Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது -11

11

 

மாடசாமியின் வீடு  கொஞ்சம் நாகரீக வசதியுடனேயே இருந்தது. மாடசாமியின் தந்தை முனிசிபாலிட்டியில் வேலை பார்த்தவராம் .தவிரவும் முக்கியமான கட்சி ஒன்றில் பொறுப்பான பதவியிலும் இருக்கிறார் .அந்த அதிகாரத்தினாலேயே ஓரளவு படித்த மாடசாமிக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்க முடிந்திருக்கிறது .

 

” இவர்தான் எங்கள் மருத்துவமனை தலைமை டாக்டர் அப்பா ” சாத்விக்கை தந்தையிடம் அறிமுகம் செய்தான் மாடசாபி





” வணக்கமுங்க பெரிய டாக்டரய்யா ”

 

” வணக்கம்யா .ஒரு சின்ன திருத்தம் .நான் தலைமை டாக்டரில்லை .என் அப்பாதான் மருத்துவமனை ஹெட் .நான் உங்கள் மகன் போல் அங்கே வேலை செய்யும் சாதாரண டாக்டர்தான் ”

 

” அட , அப்பா தலைமைன்னா அடுத்து நீங்கதானுங்களேய்யா ? அத ஏன் மறுக்கிறீக ? ”

 

” அப்பா , அம்மா கஷ்டப்பட்டு உருவாக்கின மருத்துவமனை அது .அங்கே எனக்கு எப்படி உரிமை இருக்கும்  ? நானும் என் பங்கிற்கு  ஏதாவது செய்ய வேண்டாங்களாய்யா ? ”

 

” அப்போ  இப்ப அங்கன உங்களுக்கு உரிம இல்லேங்குறீகளா ? ”

 

” சரியாக சொன்னீர்கள் .இதுதான் உண்மை ” மெச்சிக் கொண்டவனின் பார்வை சுகந்தியின் மீது இருந்தது.

 

அவள் உதடுகளை சுழித்துக் கொண்டாள் .இந்த சமாளிப்பெல்லாம் என்னிடம் வேண்டாம் சாரே .எனக்கு நீ பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் .




சாத்விக் குணமாகி அறையை விட்டு வெளியே வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள்தான் .ஆசை பார்வையும் , பாச மொழியுமாக அவளை எதிர்பார்த்து அறையை விட்டு வெளியே வந்த சாத்விக் அறை முன்பு முகத்தில் எள்ளும்  , கொள்ளும் வெடிக்க நின்றவளைப் பார்த்து திகைத்தான் .

 

நோயை வென்று வந்ததற்கு சுற்றி நின்று வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு கை குவித்து நன்றி சொல்லியபடி இவளிடம் கண்களால் என்னவென விசாரித்தான் .சுகந்தி முகத்தை திருப்பிக் கொண்டு நகர்ந்து விட்டாள் .

 

” ஹையோ பேசாமல் இன்னமும் இரண்டு வாரம் உள்ளேயே இருந்திருக்கலாம் போலவே ? ” கேன்டீனில் காபி கப்புடன் அமர்ந்திருந்தவள் அருகே வந்து முணுமுணுத்தான் .

 

” ஏன் அப்படி ? ” எரிந்து விழுந்தாள் .





” அப்போதாவது குளுகுளு பார்வையாவது கிடைத்தது. வெளியே வந்தால் அதிகம் கிடைக்குமென்று எதிர்பார்த்து வந்தால் …”

 

” என்ன …? என்ன எதிர்பார்ப்பு ….? ” சுகந்தி கண்ணகியை துணைக்கு அழைத்துக் கொள்ள , சாத்விக் இரு கை உயர்த்தினான் .

 

” ஒன்றுமில்லை …ஒன்றுமில்லை .சும்மா இப்படி பக்கத்தில் உட்காரலாமே என்று ….”

 

அருகில் அமரப் போனவனிடமிருந்து துள்ளி எழுந்து நின்றாள். ” கொரோனோ டைம் டாக்டர் சார் .சமூக இடைவெளி அவசியம் ”

 

சாத்விக் ஐயோ பாவம் பாவனையை முகத்தில் தவழ விட்டான் .” சை …” கை குவித்து உள்ளங்கையில் குத்திக் கொண்டான் .

 

” சரிதான் டாக்டரம்மா .இப்போது மதுரையை எரிக்கும் உத்தேசத்திற்கான காரணத்தை மட்டும் சொல்லி விட்டீர்களானால் நன்றாக இருக்கும் ”




” உங்கள் அம்மா , அப்பா செய்யும் அநியாயத்தை கேட்கவே மாட்டீர்களா நீங்கள் ? ”

 

” என்ன அநியாயம் ? ”

 

” உங்களுக்கு உடல் குணமானதை விளம்பரப்படுத்தி , அதனால் ஹாஸ்பிடலுக்கு நோயாளிகளை அதிக அளவில் வர வைத்து , அவர்களிடம் அநியாயக் காசு பிடுங்குகிறார்களே ! பில் லட்சக்கணக்கில் எழுதுகிறார்களே ! இதெல்லாம் உங்களுக்கு தெரியாதென்றா சொல்கிறீர்கள் ? ”

 

சாத்விக் தெரியுமென்பதன் அறிகுறியாக தலையசைத்தான் .

 

” வாயை திறந்து சொல்லுங்களேன் ! எதற்காக பூம் பூம் மாடு கோலம் ? ”

 

” இதற்கு நான் என்ன செய்ய முடியும் சுகந்தி ? ”

 

” இது தவறென்று நீங்கள் அவர்களுக்கு சொல்லலாமே ? ”





” சுகந்தி இருபது வருடங்களில் இவ்வளவு பெரிய மருத்துவமனையை உருவாக்குவதென்பது சாதாரண விசயமில்லை .இதனை முழுக்க முழுக்க செய்தது என் பெற்றோர்கள் மட்டுமே .அவர்கள் நிறுவனம் .அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியமென அவர்கள் நினைப்பதை செயல்படுத்துகிறார்கள் . இதனை கேட்க அவர்கள் மகனாயினும் எனக்கு உரிமை கிடையாது ”

 

சாத்விக் அவ்வளவுதானென  அந்தப் பேச்சினை முடித்துவிட , சுகந்திக்கு மனது ஆறவில்லை .கண்ணுக்கெதிராக நடக்கும் அநியாயத்திற்கு ஒரே ஒரு எதிர் குரல் கூட கொடுக்கவில்லையெனில் என்ன மனிதன் இவன் ?





கொல்லிமலை பயணம் முழுக்கவே அவனுடன் மொறு மொறுவென்றே முகத்தை வைத்துக் கொண்டாள் .தங்களது மலைப்பிரதேச மகிமையை பேசியபடி வந்த மாடசாமியின் குரல் மட்டுமே காருக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

What’s your Reaction?
+1
6
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!