ithu oru kathal mayakkam Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-7

7

 லேசான வெது வெதுப்போடு தன் கன்னம் தீண்டிய பஞ்சுத் துணியின் மென்மையில் மெல்ல விழி திறந்தாள் தாரிகா. முதலில் அவள் கண்ணில் பட்ட உருவம் தமயந்திதான் . அவள்தான் வெந்நீரில் துணியை நனைத்து தாரிகாவின் முகத்தை துடைத்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் குற்ற உணர்வும் , கவலையும் அப்பிக் கிடந்தன .

” இப்போது எப்படி இருக்கிறதும்மா ? ”  இவள் விழி திறப்பதை பார்த்ததும் வேகமாக கேட்டாள் .

“வாசலோடு போகிறவர்களை கூட வரவேற்று நடு வீட்டில் அமர்த்தி வயிறார சோறு போட்டு அனுப்பும் பரம்பரை எங்களுடையது. இங்கே என் மருமகள் காலையிலிருந்து சாப்பிடாமல், ஏனென்று கேட்க ஆளில்லாமல் இருந்திருக்கிறாள் . மயங்கி கீழே விழும் அளவு அவள் வரும் வரை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறோம் .சை …இத்தனை வருடமாக நான் வாழ்ந்த வாழ்க்கைக்குத்தான் என்ன பயன் ?  தர்மராஜான்னு எனக்கெல்லாம் பெயர் ஒரு கேடு …? ” தோள் துண்டை படக்கென வெறுப்போடு உதறி தோளில் போட்டுக் கொள்ளும் மாமனாரை ஆச்சரியமாக பார்த்தாள் தாரிகா.




ஹப்பா …எவ்வளவு கோபம் இவருக்கு ?  கை மேல் சூடாக நீர் தெறிக்க விழி நகர்த்தி பார்த்த போது , அவளருகே அமர்ந்திருந்த தமயந்தியின் கண்களிலிருந்து வழிந்த நீர்த்துளிகள்தாம் அவையென ஆச்சரியமாக உணர்ந்தாள் .

” மன்னிச்சிடும்மா. நா…நான் நீ சாப்பிட்டிருப்பாயென்று நினைத்தேன் “

” வீட்டு மருமகள் சாப்பிட்டாளா இல்லையா என்று கூட கவனிக்க முடியாத அளவு இந்த மகாராணியம்மாவுக்கு அவ்வளவு வேலை ? ”  நக்கல் தெறித்தது தர்மராஜாவின் குரலில் .தமயந்தி தலை குனிந்தாள்.

” என்ன அண்ணா மதினிக்கு இந்த வீட்டில் வேலைகளுக்கா பஞ்சம் ? இவளை விருந்தாடி போல கவனிக்க வேண்டுமென்கிறீர்களா ? ஆக்கிய சோறு அடுக்களையில் இருக்கிறது .எடுத்து போட்டு சாப்பிட வேண்டி…” நீட்டி முழக்கியபடி வந்த சங்கரேஸ்வரி அண்ணனின் ஒரே ஒரு பார்வையில் சகலமும் அடங்கிப் போய் கதவோரமாக நின்று கொண்டாள் .

“காலியாக கிடந்த  வெறும் வயிற்றில் உடனடியாக சாப்பாடு சாப்பிட முடியாது . முதலில் இந்த கஞ்சியை குடித்து விடம்மா”  கஞ்சி பாத்திரத்துடன் வந்தவர்கள் அன்பரசியும் , அனந்தநாயகியும் .அவர்கள் முகத்தில் இருந்ததும் உண்மையான வருத்தமே .

ம் …எல்லோரும் வந்துவிட்டார்கள் .அந்த சுகா ..சுகந்தி மட்டும் எங்கே காணவில்லை …விழிகளை சுற்றி தேடியபடி தன் இதழ் தொட்ட கஞ்சிக்கு வாய் திறந்தாள் தாரிகா .

”  தம்பி பொண்டாட்டி மேல இப்ப வர்ற அக்கறை கொஞ்சம் முன்னால் வந்திருக்கலாமேம்மா?” தர்மராஜா மகள்களையும் விடவில்லை.

” நாங்கதான் எங்கள் வீட்டுக்கு போய் விட்டோமே அப்பா ” அன்பரசி தப்ப வழி தேட ,

”  தம்பி கல்யாணம் முடிந்த மறுநாளே பிறந்த வீடு எப்படியும் போகுதுன்னு உங்க  வீட்டுக்கு போயிடுவீகளோ ? ” விடாமல் தர்மராஜா குத்த …

” சாரிப்பா ” தலை குனிந்தனர் மகள்கள் .

தாரிகாவிற்கு ஆச்சரியம் தாள முடியவில்லை.  சற்று முன் வரை சாப்பிடென சொல்ல ஆளில்லையே என மருகியவள்தான் .இப்போதோ அந்த குடும்பத்தினரின் வருத்தத்தில் அவளுக்கு மகிழ்ச்சி வர , அடுத்தவர் வருத்தத்திற்கு சந்தோசப்படுவாயா நீ …எனத் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் .தர்மராஜாவின் பரிதவிப்பான பாசத்தையும் , அவருக்கு பயந்தேனும் வெளிப்பட்ட மற்றவர்களின் பரிவையும் ஆனந்தமாக உணர்ந்தாள்.

அத்தைக்கு ஆதரவு போல் அறைக்கதவருகே கை கட்டி சுவரில் லேசாக சாய்ந்தபடி நின்றிருந்த மயில்வாகனனின் பார்வை இவள் மேல் இல்லை.  தாரிகாவின் கட்டில் தலைமாட்டில் இருந்த சன்னல் மேல் இருந்தது .சற்று முன் அண்ணனின் கோப பார்வைக்கு பயந்து பின் வாங்கிய அத்தையின் தோள் தொட்டு சமாதானம் செய்திருந்தான் .இப்போதும் அத்தையின் அருகேயே நின்று சன்னலை வெறித்துக் கொண்டிருந்தான் .

அவனது நிலைக்கு போடாடேய் என அவனை மீண்டும் கத்தும் ஆவல் வர , மிக கடினப்பட்டு தன்னை அடக்கினாள் தாரிகா. அவனிடமிருந்து தன் பார்வையை நகர்த்திக் கொண்டாள்.  தலை சுற்றி மயங்கி விழும் கடைசி நொடி அவன் வெகு வேகமாக தன்னருகே வருவதை உணர்ந்தாள் . காலடியில் சகதியாய் தெரிந்த வயலில் விழுந்து விடாமல் அவள் உடல் தாங்கப்பட்டதும் நினைவில் வந்தது .மயக்கம் வந்ததற்கு காரணமே இவன்தான் .இவனை விட்டு விட்டு மாமா யார் யாரையோ திட்டிக் கொண்டிருக்கிறாரே …?

இளஞ்சூடும் , உப்பும் ,  உரைப்புமாக வயிற்றுக்குள் இறங்கி நிறைந்த கஞ்சி உடலுக்கு புது தெம்பை தர , விழிகளை சுழற்றி ஒவ்வொருவராக பார்த்து அளவிட்டுக்  கொண்டிருந்தாள்.

” இனிமேல் கவனமாக பார்த்துக் கொள்கிறேன். ”  தலை குனிந்து தமயந்தி முணுமுணுக்க , தர்மராஜா அவள் பக்கமே திரும்பவில்லை .




”  டேய் மயிலு வீட்டுப் பொம்பளைங்க யாரையும் நம்ப முடியாது .வெளி வேலைகளோடு சேர்த்து வீட்டையும் இனி நாம்தான் கவனித்துக் கொள்ளனும் போல . இனி அடுக்களையிலும் ஒரு கண் வச்சுக்கோடா .யார்கிட்டேயும் பொறுப்பை கொடுக்க முடியலை “

தமயந்தியின் முகம் வாடியது .கண்கள் மீண்டும் கலங்கி கண்ணீர் வடிந்தது .தாரிகாவிற்கு கொஞ்சம் பாவமாக இருந்தது. ஆதரவாக தமயந்தியின் கையை பற்றினாள். அவள் அவசரமாக மருமகளுக்கு காட்டாமல் கண்களை துடைத்துக் கொண்டாள் . தாரிகா மயில்வாகனன்னை பார்க்க அவன் இறுகிய கற்பாறை முகத்துடன் நின்றிருந்தான் .  உன்னால் உன் அம்மா திட்டு வாங்குகிறாரே …ஏனென்று அப்பாவை  கேட்க மாட்டாயாடா ? வாயசைத்தே  முணுமுணுப்பாக கேட்டாள் . அவளை பொறுத்த வரை இதனை கவனித்திருக்க வேண்டியவன் மயில்வாகனனே .

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் அவளை நோக்கி வர திடுக்கிட்டாள் .இப்போது …பேசியதை கேட்டு விட்டானா ?  திரும்பவும் மயக்கம் வருமா …தாரிகா  வாயை அழுத்தி மூடிக் கொண்டு நெற்றிப்  பொட்டை  வருடி  விட்டுக் கொண்டாள் .மயில்வாகனன் அவளருகே கட்டிலை உரசியபடி நின்று கொண்டு கைகளை உயர்த்தி கட்டிலின் தலைமாட்டில் இருந்த சன்னலை இழுத்து மூடினான் .

” வெயில் முகத்தில் விழுந்து கொண்டிருந்தது ” பார்வையை இவள் முகத்தின் மீது வைத்தான் .மனம் படபடக்க தாரிகா பார்வையை திருப்பிக் கொண்டாள். இதற்காகத்தான் வத்தானா …?

மகன் அருகே வரவும் தமயந்தி எழுந்து கொண்டாள் .மகனை மனைவி பக்கம் அமருமாறான சைகையோ அது …?

” அவள் கொஞ்ச நேரம் தூங்கட்டும். நாம் வெளியில் இருக்கலாம் ”  மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி வாசலுக்கு நடந்தாள். அவள் பின்னேயே ஒவ்வொருவராக நகரத் தொடங்க தர்மராஜா தாரிகா அருகே வந்தார் .

” இங்கே பாரும்மா மருமகளே .இது உன் வீடு .நீ இந்த வீட்டு எஜமானி. இங்கே எதற்கும் , யாரிடமும் அனுமதி கேட்கனும்கிற அவசியம் உனக்கு கிடையாது .  தலை நிமிர்ந்து இந்த வீட்டிற்குள் நடமாட வேண்டும். புரிகிறதா ? ” லேசான அதட்டலோடு ஒலித்த மாமனாரின் குரல் தாரிகாவின் மனதை திடுக்கிட வைக்க , அவர் முகத்திற்கு பார்வையை உயர்த்தியவள் குழம்பினாள். தர்மராஜாவின் பேச்சு தாரிகாவிற்காக இருக்க , பார்வை அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த மனைவியின் முதுகில் இருந்தது.

 தமயந்தி அறை வாசலில் ஒரு நிமிடம் தேங்கி அவரது பேச்சை உள் வாங்கிக் கொண்டு பின் மெல்ல நடந்து வெளியேறினாள் .இவர் இப்போது அதட்டுவது …என்னையா …அவர்களையா ? தாரிகா குழம்பினாள் .




” ப்ச் போதும் விடுங்கப்பா ” மயில்வாகனின் மெல்லிய சலிப்பு குரல்.  எதனை விடச் சொல்கிறான் …? என்னை அதட்டுவதையா …? அவர்களுக்கு குறிப்பு காட்டுவதையா ….? என்னதான் நடக்கிறது இங்கு …? தீவிரமாக யோசித்தும் தனக்கு ஒன்றும் புரியாதென தோன்ற அடப் போங்கடா எனும் அலுப்புடன் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் தாரிகா . அவளது அழுத்த தோற்றத்தில் அமைதியான தர்மராஜா , வாயை மூடிக் கொண்டு தான் போவதாகவும் , மருமகளை கவனித்துக் கொள்ளுமாறும் மகனுக்கு சைகை செய்துவிட்டு வெளியேறினார் .

தனக்கு அருகே மெத்தை அழுந்தும்  உணர்வில் தாரிகா திக்கிட்டு விழி திறந்தாள். மயில்வாகனன் அவளுக்கு மிக அருகே கட்டிலில் அமர்ந்திருந்தான்.  காதில் போனை வைத்திருந்தான் .

” உன் அம்மாவுடன் பேசினாயா ? “

” இல்லை ” என தலையாட்டினாள் தாரிகா .

” ஏன் ? பேசியிருக்கலாமே ? “

” அவர்கள் பேசும் நிலைமையில் இருக்கிறார்களோ என்னவோ ?” தயக்கமாய் கூறினாள் .

”  பேச முடியாமலிருந்தால் போனை எடுக்க மாட்டார்கள் .பார்க்கலாம் …ஹா …இதோ எடுத்து விட்டார்கள் .ஹலோ அத்தை எப்படி இருக்கிறீர்கள் …? ம் …நன்றாக இருக்கிறோம். இதோ உங்கள் மகளிடம்  பேசுங்….. “

அந்தப் பக்கம் போகும் ரிங் டோனையும்  இந்தப் பக்கம் வாரி வழங்கிக் கொண்டிருந்த அந்த கருவியை வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தவள் எதிர் முனையில் தாயின் குரலை கேட்டதும் மனம் துவண்டாள் .மயில்வாகனன் போனை கொடுக்கும் முன்பே அவன் மேல் விழுந்து அவனது போனை …அவளுக்கு பேசப் பிடிக்காத …தொடவே பிடிக்காத அந்த அவனது போனை பிடுங்கினாள் .

” அம்மா …அம்மா …” விக்கல் விசும்பலாகி அழுகையானது .

மயில்வாகனன் காயம் பட்ட மனதுடன் அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான் .




What’s your Reaction?
+1
20
+1
19
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!