமல் தூங்குங்க குட்நைட்  ” போய்விட்டார்.

அது உயர்வகுப்பு டூ டயர் ஏசி கூபே .இரண்டு படுக்கைகளும் சேர்த்து நிலானிக்கே  புக் செய்யப்பட்டிருந்தது. எனவே பக்கத்து சீட் நபரின் யோசனையின்றி நிலானி  பெட்டில் படுத்து விட்டாள். சிறிது நேரம் தன் போனில் எதை எதையோ பார்த்துக் கொண்டிருந்தவள் மனதிற்குள் அந்த அம்பாசிடர் கார்காரன் மீண்டும் வந்தான்.

அவனை மீண்டும் சென்னையில் ஐ மேக்ஸ் தியேட்டரில் சந்தித்தாள் . தனது தோழிகளுடன் சினிமா பார்ப்பதற்காக , அங்கே நுழையும்போதே பார்க்கிங் ஏரியாவில் அந்த அம்பாசிடர் காரை பார்த்துவிட்டாள். இவன் இங்கே தான் இருக்கிறான் போலவே,  நினைத்தபடியே அவன் தியேட்டருக்குள் தான் இருந்தான் .அதுவும் இவளது வரிசைக்கு பின்னால் இருந்த வரிசையில் …

கொசகொசவென்று பின்னால் பேசிக் கொண்டே இருந்தது இவளுக்கு எரிச்சலை உண்டாக்கியது. படத்தை பார்க்காமல் என்ன பேச்சு …? திரையில் ஓடிய அந்த ஆங்கில முப்பரிமாண படம் அவள் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பி வந்தது. இப்போதோ அந்த பின்வரிசை பேச்சால்  அவள் மனது ஒத்துழையாமை செய்தது.

பெரிய கோகுலத்தில் கண்ணன் என்ற நினைப்பு.. பின்வரிசைக் காரனை பற்றிய அவளது பொறுமல் தொடர்ந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. பின்னே அவன் பெண்கள் சூழ அமர்ந்திருந்தான் .ஒரு ஐந்திலிருந்து ஆறு பேர் வரை அவனுடன் வந்திருக்க வேண்டும் என்று கணித்தாள் நிலானி .அனைவருமே பெண்கள்தான். அதிலும் பள்ளி இறுதியிலோ கல்லூரி ஆரம்பத்திலோ இருக்கும் டீன் ஏஜ் பருவத்தினர். அவர்கள் அனைவருமே அவனிடம் மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு கைகளைப் பற்றி தோள்களை தொட்டு என்று அவனுடன் விளையாடியபடி பேசியபடி  படம் பார்த்தனர்.

இப்போது யோசித்துப் பார்த்தால் அன்று கூட அவனது அந்த டப்பா அம்பாசிடர் காரில் பெண்களே நிறைந்திருந்த நினைவு அவளுக்கு வந்தது .எப்போதும் பெண்களுடனேயே ஊர் சுற்றும் அவனது கேரக்டர் அவளது மனதில் மிகவும் கீழே இறங்கியது. எப்படி இந்த பெண்கள் இவன் பின்னால் இப்படி வருகிறார்கள் ?நிலானியின் கட்டை விரல் நகம் கடி பட்டது .அந்த உயர்ரக தியேட்டர் இருக்கை அவளுக்கு கருங்கல் பாறை போல் ஆனது.

அதே அவஸ்தை தான் அவளின் அருகில் இருந்த ஷிவானிக்கும் போல. ஷிவானி அவளது தோழி சுபாவின் கசின் .பிளஸ் 2 எழுதிவிட்டு ரிசல்ட் எதிர்பார்த்து கொண்டிருப்பவள் .அன்று சுபாவுடன் அவளும்   படம் பார்க்க என வந்திருந்தாள்.

” என்ன ஷிவானி ? என்ன விஷயம் ? ” 

” அக்கா ” ஷிவானியின் குரலில் நடுக்கம் . ” பேட் டச் பண்றான்கா ” 

நிலானியுனுள் அதிர்ச்சி. ”  யார் ? ” வேகமாக எழ  முயன்றவளின் கைகளை அழுத்தி உட்கார வைத்தாள். அவள் தோளில் சாய்ந்தார் போல் இருந்து கொண்டு ” வேண்டாம் அக்கா. வெளியே தெரிய வேண்டாம் .எனக்குத்தான் அசிங்கம். ” 

” அதற்காக இப்படியே இருந்து கொள்வாயா ?  சொல் யார் ? ” 

” பின்னால் உட்கார்ந்து கொண்டிருப்பவன் தான் கா ” ஷிவானி  குரலில் குளிர் ஜுரத்தின் சாயல்.

ஷிவானிக்கு பின் நேராக அமர்ந்திருப்பவன் அந்த அம்பாசிடர் கார் காரன் தான். நிலானியுனுள் எரிமலை வெடித்தது .அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை நம்பி என்னுடன் வந்தவளை சீண்டுவான்? உடனடியாக அவனுக்கான தண்டனையை கொடுக்க நிலானி முடிவு செய்தாள். அவளது கண்கள் கால்களில் கிடந்த ஹைஹீல்ஸ் மேல் படிந்தது .




” செருப்படி வாங்கப் போகிறான் ”  பற்களை கடித்தாள் .

” அக்கா வேண்டாம் அக்கா. ப்ளீஸ் இதனால் எனக்குத்தான் பாதிப்பு ” ஷிவானி நடுங்கியபடி நிலானி எழுந்திருக்க முடியாமல் அவள் கைகளை பற்றிக்கொண்டு குறைந்த குரலில் மன்றாடினாள். சிறு பெண். அவளது பயத்தையும் நிலானி மதிக்க வேண்டியது இருந்தது. ஆனாலும்  அந்த மனிதனை அவள் மன்னிக்கத் தயாரில்லை. ஒரு கையால் ஷிவானியை அணைத்தபடி மறுகையால் தனது போனில் தியேட்டர் வாசலில் இருந்த தனது செக்யூரிட்டி களுக்கு தகவல் அனுப்பினாள் .

இரண்டாவது நிமிடமே தடதடவென உள்ளே வந்த நான்கு செக்யூரிட்டிகளும் பின் வரிசையில் அமர்ந்திருந்த அவனை சட்டையை பிடித்து தூக்கி படார் படார் என  அறைந்தனர். அவனுடன் வந்த பெண்கள் அலற ”  இவன் தானே மேடம் ? ” என்று நிலானியிடம் அடையாளம் கேட்டனர்.

”  ஆமாம். பின்னாலிருந்து என்னை சீண்டிக்கொண்டே இருக்கிறான் .இழுத்துக்கொண்டுபோய் போலீசிடம் ஒப்படையுங்கள் ” மகாராணியாய் உத்தரவிட்டாள் .அவனது விழிகள் ரௌத்திரமாய் இவள் மேல் விழுந்தன. அனலின் துளிகளை அவன் பார்வையில் உணர்ந்தவள் தன் விழிகளை திருப்பிக் கொண்டாள்.

”  என் செருப்பிற்கு வேலை வைக்காதீர்கள். சீக்கிரம் இழுத்துப் போங்கள் “

 அவனுடன் வந்த பெண்கள் கத்த கத்த செக்யூரிட்டிகள் அவனை இழுத்துச் சென்றனர்.

”  பொம்பள பொறுக்கி போல ”  தியேட்டரில் பரவலாக அவனைப் பற்றிய முணுமுணுப்பு கேட்டது. நிலானி குரூப்புக்கு அதன் பிறகு படம் பார்க்கும் ஆசை விட்டுப் போக அவர்களும் வீட்டிற்கு கிளம்பி விட்டனர்.

அந்த அம்பாசிடர் கார்காரனை தான் முன்பு நினைத்தபடியே  செக்யூரிட்டிகளை வைத்து விரட்டிவிட்ட சந்தோசம் வராது  கனல் வீசிய அவனது முகமே அப்படியே நிலானியின் மனத்திரையில் ப்பாஸ்  பண்ணிய சித்திரம் போல் நிலைத்து இருந்தது .சை… எவ்வளவு 

மோசமானவன் …இப்படியே திரும்பத் திரும்ப அவளுக்குள் தோன்றிக் கொண்டே இருக்க தன் மூளை சூடான தாக உணர்ந்தாள் அவள் ..இங்கே எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு எங்காவது ஓட வேண்டும் போல் இருக்க இதோ இந்த பயணத்தை ஏற்பாடு செய்து கொண்டாள்.

பத்து நாட்களேனும் வேறிடம் சென்று வர கனத்துக் கிடக்கும் மனம் லேசாகும் அல்லவா ? நினைத்தபடியே கண்கள் சொருக தூங்கிப் போனாள் .மீண்டும் அவள் கண்விழித்தபோது வானத்தில் விடிவதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டது. எதிர் பெர்த்தை பார்த்தவள் திடுக்கிட்டாள் .அங்கே யாரோ படுத்திருந்தார்கள். முகம் முழுவதும் மூடிக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.

யாரோ இடம் மாறி ஏறி விட்டார்களோ ?  படுக்கும்போது கதவை பூட்டவில்லையா நான்? நிலானிக்கு சரியாக நினைவில் இல்லை .  தலை திருப்பி பார்க்க கூபேயின் கதவு லேசாக திறந்திருக்க,  வாசல் ஸ்கிரீனும் விலகி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது .எப்படியோ திறந்து வைத்து விட்டு தூங்கிவிட்டேன் போல சலித்துக்கொண்டாள்.




இப்போது அவள்  தனது தனிமை பாதிக்கப்பட்டதில் எரிச்சலானாள் .இரண்டு கைகளையும் சேர்த்து பலமாக தட்டினாள் . ” ஹலோ யார் நீங்க ? இங்கே ஏன் வந்து படுத்து இருக்கீங்க ? “

“காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கிறேன். படுத்திருக்கிறேன் ..” மூடிய போர்வைக்குள் இருந்து சத்தம் வந்தது .அது ஆணின் குரல். அப்போது இவன் தூங்கவில்லையா ..?சும்மா தான் படுத்து கொண்டு இருக்கிறானா..? ஆத்திரம் எழ  நிலானி எழுந்து நின்றாள்.

” சார் இது நிச்சயம் உங்களுக்கான இடம் இல்லை. தவறாக இங்கே வந்து விட்டீர்கள். எழுந்து வெளியே போங்கள் . ” விரல் சொடுக்கி உத்தரவிட்டாள்.

” நான் தவறாக எதுவுமே செய்வதில்லை .இது என் இடம் தான். உன்னை விட்டு விட்டு நான் போகமாட்டேன் ”  உறுதியான குரலில் கூறிய படி முகத்திரையை விலக்கி எழுந்து நின்றவன் அந்த அம்பாசிடர் கார் காரன் .அவனது முகத்தில் அன்று பார்த்த அதே ரவுத்திரம் சற்றும் குறையாமல் இன்றும் கனன்று கொண்டிருந்தது.

What’s your Reaction?
+1
6
+1
8
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!