Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-16

16

வைசாலி சொன்ன விவரங்களை கேட்டதும் முகுந்தனின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் துவங்கியது “ஐயோ சரியாக விசாரிக்காமல் என் மகளின் வாழ்க்கையை கெடுத்து விட்டேனே”

“அப்பா என்ன இது? இதில் உங்கள் தவறு எங்கே இருக்கிறது? எல்லோரும் சேர்ந்து தானே இந்த திருமணத்தை முடிவு செய்தோம்” கலங்கிய தந்தையை அருகில் அமர்ந்து சமாதானப்படுத்த முயன்றாள் வைசாலி.

“இல்லைடாம்மா மூத்தவளை நினைத்து உனக்கு அநியாயம் செய்து விட்டேன். இனி உன்னுடைய வாழ்க்கை என்னவாகும்?”

” போதும் என்ன இது சிறு பிள்ளை போல் அழுது கொண்டு, இப்போது என்னவாயிற்று… ஏமாற்றி ஒரு திருமணத்தை முடித்திருக்கிறார்கள். இதற்கு வைசாலி எப்படி பொறுப்பாவாள்? அவள் வாழ்வு ஏன் பாழாக வேண்டும்? இதை உதறிவிட்டு இன்னொரு வாழ்க்கை வாழ அவளால் முடியாதா என்ன? நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?” தேவகி மன முதிர்வுடன் கணவரை அதட்டினாள்.

“சரிதான் தேவகி. ஆனால் அப்படி இன்னொரு வாழ்வை அமைத்துக் கொடுப்பது என்பது எளிதா என்ன?”

“ஏன் நாம் இருவரும் இன்னமும் திடமாகத்தான் இருக்கிறோம். அறிவும் அழகும் நிறைந்தவள் வைசாலி. அவளுக்கு இன்னொரு புது வாழ்வை அமைத்துக் கொடுக்க நம்மால் முடியாதா என்ன?”

பேச்சின் முடிவில் தேவகியின் கண்கள் வைசாலியின் முகத்தில் பதிய,நிறமிழந்திருந்தது அவள் முகம்.

 இன்னொரு வாழ்வா!  சிறந்த சகாவாய் இரண்டு மாதங்கள் அவளுடன் பழகிய சித்தார்த்தன் நினைவிற்கு வந்தான். அவனை தவிர்த்து இன்னொரு வாழ்வு வாழ தன்னால் முடியுமா? வைசாலி நெற்றி பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டபடி அமர்ந்து விட்டாள்.

கண்களை மூடி ஏதோ சிந்தனையில் இருந்தவள் தனது போனை எடுத்து கூகுளில் சில விவரங்களை சேகரித்தாள். “அம்மா நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்” கிளம்பி விட்டாள்.

 ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வைசாலி சென்ற இடம் சென்னையின் பாலே டான்ஸ் அகாடமி.




அவள் எதிர்பார்த்தது போன்றே மாயா அங்கே உறுப்பினராக இருந்தாள்.அங்கிருந்து சில விபரங்களை வைசாலியால் பெற முடிந்தது. ரஷ்யாவில் மிகப்பெரிய பாலே நடன போட்டி ஒன்று நடக்க இருந்தது.அதில் சென்னையில் இருந்து மாயாவும் அவளுடைய பார்ட்னரும் தேர்வாகி இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்த மற்றொரு ஜோடி இவர்களை பின்னுக்குத் தள்ளி அந்த போட்டிக்கு தேர்வாகி விட்டனர்.

வைசாலிக்கு அகாடமியில் கிடைத்த விவரங்கள் இவை.இந்த விபரங்கள் தனக்கு எவ்வகையில் உதவக்கூடும் யோசித்தபடி அகாடமி இருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் படிகளில் மெல்ல இறங்கி வந்து கொண்டிருந்தவள் பக்கவாட்டு லிஃப்ட் திறந்து உள்ளிருந்து வந்த பெரும் கூட்டத்திற்கு ஒதுங்கி நின்றாள்.

அப்போது மிக பலமாக தோள்பட்டையால் யாராலோ இடிக்கப்பட்டாள். நான்கு படிகள் தடுமாறி சுதாரித்து கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்த போது மீண்டும் இடிபட்டாள். நெருக்கும் கூட்டத்திற்கு இடையே தான் மட்டுமே குறிவைத்து தள்ளப்படுவதை உணர்ந்தவள் நின்று திரும்பி இடித்தவனை பார்க்க,தாடியும் மீசையும் கூடவே மாஸ்க்கும் அணிந்திருந்தவனின் கண்களில் இவளை படிகளில் உருட்டியே தீர வேண்டும் என்ற வெறி இருந்தது.

 சுத்தமாக தன்னைவிட இரண்டடி உயரம் இருந்த அந்த கடோத்கஜனிடம் நேரடியாக மோதுவது புத்திசாலித்தனம் இல்லை என உணர்ந்த வைசாலி தனது பாதையை மாற்றி லிப்டிற்குள் நுழைய முயல அங்கும் வழிமறித்தான் அவன்.

மீண்டும் ஒரு இடி, இந்த முறை பிடி தளர்ந்து வைசாலி படிகளில் சறுக்க தொடங்க சட்டென, இடுப்பில் கைகோர்த்து  இழுத்துக் கொள்ளப்பட்டாள். நிமிர்ந்து பார்க்க… சித்தார்த்தன். 

வைசாலியை பத்திரமாக படிகளில் மரக் கைப்பிடியருகே நிறுத்தியவன் அழுத்தமான காலடிகளுடன் அவனை நெருங்கினான்.

 

அந்த முகமூடி வில்லனுக்கு நிகரான நிமிர்வும் தினவுமாக நிமிர்ந்து நின்ற தன் கணவனை அப்போது சிறிது பெருமையாகவே பார்த்தாள் வைசாலி.

தயங்காமல் முன்னே வருபவனை பார்த்து முகமூடி கொஞ்சம் தயங்கி நிற்க,விருட்டென்று அவன் அருகே  போய் நின்ற வேகத்தில் தனது பேன்ட் பாக்கெட்டின் உள்ளிருந்து எதையோ எடுத்து அவன் முதுகில் பிறர் அறியாமல் பதித்தான் சித்தார்த்தன்.

” சின்ன கத்திதான். ஆனால் ரொம்பவும் கூர்மையானது. ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விசையே தேவையில்லை, லேசாக அழுத்தினால் போதும், நான்கு அங்குலம் உள்ளே நுழைந்து விடும். மிகச் சரியாக உன் நடு முதுகில் சொருகி விட்டு, தோளில் மாட்டியிருக்கிறேனே ஒரு பேக். அதற்குள் என் வாழ்க்கையையே காப்பாற்றக்கூடிய விலைமதிப்புள்ள பொருள் உள்ளது. இதனை திருட முயன்றாய், அதனால் குத்தினேன் என்று தைரியமாக உன் மேல் கேஸ் கொடுப்பேன். என்ன செய்யப் போகிறாய்?”

பிசிரில்லாத குரலில் புன்னகை முகத்துடன் சித்தார்த்தன் கேட்க, முகமூடியின் கண்கள் கலவரத்தை காட்டியது. வேகமாக திரும்பி கண்ணிமைப்பதற்குள் கூட்டத்தோடு கூட்டமாக லிப்ட்டுக்குள் புகுந்து விட்டான் அவன்.

வைசாலி நடுங்கிய கால்களை சமாளித்தபடி வேகமாக சித்தார்த்தன் அருகே வந்து கை பற்றி கொண்டு நின்றாள். அவள் பார்வை சித்தார்த்தனின் கைக்கு போக மென்மையான புன்னகை ஒன்று முகத்தில் உருவானது. சிறிய சில்வர் போர்க்கை கையில் வைத்திருந்தான். 

” இதை வைத்துக் கொண்டுதான் அவ்வளவு அளந்து விட்டீர்களா?”




” இங்கே ஒருவரை பார்க்க வந்தேன்.வேலை முடிந்ததும் அதோ அந்த ஃப்ரூட் ஸ்டாலில் உட்கார்ந்து  சாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நீ படிகளில் இறங்கி வருவதை பார்த்ததும் உன்னிடம் பேச வேண்டும் என்ற ஆவலுடன் போர்க்கோடே எழுந்து வந்தேன்…அது சமயத்திற்கு உதவியது.நீ  இப்படித்தான் தனியாக வந்து மாட்டுவாயா?”அதட்டினான்.

” நான் சும்மா ஒரு விவரம் கேட்கலாம் என்றுதான் வந்தேன். இப்படி ஆபத்து இருக்குமென்று…”

” அந்த மாயாவை பற்றி உனக்கு தெரியாது வைஷு. அவள் மிகவும் அபாயமானவள், என்னை விட, உன்னை அவளிடம் இருந்து காக்க வேண்டும் என்ற பதட்டம் தான் எனக்கு .இவன் அந்த பாலே டான்ஸ் அகாடமி செக்யூரிட்டி ஆட்களில் ஒருவன் தானே?” 

 வைசாலிக்கும் இப்போதுதான் நினைவு வந்தது.”ஆமாம் இவனைத்தான் அந்த அகாடமி வாசலில் பார்த்தேன், ஆனால்  அவன் ஏன் என்னை விரட்ட வேண்டும்?”

” எல்லாம் மாயாவின் ஏற்பாடாகத்தான் இருக்கும். சரி வா வீட்டிற்கு போகலாம்’

“எந்த வீட்டிற்கு ?” வைசாலி பாதங்களை தரையில் அழுத்தி ஊன்றினாள்

“நீயே வருவதாக சொன்னாலும், மாயா இருக்கும் வீட்டிற்கு உன்னை நான் அழைத்துப் போவதாக இல்லை. வா உன் அம்மா வீட்டிற்கு போகலாம்”

போகும்போது அவன் தோளில் போட்டிருந்த பேக்கை ஒற்றை விரலால் தொட்டுக்காட்டி கேட்டாள். “இதுவும் சும்மா சொன்னது தானா?”

சித்தார்த்தின் முகம் இறுகியது. “சொல்கிறேன்” என்றபடி காரை நிறுத்தினான்.

“இனி ஒரு நிமிடம் கூட இங்கே நிற்கக் கூடாது, வெளியே போ” முகுந்தனின் குரல் வாசல் வரை கேட்க, இருவரும் வேகமாக உள்ளே வந்தனர்.

” என்னை மன்னிச்சிடுங்கப்பா.புத்தி கெட்டுப் போய் ஏதோ செய்துவிட்டேன்” கண்ணீரோடு அவர் எதிரில் நின்றிருந்தாள் சுமலதா.




What’s your Reaction?
+1
45
+1
29
+1
2
+1
0
+1
2
+1
0
+1
6
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!