Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

     கொடியிலே மல்லிகை பூ    – 1

               கொடியிலே மல்லிகை பூ                   

1

கண்ணன் கை சக்கரமாய் சுழல்கிறேன் 
வியூகங்கள் வகுத்து முன் செல்கிறாய் நீ .

                    ” அக்கா இந்த சுடிதாருக்கு நீங்க சொன்ன அளவுதான் வைத்தேன் .ஆனால் இப்படி வந்துருக்கு ….” கொட்டை பாக்கு விழிகளை உருட்டியபடி சுடிதார் என எந்தப் பக்கம் திருப்பி பார்த்தாலும் சொல்ல முடியாத ஒரு துணிச்சுருளுடன் எதிரே வந்து நின்ற சரளாவை வெறுத்து போய் பார்த்தாள் வேதிகா .

என்னவோ அவளுக்கு இன்று காலையிலிருந்தே மனது ஒரு மாதிரியாக இருந்த்து .வெட்டிக் கொண்டிருந்த ப்ராக்கை கூட தப்பு தப்பாக மார்க் பண்ணி அழித்து திரும்ப வரைந்து கொண்டிருந்தாள் .இதில் இவள் வேறு …




இவள் தைத்து வைத்திருப்பதற்கு பெயர் சுடிதாரா…? இவள் குடும்ப நிலையில் பரிதாப்பபட்டு இந்த அரைகுறையை தன்னிடத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்டது தப்போ ….?

” தப்புதான் ….” என்றபடி அருகில் வந்தாள் கௌரி . அவள் மற்றொரு டேபிளில் துணிகளை பரப்பி வைத்து அளவிட்டு வெட்டிக் கொண்டிருந்தாள் .வேதிகாவும் ,கௌரியும்  இந்த சிறிய தையலகத்தில் பங்குதார்ர்கள் .இங்கே அவர்கள் இருவரையும் சேர்த்து ஐந்த  பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் .

” சரளா …வெட்டி போட்டிருக்கின்ற  துணிகளையெல்லாம் அள்ளி குப்பை கூடையில் போட்டுவிட்டு ஆபிஸை சுத்தமாக கூட்டு ….,” கௌரி சொன்னதும் சரளா தலையாட்டி சென்றாள் .

” இவள் இந்த வேலைக்குத்தான் லாயக்கு .இவளை மெஷினில் உட்கார வைத்தது உன் தவறு வேதா .”

” இந்த வேலை செய்தால் இவளுக்கு தேவையான சம்பளம் கொடுக்க முடியாதே …அதனால்தான் தையல் கற்றுக் கொள்வாளென நம்பி மெஷினில் உட்கார வைத்தேன் ….”

” அதில் ஆர்வம் இருக்க வேண்டுமல்லவா …? மனிதர்களை எடை போடுவதில் நீ நிறைய தவறு செய்கிறாய் வேதா …”

” நீ யாரை சொல்கிறாய் …? “

” இந்த சரளாவைத்தான் …அவள் குடும்பத்திற்கு உதவ வேண்டுமென்பதற்காக நாம் இப்படி நஷ்டப்பட முடியுமா சொல்லு …? ” சுடிதாரென சரளா தைத்து போட்டிருந்த துணியை எடுத்து ஆட்டிக் கேட்டவள் ….




” யாரை சொல்கிறேனென நினைத்தாய் …? ” என்றாள் .

பதில் சொல்லாமல் குனிந்து ப்ராக்கை வெட்ட ஆரம்பித்து விட்ட தோழியை கொஞ்ச நேரம் பார்த்தவள் பெருமூச்சுடன் தனது டேபிளுக்கு சென்றாள் .

மனிதர்களை எடை போட தெரியவில்லையா எனக்கு …? தவறுதலான புரிந்து கொள்ளலில்தான் இப்படி என் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறேனா …? இல்லை …அப்படி இல்லை .இந்த சரளா விசயத்தில் வேண்டுமானால் நான் அதுபோல் இருக்கலாம் .ஆனால் …என் வாழ்க்கையில் ….அப்படி இல்லை. நான் எடுத்த முடிவு சரிதான் .

தனக்கென ஒரு வரையறையை உண்டாக்கிக் கொண்டு அதிலேயே திருப்தி பட்டுக்கொண்டாள் வேதிகா .மதியம் சாப்பிட டிபன் பாக்ஸை திறந்தவளுக்கு அதிலிருந்த தயிர்சாதம் எரிச்சலூட்டியது .காலையில் தலைவலியென சொன்ன  விசாலாட்சியை அவள்தான் …கஷ்டப்பட வேண்டாம்மா என்று தயிர்சாதம் மட்டுமே போதுமென்றிருந்தாள் .ஆனால் இப்போது அந்த தயிர்சாதம் அவளுக்கு வெறுப்பை உண்டாக்கியது .

எரிச்சலோடு டிபன் டப்பாவை மூட போனவளின் டப்பா மூடி நிறைய தக்காளி சாதம் அள்ளி வைக்கப்பட்டது .

” இரண்டு பேரும் பாதி …பாதி ஷேர் பண்ணிக்கலாம் ….” கௌரி சொல்லியபடி அவள் தயிர் சாத்த்தில் பாதியை எடுத்துக்கொண்டாள் .

” என்னடி ஆச்சு ..? இன்று காலையிலிருந்தே நீ சரியில்லை …” கௌரியின் கேள்விக்கு உச் கொட்டினாள் .

” என்னமோடி காலையலிருந்தே மனசு சரியில்லை …”

” ஏன் இன்று காலையில் வரும்போது வழியில் யாரையாவது பார்த்தாயா …? “

தோழியின் குறிப்பு கேள்வி நெஞ்சை திக்கிட வைத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தக்காளி சாத்ததை விழுங்கினாள் .கௌரி கூறிய காரணமும்தான் …ஆனால் அது மட்டுமே என்றில்லாது காலை எழுந்த்திலிருந்து ஒரு வித மனசோர்வை உணர்ந்தாள் .

” இல்லடி என்னால் சாப்பிட முடியவில்லை ….” கையை உதறிவிட்டு எழ போனவளை அத்ட்டினாள் கௌரி .




” ஏய் …காலையில் ஐந்து மணிக்கு எழுந்து என் வீட்டு வானரங்களை சமாளித்து இந்த சமையலை செய்வதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா …? எளிதாக கொண்டு போய் குப்பையில் கொட்டுவாயா …? தொண்டையில் அடைத்தாலும் பரவாயில்லை .தண்ணீரை குடித்து குடித்தாவது நீ இதை முழுங்கியே ஆகவேண்டும் .”

மிரட்டுவது போல் தன்னை சாப்பிட வைக்க முயலும் தோழியை பாசமாக பார்த்தாள் வேதிகா .இருவரும் ஒன்றாவது படிக்கும் போதிலிருந்து தோழிகள் .ஒரே தெரு , ஒரே பள்ளி  என பல காரணங்கள் இவர்களின் நட்பினை இப்போது வரை நெட்டிலிங்கமாய் வளர்த்து வருகிறது .

” எனக்கு தெரிந்து உன் வீட்டில் ஒரே ஒரு வானரம்தான் .இரண்டாவது யாருடி …? “

” என் புருசன்தான் ….”

” அப்போ ..முதல் வானரம் …”

” என் பிள்ளை. ஒரு வானரத்தை ஆபிசிற்கும் , இன்னொரு வானரத்தை ஸ்கூலுக்கும் அனுப்பிட்டு என்னத்தையோ சமைச்சோம்னு  பெயர் பண்ணி , என் வீட்டு மண்டோதரியை சமாளிச்சுட்டு அரக்க , பறக்க வேலைக்கு ஓடி வர்றதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே ….அதை அந்த சீதா கூட பட்டிருக்க மாட்டா ….”

” எந்த சீதா…? “

” நம்ம ராமாயண சீதாதேவிடி …”

” அடிங் …ஏன்டி …உன் புருசனும் , பிள்ளையும் உனக்கு வானரங்கள் .மாமியார் ராட்ச்சி.நீ மட்டும் சீதாதேவியா … இல்லையில்லை …சீதையை விட உசத்தியோ …கொழுப்புடி உனக்கு …”

” மாமியார்னாலே ராட்ச்சிதான்டி .என் மாமியார் நல்ல ராட்ச்சி .அதனால்தான் சூர்ப்பனகைன்னு சொல்லாமல்  மண்டோதரின்னு சொன்னேன் . அதென்ன நீ மட்டும் சீதாதேவியான்னு கேட்கிற …உண்மையிலேயே அவள் பட்ட கஷ்டம் வேறு எந்த பெண் பட்டிருக்கிறாள் …? நீ சீதையாக விரும்புகிறாயா ….என எந்த பெண்ணிடமாவது கேட்டு பாரேன் .ஆளை விடு சாமின்னு நூறு கும்பிடு போடுவாள் .நானெல்லாம் சீதாதேவி இல்லைடி …என் வாலியின் தாரையாகவே இருந்துவிட்டு போகிறேன் …”

என் வாலியின் என அவள் தந்த அழுத்தத்தில் …கணவன் மீது கொண்ட காதலும் , அவன் குரங்கென்றால் நானும் அதேதான் என்றதில் கணவனுக்கான அவளின் அர்ப்பணிப்பும் தெரிய …சிறிது பொறாமை கலந்த பாசத்துடன. தோழியை பார்த்தாள் வேதிகா .




” சரி …சரி பொறாமைபடாதே .தட்டை பார்த்து சாப்பிடு ….” நிமிர்ந்தே பாராமல் பேசிய தோழியின் தலையில் வலிக்காமல் கொட்டினாள் .

” சீதையோ , தாரையோ நம் வாழ்க்கையை நம் கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமடி .முடிவை அடுத்தவரிடம் கொடுக்க கூடாது …” தோணாமல் ஊசியேற்றினாள் .

வேதிகா டிபன்பாக்ஸை கழுவ எழுந்தாள் .

” ம்க்கும் கொஞ்சம் பேச்சை அவள் பக்கம் திருப்பிட்டா போதும் .இவளுக்கு வாயடைச்சிடும் …” வேதிகாவை நொடித்தபடி எழுந்த கௌரியின் முன் வந்து நின்றாள் சரளா .

” அக்கா …இந்த  பாட்டம் அளவு ….”

” ஏய் சரளா உதை பட போகிறாய் நீ …உன்னை யார் கத்தரிக்கோலை கையில் பிடிக்க சொன்னது …? காலையில் நீ தைத்த சுடிதார் டாப்பையே யாருக்கு கொடுத்து எப்படி போட வைக்கறதுன்னு தெரியாமல் முழிச்சிட்டிருக்கேன் .இப்போ பாட்டம் வேறயா …? “




” இல்லக்கா ….இதை நல்லா கட் பண்ணுவேன் பாருங்களேன் .ஒரு தடவை சொல்லிக்குடுங்க .கப்புன்னு புடிச்சிக்கிடுவேன் ….”

இவளிடம் பேசி பிரயோஜனமில்லை …இவளை வேலைக்கு வைத்தாளே அவளை சொல்லனும் .வேதிகாவின் தலையில் ஒரு கொட்டாவது வைத்து விடும் ஆசையில் கௌரி திரும்பி பார்த்த போது , வேதிகா காதோடு பிடித்தபடியிருந்த போனோடு , முகமெல்லாம் வியர்த்து வடிய தடுமாறியபடி நின்றிருந்தாள் .

“‘வேதா ..என்னடி….என்ன ஆச்சு …? பதட்டத்துடன் தோழியை அணுகினாள் .

” அ…அப்பா …ஆக்ஸிடென்ட் ….” அரை குறை வார்த்தைகளால் குழறியபடி கை போன் கீழே விழுவதை அறியாமல் வேதிகா வாசலுக்கு ஓடினாள் .

What’s your Reaction?
+1
5
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!