Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 9

9

” நகையை அணிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களிடம் பேசும் போது அந்த நகைகளை பற்றிய விபரங்களை சொல்லவேண்டும் .டீரேயில் வைத்து காட்டப்படும் நகைகளை விட , இது போல் கழுத்தில் இருக்கும் நகைகள் வாடிக்கையாளர்களை அதிகமாக கவரும் .இந்த அலங்காரங்களுடன் கடையினுள் நடந்தபடி  வாடிக்கையாளர்களை உபசரிக்க வேண்டும் .அவர்கள் கேட்கும் நகைகளை எடுத்து காட்டுமாறு சேல்ஸ்கேர்ள்ஸை ஏவ வேண்டும் .கூடவே வந்திருப்பவர்களிடம் எங்கேயும் , ஏதாவது திருட்டுத்தனம் தெரிகிறதா …எனக் கண்காணிக்கவும் வேண்டும் .நகை வாங்கி முடித்தவர்களை இனிமையான புன்னகையோடு வழியனுப்பி வைக்க வேண்டும் …”

கமலினி குறைந்த குரலில் தனது வேலை விபரங்களை தன் தாய் , தந்தையிடம் விளக்கிக் கொண்டிருந்தாள் .புவனா கொஞ்சம் படபடப்போடு கவனித்துக் கொண்டிருக்க , வேலாயுதம் பதிலின்று தலையை கவிழ்ந்து தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தார் .

” அவுங்க தர்ற சேலையையும் , நகையையும் மாட்டிக்கிட்டு வர்றவங்க , போறவங்க பின்னாடி மினுக்கிக்கிட்டு நிக்கனுமாம் .இதென்ன பொழப்பு …? சீச்சி …இதெல்லாம் நீங்க கேட்கிறீகளோ …இல்லையோ …நாளை என் வீட்டுக்கு ஒரு சாதி ,சனம் வந்தால் அவுங்க கேட்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது .இந்த வேலையை பத்தி எனக்கு இப்பவே ஒரு முடிவு தெரிஞ்சாகனும் …. ” தேர்தல் நேர மேடைப் பேச்சாளரை போல் நீட்டி முழக்கி பேசினாள் கனகம் .பக்க துணையென தன் கணவன் குணசீலனையும் அருகே அமர்த்திக் கொண்டிருந்தாள் .




அவளது நீண்ட பிரச்சார பேச்சில் புவனா கலக்கத்துடன் கணவனை பார்த்தாள் .வேலாயுதம் இன்னமும் மௌனமாகவே இருக்க , கணவனின் தோள்களை இடித்தாள் கனகம் .

சுண்டெலி எழுப்பிய சிங்கமென சிலிர்த்து நிமிர்ந்த குணசீலன் ” என்னண்ணா கனகா இவ்வளவு தூரம் சொல்கிறாள் …நம் குடும்பத்தின் மீதுள்ள அக்கறையால்தானே இந்த அளவு தீவிரமாக பேசுகிறாள் ? .நீங்கள் இப்படி பேசாமலிருந்தால் எப்படி …? ” கர்ஜிக்க முயன்றார்.

” ம் …கமலிக்குட்டி சொல்வதை கேட்க கேட்க எனக்கு என் தொழிலுக்குள் நினைவு போய்விட்டது .என்ன தெளிவான  வியாபார புத்தி …? நுணுக்கமான திட்டங்கள் .இது போலெல்லாம் எனக்கு தோன்றவில்லையே .சரி போகட்டும் .டேய் குட்டிம்மா நீ அந்தக் கடையிலேயே இன்னும் கொஞ்சநாள் வேலை பாருடா .இது போல் விபரங்களை கவனித்து வைத்துக் கொள் .பிறகு நாம் தொழில் தொடங்கும் போது அந்த விபரங்கள் நமக்கு உதவியாக இருக்கும் ” வேலாயுதம் சொன்னபடி எழுந்து மகளருகே வந்து அவளது தலையை பரிவுடன் வருடி விட்டு வெளியே கிளம்பி விட்டார் .

குணசீலன் செய்வதறியாது திகைத்து நிற்க கனகம் கோபமாக கணவனை பார்த்தாள் .எல்லாம் இந்த துப்பு கெட்ட மனுசனால வந்த்து .இவரை யார் அண்ணனிடம் பேசும் போது என் பெயரை சொல்ல சொன்னது …? அந்த ஆளுக்கு என் பெயரை சொன்னாலே ஏட்டிக்கு போட்டியாகத்தான் நினைக்க தோணும் .இப்போது உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா கதைதான் ….

தீ ஜ்வாலைகள் சுடர் விட்டெரிந்த தன் மனைவியின் கண்களை பார்த்த உடனேயே குணசீலனுக்கு வயிற்றைக் கலக்க தொடங்கியது .ஐய்யய்யோ இவளை என்ன சொல்லி சமாளிக்க …? அவர் கண்டாரா என்ன ….அண்ணன் இப்படி தட்டை திருப்பிப் போட்டு மகளின் வேலையை உறுதி செய்வாரென …உள்ளே வா …என ஜாடை காட்டிச் சென்ற மனைவியின் பின் பலியாடாக போனார் .

சித்தப்பாவின் பயந்த நடையை கொஞ்சம் பரிதாபமும் , சிரிப்புமாக பார்த்தாள் கமலினி .தந்தையின் நியாய உள்ளத்தை அவள் அறிவாள் . அத்தோடு விஸ்வேஸ்வரன் உடையை பற்றி கடையை பற்றி என சொன்ன விளக்கங்களும் தைரியமாக அவள் பெற்றவர்களுக்கு …மற்ற உறவுகளுக்கு எடுத்து சொல்ல உதவியாக இருந்தது .ஏனோ அவள் அந்நேரம் அவனுக்கே மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டாள் .

இப்போதைய அவர்கள் குடும்ப சூழ்நிலைக்கு இந்த வேலை மிகவும் தேவையாக இருந்த போதும் ,  தினமும் ஒரு பட்டும் , நகையுமாக அணியும் வாய்ப்பை தரும் இந்த வேலை ஒரு இயல்பான பெண்ணாக அவளுக்குமே பிடித்துத்தான் இருந்த்து .சிறு வீம்பிற்காக , அப்பா – அம்மா கௌரவத்திற்காக கனகத்தின் காள வாய்க்காக என  பயந்து இந்த வேலையை உதறும் முடிவை ஒரு பலவீன நொடியில் எடுத்தாலும் , பின் அதற்காக வருந்தவே செய்தாள் .

இப்போது இந்த வேலைக்காக அவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமா …இல்லை இந்த வேலையை புரிய வைத்ததற்காகவா …? கடைசியில் விஸ்வா நம்மை தலையாட்ட வைத்து விடுவார் …என்ற பாரிஜாத்த்தின் பேச்சை முறுவலுடன் மனதிற்குள் நினைவுறுத்தபடி மறுநாள் ஸ்வர்ணகமலத்தில் விஸ்வேஸ்வரனுக்காக காத்திருந்தாள் கமலினி .

சிறு புன்னகையுடன் பாரிஜாதம் அவளை பார்த்து தலையசைத்து விட்டு லிப்டினுள்  செல்ல ,அவளுடனேயே வந்திருந்த விஸ்வேஸ்வரன் அவள் பக்கமே திரும்பாமல் லிப்ட்டை உபயோகிக்காமல் படியேறி போனான் .எப்போதும் லிப்டில் செல்பவன்தான் . லிப்டினருகே இருக்கும் என்னை தவிர்க்கவே படியேறினானோ …கமலினியின் முகம் வாடியது .சரி கடையை ரவுண்ட்ஸ் வரும் போது இந்த ப்ளோருக்கு வரத்தானே வேண்டும் .அப்போது பேசி விடலாம் …தன்னை தானே சமாதானப்படுத்திய படி வேலையில் ஆழ்ந்தாள் கமலினி .

” எனக்கு ஆரம் வேண்டாம் .சோக்கர்ஸ் மட்டும் போதும் ” மழலையாய் சிணுங்கிய பெண்ணின் குரலில் புன்னகையோடு திரும்பினாள் .அவளருகே சென்றாள் .

அந்தப் பெண்  தமிழ்நாட்டின் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பதை சேர்ந்தவள். அவளுக்கும் தமிழக அரசியலின்  பெரிய கட்சி தலைவர் ஒருவரின் மகனுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்த்து . அந்த பெண் வீட்டாரும் , மாப்பிள்ளை வீட்டாரும் இணைந்து திருமண நகைகள் வாங்குவதற்காக வந்திருந்தனர் .வெள்ளியில் ஆரம்பித்து பிளாட்டினம் வரை ஒவ்வொரு தளமாக போய் வந்து கொண்டிருந்தனர் .

அங்குமிங்குமாக அலைபாய்ந்து கொண்டிருந்தவர்களை சரோஜா ” ப்ரைடல் செட்டில் பாருங்கள் மேடம் .உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் ” என சற்று முன்தான் இங்கே கொண்டு வந்து விட்டிருந்தாள் .அதிலும் அந்தப் பெண் ஏதோ சிணுங்கியபடி இருக்கிறாள் .

கமலினி வைரங்கள் தோற்கும் மின்னல் புன்னகை ஒன்றை தன் இதழ்களில் பூட்டிக் கொண்டு அவர்களை நெருங்கினாள் .” காலை வணக்கம் மேடம் .என் பெயர் கமலினி .உங்கள் பெயர் என்ன …? ” தோழமையுடன் கொஞ்சம் பணிவும் கலந்தே கேட்டாள் .

” என் பெயர் ப்ரியம்வதா . என்ன டிசைன்ஸ் வைத்திருக்கிறீர்கள் …? கோடிக்கணக்கில் கூட பணம் போட நாங்கள் தயாராக இருக்கிறோம் .எங்கள் மன திருப்திக்கேற்றாற் போன்ற நகைகள் இல்லையே உங்களிடம் …? ” புரண்டு வளர்ந்த பணம் இருந்த்து அவள் நாவில் .

” ஆஹா உங்களை தெரியுமே மேடம் .உங்கள் ரசனைக்கேற்ற நகைகளை செலக்ட் செய்து தர வேண்டியது என் பொறுப்பு மேடம் .இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ப்ரைடல் கலெக்சன்ஸ் .இதில் உங்களுக்கு எதெது பிடித்திருக்கிறதோ அதனை தனியே எடுத்து வையுங்களேன் …”




அந்த ப்ரியம்வதா பட்டென அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளி விட்டு எழுந்து நின்று இடுப்பில் கை வைத்தாள் .” உனக்கு ரொம்ப புத்திசாலியென்ற நினைப்போ …? இங்கே எதுவும் பிடிக்கவில்லையென்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன் .பிறகு அதிலேயே செலக்ட் செய் என்றால் என்ன அர்த்தம …? “

கமலினியின் புன்னகை சிறிதும் மாறவில்லை . ” ஓ …சாரி மேம் . உங்களை போன்ற பெரிய இடத்து பெண்கள் விரும்பும் வகைகள் இவைதான் மேடம் .இதோ இந்த செட்டை பாருங்களேன் …போன மாதம் சென்ட்ரல் மினிஸ்டருடைய மகள் இதைத்தான் அவர்கள் நிச்சயதார்த்தத்திற்கு வாங்கிப் போனார்கள் .இந்த செட் இந்தி நடிகை தீபிகா …” கமலினியின் தோனொழுகிக் கொண்டிருந்த பேச்சை ஒரு அதிகார கையுயர்த்தலில் நிறுத்தினாள் ப்ரியம்வதா .

” இங்கே பார் மினிஸ்டர் மகளை பற்றியோ …இந்தி நடிகையை பற்றியோ எனக்கு தெரியாது .ஆனால் என்னை எனக்கு நன்றாக தெரியும் . யானை சங்கிலி போல வடம் வடமாக இத்தனை பெரிதாக இருக்கும் இந்த நகைகள் எனக்கு பிடிக்கவில்லை .அவ்வளவுதான் …”

” ப்ரைடல் செட் என்றாலே அப்படித்தானே மேடம் இருக்கும் …” அவர்களுக்கு நகை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்த சேல்ஸ் கேர்ள் அழுதுவிடுவாள் போல் நின்றாள் .இன்று இந்த கஸ்டமர் மட்டும் நகை வேண்டாமென்று சொல்லிவிட்டு போனார்களேயானால் அவள் தொலைந்தாள் .முதலில் சரோஜாவிடமும் பிறகு பாரிஜாத்த்திடமும் வாங்கப் போகும் வசவுகள் அவள் நெற்றியில் நீர்த்துளிகளாக நின்றன .

” இல்லை வசந்தி .எல்லா ப்ரைடல் செட்களும் இப்படி இருக்காது .நீ மேடத்திற்கு லைட் வெயிட் ப்ரைடல் செட் காண்பி …” கமலினி சொல்ல அந்தப் பெண் விழித்தாள் .

லட்சங்களை தாண்டி கோடிகளில் பணத்தோடு வந்து நிற்கின்றனர்  இந்த ப்ரியம்வதாவின் குடும்பத்தினர் .அவர்களிடம் பெரிய பெரிய நகைகளாக காண்பித்து தள்ளி விடாமல் சிம்பிள் நகைகளை காட்டுவதா …? இதற்கு வேறு அவள் பாட்டு வாங்கியாக வேண்டுமா …? அவர்கள் சேல்ஸ் வேலையின் அடிப்படையே சிறியதில் ஆரம்பித்து பெரியதற்கு கஸ்டமரை கூட்டிச் செல்ல வேண்டிமென்பதே …ஒரு லட்சம் பட்ஜெட்டோடு வருபவர்களை இரண்டு லட்சத்திற்கு வாங்க வைப்பதே …அப்படி இருக்கும் போது , வசந்தி தயக்கத்தோடு கமலினியை பார்க்க , கமலினி அவளை நாசூக்காக நகர்த்தி விட்டு தானே அவளிடத்திற்கு வந்தாள் .

” இதை பாருங்கள் மேடம் .இதில் ஒரு ஆரம் , ஒரு நெக்லஸ் , கம்மல் , வளையல் இருக்கும் .பார்க்க பெரிதாக இருக்காது .ஆனால் அணிந்தீர்களானால் நிறைவாக இருக்கும் …” கமலினி இப்போது காட்டிய செட் சிறியதுதான் .ஆனால் ரோடியம் கோட்டிங் பூசப்பட்டிருந்த்தால் பளபளவென மின்னியபடி இருந்த்து .

ப்ரியம்வதா அந்த ஆரத்தை அலட்சியமாக ஒற்றை விரலால் சுண்டியபடி  இருக்க ” இது எத்தனை பவுன் வரும் …? ” ப்ரியம்வதாவின் அம்மா கேட்டாள் .

” எல்லாம் சேர்ந்து எழுபது கிராம் எடை வரும் மேடம் .மூன்று லட்சத்திற்குள் விலை வரும் ” கமலினி சொல்ல அம்மா முறைத்தாள் .




” வெறும் மூன்று லட்ச ருபாய் நகைகளுடன் என் பெண் மேடையில் நிற்பதா …? “

” யெஸ் மம்மி .யு ஆர் கரெக்ட் .இது எனக்கு வேண்டாம் …” ப்ரியம்வதா அந்த செட்டையும் தள்ளிவிட்டாள் .

இப்போது கடை பணிப்பெண்கள் எல்லோருமே விழிக்க தொடங்கினர் .” கமலினி இவர்களை நம் சாரிடம் அனுப்பி விடலாம் .இவர்களை போன்றவர்களை சார்தான் அழகாக ஹேன்டில் செய்வார். இவர்கள் நம் சாருக்கு பேமிலி ப்ரெண்ட்ஸ்சும் கூட   .நாமே பேசி இவர்களின் வியாபாரத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் ” சரோஜா கமலினியின் காதில் கிசுகிசுத்தாள் .

கமலினியினுள் ஒரு பிடிவாதம் வந்தமர்ந்த்து . அது என்ன …அந்த சாரால் முடிவது என்னால் முடியாதா …? கமலினி ப்ரியம்வதாவை நகை வாங்க வைத்தே தீருவது என்ற முடிவிற்கு வந்தாள் .

What’s your Reaction?
+1
23
+1
15
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!