Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 2 –

2

வலிகள் கொடுத்து பின் வழிகள் சொல்கிறாய்
சூறைக்காற்றுடன் சூதானங்கள் தருகிறாய்.

                   

ஆஸ்பத்திரி வாடை    மூச்சை முட்ட வைக்க  வெளி வழிய துடித்த கண்ணீரை மூக்கை உறிஞ்சி தடுத்தபடி அழுதழுது சோர்ந்து சுவரில் சாய்ந்து சரிந்திருந்த அம்மாவை சோகமாக பார்த்தாள் வேதிகா .கட்டிலில் அப்பா சுவாமிநாதன் கை , கால்களில் பெரிய பெரிய கட்டுக்களாக போட்டு பயமுறுத்திக்கொண்டு  துவண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் .ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த்து .

அரை தம்ளர் காபியாவது அம்மாவின் வயிற்றுக்குள் போக வைக்கவேண்டும் .கிட்டதட்ட  எட்டு மணி நேரமாக பச்சை தண்ணீர் பல்லில் படாமல் அழுது கொண்டிருக்கிறாள் .இப்போது அப்பா தூங்கவும்தான் லேசாக கண்ணை மூடியிருந்தாள் .அதுவும் லேசான விசிப்புகளுடன்தான் இருந்தாள் .

” என்ன அண்ணன் தூங்கிட்டாரா …? ” பெரிய சத்தத்துடன் உள்ளே வந்த சரோஜாவை வாயில் விரல் வைத்து உஷ் என அடக்கினாள் .




” என்ன மிரட்டுற …? ” அவள் பதிலுக்கு பாய தயாராக அவசரமாக அவள் கையை பிடித்திழுத்து அறைக்கு வெளியே அழைத்து வந்தாள் .

” அத்தை , அப்பாவும் , அம்மாவும் இப்போதான் கொஞ்சம் தூங்குறாங்க .நீங்க கத்தி எழுப்பிடாதீங்க …”

” ஓஹோ …இவ்வளவு நேரமாக நானும் என் பிள்ளையுமாக இங்கேயும் , அங்கேயுமாக அலைந்து கொண்டிருந்தோமே .அப்போல்லாம் எங்க பேச்சு உனக்கும் ,உன் அம்மாவுக்கும் சங்கீதமாக இருந்த்து .இப்போ எல்லா  சிசுருட்சையும் முடித்து உங்க அப்பாவை ஒரு செட்டில் பண்ணி இங்கே கொண்டு வந்து படுக்க வைத்ததும் என் பேச்சு உனக்கு கத்தலாக போய்விட்டதா …? “

இந்த பேச்சை கேட்பதற்கு பேசாமல் அப்பா , அம்மாவை எழுப்பியே விட்டிருக்கலாம் என்று நினைத்தாள் வேதிகா .

” அம்மா இது ஆஸ்பத்திரி .ஏன் இப்படி கத்துறீங்க ..? ” அதட்டியபடி வந்தான் விக்னேஷ் .சரோஜாவின் மகன் .

” இவதான்டா கத்த வைக்கிறாள் .இவள் ….”

விளக்கம் கொடுக்க வந்த தாயை கையை உயர்த்தி தடுத்தான் .

” விடுங்க இதில் இட்லி இருக்கு .போய் அத்தையையும் , மாமாவையும் சாப்பிட வைங்க …”

” அவுங்க தூங்குறாங்க …”

” அப்போ வாயை மூடிட்டு அந்த பெஞ்சில் கொஞ்ச நேரம் உட்காருங்க .உனக்கு டிபன் ஒண்ணும் வாங்கவில்லை வேதா .வா பக்கத்தில்தான் கடை இருக்கிறது .சாப்பிட்டு விட்டு வரலாம் …”

” வேண்டாம் அத்தான் .எனக்கு பசிக்கலை ….”

” அதெப்படி பசிக்காமல் போகும் …? இரண்டே இட்லி சாப்பிடு .வா ….” அவன் அழைத்துக் கொண்டிருக்கும் போதே …




” அக்கா ….வேதா ….என்னம்மா அப்பாவிற்கு என்ன ஆச்சு …? ” பதறியபடி வந்தாள் சாவித்திரி. விசாலாட்சியின் தங்கை . அவள் வெளியூரிலிருந்து வருவதால் இவ்வளவு நேரமாகிவிட்டது .

” இன்று  டிரைவர் திடீரென்று லீவ் போட்டுவிட்டார் சித்தி .அதனால் அப்பாவே பஸ்ஸை எடுத்தார் . அது இப்படி ஆகிவிட்டது .நல்லவேளை பெரிதாக ஒன்றுமில்லை .காலில்தான் ப்ராக்சர் ….”

சுவாமிநாதன் ஒரு மினிபஸ் , இரண்டு ஆட்டோ, ஒரு அம்பாஸிடர் என சிறு டிராவல்ஸ்  வைத்திருந்தார் . அந்த வாகனங்கள் அச்  சிறு நகரத்திற்குள் எந்நேரமும் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் .

” என்னம்மா முதலிலேயே எங்களுக்கு சொல்லியிருக்கலாமே .நாங்களும் ஓடி வந்திருப்போமே ….”

” ஏன் நாங்கெல்லாம் இல்லையா …? உங்களை விட நாங்கள் நன்றாகவே கவனித்துக் கொண்டோம் .உள்ளே போய் பாருங்கள் ….அண்ணன் ஜம்மென்று படுத்திருக்கிறார் …” அவ்வளவு நேரம் அருகலிருந்த பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சரோஜா சிலிர்த்து எழுந்தாள் .

” நீங்கள் உள்ளூரில் இருக்கிறீர்கள் .உடனே வருவீர்கள் .நாங்கள் வெளியூர்காரங்க .எங்களால் எப்படி வர முடியும் …? “

” அப்போ பேசாமல் வாயை மூடிக்கிட்டு உள்ளே போய் அண்ணனை பார்த்துட்டு ,வாங்கி வச்சிருக்கிற இட்லியை சாப்பிட்டு கிளம்புங்க ….”

” என்ன இட்லி சாப்பிடுவதற்காகவா …நாங்கள். வந்தோம் …? ” சாவித்திரியும் பதிலுக்கு கத்த ஆரம்பித்தாள் .

தலையை பிடித்து கொண்டிருந்த விக்னேஷை பார்த்து  ஆட்டோவை அனுப்பிவிட்டு வந்த சாவித்திரியின் மகன் சங்கரும் தலையை பிடித்தான் .இவர்களுக்கிடையே விழித்தபடி நின்றிருந்த வேதிகாவை இருவருமே பரிதாபமாக பார்த்தனர் .

சரோஜாவும் , சாவித்திரியும் புடவையை வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குபவர்கள் போல் இருந்தார்கள் . சரோஜாவின் கொண்டையை சாவித்திரியும் , சாவித்திரியின் பின்னலை சரோஜாவும் உலுக்கும் எண்ணத்தில் இருந்தனர் .அது மாதிரி எதுவும் நடக்கலாமென்ற அனுமானத்தில் , அப்படி எதையாவது செய்யுங்கள் …உங்களை நான் வைத்து செய்கிறேன் என்ற பாவனை பார்வையோடு இடுப்பில் கைகளை தாங்கியபடி இவர்களையே முறைத்து பார்த்தபடி நின்றிருந்தாள் நர்ஸ் .

” அக்கா தெரியாமல் அம்மாவை கூட்டிட்டு வந்துட்டேனோன்னு இருக்கு …” சங்கர் கவலைப்பட …

” நானும் அதையேதான் சங்கர் நினைக்கிறேன் ….” என்றான் விக்னேஷ் .

” சங்கர் உன் அம்மாவை உள்ளே கூட்டி போய் மாமாவை காட்ட ஐந்து நிமிடம் .அத்தையிடம் பேச ஐந்து நிமிடம் .மொத்தம் பத்தே நிமிடங்கள் உனக்கு டைம் .அதற்குள் என்ன செய்வாயோ ….செய்துவிட்டு கிளம்பி விடுகிறாய் ….” என்றான் விக்னேஷ் .




” அப்போது நீங்க அத்தான் ….? ” ஓரக்கண்ணால் பிடறி மயிர் சிலிர்க்க நிற்கும் சிங்கம் போல் போஸ் கொடுத்து கொண்டிருந்த சரோஜாவை பார்த்தபடி கேட்டான் .

” உனக்காவது பத்து நிமிடங்கள் .எனக்கு ஐந்தே நிமிடங்கள்தான் .வேதா சாரிம்மா …எங்கள் அம்மாக்களை வைத்துக் கொண்டு உனக்கு அதிக அளவில் எங்களால் உதவ முடியவில்லை .இவர்கள் இங்கே இருப்பதை விட இல்லாமல் இருப்பதுதான் உனக்கு பெரிய உதவி ….”

சொன்ன கையோடு தன் தாயின் கையை இழுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டவன் ” வாங்கம்மா வீட்டிற்கு  போகலாம் ….” என்றான் .

” என்னது இவுங்க அம்மாவும் , புள்ளையும் இங்கே நாட்டாமை பண்ணுவாங்க .நாம போகனுமா ….? ” என்ற சரோஜாவின் சிலிர்ப்பிற்கு ….

” யார் நாட்டாமை பண்றது ….நானா …? ” என்ற சாவித்திரியின் பதில் சிலிர்ப்பை வெளியே தெரியாமல் அமுக்கி அடக்கியபடி உள்ளே இழுத்து சென்றுவிட்டான் சங்கர் .

” ஏய் என்னடா …அவள் உள்ளே போகிறாள் .நான் வெளியே போகனுமா …? ” எகிறிய தாயை …

” அம்மா …அப்பா போன் பண்ணினார் .அங்கே வீட்டிற்கு வந்து சாப்பிட காத்து கொண்டிருக்கிறார் . நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டார் ….என்ன செய்ய போகிறீர்கள் …? ” என அதட்டினான் .




எந்த சூழ்நிலையிலும் கணவனை பகைத்து கொள்ள விரும்பாத சரோஜா …அரை மனதுடன் அப்பொழுதும் அறைக்குள் எட்டி பார்த்து ” விடிந்த்தும் வந்து விடுவேன் …” என எச்சரிக்கை விட்டு விட்டே போனாள் .

அதற்கு பதில் சொல்ல வேகமாக எழுந்த சாவித்திரியை விசாலாட்சியின் அழுகை திசை திருப்பியது .இதெல்லாம் ஒரு குடும்பமா ….? என்ற அல்ப பார்வை பார்த்த நர்ஸ் ஒரு எச்சரிக்கை கணக்கிடல் ஒன்றுடன் அறையை ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி …சற்று தள்ளி போய் அமர்ந்தாள் .ஆனால் பார்வையை மட்டும் இவர்கள் இருந்த அறையை விட்டு நகர்த்தவில்லை .

அதற்கேற்றாற் போல் வெளியே போயிருந்த விக்னேஷ் திரும்ப அவசரமாக உள்ளே வந்தான் .நர்ஸ் கலவரத்தோடு அவன் பின்னால் ஆராய்ந்து கொண்டிருந்த போது அவன் …

” வேதா …டாக்டர் ஐந்து நாட்கள் இங்கே இருக்க சொல்லியிருக்கிறார் .இவர்களையெல்லாம் ஆஸ்பத்திரியில் வைத்து உன்னால் சமாளிக்க முடியாது .அதனால் நான் நாளை அம்மாவை வரவிடாமல் தடுத்துவிடுவேன் .சங்கரிடமும் பேசி விடுகிறேன் .நீ கொஞ்சம் கஷ்டப்பட்டு சமாளித்து விடு .என்ன …? ” எனக் கேட்டுக் கொண்டிருந்த போது  நர்ஸ் …

” சார் …சார் சீக்கிரம் போங்க …உங்க அம்மா திரும்ப வர்ற மாதிரி தெரியுது ….” கலவரமாய் கத்தினாள் .




” அம்மாவை ஆட்டோவில் உட்கார வைத்துவிட்டு வந்தேன் .நீ உன் துணைக்கு அவரை அழைத்து வைத்துக்கொள் ” சரோஜாவிற்கு பயந்து ஆஸ்பத்திரி வாசலை நோக்கி ஓடிக்கொண்டே போகிற போக்கில் விக்னேஷ் இதை சொல்லிவிட்டு போனான் .

அச்சடித்த சிலை மாதிரி உறைந்து போய் நின்றிருந்த வேதிகாவிடம் வந்த சங்கர் அவளை உலுக்கி விட்டு விட்டு தானும் இதே வார்த்தைகளை அவளிடம் சொன்னான் .

என்ன ….அவனை அழைப்பதா …? அவளா …? அது எப்படி முடியும் …? அவள் அழைக்க போவதில்லை .ஒரு வேளை அப்படி அழைத்தாலும் ….அவன் வருவானா …?

இப்படி இரு வீட்டு உறவினர்களும் வெட்டி சண்டை போட்டுவிட்டு , இந்த ராத்திரியில் அவர்களை ஆஸ்பத்திரியில் தனியாக விட்டு போனால் எப்படி …?

அங்கே ஆக்ஸிடென்ட் நடந்த இடத்தில் பஸ்ஸின் நிலைமை என்னவென்று தெரியவில்லை .அப்பாவின் நண்பர் ராமநாதனைத்தான் அந்த விபரம் பார்க்க சொல்லியிருந்தாள் .இதுவரை அவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை .இதில் இவர்கள் வேறு புது புது குண்டாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .

” எ…என்னடா சொல்கிறாய் …? நா…நான் எப்படி அவரை …” வேதிகா திணறிக் கொண்டிருந்த போதே ….

” நீ கவலைப்படாமல் உன் அம்மாவை அழைத்துக் கொண்டு கிளம்பு சங்கர் .இங்கே நான் பார்த்துக்கொள்கிறேன் ” என வந்து நின்றான் அவன். அமரேசன்

What’s your Reaction?
+1
4
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!