Serial Stories Uncategorized எனை ஆளும் நிரந்தரா

எனை ஆளும் நிரந்தரா-18 (நிறைவு)

18

“அவளுக்கு தூக்கம் வந்திருக்கும். வீட்டிற்கு போயிருப்பாள். வாருங்கள் நாம் பார்ட்டியை கண்டினியூ பண்ணலாம்” வெற்றி வேலaன் சொல்ல, சிவ நடராஜனை எதுவோ உறுத்தியது.

 இப்போதைய மானசியின் மனநிலை அவனுக்கு

மட்டும்தானே தெரியும்? குற்ற உணர்வில் தத்தளித்துக் கொண்டிருப்பவள், ஏதாவது தவறான முடிவை எடுத்து விட்டிருந்தாளானால்… மானசியின் மன தைரியத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கையில்லாத சிவ நடராஜன் “நீங்கள் கண்டினியூ பண்ணுங்கள். நான் இதோ இந்த தெருவரை போய் பார்த்து விட்டு வருகிறேன்” என கிளம்பினான்.

” அடடா கொஞ்ச நேரம் அவளை பிரிந்திருக்க முடியவில்லையா…” என்பது போன்ற  கிண்டல்களுடன் அவனை வழி அனுப்பினர் நண்பர்கள் கூட்டம்.

வீட்டை விட்டு வெளியே வரும்போது மானசியின் ஸ்கூட்டியை  அங்கேயே பார்த்தவனுக்கு மனம் அதிர்ந்தது. வேகமாக தெருமுனை வரை போய் பார்த்தான். முட்டாள்! வண்டியை நிறுத்திவிட்டு நடந்தா போனாள்? பக்கத்து தெருகளில் எல்லாம் தேடிப் பார்த்தவன் எங்கும் காணாமல் யோசனையுடன் மானசியின் வீட்டிற்கு வண்டியை விட்டான்.

மணிவண்ணனும் சகுந்தலாவும்  தூங்கியிருக்க கதவை திறந்த  பாட்டி “மானசி இங்கே வரவில்லையே” என்க  அதிர்ந்து நின்றான்.

” என்ன ஆயிற்று சிவா? உங்களுக்குள் ஏதாவது பிரச்சனையா? இரண்டு நாட்களாக மானசியின் முகமும் சரியில்லை” பாட்டி பரிவாக கேட்க கலங்கிய கண்களுடன் சிவா பாட்டியிடம் எல்லாவற்றையும் கொட்டி விட்டான்.

 அமைதியாக எல்லாவற்றையும் கேட்ட பாட்டி “உன் ஆதங்கம் சரிதான் சிவா. ஆனால் மானசியின் இடத்திலிருந்து நீ யோசிக்க வேண்டும். அவள் உன்னை போல் வேறு வேறு ஊர்களில் படிக்கவில்லை, விதம் விதமான மனிதர்களுடன் பழகவில்லை. சென்னையிலும் நீ தேர்ந்தெடுத்த மனிதர்களுடன் மட்டுமே பழகி ஒரு பாதுகாப்பான கூண்டுக்குள் இருந்து விட்டுத்தான் வந்தாள். இங்கே நான், சகுந்தலா போன்ற  வீட்டு பறவைகளால் இதுதான் சரி இப்படித்தான் பெண் என்றால் இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவள். அவளிடம் இதற்கு மேல் நீ வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?”

” நீ அவளிடம் முதலிலேயே மனம் விட்டு பேசியிருந்தாயானால் பிரச்சனை இந்த அளவு வந்திருக்காது. சரி இப்போது மானசி எங்கே போயிருப்பாள் என்று யோசிக்கலாம். முதலில் அவள் அறையை பார்த்து விடு, ஏனென்றால் எந்த நிலையிலும் நம் வட்டத்தை தாண்டி வெளியேறும் தைரியம் மானசிக்கு வராது.இரவு வர தாமதமாகலாம் என்று வெற்றியும் மானசியும் வீட்டுச் சாவியை ஆளுக்கு ஒன்றாய் எடுத்துப் போனார்கள்”

பாட்டி சொன்னதும் சிவ நடராஜன் பரபரப்போடு மாடியேறி  இம்மலாக சாத்தியிருந்த கதவை தள்ளிப் பார்த்தான். மங்கலான இரவு விளக்கின் வெளிச்சத்தில் கட்டிலில் சிலை போல் அமர்ந்திருந்த மானசி தென்பட்டாள்.

சீரான  சுவாசம் வர ஆரம்பித்த தன் நெஞ்சை சிவநடராஜன் நீவிக் கொள்ள “போய் பேசு” என பாட்டி அவனை அறைக்குள் தள்ளினார்.

 இதமான கதகதப்பு தன் தோள்களில் படிய மெல்ல திரும்பிய மானசி எதிரே நின்றிருந்த சிவ நடராஜனை  வெறித்து பார்த்தாள். “வந்து விட்டீர்களா? என்னை மன்னித்து விட்டீர்களா? நான் ஒரு முட்டாள் ! எனக்கு மனிதர்களை எடை போட தெரியவில்லை. உங்கள் நட்பை தேவையில்லாமல் கொச்சைப்படுத்தி விட்டேன். உங்களுடன் வாழ தகுதியற்றவள் நான். நீங்கள் சொன்னது போன்றே நமது திருமணத்தை நிறுத்தி…”

 அதற்கு மேல் மானசியின் இதழ்களுக்கு பேச்சு சுதந்திரம் அளிக்கவில்லை சிவ நடராஜனின் உதடுகள்.




போனால் போகட்டும் என்று பெரிய மனது பண்ணி அவன்

உதடுகளை விடுவித்த சிறு இடைவெளியில் அவன் மார்பில் தஞ்சம் அடைந்து விசும்பினாள் மானசி.

“என்னைப் பிரிந்து இருந்து விடுவாயாடி? அதெப்படி திருமணத்தை நிறுத்த சொல்வாய்?” கோபமாய் கேட்டான்.

“உங்களுக்கு ஏற்றவள் நான் இல்லை சிவா! என்னால் உங்களுக்கு எப்போதும் தொல்லைதான்”

“அப்படி நினைத்திருந்தால் இத்தனை வருடங்களாக காத்திருந்து உன்னையே மணம் முடிக்க இத்தனை திட்டங்கள் போட்டிருப்பேனா மானு? அன்று நீ சொன்னாயே ஒருவனின் முதல் காதலை மறக்க முடியாது என்று, என்னுடைய முதல் காதலே

நீ தான் மானு. உன்னை எப்படி என்னால் விட்டுக் கொடுக்க முடியும்?”

சிவ நடராஜனின் வார்த்தைகள் தேன் துளிகளாய் மானசியினுள் இறங்கிக் கொண்டிருந்தன.

” எப்போது வந்தாய் என்று தெரியாமல் என் மனதிற்குள் நீ இருந்தாய். நம் இரு குடும்பங்களுக்குள் இருக்கும் பகையினால் நம் திருமணம் குறித்த கவலையில் நான் இருக்கும் போதே, உன் அண்ணனும் என் அக்காவும் நமக்கு முன்னோடியாகி  என்னுடைய பாரத்தை சுலபமாக்கினார்கள்”

“ஆனால் சீக்கிரமே அவர்கள் பிரிவு நிகழ மேலே என்ன செய்வது என்று யோசித்தபடி இருந்தேன். அப்போதுதான் படிப்பை முடித்து நீ ஊருக்கு திரும்ப வந்தாய். உன் அண்ணனின் வாழ்க்கைக்காக சில வேலைகளை செய்ய ஆரம்பித்தாய். உன்னை பின்பற்றியே நானும் சில திட்டங்கள் போட்டு நமது திருமணம் வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இந்த நேரத்தில் திருமணத்தை நிறுத்தி விடு என்று சொன்னால் எனக்கு எப்படி இருக்கும்?”

” அந்த காதம்பரி விஷயத்தை இவ்வளவு நாட்களாக நீ மண்டைக்குள் போட்டு வைத்திருப்பாய் என்று எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவள் பற்றிய விளக்கங்களை உனக்கு முன்பே கொடுத்திருப்பேன்.ஆனால் நீ திடீரென அவளை தப்பாக பேசவும் விளக்கம் கொடுக்கவும் மனமன்றி கோபமாக சென்று விட்டேன்”

” ஏன் சிவா? அந்த காதம்பரி அப்போதே  என் மனதை மிகவும் பாதிக்க வேண்டும்?யாராவது சும்மா உங்களை கொஞ்சம் ஆர்வமாக பார்த்தாலே எனக்கு ஏன் உடம்பெல்லாம் எரிய வேண்டும்?

குழந்தையாய் அண்ணார்ந்து முகம் பார்த்து கேட்டவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.

” ஏன் மானசி?” கொஞ்சலாய் காதுக்குள்  கிசு கிசுத்தான்.

” ஏனென்றால் அன்று முதல் இன்று வரை என் மனதை நீங்கள்தான் நிரந்தரமாக ஆண்டு கொண்டிருக்கிறீர்கள். நமக்கு இடையூரென்று தோன்றியவர்கள் மீது  கண்மூடித்தனமான வெறுப்பு எனக்கு, இதைத்தவிர வேறு எந்த காரணமும் எனக்கு தெரியவில்லை”

சிவ நடராஜன் இதற்கு வார்த்தைகளில் பதில்  சொல்லவில்லை. உதடுகள் மூலமாக வேறு விதமாக தனது உற்சாகத்தை மானசியின் முகமெங்கும் கொட்டிக் கொண்டிருந்தான்.

“மானசி வீட்டிற்கு வந்து விட்டாளா பாட்டி? அவள் ஸ்கூட்டி அங்கேயே நிற்கிறதே?” கீழே

வெற்றிவேலனின் குரல் கேட்க, மானசி அவசரமாக விலகினாள்.

” உங்கள் அக்காவும் சேர்ந்துதான் வந்திருப்பார்கள்.இது என்னுடைய அறை. இங்கு எப்படி நீ இருக்கலாம் என்று சண்டை பிடிக்க இப்போது வருவார்கள் பாருங்கள்”

மனம் விட்டு சிரித்த

சிவ நடராஜன் “போச்சுடா! இனி காலம் முழுவதும் இந்த நாதனார் சண்டையில் என் தலை உருளப் போகிறதா?” சோகம் போல் தலையில் கை வைத்துக் கொண்டான்.

அப்போது அறைக் கதவை தள்ளி திறந்து உள்ளே வந்த சிவஜோதி “நீ இன்னமும் இந்த அறையை காலி செய்யவில்லையா?” என்று கேட்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட சிவ நடராஜனும், மானசியும் சத்தமாக சிரிக்கத் தொடங்கினர்.

– நிறைவு –




What’s your Reaction?
+1
44
+1
15
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!