Serial Stories கனவு காணும் நேரங்கள்

கனவு காணும் நேரங்கள்-4

4

******************

எதேச்சையாய் பார்க்க ஆரம்பித்த பழக்கம் தொடர்ந்தது. இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார்கள். 

அதுவும் தங்கத்திற்கு ஆனந்த் தானாக வந்து உதவி செய்தது பிடித்துவிட்டது. ஆனாலும் அவளுக்கு மனதில் ஒரு பயம் இருந்தது. இந்த மாதிரி அன்னிய ஆண்களுடன் நெருக்கமான  பழக்கம் என்பது இதுவரை இல்லை. இது பெற்றோர்களுக்குத் தெரிந்தால் என்ன சொல்வார்களோ என்ற பயம் இருந்தது. 

அதுவும் படிக்க அனுப்பவே ஆயிரம் தடைகளைத் தேடிய அம்மாவுக்குத் தெரிந்தால் அத்துடன் பாதியிலேயே படிப்பை நிறுத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. 

இரண்டுக்கெட்டானாய்த் தான் அவனுடன் பேச முடிந்தது. மீனாவைப் போல சரளமாகவோ, தாராளமாகவோ தங்கத்தால் ஆனந்துடன் பேச முடியவில்லை. 

“ஏன் மீனா, நீ இப்டி தெரியாத ஆளுங்க கிட்ட ப்ரீயா பேசறயே! உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா திட்ட மாட்டாங்களா?” என்றாள் ஒருமுறை. 

“தெரியாத ஆளுங்க கிட்ட எங்கடி பேசறேன்?” சிரித்தாள் மீனா. 

“அப்போ உனக்கு ஆனந்த் முதல்லயே தெரியுமா?” 

 “எப்போ? முதல்லயேன்னா போன ஜென்மத்துலயா? லூசு! லூசு! இப்போ உங்கிட்ட பேசலயா? அதுமாதிரி தானே அவங்கிட்ட பேசறதும். இதுல திட்டறதுக்கு என்ன இருக்கு? 

நாமா அவனைத் தேடி போய்ப் பேசலய்யே! உதவி பண்ணான். பேசறோம். அவ்வளவு தான். இதுல நீ இவ்ளோ யோசிக்க என்னடி இருக்கு? “என்று மீனா தெளிவாகப் பேசியதும் தங்கத்துக்குக் குழப்பமாக இருந்தது. 

” நாம் தான் தேவையில்லாமல் குழம்புகிறோமோ! சின்ன வயசுல இருந்தே அவ அப்படியே இருக்கறதால அவ தெளிவா இருக்கா போல! இனிமே நாமளும் அப்படி இருக்கக் கத்துக்கணும். ஒண்ணு அவங்கிட்ட சகஜமா பேச ஆரம்பிக்கணும். இல்ல, முடியலேன்னா அவங்கிட்ட பேசறதை நிறுத்திடணும்.” தனக்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டாள். 

” இந்தக் காதல், கத்திரிக்காயெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது. முதுகுல டின்னு கட்டிடுவாங்க!”

இந்த எண்ணம் வந்ததும் ஆனந்திடம் அனாவசியமாகப் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். அதற்கேற்றாற் போல இறுதியாண்டு தேர்வுகளும் நெருங்க ஆரம்பித்தன. 

நடுவில் ஒருமுறை ஊருக்குப் போனாள். முத்தழகியின் திருமணப்பேச்சு அவள் மனதில் ஆனந்த் பற்றிய எண்ணங்களை எழுப்பியது. என்றாலும், தான் முன்பு எடுத்த தீர்மானத்தின்படி தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள். 

ஆனந்த் குழம்பினான். “முதலில் தயங்கினாள். பிறகு நன்றாகப் பேசினாள். இப்போது பேசவே தயங்கி ஒதுங்குகிறாள். இவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லையே! அடுத்த முறை மீனாவிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று நினைத்துக் கொண்டான்.

மீனாவிடம் கேட்ட போது அவள் படிக்க வந்த சூழ்நிலை பற்றியும், கிராமத்து வாழ்க்கையைப் பற்றியும், அவர்களை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளவோ, வாழவோ விரும்பாத தங்கத்தின் மனநிலையை  மீனா விளக்கிச் சொன்னதும் ஓரளவு நிம்மதி அடைந்தான். 




” ப்பூ, இவ்வளவு தானா! நான் கூட வேற யார் மீதாவது அவங்களுக்கு விருப்பம் இருக்கோன்னு பயந்துட்டேன். சரி, இனிமேல் அவங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன். படிப்பை முடிக்கட்டும். இது மூணாவது வருஷமா? எனக்கும் சில லட்சியங்கள் இருக்கு. நானும் அதையெல்லாம் முடிச்சுட்டு வரேன். அவங்க ஊரு பேரு, அப்பா, அம்மா மத்த விவரங்கள் மட்டும் சொல்லச் சொல்லுங்க. இரண்டு வருஷம் கழிச்சு, நான் வருவேன். அப்ப சம்மதம் சொன்னா போதும். இதை அவங்க கிட்ட சொல்லிடுங்க”என்று சொன்னவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மீனா. 

இந்தக் காலத்தில் இப்படி ஒருவனா? இவனைத் திருமணம் செய்து கொள்ளத் தங்கம் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? ஆச்சரியத்தில் மூழ்கியவள் அவனைக் கூப்பிட்டாள். 

” அண்ணா! நில்லுங்க! “

மீனாவைத் திரும்பிப் பார்த்தவன்,” என்னது திடீர்னு அண்ணான்டீங்க!” என்றான் சிரித்துக் கொண்டே ஆச்சரியத்துடன். 

“ஆமாண்ணா! உங்க தீவிரக் காதல் தங்கத்தைத் தவிர நீங்க யாரையும் விரும்ப மாட்டீங்கன்னு தெளிவா சொல்லிடுச்சு. இரண்டு பேரும் ஒண்ணா தான் உங்களைச் சந்திச்சோம். ஹும்! அவ அதிர்ஷ்டம், உங்களை மாதிரி ஒருத்தர் அவளுக்குக் கிடைச்சது. சரி, சரி! ஸ்கூல்ல அனைத்து இந்தியர்களும் உடன் பிறந்தவர்களேன்னு உறுதிமொழி எடுத்துக் கிட்டோமே, அதை ஞாபகம் வெச்சுக்கறேன். சொல்லும்போதே நாங்க கேர்ள்ஸ் ஒருத்தரைத் தவிர ன்னு சொல்லுவோம். நீங்க? “

” நாங்களும் படிக்கும் போது சொல்லுவோமே! ஆனா அது ஸ்கூலோட மறந்துடுவோம்”மீனாவின் இயற்கையான நகைச்சுவையும், வெளிப்படையான, களங்கமில்லாத பேச்சும் ஆனந்தைக் கவர்ந்ததில் அவனும் உற்சாகமாகவே பேசினான். 

” சரி, அதை விடுங்கண்ணா! தங்கம் நிஜமாவே நல்ல பொண்ணு! நீங்க காத்திருந்து கல்யாணம் பண்ணத் தகுதியானவ தான். ஆனால் உங்களைப் பத்தி எதுவும் சொல்லவே இல்லையே! நீங்க இரண்டு பேரும் மனசு விட்டுப் பேசி முதல்ல ஒருத்தரைப் பத்தி இன்னொருத்தர் நல்லா தெரிஞ்சுக்கோங்க! அப்ப தான் அவளும் உங்களுக்காக காத்திருக்க முடியும்”

” சரி தங்கச்சி! ஆலோசனை நல்லாதான் இருக்கு! உங்க ப்ரெண்டுக்குப் புரியணுமே! நான் வந்தாலே ஒதுங்கறாங்களே! “

” சரிண்ணா! நான் எப்படியாவது இந்த ஞாயிறு அவள வெளியில கூட்டிட்டு வரேன். நீங்க சொல்ல வேண்டியதை சொல்லுங்க. நானும் சொல்றேன். அப்புறம் அவ இஷ்டம்”

” அச்சச்சோ! உங்களை நம்பி சந்தோஷப்பட்டேனே! நைசா நழுவறீங்க”

” அண்ணா! நான் ஓரளவு தான் சொல்ல முடியும். அவ வாழ்க்கை அவ விருப்பம் தானே! “

” சரிம்மா! லக் எப்டி இருக்கு பாப்போம். கூட்டிட்டு வாங்க. மறந்துடாதீங்க”

ஆனந்திடம் சொன்னபடியே மீனா தங்கத்திடம் பேசினாள். 

“இதோ பார் தங்கம். ஆனந்தைப் பார்த்தா நல்லவரா தான் தெரியறார். எப்படியும் முன்ன பின்ன தெரியாத யாரையோ கல்யாணம் பண்ணிக்கத்தான் போறே. அதுக்கு இவர பண்ணிக்கலாமே. டாக்டருக்குத் தான் படிச்சிருக்கறாரு. மேல் படிப்புக்கு பாஃரின் போப்போறாரு. குடும்பமும் வசதியான குடும்பம் மாதிரி தான் தெரியுது. எல்லாத்துக்கும் மேல உனக்காகக் காத்திருந்து கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றாரு. ஆளும் அழகாத்தான் இருக்காரு. இன்னும் என்னதாண்டி எதிர்பாக்கறே? என்னைக் கேட்டிருந்தா, மனசு மாறதுக்குள்ள ரிஜிஸ்டர் மேரேஜே பண்ணிட்டுப் போய்டுவேன். சும்மா பந்தா பண்ணிட்டு”பாதி கிண்டலும், கேலியாகவும் சற்றே கோபத்துடனும் மீனா சொன்னதும், தங்கம் பெருமூச்செறிந்தாள். 

” மீனா, உனக்கு எங்க ஊரைப் பத்தியும், எங்க குடும்பத்தைப் பத்தியும் ஏற்கனவே சொல்லியிருக்கேன். அம்மாக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சதோ, “படிப்பும் ஆச்சு, பரிட்சையும் ஆச்சுன்னு” வந்து தரதரன்னு இழுத்துட்டே போய்டுவாங்க. ஏற்கனவே அவங்க அண்ணன் பையனை அப்பா வேண்டாம்னு சொன்னதுல கடுப்பா இருக்காங்க. என்னைப் படிக்க வெச்சதுக்கும் சேத்து அப்பாக்கு டோஸ் விழும்”நிதானமாக தங்கம் சொன்னதைக் கேட்டு மீனா யோசித்தாள். 

“அப்போ உனக்கு ஓ. கே. வா?” 

“ஏண்டி இத்தனை நேரம் எங்கூட்டுக் கதையைச் சொன்னதுக்கு அப்புறமும் நீ எனக்கு ஓ. கே. வா? ன்னு கேக்கற. அவங்க பாக்கற பையனையே எனக்குப் பிடிச்சிருக்கான்னு கேக்க மாட்டாங்க! இதுல நானே பாத்துகிட்டேன்னு தெரிஞ்சுது கிழிச்சி தொங்க விட்டுடுவாங்க! 

பாவம்டி அவரு. வீணா ஆசையைத் தூண்டவேண்டாம்னு தான் ஒதுங்கி ஒதுங்கிப் போறேன். விவரம் புரியாம நீ வேற டார்ச்சர் பண்ற! “

தங்கம் சொல்லி முடிக்கவும், மீனாவுக்கே தங்கத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.

” சீ! என்னடி! இப்டி இருக்காங்க உங்க அம்மா! இந்தக் காலத்துல போய் இன்னும் கட்டுப் பெட்டியாய் இருக்கணும்னு சொல்றாங்க! “

” அவங்கள ஒண்ணும் சொல்லாத மீனா. என்னோட நல்லதுக்குத் தான் சொல்றாங்க. எம்மேல அவங்களுக்கு எவ்ளோ பாசம் தெரியுமா? அதனால் தான் என்னால அவங்கள எதுத்துப் பேச முடியல”

அவளைக் குறுகுறுவெனப் பார்த்தாள் மீனா. 

” எதுக்கு அப்டி பாக்கறே மீனா”என்று தங்கம் கேட்கவும்,” உனக்கு வெறும தங்கம்னு பேர் வச்சது தப்பு. சொக்கத் தங்கம்னு வச்சிருக்கணும்”என்று உருகினாள் மீனா. 

” சரி, தாயே நீ நிம்மதியா தூங்கு”

” நீ என்ன பண்ணப் போற மீனா”

” ம், நாளைக்கு ஆனந்துக்கு என்ன பதில் சொல்லி அவரை எப்படி சமாதானம் செய்யப் போறேன்? சும்மா இல்லாம உன்னை வேற கூட்டிட்டு வரேன்னு அவர்கிட்ட சொல்லிட்டு வந்துட்டனே! “

” சரி, சரி புலம்பாம தூங்கு! நாளைக்கு நானும் உங்கூட வந்து அவர் கிட்ட நேர்லயே சொல்லிட்டு வந்துடறேன், இதெல்லாம் ஒத்து வராதுன்னு”

முகமலர்ச்சியுடன் சிரித்த மீனா” அப்பாடி! இப்ப தான் நிம்மதி ஆச்சு”என்று சிரிக்கவும் இருவரும் படுத்துத் தூங்க ஆரம்பித்தனர். 

ஆனால் தங்கம் நினைத்தது போல் ஆனந்தை சமாளிப்பது  அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவள் ஒன்று சொன்னால், அவளை வேறுவிதமாகக் கேட்டு திணற அடித்தான். அவனே வந்து பெண் கேட்பதாகவும்,அதுவரை அவள் காத்துக் கொண்டு இருப்பதாக உறுதி மட்டும் கூறினால் போதும் என்றான். 

“மறுபடி மறுபடி நீங்க இப்படியே பேசறது எனக்குச் சங்கடமா இருக்கு ஆனந்த். நான் காத்துட்டு இருக்கறதோ, வேற யாரையாவது கல்யாணம் பண்றதோ என்கையில் இல்லேன்னு எத்தனை வாட்டி சொல்றது!” என்று வருத்தத்துடன், சற்று கோபமாகவே சொன்னாள் தங்கம். 




“ஆல் ரைட் தங்கம், இனிமேல் இதைப் பத்தி உங்கிட்ட பேசல. நான் மேல் படிப்பு படிக்க லண்டன் போறேன். முடிச்சதும் உங்க ஊருக்கு வருவேன். அதுவரைக்கும் உனக்குக் கல்யாணம் ஆகாம இருந்தா, உன்னைப் பெத்தவங்கக் கிட்ட, சம்மதம் கேட்டுட்டு, அப்புறம் உங்கிட்ட பேசறேன். அப்ப என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட மாட்டே தானே! “

விடாப்பிடியாய் ஆனந்த், அவள் வாயிலிருந்து எப்படியாவது அந்த வார்த்தையை வாங்கி விட வேண்டும் என்று வற்புறுத்தலாகக் கேட்கவும், அதற்கு மேல் முடியாமல்,

” சரி, அப்ப ஒத்துக்கறேன்”என்றாள் தங்கம். 

” அட்ரஸ்? “பேன்ட் பாக்கெட்டிலிருந்து சின்ன டைரியையும், பேனாவையும் நீட்டினான் ஆனந்த். 

“போன்ல ஸ்டோர் பண்ணிக்க மாட்டீங்களா” அருகிலிருந்த மீனா கேட்டாள். 

“ஒருவேளை போஃன் தொலைஞ்சாலோ, தெரியாம டெலிட் ஆய்ட்டாலோ என்ன பண்றதாம்? “

” அதி ஜாக்ரதையா தான் இருக்கீங்க.” சிரித்தவாறே  தங்கம் விலாசத்தை சொன்னாள். 

“நீயே எழுதிக் குடு. அது ஒண்ணாவது என் கூடவே இருக்கட்டும். சீக்கிரமா உன்னைச் சந்திக்கணுங்கற எண்ணத்தை அது அதிகப் படுத்தும். “என்றவன், 

” என் ஞாபகமா உனக்கு எதுவும் வேணாமா? “என்று பாவமாகக் கேட்டான். 

” உங்க பேனாவைக் குடுங்க” என்று தயக்கத்துடன் அதை வாங்கிக் கொண்டாள். 

” நீயும்  ஜாக்கிரதையா தான் இருக்கே. உங்க வீட்ல என்னைப் பத்தி எதுவும் தெரிஞ்சுடக் கூடாதுன்னு அடையாளம் இல்லாத பேனாவை வாங்கிக்கறே”என்று சொல்லிக் கொண்டே பேனாவை அவளிடம் நீட்ட , அடிபட்ட உணர்வோடு அதை வாங்கிக் கொண்டாள் தங்கம். 

நிலவையும், மீனாவையும் சாட்சியாக வைத்துக் கொண்டு வருத்தத்துடன் இருவரும் பிரிந்தார்கள். 

-தொடரும்




What’s your Reaction?
+1
9
+1
7
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!