kadak katru Serial Stories

Kadal Kaatru – 26

                                              ( 26 )

உயர்ந்து நின்றிருந்த அந்த கலங்கரை விளக்கம்  மனதிற்குள் நிறைய தன்னம்பிக்கையை விதைத்தது .என்னைப் போல் உயர முயற்சி செய் என அறிவுறுத்தியது .

நம் முன்னோர்கள் மலைகளின் மேலும் , குன்றுகளின் மேலும் கோவில்களை கட்டியதற்கு இதுதான் காரணமாம் .அந்த உயர்ந்த இடம் தானும் இப்படி உயர வேண டுமென்ற உணர்விகளை மனிதர்களிடம் தோற்றுவிக்குமாம் .இதனால் இது போன்ற உயர்ந்த இடங்களில் அமைந்துள்ள கோவில்கள் நமக்கு பாஸிட்டிவ் எனர்ஜிகளை அதிகம் தோற்றுவிப்பதாக இன்றைய விஞ்ஞானம் கூட கூறுகிறது .

மேலே ஏறிப் பார்க்க வேண்டும் போல் தோன்ற , டிக்கெட் எடுத்தாள் சமுத்ரா .அந்த டிக்கெட் கொடுப்பவன் மரியாதையோடு நாற்காலியிலிருந்து எழுந்து நின்று இவளுக்கு டிக்கெட் கொடுத்தான் .இவர்கள் திருமணம் முடிந்த இந்த ஒரு வாரமாகவே பரவலான இந்த மரியாதை அந்த ஊர் முழுவதுமே சமுத்ராவிற்கு கிடைத்தது .முதலாளியம்மா என்ற மரியாதையோடு .

சமுத்ராவிற்கு ஏனோ இது அசௌகரியமாகவே தோன்றியது .இந்த முதலாளியெனும் மரியாதை அவளுக்கு புதியது . இது தனது வேலையை பாதிப்பதாக வே அவள் எண்ணினாள் . எனவே இந்த மரியாதைகளை அவள் வெறுத்தாள் .

சிறு மூச்சு வாங்கலுடன் படியேறி உச்சியை அடைந்தாள் சமுத்ரா .மேலே காற்று அள்ளிக் கொண்டு போனது .கீழே போல் அசுத்தங்களை வாரி வீசும் காற்றல்ல .ஆகாய சுத்தங்களை அருகாமை கொண்டதொரு அருமையான காற்று .ஆவலாய் உள் ளிழுத்து நுரையீரல் நிரப்பிக் கொண்டாள் .

இந்த பூமியே தன் காலடியில் கிடக்கும் கர்வமொன்று எழுந்த்து மனதில் .கவலைகளையும் , கிலேசங்களையும் வெளித் தள்ளி விட்டு சுத்தமான மனதுடன் கீழேயிறங்கினாள் .

இந்த கலங்கரைவிளக்கம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கடல் வணிகத்திற்காக அவர்களால் நிறுவப்பட்டது .பிறகு இந்தியர்களால் சீரமைப்பு செய்யப்பட்டது .சிலகாலம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களால் மக்களின் பார்வைக்கு விடாமல் மூடிவைக்கப்பட்டிருந்த்து .சமீபகாலமாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது .விவரங்களை தனது போனில் குறித்துக் கொண்டாள் .

கலங்கரைவிளக்கத்தை விட்டு வெளியேறியவுடனேயே  அவளருகே கார் வந்து நின்றது .இதுதான் …இந்த கவனிப்புதான் அவளை எரிச்சலுற வைக்கிறது .அதோ அந்த பிளாட்பார கடைகளில் தனது சுடிதாருக்கான பிளாஸ்டிக் கம்மல்களை பொறுக்கும் எண்ணத்திலிருந்தாள் அவள் .ஆனால் இப்படி காலைச் சுற்றும் காரை வைத்துக் கொண்டு எங்கே போவாள் ?

இருக்கட்டும் இன்று அவன் எனக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் .இது விசயம் மட்டுமல்ல சமுத்ராவிற்குத்தான் யோகனிடம் பேச நிறைய விசயங்கள் இருந்தனவே .ஆனால் அவனோ அவளிடம் அகப்படாமல் சதா பறந்து கொண்டேயிருந்தான் .

தென்னந்தோப்பு , செங்கல் சூளை , மீன, கருவாடு வியாபாரம் என பல தொழில்கள் அவனுக்கிருப்பதை சமுத்ரா அறிவாள் .இன்னமும் சாராயம் காய்ச்சுவது , பழம் பொருட்களை திருடி ( ? ) விற்பது போன்ற சட்ட விரோதமான தொழில்கள் கூட .இடையில் இந்த பஞ்சாயத்து , பேச்சுவார்த்தைகள் வேறு .

இதனால் அவனது நேரங்கள் பொதுவாக பரபரப்படனேயே கழியும் .காலை உணவை முடித்து வெளியே செல்பவன் மதிய உணவிற்கு பெரும்பாலும் வீட்டிற்கு வருவதில்லை .இரவும் எட்டு மணி போல் வீட்டிற்கு வருபவனை தவறாமல் அழைத்து கொண்டுவிடும் அந்த போன்கால் .

அதன்பிறகு கணமும் வீட்டில் தாமதிக்காமல் அங்கே ஓடிவிடுவான் .அதிகாலை வீட்டிற்கு வருபவன் தனது குறை தூக்கத்தை அவர்கள் மாடியறையின் சோபாவில் தொடரவோ அல்லது தனது லேப்டாப்பை திறந்து வைத்து வேலை பார்ப்பதோ …ஏதோ ஒன்று செய்வான் ..பிறகு …மீண்டும் காலில் சக்கரம் கட்டாத குறைதான் .இதில் அவனுடன் எங்கே பேச .?




இருவரும் பேச நேரம் கிடைப்பதே உணவு மேஜையில் தான் .வீட்டு பெண்கள் மூவரும் கண் கொத்தப் பாம்பாய் இவர்களை கவனித்நுக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் என்ன பேச ?

முதலில் இவன் தன் கேள்விகளிலிருந்து தப்பவே இவ்வாறு ஓடுகிறானென நினைத்தாள் சமுத்ரா .ஆனால் இரண்டே நாட்களில் அவன் வேலையின் நெருக்கடிகளை உணர்ந்து கொண்டாள் .இதனாலேயே எந்த நேரம் எவ்விதமாக அவனிடம் பேசுவதென தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் .

” அண்ணா இன்னைக்கு இந்த வெள்ளைப் பணியாரம் செய்தேன் .சாப்பிட்டு பாருங்களேன் …” இவளுக்கு உதடுகளுக்கு பதிலாகவும் பற்களே முளைத்து விட்டதோ ? என ஐயமுறும் அளவுக்கு இளித்தபடி யோகனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள் மேகலை .

” இந்தாங்கக்கா எடுத்து போட்டுக்கோங்க ” பதார்த்த பாத்திரத்தை அவள்புறம் தள்ளினாள் .மீண்டும் யோகனின் தட்டில் கவனமானாள் .

” உனக்கு நான் அக்கா …அவர் அண்ணாவா …? என்ன உறவு இது ..” எரிச்சலுடன் கேட்டாள் சமுத்ரா .

” அப்போ இனி அண்ணனை மாமான்னு கூப்பிட்டுறேன் ….சரியாண்ணா …? ” என்றபடி யோகனை பார்த்தாள் .

ஏதோ சிந்தனையுடன் பணியாரத்தை பிய்த்தபடி இருந்தவன் தலையாட்டினான் .மேகலையின் புருவங்கள் சமுத்ராவிடம் உயர்ந்தன .

” என்ன தலையாட்டல் …?பூம் பூம் மாடு மாதிரி .சுத்தி என்ன நடக்குதுன்னு ஏதாவது தெரியுதா இல்லையா ..? ” அவனிடம் எகிறினாள் சமுத்ரா .

” என்ன சமுத்ரா …நான் வேறு யோசனையில் இருக்கிறேன்மா .என்ன விசயமானாலும் பிறகு பேசலாமே …” சலிப்பு அவன் குரலில் .

தன் தட்டிலிருந்து நிமிர்ந்து சமுத்ராவை  ஒரு கேலிப்பார்வை பார்த்துவிட்டு குனிந்து கொண்டாள் செல்வமணி .

அந்த பார்வை வேறு கடுப்பேற்ற ,பிறகு …அந்த பிறகு எப்போது வருமென்றுதான் தெரியவில்லயே .” அதெல்லாம்  முடியாது .இந்த விசயமும் இப்போதே பேசியாக வேண்டும் …” உறுதியாக கூறினாள் .

” என்ன …என்ன விசயம் …பேச வேண்டும் ..?” யோகனின் குரலில் இழுத்துப் பிடித்த பொறுமை .

” இவள் ….இவளை என்ன செய்ய போகிறீர்கள் …?” மேகலையை சுட்டினாள் .

” என்ன செய்ய வேண்டும் …?”

” இவள் வயதென்ன ? எத்தனை நாளைக்கு இப்படி வீட்டினுள் வைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள் ..?”

இந்த கேள்வியில் எதிரிலமர்ந து சாப்பிட்டு கொண்டிருந்த செல்வமணி , அந்த அறையில் ஓரமாக அமர்ந்து உண்டு கொண்டிருந்த மயில்வாகன்ன் , அவர் உண்ண உதவிக் கொண்டிருந்த புவனா ,அனைவரும் அப்படியே அதிர்ந்து நின்றனர் .

மேகலையோ ….ஒரு ஜடப்பொருளாய் சுருண்டு நின்று விட்டாள் .

” சமுத்ரா …வார்த்தைகளை யோசித்து பேசு .அவள் என் தங்கை போல. அவள் இங்கேதான் இருப்பாள் ” அனல் வீசும் உறுதி யோகனின் குரலில.

” சரிதான் ..ஆனால் தங்கையை இப்படித்தான் சமையலறையிலேயே அடைத்திருப்பீர்களோ …?….ஏன் … உங்கள் அக்கா ….? ” என முடிக்காமல் நிறுத்திவிட்டு செல்வமணியை ஒரு பார்வை பார்த்தாள் .

அவளுக்கு திக்கென்றது .இப்போது இவள் என்ன சொல்ல வருகிறாள் ? அக்கா வெட்டியாக உட்கார்ந்து தின்கிறாளென்றா ? அதெப்படி ஒரே பந்தில் இரண்டு சிக்ஸர் அடிக்கிறாள் .இப்படி எண்ணம் ஓடியது செல்வமணிக்கு .

பாரேன் இந்த பெண்ணின் தைரியத்தை .இதில் இரண்டு சதவிகிதமாவது எனக்கிருக்குமா …? ம் …? என ற ஏக்கப் பெருமூச்சு புவனாவிற்கு .

” சமுத்ரா …” மீண்டும் அதட்டினான் யோகன் .

” என்னை ஏன் அதட்டுகிறீர்கள் ? படிக்கிற வயதில் இந்த பெண்ணை வீட்டினுள் வைத்து வேலை வாங்குகிறீர்களே என்று சொன்னேன் …” என்றாள் .

” படிக்கிற வயதா …?”

” பின்னே இல்லையா ? நம் மேகலை ப்ளஸ் டூவில் மிக நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தாளே .நான் அவள் மார்க் ஷீட் பார்த்தேன் .ஏன் அவளுக்கு பிடித்தமான ஒரு படிப்பை நாம் தேர்ந்தெடுத்து அவளை படிக்க வைக்க கூடாது …?”

யோகன் யோசிக்க தொடங்கினான் .அதனை பார்த்ததும மேகலை கத்தினாள் .” இல்லை நான் படிக்க மாட்டேன் .இங்கிருந்து எங்கேயும் போக மாட்டேன் “

தோள்களை குலுக்கியபடி எழுந்து  ” இனி அண்ணன் பாடு …தங்கை பாடு …” என்றபடி போய் கை கழுவினாள் சமுத்ரா .

” அண்ணா வேண்டாமண்ணா .என்னை படிக்கவென்று எங்கேயும் அனுப்பி விடாதீர்கள் .இந்த அக்கா என்னை வீட்டை விட்டு விரட்ட வேண்டுமென்றே இப்படி ஏதாவது கூறுகிறார்கள் …” என யோகனிடம் அழுகையை ஆரம்பித்திருந்தாள் மேகலை .

அப்படியிருக்குமோ …?எனும் யோசனையுடன் தன் மேல் படிந்த யோகனின் பார்வையை கண்டு கொள்ளாமல் முன்னறைக்கு நடந்தாள் சமுத்ரா .

இன்று செல்லி காலேஜ் ஹாஸ்டலில் சேரப் போகிறாள் .அவள் வீட்டிற்கு நேரே சென்று அவளைவழியனுப்ப எண்ணினாள் சமுத்ரா . மேலும் அப்போது அவள் அன்னை சாயாதேவியிடம் ஏதேனும் விசயங்களை கிளறலாமோ ..?என்றொரு எண்ணமும் அவளுக்கிருந்த்து .

எனவே யோகன் வருவதற்குள் கிளம்பி விட வேண்டுமென எண்ணியபடி வந்தாள் .

” அக்கா …” ஆவலாய் அழைத்த குரலுக்கு திரும்பியவள் மலர்ந்தாள் .

” செல்லி …வா …வா …உன்னைப் பார்க்கத்தான் கிளம்பிக் கொண்டிருந்தேன் …”

” உங்களுக்கு சிரமம்  வேண்டாமுன்னுதான் நானேவந்திட்டடேனுங்க்க்கா ..”

” இதிலென்னம்மா சிரம்ம் ? உங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன் .அப்படியே உன் அம்மாவையும் ….”

” வேண்டாங்க்க்கா …அதனாலதான் நானே வந்தேன் ….” துயரம் அக்குழந்தை குரலில் .” அம்மா உங்களை எதுனாச்சும் சொல்லிடும் .எனக்கு கஷ்டமா இருக்குங்கா …”

” சரிம்மா விடு …இப்போ உன் அப்பா , தம்பியெல்லாம் என்ன சொல்றாங்க ? அவுங்களுக்கெல்லாம் சந்தோசம்தானே …”

” ம் …நிறைய ….இன்னைக்கு காலையில அப்பா கூட ரொம்ப உணர்ச்சி வசப் பட்டுட்டாரு .கண்ணெல்லாம் கலங்கிடுச்சு .எனக்கு தெரியாமல் தொடச்சுட்டாரு .என்னை பிரியிற சோகம் அவருக்கு …” செல்லியின் குரலில் ஒரு நெகிழ்வான சந்தோசம் .

பரவாயில்லை அந்த மட்டும் சாயாவிற்கு நல்ல கணவனை கொடுக்கவில்லையென்றாலும் , இந்த குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவைத்தான் தேர்ந்நெடுத்திருக்கிறான் .யோகனின் செயலில் சிறு திருப்தி சமுத்ராவிற்கு .




” அக்கா காலேஜ் எப்படியிருக்கும் …? ஹாஸ்டல் எப்படி என்று சொல்றீங்களாக்கா …?எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கே ……?”

” பயப்பட ஒண்ணுமில்லைம்மா .நான் உனக்கு எல்லா விபரமும் சொல்றேன் ” செல்லியின் கைகளை பற்றிக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள் .

மிக தெளிவாக , நம்பிக்கையூட்டும் விதமாக அவளுக்கு கல்லூரி வாழ்க்கையை விவரிக்கலானாள் .வாய்தான் செல்லிக்கு பாடம் எடுத்ததே தவிர மனமென்னவோ ..உள்ளறையையே சுற்றி வந்த்து .

அங்கே மேகலை யோகனிடம் எப்படியெல்லாம் அழுது மாய்மாலம் செய்கிறாளோ …?யோகன் அதைக் கேட்டு என்ன சொல்வானோ ? ஒரு வேளை என் மேல் மிகவும் கோபமாக இருப்பானோ …?

ஆமாம் …அப்படித்தான் என்றது யோகனின் வேக நடை .ஏதோ செய்து முடித்து விடும் வேகத்துடன் வந்த நடை செல்லியை பார்த்ததும் தயங்கியது .

அவனைக் கண்டதும் ” வணக்கம் ஐயா ” என எழுந்த செல்லியை அமரும்படி கை காட்டிவிட்டு அருகில் வந்தான் .

எழுந்த செல்லியின் கைகளை பற்றி மீண்டும் அவளை அமர வைத்தபடி , இவன் இப்போது கண்டிப்பாக அருகில் வந்து என்னை அடிக்கத்தான் போகிறான் என நினைத்தாள் சமுத்ரா .

” என்னம்மா காலேஜ் கிளம்பிட்டீங்களா …? என்று செல்லியிடம் கேட்டபடி சமுத்ராவின் அருகே அவள் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடியிலேயே அமர்ந்தான் .

” ஆமாங்கய்யா …” என பதிலளித்த செல்லிக்கு பஸ் …பயண விபரங்கள போன்றவற்றை விவரிக்க துவங்கினான் ..கைகளை சமுத்ராவின் பின்புற சோபாவில் படிய வைத்தபடி கிட்டத்தட்ட அவளை சிறைப்படுத்தினான் .
தன் கைகளால் செல்லியின்கைகளை பற்றியிருந்த்தால் சட்டென கைளை விலக்கி எழ முடியாமல் தவித்திருந்தாள் சமுத்ரா .

”  இது உனக்்கு , உங்க அப்பாக்கும்  சென்னை டிக்கெட்மா .நீங்க மூணு மணிக்கு தயாராக பஸ்ஸடாப் வந்திடுங்க .அங்கே உங்க அக்கா வருவாங்க உங்களுக்கு விடை கொடுக்க ” என முடித்தான் .

” ஐயா ….” தயங்கினாள் செல்லி ….என்னோட மத்த ப்ரெண்ட்செல்லாம் …..்” இழுத்தாள்.

” பார்க்கலாம்மா ….நான் ஏதாவது செய்யுறேன் ” என்றான் .சந்தோசமாக சென்றாள் அவள் .

” இவளுக்கு பணம் கொடுத்த மாதிரியே மற்ற பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டியதுதானே .” அவன்புறம் திரும்பி கேட்டாள் .

” என்னத?……..விளையாடுகிறாயா …? இவளுக்கே எவ்வளவு செலவானதென்று உனக்கே தெரியும் .இன் னும் எல்லாருக்கும் என்றால் ..ஐயோ …வேண்டாம் தாயே …நமக் கு தாங்காது ” என்றான் .

” அதுதான் அந்த கலைப்பொருட்களை திருடி விற்பதிலும் , சாராயம் காய்ச்சுவதிலும் லட்சம் லட்சமாக சம்பாதிப்பீர்களே …? அதை கொஞ்சம் இப்படி புண்ணிய வழியில் செலவழிப்பது …?” பட்டென கூறிவிட்டாள் .

” என்ன சொன்னாய் ? “

நாக்கை கடித்துக் கொண்டாள் .சும்மாவே மேகலை வேறு ஆத்திரம் வரும்படி என்னென்ன சொல்லி வைத்தாளோ ? இதில் நான் வேறு வாயை சும்மா வைத்துக் கொள்ளாமல் ….உளறிக்கொண்டு …

” உள்ளதை சொன்னேன் …” என்றுவிட்டு எழ முயன்ற சமுத்ராவினால் அது முடியவில்லை .அவள் காதுகளை இறுக பற்றியிருந்தான் யோகன் .அவள் எழ முயற்சித்தாள் காது இழுபட்டு வலித்தது .

” திரும்ப சொல்லு …” காதுகளை பற்றி அவளை தன்புறம் இழுத்தான் யோகன் .

” நான் …நடப்பதைத்தானே சொன்னேன் ….நீங்கள் செய்யும் வேலை சட்டவிரோதமானதில்லையா …?அதை ஏன் செய்கிறீர்கள் ..? ஆ…ஆஆ…வலிக்கிறது ்காதை விடுங்கள் .”

” அரசாங்க அனுமதி வாங்கி செய்யும் எந்த வேலையும் தவறானது இல்லை  சமுத்ரா ….”

” அப்படியானால் …? “

” இந்த பழம்பொருட்கள் சேகரிப்பிற்கு அரசாங்க அனுமதி வாங்கிக் கொண்டுதான் செய்கிறேன் .இதற்கு எனக்கு லைசென்ஸ் இருக்கிறது .” இழுத்துக் கொண்டு எழும் முயற்சி சமுத்ராவிடம் இல்லாததால் யோகனின் கைகள் இப்போது அவளின் காது மடல்களை வருடியபடி இருந்த்து .

ஏனோ பெரிய மனநிம்மதி சமுத்ராவினுள் .எப்படியோ சட்ட விரோதமான செயலொன்றை அவன் செய்யவில்லை .தன்னையறியாமல் அவளிடமிருந்து நிம்மதி பெருமூச்சொன்று எழுந்த்து .அந்த நிம்மதி அவள் முகத்தை மலரச் செய்த்து .

விநாடியில் மலர்ந்த அவள் பூ முகத்தை பார்த்தபடி ” மேகலை …நிச்சயம் இந்த வீட்டை விட்டு செல்லத்தான் வேண்டுமா முத்ரா ..?” எனக் கேட்டான் .அவன் குரலில் எதிர்ப்போடு கூடிய ஆட்சேபம் இருந்த்து .

கண்டிப்பாக போக வேண்டும் , போகாமல் விட மாட்டேன் , போகவில்லையென்றால் நடப்பதே வேறு ….இப்படியெல்லாம் பழுக்க காய்ச்சிய இரும்பென பதில் கூற நினைத்தாலும் , ” அவள் படிப்பு …எதிர்காலம் …? இவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டுமில்லையா ..? ” தேவையான எதிர்ப்பின்றி ஏனோ குழைந்த்து சமுத்ராவின் குரல் .

இப்போது இப்படி கொஞ்சு மொழி பேசிக் கொண்டிருப்பது யார் ..? என திகைத்து அது தனது குரல்தான் என்பதனை நம்ப முடியாமல் விழித்த சமுத்ராவின் முகத்தருகே , திருப்தியான மனநிலையோடு காணப்பட்ட யோகனின் முகம் தென்பட்டது .

” என்ன இவன் …எப்போது இவ்வளவு பக்கத்தில் வந்தான் …?” என்று எண்ணும்போதே காதினை வருடிய அவன் கை இளஞ்சூட்டில் விதிர்த்தாள் .அவசரமாக அவனை விட்டு எழுந்தாள் .சை …என்ன இது நடுவீட்டில் இப்படி அமர்ந்துகொண்டு , உள்ளே நுழையும் யார் கண்ணிலும் இந்த நெருக்கம் படலாம் .இவனை….

” முத்ரா …” என்ற குழைவான குரலுடன் அவள் புறம் நீண்ட அவன் கைகளை தட்டிவிட்டாள் .

” விருப்பமின்றி ..தொடுவதில்லை …அது …இதுவென கதாநாயகன் போல  வசனம் பேசினீர்களே …? இப்போது ஒரு மட்டமான வில்லனைப் போல் நடுவீட்டில வைத்துக் கொண்டு என்ன அசிங்கம் …சீச்சி ….” வேகமாக வெளியேறினாள் .யோகனின் முகத்தில் மென்மை மறைந்து கடுமை குடியேறியது .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!