ithu oru kathal mayakkam Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-9

9

” தின்னாச்சா ? ”  முதலில் சைகையில் சாப்பிடுவது போல் கேட்டு தாரிகா கவனிக்காத்து போல் அலட்சியம் செய்ய வாய் திறந்து இப்படி அருமையாக விசாரித்தாள் சுகந்தி . இந்த லட்சணம் இல்லையென்று யார் அழுதார்களாம் …? அவள் கேட்ட வார்த்தைக்கு குன்றி தாரிகா முகம் திருப்ப …

” இந்தாம்மா போய் கொட்டிக்கிறதுதான் கொட்டிக்கோ.  பெறவு தலை சுத்தி கீழே கிடந்து எங்க மேல பழியை போடாதே ” மகளை விட அருமையாக உபசரித்தாள் சங்கரேஸ்வரி. தாரிகாவிற்கு சாப்பிடும் எண்ணமே அற்றுப் போய்விட்டது. அப்படி இந்த வீட்டில் சாப்பிடத்தான் வேண்டுமா …?

” உள்ளே டேபிளில் எல்லா பலகாரமும் எடுத்து வைத்தாயிற்று .நீ போய் சாப்பிடலாம் ” தமயந்தியின் பேச்சு இப்படி இருந்தது .இது கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் இவளுக்கு தகவல் சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த அலுமினிய கும்பாவுடன் பின்வாசலுக்கு போய் வீட்டு நாய்களுக்கு அதிலிருந்த பழையதை அவள் போட்டதுதான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது .ஏனோ உணவு அறைக்கு போக அவள் கால்களுக்கு மனம் வரவில்லை .மெல்ல நகர்ந்து பக்கவாட்டு வாயில் வழியாக வீட்டின் வெளிப்புறம் வந்தாள் .

” அம்மா …” ” எம்மா ”  தயக்கமாய் இரு இளங்குரல்கள் கேட்க திரும்பி பார்த்து புன்னகைத்தாள் .அவள் திருமணக் கோலத்தில் புகுந்த வீட்டு படியேறிய போது பிரமிப்போடு வரவேற்பு கொடுத்த அந்த இரு சிறுமிகள் .இப்போதும் அதே …வான் தேவதையை பார்க்கும் பரவசத்துடன் அவளுக்கு கொஞ்சம் எட்டியே நின்றிருந்தனர் .தாரிகா இங்கே வாங்க எனக் கையசைக்க தயங்கித் தயங்கி அருகே வந்தனர் .

” ஏன் அங்கேயே நின்று விட்டீர்கள் ? “

”  உங்களை பாத்துக்கிட்டே இருக்கனும் போல் இருக்குங்கம்மா .அதான் அங்கனயே நின்னு எப்போ வெளியே வருவீகன்னு பாத்துக்கிட்டு இருந்தோம் “

” ஹேய் ஷோகேஸ் பொம்மையா நான் ? “

அவளது கேள்வி அவர்களுக்கு சரியாக விளங்கவில்லை என்றாலும் ” ஆமாங்கம்மா .பொம்மை மாதிரிதான் அழகாக இருக்கிறீர்கள் ” என்றாள் ஒருத்தி .

” ம்கூம் . எங்க ஊர் முத்தாலம்மன் திருவிழாவில் ஜொலிப்பது போல் மின்னுகிறீர்கள் ” இது மற்றொருத்தி .

போச்சுடா …இவர்களது இந்த அபரிமித பிரமிப்பை எப்படி போக்குவது ? தாரிகா சிறு சலிப்புடன் அவர்கள் அருகே வந்தாள் .இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டாள் .




” நானும் உங்களை மாதிரி சாதாரண பொண்ணுதான் .  என் பெயர் தாரிகா .உங்க பெயர் என்ன ? “

தங்களது தார் கறுப்பு கைகளின் மேல் படிந்திருந்த அந்த பொன்னிற கைகளை நம்பமுடியாமல் பார்த்தனர் அச்சிறுமிகள்.. பின் சடாரென உதறி பின்வாங்கி நின்றனர்.

” எங்கள தொடாதீகம்மா.நாங்கள்  கீழ் சாதி பொண்ணுக .”

 ” அப்படின்னா ? ”  நகரத்திலேயே பிறந்து வளர்ந்திருந்த தாரிகாவிற்கு உண்மையிலேயே புரியவில்லை . அவளுக்குப் புரிய வைக்க அவர்களாலும் முடியவில்லை .விழித்துக் கொண்டு நின்றார்கள்.

” ஏன் அம்மா …அம்மான்னு கூப்பிட்டு என்னை வயசாளியாக்குகிறீர்கள்.  தாரிகா அக்கான்னு கூப்பிடுங்களேன் .

” ஐய்யய்யோ . பெயர் சொல்லிக் கூப்பிடுவதா ? அக்கான்னு சொந்தம் கொண்டாடுவதா ? வேண்டாம்மா. எங்க பொழப்புல மண்ண போட்ராதீக ”  இருவரும் பின்வாங்கி நகர ஆரம்பித்தனர் .

” ஏய் நில்லுங்க . நீங்க யாரு ? உங்க பெயரையாவது சொல்லிட்டு போங்க “

”  நான் செவ்வரளி .இவா சம்பங்கி .நாங்க கரிமூட்டம் போடுற குடும்பம் ….இங்கன ஏதாவது சில்லறை சோளி இருந்தா வந்து செஞ்சு குடுத்துட்டு போவோம் ….வேல முடிஞ்சு உங்களுக்கோசரம் இந்நேரம் வரை இங்கன இருந்தோம் ” மாற்றி மாற்றி இருவருமாக பேசியபடியே ஓடி விட்டனர் .

” ஸ்ட்ரேஞ்ச் கேர்ள்ஸ் ”  முணுமுணுத்தபடி திரும்பிய தாரிகா இவளை பார்த்தபடி நின்ற தமயந்திக்கு புருவம் உயர்த்தினாள் .

” அந்தப் பொண்ணுங்க கூட நெருக்கமாக பழக வேண்டாம் ”  தமயந்தியின் பார்வையை ஓரமாக அம்பாரமாக அடுக்கி வைக்கப்படலடிருந்த வைக்கோல் போரின் மீது இருந்தது .

” ஏனோ ..? ”  தாரிகாவின் பார்வை நேரடியாக தமயந்தியின் மீதே இருந்தது .குத்தீட்டியையும் தாங்கியிருந்தது .

” அது ….அந்தப் பொண்ணுங்க …கொஞ்சம் தாழ்ந்த சாதி பொண்ணுங்க …அதுதான்…” தடுமாறி விளக்கமளிக்க முயன்று கொண்டிருந்த தமயந்தியின் பார்வை திடீரென பிரகாசமானது .

” மயிலு …இவளப் பாருப்பா …அந்தக் கரிமூட்ட பொண்ணுங்க கூட …”  புகார் ஒன்றினை மகனிடம் அளிக்கும் ஆவலுடன் நின்றவளின் பேச்சு முடிவடையவில்லை.  இலக்குக்கானவனின் காதுகளை எட்டவில்லை .




” சாப்பிட்டாயா …? ” தாரிகாவின் தோள்களை சுற்றி அழுத்தமாக கோர்த்தது அவன் கை. முகமும் தாய் பக்கம் இல்லை .மனைவியின் முகத்தில்தான்  ஆழமாக .

தாரிகாவினுள் சிலிர்ப்பு. இதை…இதைத் தானே அவள் எதிர்பார்த்தாள்.  பிறரறிய கணவனால் கவனிக்கப்படுவதைத்தானே ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறாள். இந்த கவனிப்பு கிட்டாத தால்தானே சுருண்டிருந்தது அவள் உள்ளம் .ஆனந்தம் நிரம்பி வடியும் மனத்துடன் கணவனின் பார்வையை எதிர் கொண்டவளின் மனதில் ஒரு குறும்பு எண்ணம் .சற்று முன் தன்னை அதட்டிய மாமியாருக்கு குட்டியாய் ஒரு தண்டனை தந்தால் என்ன …?

 அழகாய் விழிகளை படபடத்து , பகட்டாய் தோள்களை குலுக்கினாள் .” ம்ஹூம் ”  நீர் மேல் குவியும் தாமரை மொட்டாய் உதடு பிதுக்கி காட்டினாள். மயில்வாகனனின் கை அவள் தோளில் அழுத்தமாக படிந்தது .

” வா …சாப்பிடலாம் ” அவள் தோள் பற்றி இழுத்து போனவனின் வேகத்தில் ”  அப்போவே பலகாரங்களெல்லாம் எடுத்து வைத்து சாப்பிட சொல்லி விட்டேன்பா ” என்ற தமயந்தியின் விளக்க குரல் காணாமல் போனது .

தட்டில் இட்லிகளை வைத்து  ” சாப்பிடு ”  என அமர வைத்தவனை நம்ப முடியாமல் பார்த்தாள் .இவன் …எனக்கு பரிமாறுகிறானா …? இட்லியை தொட்டவள் அதன் ஆகிய நிலைக்கு லேசாக முகம் சுளிக்க பின்னேயே இட்லியை தொட்டவன் முகமும் மாறியது .

” இரு சூடாக தோசை ஊற்றி தருகிறேன் ”  அடுப்படிக்கு நகர்ந்தவனை தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தாள். இவன்தான் நேற்றிரவு என்னை வலுக்கட்டாயமாக பாயில் படுக்க வைத்தவனா ?

” மயிலு நீ ஏன்பா …? செத்த உட்காரு .நிமிசத்துல நான் தோசை சுட்டு எடுத்தாறேன் ” பரிதவிப்போடு எதிரே வந்த சங்கரேஸ்வரி அவனது ஒரே பார்வையில் உடல் நடுங்கி பின் வாங்கினாள். மகனின் இந்த பார்வையை தமயந்தி முன்பே ஊகித்திருக்க வேண்டும். அதனால் அவள் முன்பே பின்வாங்கியே நின்றாள்.  வில் அம்பு போல் அடுப்படியினுள் நுழையும் மயில்வாகனனை தடுக்க  தாய் , அத்தை , வேலையாட்கள் யாருக்கும் தைரியமில்லை. இந்த தர்ம சங்கடமான சூழலை மாற்றும் தைரியம் தனக்குமே இல்லாத்தை தாரிகா உணர்ந்தாள் . தன் இரு கைகளையும்  கோர்த்து நடுக்கத்தை மறைத்துக் கொண்டாள் .

இரண்டாவது நிமிடத்தில் அவளுக்கு முன் இருந்த இட்லி தட்டு நகர்த்தப்பட்டு சூடான தோசை தட்டு வைக்கப்பட்டது .சட்னி , சாம்பார் ஊற்றப்பட்டது .

” சாப்பிடு ” கையில் தோசைக் கரண்டியுடன் அடுத்த தோசைக்காக உள்ளே போனான்.

திணறி உண்ட  இரண்டாவது தோசையை அடுத்து வைக்கப்பட்ட  மூன்றாவது தோசையில் பாதிக்கு மேல் நிச்சயம் முடியாது என வயிறு நிர்தாட்சண்யமாக மறுத்து விட , மீண்டும் அடுப்படியினுள் திரும்பிய மயில்வாகனனின் கையை அவசரமாக பற்றினாள் தாரிகா .

” வ…வயிறு நெறஞ்சிடுச்சு .போ…போதுமே ..”

அதெல்லாம் முடியாது ..நான் வைக்கும் அளவு நீ சாப்பிட்டே ஆக வேண்டுமென்று விடுவானோ  என்ற அவளது அச்சத்தை பொய்யாக்கி ,” ம் …சரி .எழுந்து கை கழுவு ” என்றான் வேகமாக எழுந்து வாஷ்பேசினுக்கு ஓடினாள் தாரிகா .

” இங்கே பார். சரியாக கழுவு .”  அவனின் இருவிரல்கள் அவளது இதழ்களை மென்மையாக வருடிச் சென்றன .மனம் படபடக்க குழாயில் கொட்டிக் கொண்டிருந்த நீருக்கு முகம் திருப்பிக் கொண்டு கையில் நீரள்ளி இதழ் கழுவிக் கொண்டாள் .

 கை கழுவி முடித்தவளின் முன் துண்டு நீட்டப்பட ,  மிகுந்த சங்கடத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் அங்கே சுகந்தியை பார்த்து ஆச்சரியமானாள் .

” கை துடைச்சுக்கோங்க அக்கா ”   நீதானே கொஞ்ச நேரம் முன்பு தின்னாச்சான்னு உபசரித்தவள் …தாரிகாவின் பார்வை கேள்விக்கு பயமள்ளி பூசிக் கொண்டன சுகந்தியின் விழிகள். சரி …பொழைச்சு போ …சுகந்தியிடம் பெருந்தன்மை காட்டிக் கொண்டிருந்தவளின் கை முரட்டுத்தனமாக பற்றப்பட்டது .




” வா …வெளியே போய் வரலாம் ”  அவள் கை பற்றி இழுத்து நடந்தவன் வாசலில் நின்று திரும்பி வீடு முழுவதும் பார்வையால் அளந்து சற்று உரத்த குரலில் ” ஜாக்கிரதை ” என்றான்.

தாரிகாவிற்கு அப்போதே ஒன்று உறுதியாகி விட்டது .இனி இந்த வீட்டில் அவளுக்கான மரியாதை தர்மராஜாவின் மருமகளாக , மயில்வாகனனின் மனைவியாக , வீட்டு எஜமானியாக தடையற கிடைக்க போகிறது .  அருகமர்ந்து இறுக்கமான முகத்துடன் ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தவனை நன்றியுடன் பார்த்தாள் .

” இந்த வீட்டுக்கு விருந்தாளியா நீ …? உன்னை இப்படி தினமும் உபசரிக்கனுமா ? ” எரிந்து விழுந்தவனை திகைப்பாய் பார்த்தாள் .இவனென்ன நிமிசத்துக்கு நிமிசம் நிறம் மாறுகிறான் .

”  உங்க அம்மா …அ…அத்தை ..சாப்பிடச்  சொன்னாங்க .எ..எனக்கு தனியாக உட்கார்ந்து சாப்பிட்டு பழக்கமில்லை .அதுதான் …”

” அப்போது எல்லோரும் சாப்பிடும் போது சேர்ந்து கொள்ளனும்.  அதற்கு மகாராணி கொஞ்சம் சீக்கிரம் திருப்பள்ளி எழுச்சி கொள்ளனும் “

இவ்வளவு நேரமாக அவளை மகாராணி போல் நடத்தினான்தான்.  ஆனால் அதற்காக இப்படி நக்கலும் , நையாண்டியுமாக  பேசுவானா ? தாரிகாவின் நெஞ்சம் கோபாவேசத்தில் ஏறி இறங்க தொடங்கியது. அப்படி மகாராணியாக உயர்த்தவும் வேண்டாம். இப்படி சேடிப் பெண்ணாக்கி மிதிக்கவும் வேண்டாம். அவள் மனம் கட்டுப்பாட்டை இழந்தது .நாவு சுழன்றது .

 ” நான் அப்படித்தான் . சீக்கிரமாகவெல்லாம் எழுந்து கொள்ள முடியாது . போடா …”

 அந்த ” டா ” வின் முடிவில் அவளது இதழ்கள் தண்டிக்கப்பட்டன. அவனது  உதடுகளால். மிகுந்த சினத்துடன் …மிக வன்மையாக.  மதியம் சாப்பிடுவதற்கு என்ன செய்வேன் …வாய் இல்லையே எனக்கு …என்ற பயமான உணர்வுடன் பலவீனமாகி மயங்கி சரிந்தாள் தாரிகா .




What’s your Reaction?
+1
17
+1
13
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!