Serial Stories கோகுலம் காலனி

கோகுலம் காலனி-8

8

” கரண்டி பிடிப்பது அவ்வளவு கேவலமான வேலையா ராகவி …? ” நந்தகுமாரின் ஆழ்ந்த கேள்விக்கு அலடசியமாக உதட்டை சுளித்தாள் .

” ஆண் பிள்ளை செய்கிற வேலையா அது …? ” 

சுழிந்த உதடுகள் நந்தகுமாரின் இரு விரல்களால் பற்றப்பட்டன .வலிக்கும்படி அழுத்தப்பட்டன.

” ஷ் …ஆ…விடு என்னை …உன்னைப் பற்றி தெரியாது என்று நினைத்தாயா …? பாரினில் வேலை என்று நீயும் உன் அம்மாவும் இங்கே பெருமை பீற்றிக் கொண்டு அலைகிறீர்களே ….அங்கே ஹோட்டலில் சமையல் வேலைதானே பார்த்துக் கொண்டிருந்தீர்கள் நீயும் உன் அப்பாவும் .அன்று இரவு நீயும் உன் அம்மாவும் பேசிக் கொண்டிருந்த்தை நான் கேட்டுவிட்டேன் .தொடர்ந்து என்னை மிரட்டினாயானால் உன் வேலையை நம் காலனிக்குள் போட்டு உடைத்து விடுவேன் ” 

அவள் உதட்டோடு சேர்த்து அவள் முகத்தை அழுத்தி பின்னால் தள்ளினான் .

” செய்யும் வேலையை வைத்தா ஆண் பெண்ணென பிரிக்கிறார்கள் ..? அப்படியே அதனை பெண் பிள்ளை வேலையெனக் கொண்டாலும் , நீ எத்தனை முறை அதை செய்திருக்கிறாய் …? தினமும் …வாரம் ஒரு முறை …மாதம் ஒரு முறை …? ” 




ராகவி உதட்டை கடித்தபடி மௌனமானாள் .

” உன் அம்மாவிற்கு உதவியாக உன் வீட்டில் எத்தனை முறை சமைத்திருக்கிறாய் …? ” ” உன் ” னில் அதிக அழுத்தம் கொடுத்து கேட்டான் .

” என் அம்மா அதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள் . நாம் மட்டுமாக இருக்கும் இந்த நேரத்திலும் என் அம்மாவிற்கு ஜால்ரா போடும் இந்த பேச்சு ஏனோ …? ” நக்கல் வழிந்த்து ராகவியிடம் .

” ஜால்ரா போடும் குணம் என்னுடையதில்லை .அந்த அவசியமும் எனக்கு இல்லை .நான் உன் அம்மாவை பற்றி அன்று சொன்னதெல்லாம் உண்மைதான் .உங்கள் வீட்டில் உன் அப்பாவோ , பிள்ளைகள் நீங்கள் இருவருமோ உங்கள் அம்மாவை… வீட்டிற்கான , உங்களுக்கான   அவருடைய வேலைகளை உணர்ர்ந்திருக்கவில்லை .நீங்கள் மட்டுமில்லை . நம் நாட்டில் பெரும்பான்மையான குடும்பங்களில் அப்படித்தான் இருக்கிறார்கள் .அம்மா என்றால் அடுப்புத் துணியோடு அடுக்களைக்குள் நிற்பதுதான் அவர்கள்  வேலை என நினைக்கிறார்கள் .அப்படியே நடத்துகிறார்கள். அப்படி எங்கள் வீடும்  இருக்க கூடாது என்றுதான் என் அம்மாவை நான் எங்கள் வீட்டு சமையல் அறைக்குள் அதிகம் விடுவதில்லை .அவர்களுக்கும் சேர்த்து நானே சமைக்கிறேன் .  அவர்களுக்கும் தனி மன ஆசைகள் இருக்குமே . இளமையில் பூர்த்தியாகாத சில கனவுகள் இருக்குமே .அவற்றை இயன்ற அளவு இப்போது முடித்துக் கொடுக்க முயல்கிறேன் .பணமின்றி கானலாக போன என் அம்மாவின் இளமை காலத்தை இப்போது மீட்டு தர முயல்கிறேன் .   .நான் சந்திக்கும் குடும்பங்களில் எல்லாம்  நான் இந்த  மாற்றத்தை  முயல்வேன் .அதையேதான் உங்கள் குடும்பத்திலும் முயன்றேன் …” 

நந்தகுமாரின் நியாயத்தில் ராகவி வாயடைத்து போனாள் . சுந்தராம்பாளின் திடுமென மாறிவிட்ட சுபாவத்தின் நியாயம் புரிந்தாற் போலிருந்த்து .இவன் …பெண்மையை போற்றுபவன் ….தாயை மதிப்பவன் ….குடும்பத்தை பேணுபவன் .நந்தகுமார் ராகவியின் மனதில் படபடவென உயர்ந்தான் .

” ஏதோ தொழில் ஆரம்பிக்க போவதாக ….அது என்ன தொழில் …? ” ராகவியின் குரல் தடுமாற அவள் விழிகள் கேள்ஙியாய் அவன் முகத்தில் பதிந்த்து .

” சாப்ட்வேர் கம்பெனி ” 




அவன் நக்கல் பதிலில் திகைத்தாள் .

” பிசினஸ் என்றால் இப்படித்தான் நினைத்தாயோ …?  என் வேலையை நான் கேவலமாக என்றுமே நினைத்ததில்லை .அப்பா ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்தார் .அது அவருக்கு பிடித்தமான வேலை . ஹோட்டலில் சர்வர் வேலைக்காகத்தான் மலேசியா போனார் .அங்கே திறமையால் முன்னேறி ஹோட்டல் குக்காக உயர்ந்தார் .அப்பாவை போன்றே எனக்கும் சமையலில் தான் இன்ட்ரெஸ்ட் .நான் படித்ததும் கேட்டரிங்தான் .அப்பாவின் முயற்சியால் மலேசியாவில் என் படிப்பிற்கேற்ற வேலை பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் கிடைத்தது . மூன்றே ஆண்டுகளில் அந்த ஹோட்டல் நிர்வாகம் முழுவதையுமே என்னிடம் ஒப்படைக்க நினைக்கும் அளவு என் வேலை திறமை இருந்த்து . அந்த ஹோட்டலை லீசுக்கு எடுத்து நடத்துமாறு என்னிடம் ஒப்படைக்க தயாராக இருந்தார் அதன் முதலாளி .முதலில் லீசுக்கு பிறகு விலைக்கு என்ற திட்டத்தில் அப்பாவுமே இந்த ஏற்பாட்டில் ஆர்வமாக இருந்தார் .ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை .நான் இந்தியா திரும்ப விரும்பினேன் . என் தொழிலை இங்கேயே ஆரம்பிக்க இங்கேயே குடியமரவே விரும்பினேன் .ஏனென்றால் ….” 

நந்தகுமார் பேச்சை நிறுத்த ராகவியின் வயிற்றினுள் பட்டாம்பூச்சிகள் பறந்தன .என்னவென்று உணரவே முடியாத ஓர் எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க அவனோ அவள் விழிகளை சந்திக்கவேயில்லை .

” ஏனென்றால் இந்த கோகுலம் எனக்கு மிகவும் பிடித்திருந்த்து .இங்கேயிருந்து போக நான் விரும்பவில்லை .  இந்தநந்தகுமார் இந்த காலனியை  மிகவும் நேசித்தான் .இங்கேயே இருந்து விட விரும்பினான் .ஆனால் அது நேற்று வரை .இன்று இதோ இந்த நிமிடத்தில் நந்தகுமார் இந்த கோகுலத்தை வெறுக்கிறான் .இங்கிருந்து மிக உடனே போய் விட நினைக்கிறான் .விரைவிலேயே அது நடக்கும் …” நந்தகுமார் எழுந்துவிட்டான் .

” போகலாம் வா …” நடக்க தொடங்கி விட ராகவியும் அவன் பின்னால் நடந்தாள் .மனம் முழுவதும் படர்ந்திருந்த குழப்பத்தில் அவள் நடை தடுமாறியது .

கோவிலை விட்டு வெளியேறும் வரை அவளுக்கு முன் நடந்தவன் , வெளியேறியதும் அவளை முன் நடக்க சொல்லி பாதுகாவலனாக பின்னால் நடந்தான் .அவள் வீட்டை அடைந்த்தும் தன் நெற்றியில் கை வைத்து ” குட்பை ” என்றான் அழுத்தமாக .தன் வீட்டிற்குள் போய்விட்டான் .

ஏனோ …எதையோ இழந்தாற் போல் உணர்ந்தாள் ராகவி .பேன்ட் பாக்கெட்டினுள் நுழைந்திருந்த அவனது இரு கைகளில் ஒன்றில் தனக்கான சாக்லேட் இருக்குமோ …எதிர்பார்ப்போடு அவள் பார்வை அவன் மறைந்திருந்த கைகளில் பதிந்த்து .ஆனால் நந்தகுமாரின் கைகள் மறைந்தே இருந்தன அவனது மனதை போலவே .

வழியும் வியர்வையோடு வாசல் கதவை திறந்து விட்ட அம்மாவின் மீது வழக்கத்தை மீறிய கவனத்துடன் விழுந்த்து ராகவியின் பார்வை .இட்லி மாவு அரைத்துக் கொண்டிருந்திருப்பாள் போலும் .நெற்றியிலும் , கையிலும் மாவு தீற்றல்கள் .

” கிச்சன்ல இருந்து வர்றதுக்குள்ள எதுக்குடி இத்தனை தடவை பெல்லை அமுக்கிற …? ” இரண்டு நிமிடம் வாசலில் நிற்க பொறுமையின்றி தான் அழுத்திய அழைப்பு மணி ராகவியின் மனதை இப்போது நெருடியது .குற்றவாளியின் மனநிலையுடன் தலை குனிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள் .

”  நான் ஒருத்தி இங்கே கத்திக்கிட்டு நிக்கிறது காதில் விழுதா பாரு …அவ பாட்டுக்கு போறா , ம் …இந்த வீட்ல என்னை யாரு மனுசியா மதிக்கிறாங்க …? ” செண்பகம் புலம்பியபடி அடுப்படிக்குள் போக ராகவி படுக்கையறைக்குள் நுழைந்து படுக்கையில் படுத்தாள் .

நெடு நாட்களாக கவனிக்காமல் விட்ட தன் தாயை இனி எப்படி கை ஏந்திக் கொள்ள …குழப்பமான சிந்தனையுடன் கண்களை மூடிக் கொண்டாள் .மூடிய இமைகளுக்குள் உடனே வந்துவிட்டான் நந்தகுமார் .மோகன புன்னகையுடன் அவளை நெருங்கி அழுத்தமாக அவளுக்கு முத்தமிட்டான் .

பட்டென விழி திறந்து எழுந்து அமர்ந்தாள் .வியர்த்து ஊற்றியது .ஏன் இது …ஏன் இப்படி தோணுகிறது …? அவன் உனக்கு அன்று கொடுத்த  முத்தம்  இன்று  அவனை நினைத்தாலே அவன் முத்தமும் சேர்ந்து உனக்கு நினைவு வருகிறது . அவள் மனதின் கேள்விக்கு மனமே பதிலும் சொன்னது .

ம்ஹூம் படுக்க கூடாது .அவசரமாக எழுந்து தண்ணீரை அள்ளி முகத்தில் இறைத்துக் கொண்டாள் .எத்தனை முறை தண்ணீரை ஊற்றினாலும் , அவன் எப்போதடி உனக்கு உதட்டில் முத்தம் கொடுத்தான் …இப்போது உனக்கு அப்படித்தானே தோணியது …என்ற அவள் மனசாட்சியின் கிண்டல் கேள்வி கடற்கரை மணலாய் அவளை நெருடிக் கொண்டே இருந்த்து .




எனக்கு சிறு வயதிலிருந்தே அந்த நந்தகுமாரை பிடிக்காது .அவன் என் எதிரி …என் வீட்டினருக்கு எதிரி …மாறி மாறி இவ் வார்த்தைகளை மனதில் நெட்டுரு போட்டுக் கொண்டாள் .ஆனாலும் முழு ஆண்டு பரீட்சையின் முடிவு வினாவின் விடை போல் அவளது நெட்டுரு மனதை விட்டு மறந்து மறந்து போனது .

—————–

செம்பருத்தி சிவப்பு வண்ண வெல்வெட் சுடிதாரும் , நீள் பின்னலில் காதோர ஒற்றை ரோஜாவுமாக ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி கிளம்பி போன சுந்தராம்பாளின் உருவம் ராகவியின் மனதை ஏதோ செய்த்து .சுந்தராம்பாளின்  பார்வை வாசலில் நின்றிருந்த ராகவியின் மேல் கர்வமாக படிந்து நகர்ந்து போனது .அகம்பாவம் …திமிர் … பணம் சேர்த்த கொழுப்பு .முன்பெல்லாம் இப்படி தோன்றும் .ஆனால் இப்போது சுந்தராம்பாளின் நிமிர்வை ரசிக்க தோன்றியது .

அம்மாவை தெடர்ந்து வீட்டை பூட்டிக் கொண்டு பைக்கில் வெளியேறிய மகன் மீதும் அதே ரசிக பார்வை படர்ந்த்து . கால்களை ஒட்டிய ராபின் ப்ளூ ஜீன்சும் , ஆகாய நீல டி ஷர்ட்டுமாக புரவியேறும் ராஜகுமாரனை போல் பைக்கில் ஏறிய நந்தகுமார் அந்த கோகுல கண்ணனாகவே ராகவியின் மனதை வசீகரித்தான் .

இந்தப் பக்கம் பார்ப்பானென்ற ராகவியின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி தலையை சிறிது கூட இவள் பக்கம் திருப்பாது சர்ரென ஆக்சிலேட்டரை திருக்கியபடி அவன் போயேவிட்டான் .போடா சரிதான் …உதட்டை சுளித்தபடி உள்ளே வந்து விட்டாள் .

மறுநாள் ராகவியும் , முரளியும் வண்டியில் போய் கொண்டிருந்த போது , அவர்களை சுகவனம் இடை மறித்தார் .சுகவனம் நிலத் தரகர் .மனை , வீடு , இடம் என வாங்கித் தருவதில் இடைத்தரகராக இருப்பவர் .அந்த காலனியில் வசிப்பவர் .தனது தொழிலை நியாயமாக பார்ப்பவர்.

” முரளி நம்ம நந்தகுமார் உன் ப்ரெண்டுதானே…? அந்த தம்பி கிட்ட நீயாவது ஒரு வார்த்தை சொல்லி புரிய வையப்பா .அந்த த்ரீ ஸ்டார் ஹோட்டல் ரொம்ப குறைந்த விலையில் கிடைக்கிறது .முதலில் தம்பி இனடரெஸ்டா இருந்தாப்புல .இப்ப என்னவோ திடீர்னு வேணாங்கிறாரு .நீயாவது எடுத்து சொல்லக் கூடாதா …? ” 

” எனக்கு ஒரு விபரமும் தெரியாதே அண்ணா .நான் என்ன சொல்ல …? ” முரளி குழம்ப …

எனக்கு எல்லா விபரமும் தெரியுமே …ஆனால் நான் எப்படி சொல்ல …? ராகவியின் இதயம் இரைந்த்து .




 

What’s your Reaction?
+1
32
+1
15
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!