Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் -16

 16

ராகவன் வந்து ஆறேழு நாட்கள் ஆகிவிட்டது அதற்குள் சிவாவும் அவனும் நல்ல நண்பர்களாகிப் போனார்கள். சரியாக அப்போதுதான் உள்ளே நுழைந்த விஜியின் கண்களில் இருவரின் சிரித்த முகங்கள் அவளின் பார்வை கொக்கியாய் இருவரின் மேலும் விழுந்தது. முதன் நாள் சிவாவைப் பார்த்ததும் துளிர்த்த ஈர்ப்பு இப்போது சுத்தமாய் அவனிடம் இல்லை மாறாக அந்த அபிக்காக தன்னை ஒரு பொருட்டாகக்கூட அவன் மதிக்கவில்லை என்ற கோபம் எரிச்சலைக் காட்டிக்கொண்டிருந்தது. 

வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் எதிர்பாராமல் சாலையில் சந்தித்தபோது தன்னுடைய கார்மெண்ட்ஸ்க்கு வர வழிகேட்டு சக்கரையாச் சிரித்தாள் விஜி. 

அதுக்கென்ன எதிர்சாரியில் உள்ள பஸ்ஸாண்ட் இருக்கே அங்கேயிருந்து அரைமணிக்குள்தான் உங்க கம்பெனி

அவ்வளவுதானா சிவா ஒரு வயசுப்பொண்ணு வலிய வந்து அட்ரஸ் கேட்டா சட்டென்று இதுதான் சமயன்னு உங்க வண்டியிலே கூட்டிட்டுப் போய் என் மனசில இடம்பிடிக்க முயற்சிக்க வேண்டாமா ? என்ற அவள் கேள்வியில் சற்றே ஆடித்தான் போனான்

என்ன ? இவள் இத்தனை பளிச்சென்று பேசுகிறாள் என்று தவிப்பாய் இருந்தது அவனுக்கு. வயசுப்பெண் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் இப்படி யோசித்துக் கொண்டு இருக்கும்போதே எதிர்சாரியில் அபிராமியின் வருகை இருதலைக்கொள்ளி எறும்பெனத் தவித்தான் அபியின் பார்வை குத்தீட்டியாய் அவனைக் குத்தியது.

இன்னும் என்ன தயக்கம் சிவா ? என்ற விஜியின் கேள்வி பதிலாய் முந்திக்கொண்டு வந்தது அபியின் பதில்

என்ன சிவா இரண்டுபேரும் இங்கே என்ன பண்றீங்க ? நீங்க ஸ்டியோ போகலையா 

விஜி வழிகேட்டாங்க பஸ்ஸாண்ட்டுக்கு அதான் சொல்லிட்டுகிட்டு இருந்தேன். 

ம்..எதிர்சாரியில இருக்கிற பஸ்ஸாண்ட்டுக்கு நீங்க என்ன வழி சொல்றது. 101 பஸ் ஏறு சீக்கிரம் போக வேண்டிய இடம் போயிடலாம். சிவா எனக்கு இன்னைக்கு கல்லூரியிலே ஒரு விழா இருக்கு கூடிய சீக்கிரம் போகணும் அதனால முதல்ல என்னைக் கொண்டுபோய் விட்டுட்டு அப்பறம் ரோட்ல போறவர்றவங்களுக்கு எல்லாம் வழி சொல்லுங்க என்று வெடுக்கென்று பேசி பில்லியனில் ஏறி அமர்ந்து கொண்டாள் அபிராமி சிவா யோசனையோடு வண்டியைத் திருப்ப விஜியின் முகத்தில் வெய்யிலாலோ கோபத்தாலோ சிவப்பைத் துணைக்கழைத்துக் கொண்டது. அன்றிலிருந்து சிவாவின் அவளினைக் கண்டாலே தள்ளிப்போன வண்ணமே இருந்தான். 

அதிலும் அன்றைக்கு ராதிகாவிடம் பேசியதில் இருந்தே விஜியைப் பார்த்த அடுத்த நிமிடம் சட்டென நகர்ந்தே போயிடுவான். ஆனால் அபியும் சிவாவும் ஒருவரையொருவர் பார்க்கும் பார்வையில் ஒரு ரகசியசாரல் ஒளிந்திருப்பதைக் கண்டு இவர்களிருவரின் நெருக்கத்தையும் பார்த்தால் அபியும் சிவாவும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்ற நினைப்பிற்கு வந்ததும் அபிராமியின் மேல் அவளுக்கு அளவில்லாமல் கோபம் துளிர்த்தது.




சிவா இந்த காலனியில் இருப்பவன் ஏதோ ஒரு வகையில் அறிமுகம் இருக்கலாம் ஆனால் முதலாளிக்கும் இவளுக்கும் என்ன அறிமுகம் இருக்கும்,  காரணமே இல்லாமல் மதன் வேறு அபிராமியை ஏன் வேவு பார்க்கச் சொல்கிறானே அது எதனால் ?!  அபியைப் பற்றி பேசும் போதெல்லாம் அவரின் முகத்தில் ஒளிவிடும் பிரகாசமும் ஒருவித கோபமும் தினமும் 

காண்கிறாளே ? 

சிவா மட்டும்தான் இந்த ஊரில் ஆண்பிள்ளையா என்ன ? மதனை போன்றவர்களும் அவளின் பார்வைக்காக ஏங்கித்தானே இருக்கிறான். வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அவனின் காரியதரிசியாய், சம்பளமும் கூடப்போட்டு, கூடவே காரணம் கேட்காதே என்று அபிராமியை  வேவு பார்க்கும் வேலையென்றாலும், அதற்கு கூட நல்ல உயர்த்தரமான ஹோட்டல்களில் உணவும் கூடவே சொகுசு கார் சவாரியும் கிடைக்கிறது இதை கொஞ்ச நாள் அனுபவிக்கலாம் 

பார்க்கலாம் கூடிய விரைவில் அவன் கூட இந்த அபிராமியை மறந்துவிட்டு விஜி நீ மட்டும் போதும் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறதே ?  இந்த இளமையும் கிறங்க வைக்கும் சிரிப்பும் ஒன்று போதுமே அப்படி கண்களை மூடிக்கொண்டு இருக்க அவன் ஒன்றும் புத்தன் கிடையாது, அதிலும் அந்த ஹெட் கிளார்க் அவனின் குணம் பற்றி பத்திப்பத்தியாய் சொன்னாரே ?

இங்கே பாரு குழந்தை அந்த பிள்ளையாண்டன் பெரிய இடத்துப் பையன் ஏதோ கோக்குமாக்கு பண்ணதாலதான் இந்த பிரான்ஞ்ச்சுக்கு வந்திருக்கிறார் கிட்டத்தட்ட அவர் பண்ண ஏதோவொரு தப்புக்கு அவங்க அம்மா கொடுத்த தண்டனைப் போலத்தான் இது. பெத்தவங்களைத் தாண்டி ஒரு துரும்பைக் கூட பிள்ளையால அசைக்கமுடியாது. இளமையும் பணமும் நிறைய தப்பான வழியில் அவரை கொண்டு போயிருக்கிறது, உன்வரையில் வெறும் சட்டையில் ஒட்டிய அழுக்கு போலத்தான் கழட்டி எறிஞ்சிட்டுப் போயிடுவான் ஆனா நீ அப்படியில்லை, சின்ன

பிள்ளையா இருக்க ஜாக்கிரதை அப்பா ஸ்தானத்திலே இருந்து சொல்றேன் என்று வந்த மறுநாளே காதைக் கடித்தாரே ?

இத்தனை நாள் சீட்டைத் தேச்சிகிட்டு ஒண்ணுக்கும் உதவாத பெரிசு உன்னை நான் தனியா கவனிக்கிறேன் பிக்கப் டிராப் பண்றேன்னு பொறாமை விட்டுத்தள்ளு ஆனா அவர் என்ன சொன்னாலும் தலையை ஆட்டி வைச்சிக்கோ அம்மாவுக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர் பகைச்சிகிட்டா பிரச்சனைதான். என்று மதன் சமாதானமாய் காதலியிடம் குழைவதைப் போல் பேசியதும், உச்சிக்குளிர்ந்து போனாள் விஜி.  பலவாறு சிந்தனையில் அவள் முக்கியமாக கவனிக்காமல் போனது ராகவனைத்தான்.

வந்த முதல் நாளே லட்சுமி என் அக்காப் பிள்ளை பாரின் ரிட்டன் என்றெல்லாம் பீத்திக்கொண்டு இருந்தாள். எப்படித்தான் இருக்கிறான் என்று பார்வையில் நனைத்தாள். சும்மா சொல்லக்கூடாது வெளிநாட்டு மதர்ப்பு அவனிடம் இருக்கத்தான் செய்தது ஆனால் அதற்காகவெல்லாம் இந்த விஜி மயங்கிவிடுவாளாயென்ன ? ஒருவேளை மதனிடம் இந்த ஒட்டுதல் இல்லாமல் இருந்திருந்தால் அந்த ராகவனுக்கும் ஒரு பார்வை வீசியிருக்கலாம் ஆனால் இப்போது இவன் தேவையே இல்லை என்று ஒதுக்கியே விட்டிருந்தாள். இருப்பினும் மொட்டை மாடி வாசத்தில் அவனின் பால்கனியின் பார்வைகள் இவளின் வீட்டு ஜன்னலில் லயிப்பதன் காரணத்தை தான் அவளால் உணர முடியவில்லை. ஒருவேளை அவன் கண்களுக்கு நான் அழகாகத் தெரிந்திருப்பேனோ.

இங்கபாரு சித்தி நீ ஏன் வெளியே எல்லாம் போய் பொண்ணு தேடுறே ? பேசாம அந்த எதிர்வீட்டு பொண்ணு விஜியையே எனக்கு பேசி முடிச்சிடு என்று சொல்லப்போகிறானோ ? என்று உள்ளூரத் தவிப்பும் கிறக்கமும் அவளைச் சுமந்திருந்தது. புன்னகையுடன் அலுவலகம் கிளம்பத் தயாரானாள்.




டி விஜி இந்த மருந்தை வாங்கிட்டு வந்துடு மாலைக்கு வரும் போது பிள்ளைக்கு நேத்திலே இருந்து வாய்கொள்ளாம ஒரே இருமல் என்று அம்மாவின் கைகளில் இருந்த சீட்டைப் பார்த்ததும் வெடுக்கென்று ராதிகாவை ஏதாவது பேச வேண்டும் என்ற எண்ணத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள். இன்று காலை ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று அவளின் முதலாளி சொல்லியிருந்தானே, இவர்களிடம் இப்போது வம்பு வளர்த்தால் வேலைக்கு தாமதமாகிவிடும் என்று எண்ணிக்கொண்டு அந்த சீட்டை தன் கைப்பையில் வைத்துக்கொண்டு விரைந்தாள். 

ராகவனின் ஜன்னல் பார்வைக்கான காரணம் என்னவென்று அவளறியும் நேரம் காரியம் வேறுவிதமாய் கை கூடிப் போயிருந்தது. 

நீ சொல்றதை என்னால் நம்பவே முடியலையே லட்சுமி, உங்க அக்கா பிள்ளைக்கு ராகவனைக் கேட்கிறியா ? அந்தப்பிள்ளை வெளிநாடெல்லாம் போய் வந்திருக்காணாமே ? ,இது ஒத்துவருமா

பாட்டி அக்கா ரொம்பவும் நல்லவ ராகவன் வந்தும் இரண்டு வாரம் ஒடிப்போச்சே நீதான் பார்க்குறீயே அவனை பகட்டும் பந்தாவும் இல்லை அவனுக்கு எனக்கென்னவோ அபிராமி அவனுக்கு ஏத்தவளா இருப்பான்னு தோணுது. அடக்கமான அழகான பொண்ணு வேணுன்னு அக்கா சொன்னதுமே என் மனசிலே முதல்ல தோணியது அபிராமிதான் ராகவன் இந்தகாலத்து பிள்ளை வந்து போக இருந்தா ராகவனுக்கு அபிராமியைப் பிடிச்சிப்போகும் அவளுக்கும்தான். நீங்க என்ன சொல்றீங்க ? லட்சுமி படபடக்க

வளர்த்ததும் என்னவோ நான்தான் நான் சொன்ன எதிர்த்துப் பேசமாட்டா, இருந்தாலும் அவளோட சம்மதம் முக்கியம் இந்த வருடத்தோட படிப்பும் முடியுது நீ உங்க அக்காவை வரச்சொல்லி எழுதிப்போடு அதற்குள்ளே நான் அவகிட்டே பேசி முடிவைச் சொல்லிடறேன் நல்லதை செய்யும் போது தவிர்க்கவா போறா என்ற பாட்டியின் முகம் முழுதிருப்தி என்பதைக் காட்டியது. சிவா அப்போதுதான் லட்சுமி அக்கா நைட் சமைக்க வேண்டாம் நானும் ராகவனும் சினிமாவுக்குப் போயிட்டு அப்படியே சாப்பிட்டும் வந்திடுவோம் என்று சொல்ல நல்லவேளை நீ வந்த சிவா என்று அவனை உள்ளே அழைத்தாள் லட்சுமி

ராகவனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் ராகவன் என்னதான் எனக்கு பிள்ளை முறைன்னாலும் அவனை இந்த விஷயத்தில் கேட்பது சற்றே சங்கோஜமாக இருக்கு அதனால நீதான் அவ மனசில என்ன இருக்குன்னு கேட்டு சொல்லணும் நம்ம அபிராமி இருக்காளே அவளைத்தான் ராகவனுக்கு முடிக்கலான்னு இருக்கோம் என்று பெரிய குண்டைத் தூக்கி போட சிவாவின் விழிகள் தெரித்து விழுவதைப் போல விரிந்தது அதற்கு பிறகு லட்சுமி பேசிய எதுவும் சிவாவின் காதில் விழவில்லை. முகத்தைத் தொங்கப்போட்டபடி மாடிப்படியேறி வந்த சிவாவைக் கண்டதும் ராதிகாவின் வீட்டு முற்றத்தின் ஜன்னலில் இருந்து பார்வையை மாற்றினான் ராகவன் சிவாவின் கண்களில் கண்ணீர்.




 

What’s your Reaction?
+1
5
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!