Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 19

19

நான் தப்பு பண்ணிட்டேன் பாலா .பாட்டி கடைசியாக என்கிட்ட பேசனும்னு ரொம்ப விரும்பயிருக்காங்க .நான் அவுங்களை அவாய்ட் பண்ணிட்டேன் .நான் பேசியிருக்கனும். …” மெல்லிய குரலில் புலம்பியபடி அழுதவளின் தலையை மடியில் அழுத்திக் கொண்டான் .

” சரிடா விடு .முடிந்த்தை பேசி என்ன பயன் …? அதுதான் கடைசியாக பாட்டி உன் முகத்தை பார்த்துவிட்டுத்தானே போனார்கள் .நிச்சயம் நிறைவோடுதான் போயிருப்பார்கள் ….”




” இல்லை பாலா ….அவர்கள் மனநிறைவோடு போயிருக்கமாட்டார்கள் .எ…என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள் தெரியுமா…? ஏதோ ஒரு உறுத்தல் அவர்கள் மனதிற்குள் இருந்து கொண்டிருந்திருக்கிறது .அது என்னவாக இருக்கும் பாலா …? “

அண்ணாந்து முகம் பார்த்தவளின் தலையை வருடி மீண்டும் தன் மடியில் இழுத்துக் கொண்டான் .அவன் கை மெல்ல நடுங்கியது .

” நாம் இதையெல்லாம் பிறகு பேசலாம் பாப்பு ” இந்த ஒரு சொல்லே போதுமானதாக இருக்க , சிறு விடுபடுதலுடன் அவன் மடி சாய்ந்து கொண்டாள் .பேச்சின்றி இருவரும் அமர்ந்திருந்தனர் .

” இதோ …இங்கே உட்கார் …” சசிகலாவின் குரல் கேட்டது .

” தலை சுற்றுகிறதும்மா …” சுகன்யாவின் குரல் .

” இதோ இப்படி காத்தாட உட்காரும்மா .இந்தா தண்ணீர் குடி ….” தோட்டத்தில் கிடந்த பெஞ்சில் மகளை அமர வைத்துக் கொண்டிருந்தாள் சசிகலா .

ஜீவிதா அவசரமாக எழுந்து கொள்ள போனாள் .

” வேண்டாம் ஜீவா .இப்போது எழுந்தால்தான் அவர்களுக்கு தெரியும் .நாம் இருட்டில்தான் இருக்கிறோம் .இப்படியே உட்கார் .அவர்கள் உள்ளே போகவும் நாம் போகலாம் …”

சிவபாலன் சொல்லவும்தான் ஜீவிதாவிற்கு அது உறைத்தது .எதற்காக அவர்கள் திருட்டுத்தனமாக மறைந்து கொள்ளவேண்டும் .அப்படி என்ன தப்பு செய்கிறார்கள் …அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே ….




” மாசமாக இருக்கும் போது அப்படித்தான்மா மயக்கம் வரும் .உள்ளே கசகசன்னு இருக்கு .நீ கொஞ்ச நேரம் இங்கே இரு ….” சசிகலாவின் குரல் அமில மழையாய் ஜீவிதாவின் காதிற்குள் நுழைந்த்து .

சுகன்யா கன்சீவ் ஆகியிருக்கிறாள் .அவள் இப்போது சிவபாலனின் மனைவி .அப்போது …நான் …தான் செய்து கொண டிருக்கும் தப்பு அப்போது தெரிய சட்டென சிவபாலனை விட்டு விலகி அமர்ந்தாள் .

” எழுந்திரிக்காதே ஜீவா …” கை பற்றி முணுமுணுத்த சிவபாலனின் குரல் இப்போது அருவெறுப்பை உண்டாக்க அவன் கையை வெடுக்கென உதறியவள் , அவன் பேச்சை காதில் வாங்காமல் வேகமாக எழுந்து வீட்டினுள் போனாள் .

அதன்பிறகு எந்திரமாக பாட்டிக்குரிய இறுதி சடங்கில் கலந்து கொண்டு தன் அறையில் போய் முடங்கிக் கொண்டாள் .பாட்டியின் ஐந்தாம் நாள் காரியம் வரை பல்லை கடித்துக் கொண்டு அங்கிருந்தவள் , ஆறாம் நாள் அங்கிருந்துஹாஸ்டலுக்கு  கிளம்பிவிட்டாள் .இனி இங்கே வர மாட்டேன் என்ற அறிவிப்போடு .நான்கு வருடங்களாக அவளை ஊருக்கு வரவழைக்க முயன்ற பெற்றோர்களின் முயற்சி தோல்வியில்தான் முடிந்த்து .

பழைய நினைவுகள் அன்றை விட இன்று மிக அதிகமாக வலிக்க …மரத்துக் கிடந்த மனதை உலுக்கிக் கொண்டாள் .இப்போது அவள் சிவபாலனின் காதலை  உணர்ந்து கொண்டாள் . அது போன்றே அவனும் அவளுடைய காதலை உணர்ந்திருக்கலாம் .அதனால் தன் மனைவியை ஒதுக்குகிறானா …? அப்படித்தான் என்றுதான் ஜீவிதாவிற்கு தோன்றியது .இல்லை …இது தப்பு .இதனை சரி பண்ணவேண்டும் .மனம் வலிக்க வலிக்க நினைத்துக் கொண்டாள் .

——————–




” இன்று நானே சமைத்தேன் கைலாஷ் .சாப்பிட்டு பார்த்து சொல்லேன் ….” பாசமாக தனக்கு பரிமாறிய ஜீவிதாவை யோசனையாய் பார்த்தான் கைலாஷ் .

” நீ …சமைத்தாயா …? உனக்கு என் மேல் கொஞ்சம் கோபமிருப்பது எனக்கு தெரியும் ஜீவிதா .கரெக்டாக சொல்லு. இப்போது நான் இதை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா ….? ” தன் தட்டிலிருந்த எதையோ …தட்டை தூக்கி உற்று பார்த்தபடி கேட்டான் கைலாஷ் .

” பார்த்தியா என்னை கலாய்க்கிறியே …பயப்படாதே சாப்பிடு இது ப்ரைடு ரைஸ் ….” என அவள் சொன்ன அயிட்டத்தில் அது போன்ற அறிகுறி எதுவும் தெரியவில்லை .

” ப்ரைடு ரைஸா …? இந்த பாசுமதி ரைசெல்லாம் போட்டு செய்வார்களே .அதுதானே ….ஆனால் இதில் ரைசே இல்லையே ….” கைலாஷ் தட்டினுள்ளேயே குனிந்து தேடினான் .

” அ…அது ஒண்ணுமில்லப்பா ரைஸ் லைட்டா குழைஞ்சிடுச்சு .அதுதான் பார்த்தால் தெரியவில்லை .நீ சாப்பிடு …டேஸ்டில் தெரியும் ….”

” அப்படியா சொல்கிறாய் ….? ” அவன் இன்னமும் சந்தேகத்தோடே அந்த உணவை பார்த்தபடி இருக்க ,ஒரு கை அள்ளி அவன் வாயில் திணித்தாள் .வ்வ்வ் …என கைலாஷ் அலற சரியாக அந்த நேரம் சிவபாலன் உள்ளே நுழைந்தான் .ஜீவிதாவும் அவனை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் .

” சாப்பிடுங்கிறேன் .வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறாய் …சொல்லு எப்படி இருக்கிறது …? “

சாப்பாடா இது …இதற்கு பதில் தம்ளர் நிறைய விசத்தை கொடுத்து விடு …குடித்துவிட்டு ஒரேடியாக போய்விடுகறேன் …ஜீவிதா சமைத்த சாப்பாட்டின் ருசிக்கு இப்படித்தான் பதில் சொல்லவேண டும் .கைலாஷும் அப்படி பேசத்தான் நினைத்தான் .ஆனால் இறுக்கமான முகத்துடன் அவர்களுக்கு எதிரே வந்து அமர்ந்த சிவபாலனை பார்த்ததும் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான் .

” வாவ் …டெலிசியஸ் …ரொம்ப டேஸ்ட் .எப்படி ஜீவிதா இவ்வளவு அருமையாக சமைத்தாய் …? இத்தனை ருசிக்கு அப்படி உன் கையில் என்ன இருக்கிறது ….? ” சொன்னதோடு அவள் கையை எடுத்து பார்த்து ஆராய வேறு செய்தான் .




” உன் கையை போலவே உன் டிஷ்ஷும் ரொம்ப அழகு ….”

” அப்போ இன்னொரு கரண்டி போடவா …? “

அந்த கரண்டியால் என் தலையில் போடு …என நினைத்துக் கொண்டவன் , ” இதை சாப்பிட்டுக்கிறேனே …” அசடு வழிந்தான்.

” மாமாவை எங்கே ஜீவா ….? ” சிவபாலனின் கேள்விக்கு ” தெரியவில்லையே …” என அவனை பார்க்காமலேயே  பதில் சொன்னவள் ” இது  போட்டுக்கோ .காலிபிளவர் ப்ரை ….” என கைலாஷை  உபசரிக்க தொடங்கினாள் .

இவ்வளவு கறுப்பாக ஒரு ப்ரையை நான் பார்த்ததே இல்லை .கடவுளே காப்பாற்று …வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு அந்த காலிபிளவரை எடுத்து வாயில் வைத்தான் . உடனேயே நாக்கு உணர்ந்த கசப்பில் முகம் சுளித்து , பிறகு முகத்தை சரி செய்து கொண்டு ” வாவ் சூப்பர் ….” என ஜாடை செய்தான் .

” நீங்கள் கொஞ்சம் சாப்பிடுங்களேன் சிவா ….” தட்டை சிவபாலன் பக்கம் தள்ள , பட்டென அந்த தட்டை மீண்டும் கைலாஷிடமே நகர்த்தினாள் ஜீவிதா .

” அவருக்கு சமைத்து போட வீட்டில் பொண்டாட்டி இருக்கிறாள் . அவள் செய்து தருவாள் .உனக்கு நான் சமைத்து தருகிறேன் .நீ சாப்பிடு ….” ஓரக்கண்ணால் சிவபாலன் முகம் கறுப்பதை பார்த்தபடி சொன்னாள் .




” அட …ஆமாமில்ல ….உங்க வொய்ப் உங்களுக்கு நன்றாக சமைத்து வைத்திருப்பார்கள் .நீங்கள் அங்கே சாப்பிடுங்கள் சிவா .நான் இங்கே ….” என்றபடி தட்டை பார்த்தவன் அடுத்தகவளம் எடுத்து வைக்கத்தான் வேண்டுமா …பயத்துடன் பார்த்தான் .

எதிரே அமர்ந்து இருவரையும் மாறி மாறி பார்த்து அளவிட்டுக் கொண்டிருந்த சிவபாலன் எழுந்து நின்றான் .தன் சட்டை பாக்கெட்டிலிருந்து பேனாவை எடுத்தவன் ” அவ்வளவு நன்றாகவா இருக்கிறது கைலாஷ் …? ” என்றான் .பின் பேனா நுனியால் தட்டிலிருந்த உணவை கிளறி பார்த்தான் .

” என்ன அயிட்டம் இது …? ” ஜீவிதாவை அவன் பார்த்த பார்வையில் கிண்டல் இருந்த்து .

” ப்ரைடு ரைஸ் என்று சொல்லிக் கொண்டாள் …”

” ஓஹோ ….கஷ்டம்தான் ….” கைலாஷை பரிதாப பார்வை பார்த்தவன் , ஜீவிதாவின் தலையை தட்டினான் .

” அருமையான சமையல் .உன் ப்ரெண்டுக்கே கொடு .எப்படியும் இரண்டு நாளில் ஓடிவிடுவார் .பிறகு நம்ம வழி கிளியர் ….” நிதானமாக சொல்லிவிட்டு …” நான் சாப்பிட போகிறேன் கைலாஷ் ….” கிண்டலாக அவனுக்கு தெரியப்படுத்தி விட்டு எழுந்தான் .

அவன் போன பாதையை பார்த்து ” ஙே ” என விழித்தபடி நின்றவளிடம் , ” ம்ஹும் உன் உழைப்பு இப்படி வீணாயிடுச்சே ஜீவிதா ….” என பரிதாப்பட்டு விட்டு போனான் கைலாஷ் .

———————-

” அத்தான் உன்னிடம் எப்படி பழுகுகிறார் ஜீவிதா ….? “சுகன்யாவின் கேள்வியில் திடுக்கிட்டாள் ஜீவிதா . எப்போதும் சுகன்யாவை பார்க்கும் போது சசிகலாவும் நகராமல் அருகிலேயே ஒட்டிக்கொண்டுதான் இருப்பாள் .அன்று குழந்தை இடை விடாமல் அழவே , அவளை தூக்கிக் கொண்டு வெளியே நின்றிருந்தாள் .




இ…இவள் எதைப்பற்றி கேட்கிறாள் …? ஜீவிதா தவறு செய்தவளை போல் விழித்தாள் .உன் அத்தான் அடிக்கடி என் மீது காதல் பார்வை வீசுகிறான் என இவளிடம் சொல்ல முடியுமா …? இல்லை அந்த பார்வை என்னை தடுமாற வைக்கிறது என்ற உண்மையைத்தான் விளம்ப முடியுமா ….?

” ஏய் …உன்னைத்தான் கேட்கிறேன் ஜீவிதா .எதற்கு இப்படி முழிக்கிறாய் ….? ” தோள்களை பற்றி உலுக்கினாள் .

” அ….அது …வந்து …அத்தான் எப்பவும் போலத்தான் …என்னிடம் …எதற்கு கேட்கிறாய் …? “

” உன்னிடம் அவர் எதுவும் பேசவில்லையா …? “

” எ…என்ன பேசவேண்டும் …? “

பேசுவதாக சொல்லியிருந்தாரே …தனக்குள் முணுமுணுத்தாள் .

” என்ன சொன்னார் ….முதலில் உன் உடம்பை விசாரித்தாரா …? இதையெல்லாம் அவரிடம் சொன்னாயா …? ” அவள் உடல் புண்களை காட்டி கேட்டாள் .

” இதையா …இதை எப்படி அவரிடம் சொல்ல முடியும் …? ” சுகன்யாவின் குரலில் கூச்சம் இருந்த்து .

ஜீவிதாவின் புருவங்கள் முடிச்சிட்டன .தன் உடலை பற்றி கணவனிடம் சொல்ல என்ன கூச்சம் …?

” இதையெல்லாம் அவரிடம் காட்டினாயானால்தான் உன் வேதனையை அவரால் புரிந்து கொள்ளமுடியும் சுகன்யா ….”

” இதையெல்லாம் ஒரு மனைவியினால்தான் கணவனிடம் கூச்சமின்றி பகிர்ந்து கொள்ள முடியும் ஜீவிதா ….” நிதானமாக ….ஆனால் அழுத்தமாக சொன்னாள் .

” என்னது ….ஏய் நீ என்னடி உளறுகிறாய் …? ” ஜீவிதா அவளை உலுக்கினாள் .

” அப்போ உனக்கு இன்னமும் ஒன்றும் தெரியாது .அத்தான் உன்னிடம் எதுவும் சொல்லவில்லை .அப்படித்தானே …? “

” என்ன தெரிய வேண்டும் …சுகன்யா ப்ளீஸ் ….எனக்கு படபடவென்றிருக்கிறது .சொல்லேன் ….” தாயின் முகம் பார்க்கும் கன்றாய் அவள் முகம் பார்த்தாள் ஜீவிதா .

” நம் அத்தான்…இன்னமும் எனக்கு அத்தானாக மட்டும்தான் இருக்கிறார் ஜீவிதா .அத்தை மகனாக மட்டும்தான் ….”




” என்ன …? எப்படி …? ஆனால் இது …நிஜம்மா …? பொய்யா …? தெளிவாக சொல்லித் தொலையேன்டி …” உணர்ச்சிவசப்பட்டு கத்தியவளை தன் உதட்டில் விரல் வைத்து ” உஷ் ” என அடக்கினாள் .

” கத்தாதே …அம்மாவிற்கு தெரிய வேண்டாம் …”

” என்ன தெரியவேண்டாம் …? “

” அம்மாவிற்கு இந்த பொம்மை கல்யாணத்தை எப்படியாவது உண்மையாக்கி விட வேண்டுமென்று ஆசை .அதனால் அவர்களுக்கு தெரியவேண்டாம் ….”

” என்ன …பொம்மை கல்யாணமா …? “

” எனக்கு நானே தாலி கட்டிக்கொண்டால் அது பொம்மை கல்யாணம்தானே …” சுகன்யா சாதாரணமாக சொல்ல , ஜீவிதாவிற்கு தலை சுற்றி மயக்கம் வரும் போலிருந்த்து .

” என்னடி சொல்கிறாய் …? ” ஈனஸ்வரத்தில் கேட டாள். குரலெடுத்து பேசும் தெம்பு கூட இப்போது அவளுக்கில்லை .

” திருமணத்திற்கு முன்பே வயிற்றில் குழந்தையோடு நின்ற மாமா மகளின் மானத்தை காப்பாற்றுவதற்காக அத்தான் இந்த போலி திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார் …”

” சுகன்யா …நீ சொல்வது உண்மையாடி ….? “

” கிஷோர் …அத்தானின் ப்ரெண்ட் .உனக்கு தெரியுமில்லையா …? “

” ஆமாம் …நம் வீட்டிற்கு அடிக்கடி வருவாரே …”

” அவரும் , நானும் காதலித்தோம் …அத்தானுக்கு தெரியாமலேயே …மிக எளிதாக உங்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு ஊர் சுற்றினோம் .என்னை சிறுபிள்ளையாக நீங்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க நான் செய்யக்கூடாத பெரிய வேலைகளையெல்லாம் செய்தேன் .காலேஜ் டூர் என்று பொய் சொல்லி வெளியில் கிஷோருடன் தங்குமளவு எனக்கு காதல் பித்தேறியிருந்த்து …விளைவு நான் கர்ப்பமானேன் .ஆனால் கிஷோர் காணாமல் போனான் .இதோ இப்போது வரை … அவனை கண்டுபிடிக்க முடியவில்லை .அத்தான் தேவையில்லாமல் தன் வாழ்க்கை தொலைத்து என் பாரம் சுமந்து கொண்டிருக்கறார் ….”

” குடும்ப மானம் , கௌரவம் …என்று சொன்னதோடு , அத்தான் அவருடைய ப்ரெண்ட்டை கூட்டிக் கொண்டு வந்த்தால்தான் இந்த நிலைமை என அம்மாவும் , அப்பாவும் அவரை வார்த்தகளால் குத்தி கிழித்து என்னை திருமணம் செய்து கொள்ள நிர்பந்தித்தார்கள் .அத்தையும் , பாட்டியும் என்ன செய்வதென தெரியாமல் விழித்தார்கள் .அத்தான் என்னை திருமணம் செய்து கொள்ள  மறுத்தார் .உன்னை விரும்புவதாகவும் …உன்னை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்ய முடியாதென உறுதியாக இருந்தார் .”




” அப்பாவும் , அம்மாவும் உங்கள் குடும்பத்தின் மீதே கோபம் கொண்டு , வெட்டி சண்டை போட்டு சொத்துக்களை பிரித்தனர் .பிறகு இந்த சொத்துக்கள் அனைத்தும் உனக்குத்தான் என அத்தானிடம் ஆசை காட்டினர் .அத்தான் அசையவில்லை .இந்த வார்த்தைக்கு நான் இப்போதே இந்த வீட்டை விட்டு போயிருப்பேன் .ஆனால் என் ஜீவிதா இங்கேதான் இருக்கிறாள் .அதனால் என்னால் இங்கிருந்து போக முடியாது என்றார் .இப்போது அம்மா அத்தானின் பலவீனத்தை கண்டுகொண்டார்கள் .

வயிற்று பிள்ளைக்காக என்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் , பிறகு கொஞ்சநாட்களில் இந்த திருமணபந்த்த்தில் இருந்து அவரை விடுவித்து விடுவதாகவும் உறுதி சொன்னார்கள் . நிறைய யோசனைக்கு பிறகு அத்தான் ஓரளவு இதனை ஒத்துக் கொண்டார் .அதாவது என்னை திருமணம் செய்து கொண்டதாக ஊருக்கு மட்டுமே காட்டுவார் .உள்ளூற கிஷோரை தேடிக் கொண்டே இருப்பார் .கிஷோரை கண்டுபிடித்ததும் அவனிடம் பேசி என்னையும் , குழந்தையையும் அவனிடம் ஒப்படைத்து விடுவார் .அதன்பிறகு அவர் உன்னை திருமணம் செய்து கொள்வார”

ஜீவிதா முகத்தை மூடிக்கொண்டு அழத்துவங்கினாள் .

” மற்ற அனைவரையும் விட இந்த யோசனை எனக்கு பிடித்தது ஜீவிதா .ஏனெனில் என்னால் எப்போதும் அத்தானை என் கணவரின் ஸ்தானத்தில் வைத்து பார்க்க முடியாது .” ஜீவிதாவின் முகத்தை மூடிய கைகளை எடுத்துவிட்டாள் .

” அத்தான் நான்கு வருடமாக உன் பாலாவாக உனக்காக மட்டுமே காத்துக் கொண்டிருக்கிறார் ஜீவிதா …”




” ஏய் …சத்தம் போடாதேடி …அடக்கிக்கொள் ….” எனப் பலவாறு ஜீவிதாவை ஆறுதல்படுத்த முயன்ற சுகன்யாவின் முயற்சகள் அனைத்தும் தோல்வியடைய , அவள் தனது நான்கு வருட மனபாரம் முழுவதையும் சத்தமிட்டு கத்தி அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள் .

அவளது சத்தத்தில் ஓடி வந்த சசிகலாவிடமும் , நீலவேணியிடமும் …” உண்மையை சொல்லிவிட்டேன் ” என்றாள் சுகன்யா .நீலவேணி முகம் மலர , சசிகலா தலை குனிந்தாள் .

What’s your Reaction?
+1
5
+1
4
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
ஆயிஷா. கே
ஆயிஷா. கே
3 years ago

பாராட்டுக்கள் மா.. இனி விறுவிறுப்பாக நகரும் என்று நினைக்கிறேன்… ஆவலோடு எதிர்பார்த்து..

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!