Serial Stories கோகுலம் காலனி

கோகுலம் காலனி-6

6

குழலூதும் கண்ணன் ராதையுடன் சேர்ந்து நின்றபடி மோகனப் புன்னகையுடன் காட்சி தந்தார் .எப்போதும் பரவசம் தரும் அந்த கடவுள் இப்போது ராகவிக்கு எரிச்சலை கொடுத்தார் .போ கிருஷ்ணா …உன்னை எப்படி நம்பினேன் …கடைசியில் அந்த கெட்டவன் பேச்சுக்கு பணிந்து என்னை இங்கே வர வைத்து விட்டாய் பார்த்தாயா …? இனி அவனை பழிக்கு பழி வாங்க எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை நீ கொடுக்கும் வரை உன் கோவிலுக்கு நான் வர மாட்டேன் போ …இரு விரல் மடித்து டூ விடும் மழலையாக கிருஷ்ணனிடம் சண்டையிட்டு விட்டு மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்தாள் ராகவி .

யார் கண்ணிலும் படாமல் இருக்க வேண்டுமே பதைத்தபடி அங்குமிங்கும் நடமாடிய தெரிந்த ஆட்களின் பார்வையில் படாமல் பதுங்கியபடி கோவிலின் பின்புறம் இருந்த கருங்கல் மண்டபத்திற்கு வந்தாள் .பழமை வேண்டுமென அந்த  மண்டபம் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த்து . அதன் உபயதார்ர்கள் ஸ்ரீமான் நாகராஜனும் ஸ்ரீமதி சுந்தராம்பாளும் .ராகவி தனக்குள் நொடித்துக் கொண்டாள் .பெரிய கோடீஸ்வர பரம்பரை …

எதிர்ல வீடு கட்டுறோம் .இப்பவே போர் போட வசதியில்லை கொஞ்ச நாள்ல பணம் புரட்டி போர் போட்டுடுவோம் .அது வரை கட்டிட வேலைக்கு உங்க வீட்ல இருந்து தண்ணீர் எடுத்துக்கட்டுமா …? … இப்படித்தான் கேட்டுக் கொண்டு கையில் மூன்று வயது மகனை பிடித்துக் கொண்டு கசங்கிய சேலையோடு தங்கள் வீட்டு வாசலில் வந்து சுந்தராம்பாள் நின்றதாக செண்பகம் அடிக்கடி கூறியிருக்கிறாள் .

அப்போது இந்த காலனி உருவாகி இருக்கவில்லை .அங்கொன்றும் அங்கொன்றுமாக மொத்தமே நான்கே வீடுகள்தான் அங்கே இருந்தன . சிவராமன் – செண்பகம் தம்பதியினர் வீடு கட்டி முடித்து விட்டு மேல் பூச்சுக்கு பணம் இல்லாமல்  அப்படியே பூச்சு பூசாமல் , பெயின்ட் அடிக்காமல் ஒரு மாதம் முன்புதான் அவர்கள் வீட்டில் குடியேறியிருந்தனர் .இருந்து கொண்டே மெல்ல மெல்ல மற்ற வேலைகளை பார்க்கலாம் என்று நினைத்திருந்தனர்..

வீடு கட்டுவதில் உள்ள கஷ்டத்தை நன்கு உணர்ந்திருந்த செண்பகம் தன்னை போல் ஒருத்தி என்ற நெகிழ்வுடன் சுந்தராம்பாளை இரு கை நீட்டி தன் வீட்டுக்குள் அழைத்துக் கொண்டாள் .அன்றிலிருந்து இரு குடும்பத்தாரும் உடன் பிறவா சகோதர்ர்களைப் போல் பழகி வந்தனர் .

ராகவிக்கு நினைவு தெரிந்த சிறு பிள்ளை பிராயத்தில் கூட  சுந்தராம்பளை வாயில் சேலையும் , ரப்பர் வளையலுமாக பார்த்திருக்கிறாள் .ஆனால் இப்போது அவள் பண்ணுகிற அலம்பல் இருக்கிறதே …ராகவி பல்லைக் கடித்துக் கொண்டாள் .அவள் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வாள் .ஆனால் சுந்தராம்பாள் பேசும் ஆங்கிலத்தை …ம்ஹூம் .பத்தாவது இரண்டு முறை பெயிலானவள் பேசும் ஆங்கிலம் எப்படி இருக்கும் …? 




பி. ஏ டிகிரி முடித்திருந்த செண்பகம் கூட இப்படி ஆங்கிலம் பேசியதில்லை .இப்படி சுடிதார் , ப்யூட்டி பார்லர் என்று அலட்டியதில்லை .கொஞ்சம் அதிகமாக சேர்ந்து விட்ட பணம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது …? இன்னமும் சுந்தராம்பாளின் ஆங்கிலம் நறநறத்த தன் காதுகளை குடைந்து விட்டுக் கொண்டாள் ராகவி .

எதிர் வீட்டில் வசிக்கும் ,குழந்தை பருவம் முதல் நன்கு அறிமுகமானவர்களை யாரென வாய் கூசாமல் கேட்பவளுக்கு என்ன பதில் சொல்ல முடியும் …?முரளியும் , ராகவியும் திகைத்து நின்றனர் .

” ஐ ஸே ஐ வான்ட் டூ ந்நோ கூ ஆர் யு …? ” அழுத்தமாக அடுத்த கேள்வி கேட்டாள் .

” வ …வந்து நாங்கள் எதிர் வீட்டில் …” திணறலாய் தங்களை அறிமுகம் செய்ய முயன்ற அண்ணனின் கையை அழுத்திய ராகவி ….

” ஹாய் ஆன்ட்டி .வென் யு ஸ்டார்ட்டர்டு பில்டிங் யுவர் ஹவுஸ் இன் திஸ் ஏரியா , யு பாரோவ்டு வாட்டர் ப்ரம் அஸ் சின்ஸ் யு டோன்ட் ஹேவ் மணி டூ கெட் அன்டர்க்ரௌன்ட் வாட்டர் ப்ரம் போர்வெல் .அட் தேட் டைம் மிஸ்டர் சிவராமன் ஹெல்ப்டு யு இன் ஆல் மீன்ஸ் கன்சடரிங் யு அஸ் ஹிஸ் .  சிஸ்டர் .வீ ஆர் ஹிஸ் சில்ரன் . “

படபடவென்ற ராகவியின் ஆங்கிலத்தில் சுந்தராம்பாள் திகைத்தாள் .  இந்தப் பொண்ணு என்னை வைய்யுறாளோ …? அவஸ்தையுடன் தலையை சொறிந்தாள் .சற்று முன் சுந்தராம்பாள் காட்டிய ராஜ பாவனைக்கும் இந்த தலை சொறிதலுக்குமான மலை – மடு வித்தியாசத்தில் ராகவிக்கு திருப்தி புன்னகை வந்தது .

” நந்தா …டேய் நந்தா …” ஆதிமூலமே என மகனிடம் சரண்டைந்தாள் சுந்தராம்பாள் .

மகனை கூப்பிடுறீங்களா …கூப்பிடுங்க கூப்பிடுங்க .அவனுக்கும் என்கிட்ட இருக்கு …கறுவியபடி …

” மே வீ கம் இன் ஆன்ட்டி …? ” பாந்தமாக கேட்டாள் .இது உடனடியாக புரிந்து விட …

உள்ளே வரக்கூடாது .வெளியே போங்கன்னு எப்படி இங்கிலீசில் சொல்வது என்று சுந்தராம்பாள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே …” உள்ளே வாங்க …” என வரவேற்றபடி மாடியிலிருந்து இறங்கி வந்தான் நந்தகுமார்.

” கண்ணா யாருடா இவுங்க …? ” மீண டும் சுந்தராம்பாள் அவர்களை தாக்க , 

” அதைத்தான் ஆன்ட்டி கொஞ்ச நேரம் முன்னால் இங்கிலீசில் சொன்னேன் .அச்சோ அது உங்களுக்கு புரியவில்லையா …? திரும்ப தமிழில் சொல்லவா …? ” கொஞ்சல் மொழியுடன் சற்று முந்தைய தனது ஆங்கில விளக்கத்தை அச்சு மாறாமல் மொழி பெயர்க்க ராகவி தயாரான போது …

” தேவையில்லை ” இடைமறித்தான் நந்தகுமார் .அவன் முகம் இறுக்கமாக இருந்த்து . ஆக இவன் என்னுடைய ஆங்கில விளக்கத்தை கேட்டிருக்கிறான் .ராகவியினுள் ஒரு திருப்தி .

” அம்மா கொஞ்ச நேரம் பேசாமல் இருங்க …” தாயை அதட்டியவன் ” உட்காருங்க ” இவர்களுக்கு சோபாவை காட்டினான் .

முரளி அமர்ந்து விட ,ராகவி உட்காராமல் நின்றபடியே வீட்டை அளந்தாள் .” இந்த வீடு கட்ட ஆரம்பிக்கும் போதுதான் கட்டிட வேலைக்கு தண்ணீர் இல்லாமல் , போரிங் போட பணம் இல்லாமல்  எங்கள் வீட்டில் தண்ணீர் வாங்கி வேலை பார்த்தீர்களோ ஆன்ட்டி …? ” 




சுந்தராம்பாளின் முகம் சிவந்த்து .ராகவியை அடிக்கும் உத்தேசத்துடன் அவள் நகர நந்தகுமார் அம்மாவின் தோள் சுற்றி தன் கையை போட்டு பாசம் போல் அம்மாவை நகர விடாது பிடித்துக் கொண்டு ” அம்மா என் ப்ரெண்ட்ஸ் .போய் கூல்ட்ரிங்ஸ் கொண்டு வாங்க ”  வீட்டின் உட்புறம் வலுக்கட்டாயமாக திருப்பி விட்டான் .சுந்தராம்பாள் அவர்களை முறைத்தபடி உள்ளே போனாள் .

” ஸோ …ஒரு ப்ளானோடுதான் வந்திருக்கிறீர்கள் …? ” கேட்டபடி சோபாவில் அமர்ந்து கால் மேல் கால்போ ட்டுக் கொண்டான் .

” ஆமாம் .முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் …,” ராகவி தலையுயர்த்தி அறிவிக்க …” ஆஹான் …” என வெகு சாதாரணமாக கேட்டான் .மீசையை அழுத்தி வருடிக் கொண்டான் .

ம்க்கும் பெரிய சமஸ்தான மகாராசா … பந்தாவை பார் .அவன் அடர்ந்த மீசையிலிருந்து தன் பார்வையை நகர்த்திக் கொண்டாள் .

” அப்புறம் என்ன செய்யலாம் …? ” கேள்வி கேட்ட நந்தகுமாரை

உன்கிட்ட எங்களுக்கு என்னடா செய்ய வேண்டியதிருக்குது  …என ராகவி பார்க்க …

” நான் நாளை  ஆபிசில் வந்து உன்னை பார்க்கிறேன் நந்தா ” பதில் சொல்லிக் கொண்டிருந்தான் முரளி . ராகவி அண்ணனின் பவ்யத்தில் அதிர்ந்தாள் .

” ம் .உன் பயோடேட்டாவோடு வா …” சொல்லிவிட்டு ” உனக்கும் ஏதாவது வேலை வாங்கித் தர வேண்டுமா …? நீ படிப்பை முடித்து விட்டாயா என்ன …? ” அளவுக்கு அதிகமாக ஆச்சரியம் காட்டினான் .

” இல்லை நந்தா அவள் சும்மா என்னுடன் வந்தாள் …” முரளி சொல்ல …

” பின்னே இந்த மரியாதை எதற்கு  முரளி …?” இன்னமும் நின்று கொண்டிருந்தவளை ஒரு விரலால் சுட்ட , ராகவி பட்டென சோபாவில் அமர்ந்துவிட்டாள் .இவனுக்கு என்ன மரியாதை …? 

” குட் …ஜூஸ் சாப்பிடுங்க ” கை காட்டினான் .அவர்கள் முன் நீண்டிருந்த கூல்ட.ரிங்ஸ் டிரே வேலைக்கார பெண்ணின் கையில் இருந்த்து .அவர்களை அவமானப்படுத்த வேண்டிமென்றே சுந்தராம்பாள் செய்த காரியம் . 

” எனக்கு வேண்டாம் ” ராகவி எழ அவள் கையை பிடித்து உட்கார வைத்தான் முரளி .

” என்ன ராகவி இது … மரியாதை இல்லாமல் .உட்கார்ந்து ஜூஸை குடி …” ஒரே ஒரு மடக்கு கூட குடிக்காமல் கையிலேயே வைத்துக் கொண்டிருந்து விட்டு கீழே வைத்து விட்டு எழுந்து விட்டாள் .” போகலாம் அண்ணா ” 

முரளி தங்கையுடன் போக எழுந்த போது ” ஒரு நிமடம் முரளி ” என அவன் தோளில் கை போட்டு வாசல் பக்கமாக ஏதோ பேசியபடி தனியாக அழைத்துப் போனான் நந்தகுமார் .வேண்டுமென்றே செய்கிறான் …ஹாலில் தனித்து நின்றபடி கொதித்து கொண்டிருந்தவளை திரும்பிப் பார்த்து லேசாக கட்டை விரலை ஆட்டி அசைக்க முடியாது என சைகை செய்தான் .

” அண்ணா நான் போகிறேன் ” தட் தட் காலடிகளோடு வாசலில் நின்றவர்களை அவள் கடந்த போது ” கிருஷ்ணர் கோவில் ” என மெலிதாக முணுமுணுத்தான் நந்தகுமார் . கூடவே தன் வழக்கம் போல் சாகலேட்டையும் நீட்டினான் .ராகவி தலையை சிலுப்பிக் கொண்டு போக , அந்த சாக்லேட் பின்னால் முரளி மூலமாக அவளிடம் சேர்ப்பிக்கப்பட்டது .

கஷ்டப்பட்டு யோசித்து போட்ட திட்டம் தோல்வியடைந்து விட , மனம் வெறுத்து போய் அவன் சொல்படி இங்கே கோவிலில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் .

” பெரியவர்களிடம் இப்படித்தான் மரியாதையில்லாமல் நடந்து கொள்வாயா …? ” அதட்டியபடி அவளருகே வந்து அமர்ந்தான் நந்தகுமார் .

” அவர்கள் ஒழுங்காக நடந்து கொண்டார்களா …? ” 




” பெரியவர்களின் நடவடிக்கைகளுக்கு ஏதாவது காரணம் இருக்கலாம் .சில தவறுகள் இருந்தாலும்  சிறியவர்கள் அதனை அட்ஜஸ் செய்து போக வேண்டும் .நீங்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கு ஏன் வந்தீர்கள் …? அதற்கு முதலில் காரணம் சொல்லு .” 

” நீங்கள் எங்கள் வீட்டிற்கு எதற்கு வந்தீர்களோ அதே காரணத்திற்காகத்தான்…” 

” நான் எதற்கு வந்தேன் …? ” 

” என்னையும் , அண்ணனையும் மிரட்டுவதற்கு …” 

” ம் …உங்கள் வீட்டிற்கு வந்து எப்படி நடந்து கொண்டேன் …? ” 

ராகவி அமைதியானாள் .தாய் தந்தையிடம் மிக மரியாதையாக நந்தகுமார் நடந்து கொண்டது நினைவில் வந்த்து.” எனக்கு நடிக்க தெரியாது ” முணுமுணுத்தாள் .

” நானும் நடிக்கவில்லை ராகா .மனமார செய்தவைகள்தான் எல்லாமே .நீயும் இதே போல் எங்கள் வீட்டில் நடந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன. …” 

உணர்ச்சி கொப்பளித்த அவன் பேச்சில் குழம்பினாள் .நான் எதற்கு இவன் அம்மா காலில் விழ வேண்டுமாம்.




What’s your Reaction?
+1
24
+1
14
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!