Serial Stories vanavil devathai Vanavil Dhevathai

Vanavil Dhevathai – 24

24

பழனிமலை ….

 

போகர் எனும் அற்புத சித்தரால் , இறைவனால் சொல்லப்பட்டு நவபாஷாணங்களால் வடிவமைக்கப்பட்ட பழனியாண்டவர் குடியிருக்கும் இடம் .நெடிந்துயர்ந்த மலை .உயர…உயரமான படிகள் …அவ்வளவு பெரிய மலையை ஏறிக்கடக்க முடியாமல்…கம்பி வட ஊர்திக்காக காத்துக்குடக்கும் ஜனங்கள் கூட்டம் .

 

நிதானமாக அநுபவித்து படியேறிக்கொண்டிருக்கிறாள் சபர்மதி .நெஞ்சம் முழுவதும் சந்தோசம் நிரப்பிக்கொண்டு , ஒரு ஓரம் வேதனை புழுவாய் குடைய கால் வலிக்க..வலிக்க ஒவ்வோர் படியாக கடக்கையில் , மனத்துயர்கள் ஒவ்வொன்றாக அந்த சரவணனின் காலடியில் உதிர்வது போன்ற பிரமை அவளுள் .மேலும் உயரம் செல்ல ..செல்ல ..உடலோடு மனமும் லேசாகி உயரே பறப்பது போன்ற உணர்வு .இக்காரணங்களால்தான் நம் முன்னோர்கள் இது போன்ற மலை  உச்சிகளில் தெய்வ சந்நிதானத்தை அமைத்திருப்பார்களோ …

 

மூச்சு இரைக்க மேலேறியவள் வேலவன் சந்நிதானத்தை நோக்கி கை கூப்புகிறாள் .கலியுக கடவுள் அல்லவா கந்தன் .அவன் நினைத்தால் சதா நெஞ்சோரம் அரித்துக்கொண்டிருக்கும் இந்த வேதனை குறைய அருள் செய்ய மாட்டானா …? சட்டென தன்னை திருத்திக்கொண்டாள் .இல்லை இது தவறு …இந்த வேலவன் அவளுக்கு நிறைய செய்திருக்கிறார் .அனாதை போல் ஐம்பதுக்கும் , நூறுக்கும் அலங்காரம் செய்து கொண்டு காமிரா முன் பல்லிளித்துக்கொண்டு நின்றவளை …இன்று முதலாளியம்மா பதவி கொடுத்து …பாசத்தை கொட்ட ஒரு குடும்பத்தையும் கொடுத்து …எவ்வளவோ செய்திருக்கிறார் .

 

இதோ அவளது கடைசி வேண்டுதலான தர்மனை சீராக்க வேண்டுமென்பதையும் நிறைவேற்றி விட்டார் .தர்மன் கடந்த பத்து நாட்களாகவே மிக தெளிந்து விட்டான் .தீபக்குமாருடன் தொழில் பார்க்க கிளம்பி விட்டான் .அவளது அனைத்து வேண்டுதல்களையும் கடந்த ஒரு வருடத்தில் நிறைவேற்றிவிட்டார் முருகன் .அதற்கான சபர்மதியின் நன்றி அறிவிப்புதான் இந்த பயணம் …மேலும் இன்று பூரணன் வருகிறான் சென்னை வந்து இரண்டு நாட்கள் தங்கி தனது வேலைகளை முடித்த பின் இன்று இங்கே .

 

பூரணனை காண விரும்பாததும் சபர்மதியின் இந்த பயணத்திற்கு ஒரு காரணம் .இவ்வளவு நாட்கள் கழித்து அவனை அருகே கண்டவுடன் அவள் மனம் மாறிவிட்டால் ….

 

வீரமும் , வலிவும் , செல்வமும் , அன்பும் கொண்ட ஒரு முழுமையான ஆண்மகன் பூரணசந்திரன் .மனதெளிவுள்ள எந்த பெண்ணும் பூரணனை வேண்டாமென சொல்ல மாட்டாள் .ஆனால் சபர்மதி சொல்ல நினைத்தாள் .

 

பூரணனின் உலக பயண காலத்தை நிலையற்று தவித்த தனது  குடும்பத்தின் வேரூன்ற உபயோகித்து கொண்டாள் .பூரணனின் ஆசையும் அதுதானே. .தவிர தனது தாய் தமயந்தியின் ஆன்மா இதனால் சாந்தியடையும் என்றும் நம்பினாள் .தள்ளி நின்று குடும்பத்தை சீர்செய்து விட்டு விலகி விடவே எண்ணினாள் .ஆனால்…

 

எந்தவொரு செயலுக்கும் எதிர்ச்செயல் உண்டே .ஆவலாக அவள் காட்டிய பாசத்திற்கு பதிலாக மூட்டை மூட்டையாக கிடைத்தன .அன்பு , பாசம் , பரிவு …….அம்மா , அப்பா, பாட்டி , அண்ணன்கள் என்று .

ஒருவர் தவமிருந்தாலும் கிடைக்காத செல்வங்கள் இவை .கொஞ்சமே கொஞ்சம் பாசம் காட்டியதால் எளிதாக சபர்மதி பெற்ற செல்வங்கள் .

 

எப்படி இவர்களையெல்லாம் விட்டு இருக்கப்போகிறேன் .சபர்மதிக்கு அந்த நிலையை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை .ஆனால் அந்த நேரம் இதோ வந்துவிட்டது .

 




அத்தனை படிகள் ஏறி வந்தது மூச்சிரைத்தது .கையில் அர்ச்சனை தட்டு கனக்க ..முருகனை தரிசிக்க நீளமாக நின்ற வரிசை மிரட்டியது .சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின்னர் வரிசையில் இணைந்து கொள்வோம் என்று எண்ணியபடி நிழலான ஒரு இடம் பார்த்து அமர்ந்த சபர்மதி சிறிது கண்களை மூடிக்கொண்டாள் .

 

மூடிய இமைகளுக்குள் வந்து நின்று அழகாக சிரித்தான் பூரணசந்திரன் .உன்னை பிரிந்தே ஆகவேண்டுமா நான் …? ஏக்கத்துடன் கேள்வி கேட்டாள் அவனிடம் .அதற்கான காரணம் அவள் முன் படமாக விரிந்தது .

 

அன்று சத்யேந்திரன் உறுதியாக பூரணன் பற்றி கூறியதில் அதனை முழுமனதாக நம்பி , பூரணனின் போனுக்காக காத்திருந்தாள் சபர்மதி .மறநாளே தனக்காக போன் வாங்கிக்கொண்டு நம்பரை தீபக்குமார் மூலம் பூரணனுக்கு தெரியப்படுத்தி விட்டு ஒவ்வொரு இரவும் பூரணனின் அழைப்புக்காக காத்திருந்தாள் .பூரணன் ஒவ்வொரு நாடாக சுற்றுவதால் , பெரும்பாலும் இங்கிருந்து யாரும் அவனை தொடர்பு கொள்வதில்லை .மேலும் இந்த நேர வித்தியாசம் வேறு .அவனே ஒவ்வொரு

வருடனும் பேசிக்கொண்டிருந்தான்.

தனக்கான நேரத்திற்காக படபடப்புடன் காத்திருந்தாள் சபர்மதி .

ஒரு வாரம் கழித்து , ஓர் இரவு ஒலித்த அவளது கைபேசியை ஆவலாக எடுத்து உலகத்து காதலையெல்லாம் குரலில் தேக்கி “ஹலோ ” என்றாள் .

 

” சந்துரு சொன்னது சரிதான் ” …இகழ்ச்சியாக ஒலித்தது ஒரு பெண் குரல் .

 

தப்பு நம்பரோ ….பெண் குரலாக இருக்கின்றதே .யார் சந்துரு ? இப்படி மண்டையை உருட்டியபடி …

 

” யாருங்க வேணும் …ராங் நம்பரா …? ” என்றாள் .

 

” நிறைய விசயங்களில் ராங் பண்ணுபவள் நீதான் ..இந்த ஸ்வாதி இல்லை …”

 

ஓ….ஸ்வாதி …இவள் எதற்கு போன் பண்ணுகிறாள் .

 

அவளது சந்துரு அழைப்பை ஜீரணிக்க முயன்றபடி ” வணக்கம் மேடம்…நல்லாயிருக்கீங்களா ? ” முறைப்படி நலம் விசாரித்தாள் .

 

” உங்கப்பன் எனக்கு படியளக்கிறான் பாரு , என்னை நலம் விசாரிக்கிற …”

 

என்ன பேச்சு இது .ஒரு நல்ல பெண் பேசும் பேச்சு இதுவல்லவே ….தனது மரியாதையை கை விட்டு ” ஸ்வாதி ” அதட்டினாள் .

 

” அட பாருடா …கோபமெல்லாம் வருது “கிண்டலடித்தாள் .

 

” ஒன்றும் விசயமில்லை என்றாள் நான் வைக்கிறேன் ….”

 

” ஏய் இரடி ….ஸ்கைப்பில் வா …உன்னோடு பேச வேண்டும் …”

 

” என்ன பேசவேண்டும் “

 

” ம் ….உன் அருமை மாமனைப்பற்றிதான் ….வா ” கட் செய்து விட்டாள் .

 

போகாதே என்று உள்மனம் அலறினாலும் …பூரணன் பற்றிய விசயமாயிற்றே …என்ற ஆசையால் உடனே வீடியோ சாட்டுக்கு போனவள் மேல் அனல் மூட்டையை அள்ளி தட்டினாள் ஸ்வாதி .

 

கேமிராவுக்கு முதலில் கிடைத்த ஸ்வாதியின் தோற்றமே வெறுப்பாக இருந்தது .நைட்டி என்ற பெயரில் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தாள் .ஹோட்டல் அறை போல் தெரிந்தது .பின்னால் தெரிந்த கட்டிலில் உடைகள் சிதறிக்கிடந்தன .பெண்ணினுடையதும் , ஆணினுடையதும் …

 

சை …என்ன பெண்ணிவள் …அருவெறுப்புடன் முகம் சுளித்தாள் சபர்மதி .

 

” என்ன உன் மாமாவை தேடுகிறாயா? போக மனமில்லாமல் இப்போதுதான் வெளியே போனான் ” கை மறைவில் கொட்டாவி வெளிப்படுத்தினாள் .” ஆனால் விரைவில் வந்துவிடுவான் .இப்படியே பெட்டிலேயே எனக்காக காத்திருன்னு சொல்லிவிட்டுத்தான் சென்றான் “

 

தொண்டை உலர்ந்தது சபர்மதிக்கு .

 

” என்ன ..என்ன சொல்கிறாய் …?”

 

” ஏன் இதற்கு மேலும் விளக்க வேண்டுமா ? கேட்க நீ தயாரென்றால் சொல்ல நானும் தயார்தான் .சொல்லட்டுமா …நேற்றிரவு ….”

 

” போதும் …போதும் …இப்போது என் ..என்னிடம் …என் ..ன்ன பேச வேண்டும் ..”

 

” இங்கே பார்…பூரணன் கண்டிப்பாக என்னை விட மாட்டான் .  எட்டு ஆண்டுகள் பழக்கம் எங்களது .தாலிதான் கட்டவில்லையே தவிர மற்றபடி நாங்கள் கணவன் மனைவிதான் .

 

அதே நேரம் உன்னை விடவும் அவனுக்கு மனமில்லை .அவன் அம்மா , உனக்கு வரும் சொத்து , உங்கள் சொந்தம் என்று என்னென்னவோ காரணம் சொல்கிறான் .அவனுக்கென்ன ஆண் …எத்தனை பெண்கள் கிடைத்தாலும் நன்றாகத்தான் இருக்கும் .

 

ஆனால் என்னால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை .இத்தனை வருடங்களாகத்தான் தாலி இல்லாமல்  சேர்ந்து வாழ்ந்தாயிற்று …இனியும் அப்படியேவா என அப்பா கேட்கிறார் .

 

தாலியெல்லாம் ஒரு விசயம் இல்லை முதலில் சபர்மதிக்கும் எனக்கும் திருமணம் நடக்கட்டும் .பிறகு உன் கழுத்திலும் ஒன்று கட்டி விடுகிறேன் என்கிறான் .சபர்மதிக்கு இது பெரிய விசயமில்லை …ஏனெனில் அவள் அம்மாவே இப்படி இரண்டில் ஒன்றாக வாழ்ந்தவர்தான் என்று கூறுகிறான் …”

 

” போதும் நிறுத்துங்கள் ” கூச்சலிட்டாள் சபர்மதி .

 

தனது தொடர் பேச்சுக்கு தடை ஏற்பட்டதால் திகைத்து நோக்கினாள் ஸ்வாதி .தலையை பற்றியபடி குனிந்திருந்தவளை பார்த்து “என்ன ஆச்சு சபர்மதி ?, உனக்கு ஒன்றுமில்லையே “

 

” வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கொண்டு போகிறீர்களே …நினைக்கவே கூசுகிறதே எனக்கு …”

 




” எதற்கு சபர்மதி …நீ ஒரு நடிகை .நீ பார்க்காதது என்ன இருக்க போகிறது .மேலும் உன் அம்மா வேறு ….”

 

” என் அம்மாவை உனக்கு தெரியாது .அவர்களைப்பற்றி பேசாதே ” கத்தினாள சபர்மதி .

 

” தெரியாமல் என்ன …சந்துருதான் சொல்லியிருக்கிறானே .சரி விடு உன் அம்மா பேச்சு பிடிக்கவில்லையெனில் விட்டு விடலாம் .நம் விசயத்திற்கு வா …உன்னை முதலில் திருமணம் செய்தாலும் , முதல் மனைவி நான்தான் .அந்த உரிமை எனக்குத்தான் வேண்டும் .என்னை திருமணம் முடித்ததும் நீ உன் அன்னை போல் எங்காவது ஒதுங்கி விட வேண்டும் .

 

நீ அவ்வாறு ஒதுங்கி விடுவாயென சந்துரு உறுதியளித்தாலும் , எனக்கு உன் வாயால் உறுதி வேண்டும் .அதற்காகவே உன்னை தொடர்பு கொண்டேன் .இதற்கு சம்மதம் தானே “

” முருகா …வேலவா …என்ன நடக்கிறது இங்கே …சபர்மதிக்கு கண்கள் இருண்டு மயக்கம் வருவது போல் இருந்தது .

 

” ஸ்வாதி என்ன பண்ற …உன்னை தூங்கி ஓய்வெடுன்னுதானே சொல்லிட்டு போனேன் …” சந்தேகமின்றி பூரணசந்திரன் குரல் .”இதோ பதிலளித்தபடி ” சாட்டிங்கை அணைத்தாள் ஸ்வாதி .

 

கம்ப்யூட்டர் திரை இருண்டு கிடந்தது சபர்மதி வாழ்வு போல் .

 

வரிசை நீளம் குறைந்திருக்க எழுந்து சென்று வரிசையோடு நின்று கொண்டாள் சபர்மதி .மெலல நகர தொடங்கியது வரிசை .சபர்மதியின் மனமும் ….மெல்ல பின் நோக்கி …

 

மறுநாள் போனில் பேசினாள் ஸ்வாதி .

 

” சாரி சபர்மதி நேற்று சந்துரு வந்துவிட்டானா …அதனால்தான் …உடனே வெளியே சென்று விடுவானென நினைத்தேன் .ஆனால் என்னை அப்படி பெட்டில் பார்த்ததும் போகவே மனமில்லையென்று …..”

 

” போதும் இதை சொல்லத்தான் கூப்பிட்டாயா …..நான் சொல்வதை நன்கு கவனி .இப்படி ஒரு வாழ்வு எனக்கு தேவையில்லை .நான் விலகிக்கொள்கிறேன் .நீயே பூரணனை மணந்து கொள் ” சொல்லி முடிப்பதற்குள் படாத பாடு பட்டு விட்டாள் சபர்மதி .

 

” ம் …நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் …நடக்காதே ..”

 

“ஏனோ உனக்கு என்ன குறை …அழகுபடிப்பு , பணம் ….”

 

” ஆனால் நான் உன் சாதியில் பிறக்கவில்லையே ….”

 

” பூரணன் சாதி பார்க்க மாட்டார்.”

 

” அவன் அம்மா பார்ப்பாரே ….இவன்  அம்மாவை பார்க்கிறானே ….”

 

இதனை மறுக்க முடியவில்லை சபர்மதியால். சுந்தரவடிவு சாதி பார்க்கிறவர்தான் .பூரணனும் அம்மாவை பார்க்க கூடியவன் .

 

” இதற்கு என்னதான் வழி …” எரிச்சலடைந்தாள் சபர்மதி .

” நான்தான் சொன்னேனே …நான் சொன்னது போல் கல்யாணமென்று ஒன்று செய்து கொண்டு ஊரோடு ஒதுங்கி விடு ….பிறகு ….”

 

” அப்போது மட்டும் உன்னை பாட்டி ….அவரது அம்மா …ஏற்றுக்கொள்வார்களா …” கிண்டலுடன் கேட்டாள் சபர்மதி .

 

” மாட்டார்கள்தான் ….ஆனால் அவர்கள் ஆயுள்தான் எவ்வளவு நாள் இருக்கும் ….”

 

எப்படி பேசுகிறாள் பார் …மனதிற்குள் கசந்தபடி , “இங்கே பார் வளவளவென பேசாதே …நான் விலகிக்கொள்கிறேன் .நீ உன் இஷ்டம் போல் …..”

 

சிரித்தாள் ஸ்வாதி ….” இதனை நான் நம்ப வேண்டுமா ….? இத்தனை வசதியையும் முக்கியமாக பூரணனையும் விட்டுவிட்டு நீ போய்விடுவாயா…? “சவாலாக கேட்டாள் .

 

” நிச்சயமாக மானம்தான் எனக்கு முக்கியம் .இந்த வசதி இல்லை .”

 

” சொல்லிக்கொண்டே உட்கார்ந்திருப்பாய். அதற்குள் உன் வீட்டு ஆட்கள் உன்னை பூரணனுக்கு திருமணம் முடித்து விடுவார்கள் ….” கேலி செய்தாள் .

 

” அப்படி நடந்து விட்டால் என் கணவனை அடுத்தவளுக்கு விட்டு கொடுத்து விட்டு நான் விழித்து கொண்டிருக்க மாட்டேன் …” உறுதியாக கூறினாள் சபர்மதி .

 

” ஓஹோ …அப்படி ஒருவேளை உங்கள் திருமணம் நடந்து விட்டால்

சந்துருவின் வாழ்வை நான் சிதைத்து விடுவேன் …” குரூரம் கொப்பளித்தது ஸ்வாதி குரலில் .

 

” என்ன சொல்ற ..” பதறினாள் சபர்மதி .

 

” என் தயவில்தான் அவன் இங்கு வந்துள்ளான் நினைவிருக்கட்டும் .என் வருங்காலம் அவன் என்றுதான் என் தந்தை வாயிலாக இவ்வளவு ஏற்பாடுகளும் செய்கிறேன் .அப்படியில்லை என ஆனால் …அவனை , அவன் தொழிலை , அவன் வாழ்க்கை லட்சியத்தை அடியோடு அழித்து விடுவேன் .பிறகு அவன் உங்கள் வீட்டில் ஒரு பைத்தியக்காரன் சுற்றிக்கொண்டிருக்கிறானே…..அதே போல் சட்டையைக்கிழித்து போட்டுக்கொண்டு …..”

 

” வேண்டாம் …” அலறிவிட்டாள் சபர்மதி .

 

சுற்றிலும் அரோகரா கோசம் காதை பிளந்தது .இந்த பக்தர்களின் கசகசப்பையும்  , சுற்றி ஒலிக்கும் அந்த பழனியாண்டவனின் நாமாவளியையும் தாண்டி …அந்த ஸ்வாதியின் அன்றைய வார்த்தைகள் இப்போதும் சபர்மதியை நடுங்க செய்தன .

 

இப்போது தகப்பன்சாமியின் திருவுருவம் கண்ணுக்கு தெரிய தொடங்கியது .கவலைகள் கரைய தொடங்கின .

 

தலையை உலுக்கிக்கொண்டாள் .இல்லை அப்படி நடக்காது , நான்தான் பூரணனை பிரிந்து விட போகிறேனே .இதோ இன்று கூட அவரைக்காண கூடாதென்றுதான் , முருகனை காண வந்துவிட்டேன் .

 

அவர் இப்போது எஸ்டேட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாராட்டு விழாவில் பேசிக்கொண்டிருப்பார்.பிறகு அம்மா அக்கா. என ஒவ்வொரு நொந்தங்களிடமும் தான் பிரிந்திருந்த நாட்களுக்கான ஈடு கொண்டிருப்பார் .நான் …என்னை யாராவது நினைப்பார்களா …பூரணன் நினைப்பாரா …எங்கே இப்போது கடந்த மூன்று மாதங்களாக போனில் கூட பேசவில்லை .தந்தி போல் ஒரு மெயிலோடு சரி ….

 

அவர் நினைத்தாலும் அந்த ஸ்வாதி அவரை நினைக்க விடுவாளா ….? ஏதேதோ எண்ணங்கள் ….சபர்மதியினுள் …

 

ஆனால் வேலவனின் திருவடியை கண்டதும் வேதனைகள் பறக்க வாய் தானாக அரோகரா சொன்னது ….

 

அர்ச்சனை கூடையை ஐயரிடம் கொடுத்தவள் , பாட்டி , அப்பா , அம்மா ,அண்ணன்கள் ,பெயர் நட்சத்திரம் சொன்னவள் இறுதியாக பூரணனின் பெயரையும் கூறி அர்ச்சனை கூடையில கை வைத்த போது ….அவள் மென் கரங்களின் மேல் படிந்தது வலிய கரமொன்று .

 

“கூடவே சபர்மதி மகர ராசி …திருவோண நட்சத்திரம் சேர்த்துக்கோங்க சாமி ….” என்று ஐயரிடம் கூறி விட்டு , சபர்மதியிடம் திரும்பி ….

 

” இப்படி என் கூட வந்து நில்லும்மா , நாம் கணவன் , மனைவியா இரண்டு பக்கமும் மறைச்சி நின்னுக்கிட்டா , மத்தவங்களும் சாமி தரிசனம் பண்ணனுமில்லையா…என்றபடி இயல்பாக அவள் தோள்களை தொட்டு தன்புறம் அழைத்துக்கொண்டவன்   பூரணசந்திரன் .

 

ஸதம்பித்து நின்று கொண்டிருந்தாள் சபர்மதி .

 

What’s your Reaction?
+1
2
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!