ithu oru kathal mayakkam Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-5

5

 கட்டிலை சுற்றி சரம் சரமாக மல்லிகை தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருக்க , கட்டில் மெத்தையில் ரோஜாக் குவியல்கள். மேஜை நிறைய தட்டு தட்டாக பழங்களும் , இனிப்புகளும் .  அறையை சுற்றி நான்கு பக்க சுவர்களிலும் இருந்த டியூப்லைட்கள் எரிய விடப்பட்டிருக்க , அறையின் நடு மையத்தில் தொங்கிக் கொண்டிருந்த சாண்டிலியர் வேறு ஒளியை சிந்திக் கொண்டிருந்தது .

சற்று முன் நான் பார்த்த அறைதானா இது ? தாரிகாவிற்கு சந்தேகம் வந்தது. ஒரே மணி நேரத்தில் எதற்காக இப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் ..? அறையினுள் சூழ்ந்திருந்த நறுமணத்தில் அவளுக்கு மூளை செயலிழந்து மயக்கம் வரும் போலிருந்தது .   அடியே தாரு நேரங் கெட்ட நேரத்தில் மயங்கி விழுந்து தொலையாதேடி …தன்னை தானே உலுக்கிக் கொண்டாள். அவ்வாறு மயங்கி  சரியும் போது தாங்கிக் கொள்ள தயாரென எதிரே நின்றிருந்தவனை பார்த்தே இப்படி தன்னையே தேற்றிக் கொண்டிருந்தாள் .

இ..இவன் ஏன் இப்படி நின்று கொண்டிருக்கிறான் ?  அய்யனார் போல…விழி விரித்து அவனை பார்த்து , தலையை ஆட்டிக் கொண்டாள். இல்லையில்லை அய்யனார் போலில்லை …அந்த கயிலை நாதன் போல் , ம்ஹூம் நர்த்தன நடராசன் போல் …சர்ப்பமடக்கிய அநிருத்தன் போல் …வில்லேந்திய மன்மதனை போல், தன் மனதின் ஓட்டங்களில் துணுக்குற்றாள். என்ன இது பைத்தியக்காரி போல் என்னென்னவோ பிதற்ற ஆரம்பித்து விட்டேன். எதிர்பாராமல் என் வாழ்வில் நடந்து விட்ட மாற்றம் மூளையை மழுங்கடித்து விட்டதா …?

மேலும் தன் விழிகளை அகலமாக்கி எதிரே நின்றிருந்தவனை பார்த்தாள்.  அவன் …மயில்வாகனன் அப்படித்தான் நின்று கொண்டிருந்தான். என்னென்று கணிக்க முடியாமலோ …எல்லா வகையினனாகவோ … வேட்டியை மடித்து கட்டி.   கால்களை  அகற்றி நின்று இடுப்பில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு, அவளை.. அவளது மனப்போராட்டங்களை முக சேஷ்டைகளை உற்றுக் கவனித்தபடி இருந்தான். சற்று முன் பாம்படக்கிய பரந்தாமனாக அவனை எண்ணினாளே …இப்போதோ அந்த ஐந்து தலை நாகமாகவே அவன் தோன்றினான் .ஏதோ ஓர் கணத்தில் அவன் நா நீண்டு தன்னை சுருட்டி அவன் வயிற்றுக்குள் அனுப்ப போவதாக உணர்ந்தாள் .விழிகளை இறுக மூடி அவனை பார்ப்பதை தவிர்த்தாள் .




அடேய் ..முதலிரவு அறைக்குள் வரும் புத்தம் புது மனைவியை எவனாவது இப்படி ஒரு போசில் வரவேற்பானா …? என்ன மனுசன்டா நீ ?

பட்டப்பகலிலேவா ..என்ற சங்கரேஸ்வரியின் இகழ்தலை மிக உடனடியாக கீழிறங்கி போய் மயில்வாகனின் காதுகளில் சேர்ப்பித்திருந்தாள் .பாரேன் உன் அத்தையின் வேலையை …என்பதான குறை கூறலுடன் நின்றவளை நிதானமாக பார்த்தபடி கேட்டான் .

” என்னவாம் பட்டப்பகலிலே …? “

” இரவு வரும் வரை பொறுக்க முடியாமல் பகலிலேயே …” படபடவென ஆரம்பித்து விட்டவள் தான் பேசிக் கொண்டிருக்கும் விசயத்தை உணர்ந்து சட்டென உதடு கடித்து நிறுத்தினாள்.  சூடேறி தகித்த கன்னங்களை அவனுக்கு காட்ட விரும்பாமல் திரும்பி நின்று கொண்டாள் .

” ம் …” மயில்வாகனன் அவளை ஊக்கினான்.  திரும்பி நின்றவளின் முன்னால் வந்து நின்று கொண்டான் .குனிந்து அவள் முகம் பார்த்து ” ம் …இரவுக்காக காத்திராமல் …” எடுத்துக் கொடுத்து உதவினான் .

தவறிவிட்ட தன் வார்த்தை  பிசகில் தன்னிலேயே வந்த கோபத்தை அவன் மீதே காட்டியவள் ” போடா சொல்லமாட்டேன் ”  மூக்கு உறிஞ்சி உதடு சுளித்து கையை அவன் முகம் முன்பு நீட்டி வைது விட்டு , உடனே கோபமான அவன் முகத்தில் பயந்து வேகமாக ஓடலானாள் .

பத்திரமென நினைத்து வீட்டின் பின்புறம் ஓடி நின்று மூச்சு வாங்கிய போது ,  அவளது பின்னல் அழுத்தி இழுக்கப்பட்டது .” என்னடி சொன்னாய் ? ” பின்னேயே தொடர்ந்திருந்தவன் முடி பற்றி இழுத்து தலையை உலுக்கினான் .

சுரீரென்ற வலி  தாக்குதலில் முகம் சுருக்கி அவனை பார்க்க ஒற்றை விரலாட்டினான். ” என் அப்பா , அம்மா கூட என்னை ” டா”  போட்டதில்லை. ஊர் மக்களுக்கு நான் மரியாதைக்குரியவன். இப்படி நடுவீட்டில் நின்று கொண்டு என்னை ” டா ” சொல்வாயா ? ” வார்த்தைக்கு வார்த்தை உலுக்கலை தொடர தாரிகாவிற்கு உடலோடு மனமும் வலித்தது. கண்கள் நீர்த் திரையிட தொடங்கியது . அவள் கண்களை கவனித்த மயில்வாகனன் தன் உலுக்கலை நிறுத்தினான். இறுக்கி பிடித்திருந்த முடியை மெல்ல விடுவித்தான் .

” வெளியே கவனமாக பேசென்று எத்தனை தடவை சொல்வது …?” சலிப்பாக பேசினான் .

 பதிலின்றி திரும்ப நடக்க முயன்றவளை ”  நீ சொல்ல வந்ததை முழுதாக முடிக்கவில்லையே ?” பேச்சில் இழுத்தான்.

” சொல்லவே மாட்டேன் .போடா …டா…டா …டா ”  அவனுக்கு முதுகு காட்டிய தைரியத்தில் வாய் திறந்தே முணுமுணுத்தபடி அங்கிருந்து வந்துவிட்டாள் .அதன் பிறகு அந்தி சாயும் வரை அவனது கண் பார்வையிலேயே படாமல் வீட்டினுள்ளேயே ஆங்காங்கு மறைந்து கொண்டாள். அடுப்படி , ஸ்டோர் ரூம் , முன் வராண்டா , தூண்களுக்கு பின்னே என அப்படியான இடங்கள் அவளுக்கு நிறையவே கிடைத்தன .ஆம்பளையா லட்சணாமா வெளியே தெருவுக்கு போக மாட்டானா …எப்போதும் வீட்டிற்குள்ளேயே சுற்றிக் கொண்டு …அவனை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தவளுக்கு முதல் நாள் காலைதான் அவனுக்கு திருமணம் முடிந்திருக்கிறதென்பதும் , இப்போது அவன் புது மாப்பிள்ளை என்பதும் மறந்து போனது . உன் முன்னாலேயே வர மாட்டேன்டா …சபதமொன்று போட்டுக் கொண்டாள் .

மாலை மங்கியபோது ” வா ” என்ற ஒற்றையெழுத்து அழைப்புடன் அன்பரசியும் , அனந்தநாயகியும் வந்து நின்றபோது எதற்கோ என்றுதான் பின் போனாள் .பளபள பட்டும் ,  மினுமினு நகைகளும் கட்டில் மேல் இருந்த அறைக்குள் அவளை அழைத்துப் போனவர்கள் அவற்றை அவளை அணிய சொன்ன போது விழித்தாள் .

” எதற்கு ? “

இப்போது அவர்கள் விழித்தனர் .

”  கல்யாணத்திற்கு வந்தவனையே கல்யாணம் செய்து கொள்ள சொன்ன போது இந்தக் கேள்வியை கேட்டிருக்கலாமே ? ” கேட்டபடி அறைக்குள் வந்தாள் தமயந்தி.

தாரிகா அவளை வெறித்தாள் .” குத்திக் காட்டுகிறீர்களா ? ” நேரடியாகவே கேட்டாள்.

” யாரை ? ” எள்ளலாக வந்தது கேள்வி .

” என்னை …”

” நீ கருவிதானே …? உன்னை ஏன் குத்தப் போகிறேன். என் கோபமெல்லாம் …”

” போதும் அம்மா. நிறுத்துங்கள் ”  தமயந்தியின் பேச்சு பாதியில் நிறுத்த வைக்கப்பட்டது .கண்டிப்பான முகத்துடன் அறைக்குள் வந்தான் மயில்வாகனன் .

” எல்லோரும் வெளியே போங்க ” தாயை , சகோதரிகளை தயக்கமின்றி சொன்னான் .

” இவளுக்கு அலங்காரம் பண்ண வேண்டும். நாங்க போகமாட்டோம் ” அன்பரசி அழுத்தமாக சொன்னாள் .




” அதனை நான் பார்த்துக் கொள்கிறேன் .நீங்கள் போங்க “

” என்னது …? உங்க முதல் ராத்திரிக்கு நீங்களே அலங்காரம் பண்ணிக்குவீங்களா ? ” அனந்தநாயகி வாயை பிளக்க …

” அதிலென்ன தப்பு …? ”  கேட்டு விட்டு கட்டில் மேல் கிடந்த பட்டு சேலையை கையில் எடுத்துக் கொண்டு ” வா தாரிகா ” என இவள் புறம் கை நீட்டினான் . ப்ராக் போட குழந்தையை அழைக்கும் தாயின் பாசக்குரல் அவன் இதழ்களில் .

ஏற்கெனவே அனந்தநாயகியின் முதல் ராத்திரி உச்சரிப்பில் விதிர்த்திருந்த தாரிகா இந்த அழைப்பில் மயக்கத்திற்கே செல்பவள் போலானாள்.  ஷண நேரம் அவள் கண் மூடி திறப்பதற்குள் பெண்கள் மூவரும் காணாமல் போயிருந்தனர். இதற்கு மேலும் இங்கிருக்க அவர்களுக்கு பைத்தியமா என்ன ? அறையை விட்டு வெளியேறியவர்களை உறுதி செய்து கொண்டு அவளை நெருங்கினான் மயில்வாகனன். கலவரத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவளின் தோளில் அந்த பட்டுச்சேலையை பூவின் மென்மையுடன் அவள்  போட்டான் .

” சீக்கிரம் கட்டிக் கொண்டு , நகைகளை போட்டுக் கொண்டு மாடியில் நம் ரூமிற்கு வா ” ரகசியம் போல் குரல் குழைத்து பேசிவிட்டு போய்விட்டான்.  அந்த மட்டும் தானே செயலில் இறங்காமல் போனானே ? ஆறுதலுடன் படபடவென தானே தயாராக ஆரம்பித்தாள் தாரிகா . அறையை விட்டு வெளியே வந்ததும் அவள் கையில் பால் சொம்பை திணித்து விட்டு முகம் பார்க்காமல் நகர்ந்து போய்விட்டாள் தமயந்தி .

” வீட்டிற்குள்ளேயே கண்ணில் படாமல் ஏன் ஒளிந்து கொண்டே திரிந்தாய் ? ” அவள் அறைக்குள் நுழையும் போதே அவளை எதிர்பார்த்து இடுப்பில் கை வைத்தபடி அறையின் மையத்தில் நின்றிருந்தான் .

தாரிகா கண்களை மூடி தன்னை சமனப்படுத்த முயன்று கொண்டிருந்த போது , அருகே அரவம் கேட்டு பாதி விழி திறந்து பார்க்க , நின்ற போஸ் மாறாமல் அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் மயில்வாகனன் .

” காத்திருந்த இரவு வந்து விட்டதுதானே …? ”  சரசமாய் ஒலித்த அவன் குரலில் தாரிகா அதிர்ந்தாள் .

இ …இவன் இப்போது என்ன செய்ய போகிறான் …?  அவள் கண்கள் அவசரமாக வாசல் கதவை ஆராய்ந்தது .இன்னமும் தாளிடவில்லை .வெளியே ஓடி விடும் முடிவை அவள் எடுத்த போது காலம் கடந்து விட்டிருந்தது .

அவளை ஈரெட்டிலேயே முந்தி சென்று கதவை அழுத்தி பூட்டி தாழிட்டிருந்தான் மயில்வாகனன் .




What’s your Reaction?
+1
17
+1
21
+1
1
+1
5
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!