ithu oru kathal mayakkam Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-8

8

” தாரா …தாரு …என்னடா ..என்னாயிற்று குட்டிம்மா ? ”  சாந்தாமணியின் குரல் பதட்டமாக ஒலித்தது .

” அம்மா …இங்கே …”  சட்டென அவள் கையிலிருந்த போன் பறிக்கப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டது மயில்வாகனனால் .

” என்ன செய்கிறாய் ? ” பற்களை நறநறத்தான்.

” போனை கொடுங்கள்.  நீங்கள் எல்லோருமாக சேர்ந்து எனக்கு சாப்பாடு கூட போடாமல் கொடுமைப்படுத்துவதை அம்மாவிடம் சொல்லியே ஆக வேண்டும் ” உயரே தூக்கி பிடித்திருந்த அவன் போனை எக்கி பிடுங்க முயன்றாள் .

” கொடுமை படுத்துகிறோமா …? ” அவன் குரல் ஓரு மாதிரி இருந்தது .

”  ஆமாம் …கொடுமைதான் படுத்துகிறீர்கள் .நீங்கள் என்னை மிரட்டுகிறீர்கள் .கழுத்தை நெரிக்கிறீர்கள் .உங்கள் அம்மா சாப்பாடு போட மாட்டேனென்கிறார்கள் .இதெல்லாம் கொடுமைதானே …?” எட்டிப் பார்த்து உயர்ந்திருந்த அவன் கையை   தொட முடியாமல் அவன் மார்பில் கைகளால் குத்தினாள் .

” முட்டாள். இதுவெல்லாம் பெரிய விசயமில்லை.  ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும் போது நடக்கும் சாதாரண விசயங்கள்தாம் . ஆனால் இப்போது நீ செய்ய நினைப்பது …? அங்கே உன் அம்மா இருக்கும் நிலைமை தெரியுமல்லவா …? நீயும் சேர்ந்து அவர்களை மேலும் துன்புறுத்துவாயா …? “

மயில்வாகனின் நியாயமான கேள்வி ஆணியடித்தது போல் தாரிகாவின் மனதினுள் மெல்ல மெல்ல இறங்கிக் கொண்டிருந்த போது போன் மீண்டும் ஒலித்தது. உயரே இருந்த தன் கையை இறக்கி பார்த்து விட்டு ”  உன் அம்மாதான் .ஒழுங்காக பேசு .ஏதாவது கீச் மூச்சுன்னு கத்துன ஒரே அறையில் கடைவாய் பல்லெல்லாம் உதிர்ந்திடும் ” எச்சரித்து விட்டு போனை நீட்டினான்.

அவனது அச்சுறுத்தலில் உறைந்த தாரிகாவின் கை போனை வாங்கும் போது நடுங்கியது .முயன்று குரலின் நடுக்கத்தை மறைத்து ” அம்மா ” என்றாள் .

” தாரு என்னம்மா …என்ன ஆயிற்று ? ”  சாந்தாமணி பதட்டத்தின் உச்சியில் இருந்தாள் .அழுகையின் ஆரம்பத்தில் இருந்தாள் .

” ஒண்ணுமில்லம்மா .  இரண்டு நாட்களாக  உங்களை பார்க்காமல் இருந்து விட்டு இப்போது தீடீரென்று உங்கள் குரலை கேட்டதும் எ…எனக்கு அழுகை வந்துவிட்டது ” பேசும் போதே அழுகை வரத் தொடங்கியது .அவளுக்கு அருகே இருந்த மயில்வாகனன் ஒற்றை விரலாட்டி எச்சரிக்க, உதட்டை மடித்து  அழுகையை அடக்கினாள் .

” ஓ …அவ்வளவுதானே …நான் என்னென்னவோ நினைத்து பயந்துவிட்டேன். அங்கே உனக்கு எந்த பிரச்சனையுமில்லையேடா தங்கம் ? “

தாரிகா நீர் பளபளத்த கண்களோடு மயில்வாகன்னை முறைக்க ,  அவன் ஒன்றுமில்லையென்று சொல்லுமாறு ஜாடை காட்டினான் .அவனை வெறித்து பார்த்தபடி ” ஒன்றும் இல்லை அம்மா .இங்கே எல்லோரும் என்னை ரொம்ப நன்றாக கவனித்துக் கொள்கின்றனர் . மூன்று வேளையும் பார்த்து பார்த்து கவனித்து சாப்பாடு போட்டு தாயே …தங்கமேன்னு தாங்குறாங்க ” நக்கலாக சொன்னாள் .




அவளது முதல் பேச்சில் முகம் கன்றி இருந்த மயில்வாகனன் தாயே …தங்கமே வார்த்தைகளில் மெலிதாக புன்னகைத்தான் .இந்த வார்த்தைகளை சாந்தாமணிதான் அதிகம் உபயோகிப்பாள் . மகளை கொஞ்சும் போது , சாப்பாடு ஊட்டும் போது ,  பெருமிதமாக புகழும் போது என அடிக்கடி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவாள் .இப்போது தாயை நெகிழ வைக்க , மகிழ வைக்க அதே வார்த்தைகளை தாரிகா உபயோகித்தாள் .

அதற்கெதற்கு இந்த மீசைக்காரன் சிரிக்கவேண்டும் …?  அவன் முகத்தை …அடர்ந்த மீசைக்குள் மறைந்து கிடந்த அவன் உதடுகளை உற்றுப்   பார்த்து அவன் சிரிப்பதை உறுதி செய்து கொண்டாள் . நான் அழுதால் நீ சிரிப்பாயாடா ? பொருமினாள்.

தன்னை நகலெடுத்து பேசிய மகளின் பேச்சில் சாந்தாமணிக்கு வெகு சந்தோசம் .” தாரும்மா …”  மெல்லிய சிணுக்கத்துடன் சந்தோசமாக சிரித்தாள் .அன்னையின் சிரிப்பு மகளுக்கும் தொற்றிக் கொள்ள , ” மம்மு …” அம்மாவிடம் செல்லம் கொஞ்சும் போது தான் அழைப்பது போல் அழைத்து தாரிகாவும் சிணுக்கமாய் சிரிக்க , அவள் கண்ணிற்குள் தேங்கி நின்ற நீர் இனி எனக்கென்ன வேலை …எனச் சொல்லாமல் சொல்வது போல் கண்ணை விட்டு இறங்கி அவள் கன்னத்தில் உருண்டது .

மயில்வாகன்னின் இதழ்கள் இப்போது இன்னும் சிறிது விரிந்து பற்கள் வெளித் தெரிந்தன. அம்மா – மகள் கொஞ்சுதலை மெச்சுதலாய் பார்த்தான் .அவனது சிரிப்பும் , கவனிப்பும் தாரிகாவிற்கு கோபத்தை தர ,  அவன் முன்னால் இப்படி சுதந்திரமாக இருந்து விட்டோமேயெனும் கூச்சமும் எழ …” கொஞ்ச நேரம் வெளியே இருங்களேன் ” எரிந்து விழுந்தாள். குழைந்த முகத்தை முறைப்பாக்கிக் கொண்டாள்.

மறுபுறம் சாந்தாமணி பதறினாள். “தாரு …மாப்பிள்ளையையா இப்படி பேசுகிறாய்?தப்பும்ம  .அவரை ஏன் விரட்டுகிறாய் ? “

மாப்பிள்ளையா …?  தாரிகா நொந்தாள் .போனை காதிலிருந்து எடுத்து கையில் வைத்துக் கொண்டு ” சொல்லுங்கம்மா. சாப்பிட்டீங்களா ? ” என்றாள் .காதில் வைத்திருந்தால் மட்டும் காதிற்குள் மட்டுமா கேட்க போகிறது …ஊர் தம்பட்டம்தான் அடிக்க போகிறது …என்ற எண்ணம் அவளுக்கு .அதனை நிரூபிப்பது போல்  ஸ்பீக்கர் போட்டது போல் வழிந்தது சாந்தாமணியின் குரல் .

அவள் கை பற்றி போனை மீண்டும் காதில் வைத்த மயில்வாகனன்  பேசு , வெளியே நிற்கிறேன் என ஜாடை காட்டிவிட்டு எழுந்தான் .கொஞ்சம் தயங்கி நின்று தன் இரு கைகளாலும் அவள் இரு கன்னங்களிலும் கோடாக வழிந்திருந்த கண்ணீரை துடைத்தான் .  தாரிகா பேச்சு மறந்து அவனை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அறையை விட்டு வெளியேறினான் .

” தாரு …தாரு ..என்னம்மா …? ” அந்த சிறு அமைதிக்கும் சாந்தாமணி தவித்துவிட , தன் தாயின் பரிதவிப்பை பூரணமாக உணர்ந்த தாரிகா சற்று முன் தான் செய்ய இருந்த பிழைக்கு வருந்தினாள்.

” ஒன்றுமில்லை மம்மு …இங்கே உங்கள் மாப்பிள்ளை …”  சிணுங்கலாக அன்னையின் மனதை சமாதானப்படுத்துவது போல் குரல் கொடுத்தாள்.




”  ஓ …மாப்பிள்ளை …அவரைப் போய் விரட்டிக் கொண்டிருந்தாயே …இப்போது   பக்கத்தில்தான் இருக்கிறாரா ? ” இந்த கேள்விக்கு எதற்கு அம்மாவின் குரலில் இத்தனை குதூகலம் .?

” ம்ஹூம் .இல்லைம்மா .வெளியே போயிட்டார் “

”  ம் …தாரு மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் தங்கம் .அவர் மனது கோணாமல் நடந்து கொள்ளம்மா “

”  ப்ச் …ஏம்மா அவரை நீங்களே மூன்று நாட்கள் முன்பு கல்யாணத்திற்கு வந்த போதுதான் பார்த்தீர்கள். அதற்குள் அவரை பற்றி ரொம்ப தெரிந்து விட்டதா உங்களுக்கு ? “

” அவரை தெரியாதும்மா. அவரது அப்பாவை தெரியும் “

” அப்பாவையா …? அது எப்படி …?  ஓ உங்களுக்கு பிறந்த ஊர் இதுதானில்ல .இரண்டு பேருக்கும் ஒரே ஊரென்பதால் தெரிந்தவர்களா ? ஆனால் அப்பாவை வைத்து மகனை எப்படி கணிக்கிறீர்கள் ? “

”  தர்மராஜாவின் மகன் தடம் புரண்டவனாக இருக்க வாய்ப்பே இல்லை .மாப்பிள்ளையின் அப்பாவை மட்டுமல்ல , அம்மாவையும் கூட எனக்கு மிக நன்றாக தெரியும் .இவர்கள் இருவருக்கும் பிறந்த மகன் நிச்சயம் நேர்மையும் , நல்ல குணமும் உடையவனாகத்தான் இருப்பான் “

தாயின் உறுதிக் குரலில் தாரிகாவிற்கு மிகுந்த ஆச்சரியம் .பிறந்த ஊரின் மேல் அம்மாவிற்குத்தான் எவ்வளவு பாசம் ?  இந்த சொந்த ஊர் பாசம்தான் முன் பின் அறியாதவனென்றாலும் அவனுடன் தன் மகளையே திருமணம் செய்து அனுப்ப செய்ததா? .ஏதோ குழப்பம் சூழ்ந்தாலும் தாயின் உறுதிக் குரல் வாயிலாக கணவன் , அவன் பெற்றோரின் குண அறுதியை கேட்டவளுக்கு மனதினுள் இது வரை இருந்த ஒட்டாத தன்மை விலகியது . அந்த வீட்டுடன் ஏதோ சொந்தம் உண்டானது போல் உணர்ந்தாள் .

”  தாரு முன் யோசனை இல்லாமல் திடீரென முடிவெடுத்து உன்னை மயில்வாகனனுக்கு  திருமணம் முடித்து அனுப்பவில்லையம்மா . இன்றைய நிலையில் உனக்கு மட்டுமல்ல எனக்கும் கூட மிக பாதுகாப்பான முடிவு உங்கள் திருமணம்தான் தங்கம் .”

தாயின் தழுதழுப்பான குரலில் தாரிகாவின் கண்கள் கலங்கி விட்டன .”  அ …அம்மா நீ …நீங்கள் அங்கே எப்படி இருக்கிறீர்கள் ? ஒன்றும் பிரச்சனையில்லையே ? “

” எனக்கு பிரச்சனை வரக் கூடிய வழியை எல்லாம்தான் அடைத்தாயிற்றே.  நான் இங்கே இப்போது மிகவும் சுதந்திரமாக இருக்கிறேன்மா. என்னை மிரட்டுவதற்கு காரணிகளும் இல்லை.ஆட்களும் இல்லை” சாந்தாமணியின் குரல் உற்சாகமாகத்தான் ஒலித்தது.  .தாரிகாவிற்குத்தான் மனதின் ஓரம் சுரீரென்றது .சமாளித்துக் கொண்டாள் .




” டேக் கேர் மம்மு “

”  என்னை பற்றிய கவலையை விடு தங்கம் .நீ அங்கே சரியாக நடந்து கொள் .மருமகளாக …மனைவியாக .” மனைவியெனும் போது தாயின் குரலில் இருந்த அழுத்தம் தாரிகாவிற்கு எதையோ வலியுறுத்த அநிச்சையாக தலையை சிலுப்பிக் கொண்டாள் .

” சரிம்மா ” குரலில் தாய்க்கு ஒப்புதல் கொடுத்தாள் .

தாலி கட்டி கூட்டி வந்து இங்கே தள்ளியதோடு சரி .அத்தோடு அவள் என்ன ஆனாள் ..என்ன செய்கிறாளென்ற அக்கறை இல்லாமல் இருப்பவன்.  மனைவியென்ற அக்கறை அவனுக்குத்தானே இருக்கவேண்டும்.அது இல்லாத போது நான் ஏன் அவனுக்கு மனைவியாக நடந்து கொள்ள வேண்டுமாம் ? தலையை சிலுப்பிக் கொண்டாள் . திமிர் பிடித்தவன் , அக்கறையற்றவன் , அராஜகக்காரன் போன்ற அவளது நினைவுகளுக்கு ஈடாகத்தான் மயில்வாகனனும் அவளிடம் நடந்து கொண்டான் .

அன்று இரவு  கட்டிலின் அருகே தரையில்  ஒரு பாய் விரித்து வைக்கப்பட்டிருந்தது . இரண்டு தலையணைகளும் ஒரு போர்வையும் இருந்தன .

” எனக்கு தரையில் படுத்து பழக்கமில்லை .  நேற்று மயங்கி கிடந்தாயே என்றுதான் கட்டிலில் தூக்கிப் போட்டேன் .இன்று …நான் இங்கே … நீ அங்கே படுத்துக்கொள் ” அவளுக்கு அந்த இடம் அவனது கட்டை விரலால் சுட்டப்பட்டது .

” எனக்கும்தான் தரை பழக்கமில்லை ”  கத்தலாய் உயர்ந்த அவளது குரலுக்கு விழிகளை உருட்டினான் .

” மூச் ” வாயில் விரல் வைத்துக் காட்டினான் .”  கத்தக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறேன்ல. உன் பழக்கவழக்கமெல்லாம் உன் வீட்டோடு .இது என் வீடு .இங்கே என் பழக்கத்திற்குத்தான் நீ மாறியாக வேண்டும் .படுத்து தூங்கு ” வாய் திறந்த கொட்டாவியுடன் திரும்பி படுத்து கண் மூடி தூங்க தொடங்கினான் .

நீர்யானை மாதிரி வாயை திறப்பதை பார் …ஆத்திரத்துடன் பொறுமியபடி சக் சக்கென்ற நடையுடன் பாயில் டொம்மென அமர்ந்து வெகு நேரம் படுக்கவே பிடிக்காமல் உட்கார்ந்தே இருந்தாள் தாரிகா .




What’s your Reaction?
+1
15
+1
13
+1
1
+1
1
+1
3
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!