Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 20

                                                20

” என்னால் தனியாக ப்ரின்ஸை சமாளிக்க முடியுமென்று தோன்றவில்லைங்க .நாம் ப்ரின்ஸை இவளிடம்தான் ஒப்படைக்க வேண்டியிருக்குமோ …? ” ஜெபசீலியின் குரலில் முன்தின இரவு முழுவதும் சாந்தனுவை சமாளிக்க முயற்சித்து முடியாத அயர்ச்சி இருந்த்து .

” ஓ…உன் பேரன் …நம் பேரன் ….இவளுடன் போனால் யாருடைய பிள்ளையாக வளர்வான் …? “

ஜெபசீலி புரியாமல் பார்க்க …

” இவள் எவனோ ஒருவனை நாளையே திருமணம் செய்வாள் .அந்த யாரோ …நமது டேவிட்டின் பிள்ளைக்கு அப்பாவா…? “




” இல்லை …இல்லை அதற்கு நான் சம்மதிக்கமாட்டேன் ….” ஜெபசீலி அலற …

” உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் .நான் திருமணமே செய்து கொள்ள போவதில்லை ….” என்ற சத்யமித்ராவை …

” வாயை மூடு …” என அதட்டியபடி வந்தான் கிறிஸ்டியன் .
” நம் வீட்டு பாரம்பரியத்திற்காக ஒரு பெண்ணை காலமெல்லாம் தனித்திருக்க சொல்கிறீர்களா அப்பா ..? “

” நான் சொல்லவில்லை .அவளேதான் சொல்லிக் கொள்கிறாள் …”

” நீ எப்படி போனால் என்ன …? எனக்கு என் பிரச்சினை தீர்ந்தால் சரி என்பதா  …? என்னப்பா இது …? “

” இவளை எனக்கு பிடிக்கவில்லை .நான் இவளை வீட்டிற்குள் சேர்க்கமாட.டேன் “

” அம்மா ..நான் சத்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் .எங்களது இந்த திருமணம் நம் இப்போதைய பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவிடும் ….” பிடிவாத தந்தையை விடுத்து தாயிடம் பேசினான் கிறிஸ்டியன் .

வியப்பில் விரிந்த ஜெபசீலியின் விழிகள் சம்மதிப்பை காட்டுவதை பார்த்த ஆடம்ஸ் ….

” எனக்கு இவளிடமிருந்து பதில் வேண்டியிருக்கிறது .முதலில் பதில் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம் ” என்றார் .

” கேளுங்கள் …” அவர் முன் வந்தாள் சத்யமித்ரா .

” அன்று என் மகனை பறிகொடுத்த அதிர்ச்சியில் பேரனை உதறிவிட்டு வந்தேன் .நீ …பிறகு கொஞ்சநாட்களில் ஏன் அவனை என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவில்லை …? “

” பிச்சை போல் உதறிவிட்டு வந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அவள் எப்படியப்பா நம்மிடம் வருவாள் …? ” கிறிஸ்டியன் முந்தினான் .

“உன்னைக் கேட்டேனா  …? ” ஆடம்ஸ் மகனை கூர்ந்தார் ..

” பெரிய காரணமெல்லாம் இல்லை அங்கிள் .உங்களின் அந்த சிவந்த விழிகளையும் , குத்தும் வார்த்தைகளையும் மீண்டும் சந்திக்க தயக்கம் .அவ்வளவுதான் ….”

” மூன்று வருடங்கள் எங்கள் வீட்டு குழந்தையை வளர்த்திருக்கிறாய் .ஆனால் உன் குழந்தையாய் …ஏன் …? ஒரு குழந்தைக்கு அவனது தந்தையை மறைப்பது எந்த வகை நியாயம் …? “

சத்யமித்ரா பதிலின்றி கிறிஸ்டியனை பார்த்தாள் .

” சொல்லு சத்யா .இதற்கு உன்னுடையதென ஏதேனும் காரணம் இருக்கும் .அதனை நாங்கள் அனைவருமே அறிய விரும்புகிறோம் ….” கிறிஸ்டியனுமே இந்த கேள்விக்கான பதிலை அறிய ஆவல் காட்டுவதை உணர்ந்த சத்யமித்ரா சம்மதமாய் தலையசைத்தாள் .

சோபாவில் அமர்ந்திருந்த ஆடம்ஸ் எதிரே தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள் .

” நான் முதலில் சாந்தனுவை அக்காவின் குழந்தையெனத்தான் மனதில் பதித்திருந்தேன் அங்கிள்  ….”

” ஆனால் அவன் முதன்முதலில் வாய் திறந்து பேசும் போது , என்னை அம்மா என்று அழைத்தான் .அந்த அழைப்பிற்கு பிறகு …அவன் மனதில் நான் அம்மா என்ற  பிம்பமான பிறகு அப்பாவென உங்கள் பிள்ளையை எப்படி காட்டுவேன் …? “

” அப்படி நான் அம்மா இல்லை என மறுத்தாலும் ….அவனது அப்பாவும் , அம்மாவும் ….உயிரோடு இல்லையென எப்படி போட்டோவில் காட்டுவேன் .என் பிள்ளை மனதுடைந்து போய் விட மாட்டானா …? “

” அதனால்தான் சித்தி என்ற உறவை முழுதுமாக மறைத்து நான் அவனது பெற்ற தாயாகவே மாறிப்போனேன் …”

சத்யமித்ராவின் இந்த பதிலில் ஆடம்ஸ்ஸின் முகம் திருப்தியோடு மன நிறைவை காட்டியது .

பெருமிதத்தோடு கலங்கிய கண்களை திருப்பிக்கொண்டு தனது அம்மாவிற்கு சத்யமித்ராவின் பதிலை மொழிபெயர்த்தான் கிறிஸ்டியன் .

” நான் அவனது தாயாகும் போது வில்லியம் ஆடம்ஸ் எப்படி அவனுக்கு தாத்தாவாக முடியும் …? அதனால் அவரை எங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டியதாயிற்று ….ஆனால் நான் இதனை மிகவும் மனத்துயருடன் செய்தேன் அங்கிள் …”

” டேவிட் அத்தான் உங்கள் வீட்டை பற்றி அப்பா , அம்மா , தம்பி …என உங்கள் அனைவரைப் பற்றியும்தான் எந்நேரமும் பேசியபடி இருப்பார் .அதனை கேட்டு கேட்டு எனக்கு நீங்கள் அனைவரும் எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே தோன்ற தொடங்கி விட்டீர்கள் .உற்சாகமாக அவர் செய்யும் ஒவ்வொரு விவரணைகளுக்கு பின்னும் …உங்களை பிரிந்த துயரம் இருக்கும் ….”

” அதனால்தான் அன்று அந்தக்கொடிய விபத்து தினத்தில் , நானும் சாந்தனுவும் அநாதைகளாக நின்ற போது என் மனம் இயல்பாக உறவினர்களென உங்கள் அருகாமையைத்தான் எதிர்பார்த்தது .ஆனால் நீங்களோ ….? ” முடிக்க முடியாமல் நிறுத்தினாள் .

பொங்கிய அழுகையை மறைக்க முகத்தை மூடியவள் தனது முயற்சியில் தோற்று முதுகு குலுங்கினாள் . இயல்பாக அவளை அணைக்க எழுந்த கைகளை …அவள் தலை வருட உயர்ந்த தந்தையின் கரங்களை பார்த்து கட்டுப்படுத்தி கீழிறக்கினான் கிறிஸ்டியன் .தன்னை மறந்து உயர்ந்து விட்ட கரங்களை தாழ்த்தி சோபாவை பிடித்துக் கொண்டார் ஆடம்ஸ் .

தனது தாயிடம் திரும்பி பேச முயன்றவனை கையுயர்த்தி தடுத்தாள் ஜெபசீலி .

” சில அன்பு உணர்ச்சிகளுக்கு மொழி தடையாக இருப்பதில்லை கிறிஸ்டி .எனக்கு இப்போது சத்யமித்ராவின் மொழி புரிகிறது …” என்றவள் சத்யாவின் தலையை இழுத்து தன் மடி மீது வைத்துக்கொண்டாள் .

எல்லையில்லா ஆறுதலுடன் அவள் மடி சாய்ந்து கொண்ட சத்யமித்ரா …தனது மனதை தொடர்ந்து சொல்ல தொடங்கினாள் .

“அத்தானின் குடும்ப பாசத்தை பார்த்த அக்கா , காதலென்ற பெயரில் அத்தானை அவர் குடும்பத்தை விட்டு பிரித்துவிட்டேனோ …என்ற குற்றவுணர்ச்சி என்னை கொல்கிறது என  என்னிடம் சில முறை வருந்தியிருக்கிறாள் .அதனால்தான் இவர் பக்கம் என் மனது முழுமையாக சாய்ந்த பின்னும் , அக்காவும் , அத்தானும் செய்த அதே போன்ற தவறை நானும் செய்யக்கூடாதென்றுதான் நீங்கள் போகச் சொன்னதும் இந்த வீட்டை விட்டு போய்விட்டேன் …..”

” இப்போதும் சொல்கிறேன் ..உங்களுக்கு விருப்பமில்லாமல் உங்களுக்கு மருமகளாக வேண்டுமென ஒருநாளும் நான் நினைக்கமாட்டேன் .உங்கள் மகனை உங்களை விட்டு பிரிக்கமாட்டேன் .ஆனால் என் மகனை எனக்கு கொடுத்துவிடுங்கள் .அவன்தான் என் வாழ்க்கை …” கைகளை கூப்பி கெஞ்சினாள் .




அவளுக்கான ஆறுதல் மொழிகளுக்காக வாய் திறந்த ஜெபசீலி கடகடவென சத்தமாக ஒலித்த ஆடம்ஸின் சிரிப்பில் குழம்பி அவரை பார்த்தாள் .சத்யமித்ரா சிறிது பயத்தோடு அவரை பார்க்க …கிறிஸ்டியன் முகம் மலர…” அப்பா …” என்றான் .

” டேய் …அப்படியே உன்னை மாதிரித்தான்டா இவளும் .யார்கிட்ட எப்படி …எந்த விசயம் பேசனும்னு கத்து வச்சி பேசுறா.நீதான் டிரெயினிங் கொடுத்தியோ …இல்லை உன்னைப் போல் பிறப்பிலேயே வந்த்தோ …? …” தொடர்ந்து அவர் சிரிக்க அவருக்கு கோபமில்லையென உணர்ந்த சத்யமித்ராவின் முகமும் மலரத் தொடங்கியது .

” ஐயோ அப்பா நான் ஒன்றும் சொல்லிக்கொடுக்கவில்லையப்பா ….அவளேதான் அவள் மன எண்ணங்களை சொல்லிக்கொண்டிருக்கிறாள் …” பயந்தாற் போல் பாவனை செய்தான் .

,” சரிதான்டா ரொம்ப நடிக்காதே …அங்கே பார் மெயின் இடத்தையே வளைத்து பிடித்துவிட்டாள் .இனி நான் என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது …? ” வசதியாக ஜெபசீலியின் மடியில் சாய்ந்து கொண்டு இவரை பார்த்துக் கொண்டிருந்த சத்யமித்ராவை காட்டினார் .

கூச்சத்துடன் எழப்போன சத்யமித்ராவை மீண்டும் தன்னருகே இழுத்துக்கொண்டு ” என்னடா பேசுகிறீர்கள் .ஒன்றும் புரியவில்லை …” என்றாள் ஜெபசீலி .

இவ்வளவு நேரம் புரிந்ததாம் …இப்போது புரியவில்லையாம் …ஆண்கள் இருவரும் இப்போது அவளை கேலி செய்ய ஆரம்பித்தனர் .

அப்போது தூங்கி எழுந்து அம்மாவைக் காணோமே என்ற பதட்டத்தில் ஓடிவந்த சாந்தனு …” அம்மா ….ஊருக்கு போகலாமா …? ” என்று அவள் மடியில் ஏறினான் .

” கண்ணா நாம் எல்லோரும் இனி இங்கேதான் இருக்க போகிறோம் …” சத்யமித்ராவிற்கு அருகில் தரையில் அமர்ந்து கொண்டு சாந்தனுவை தூக்க முயன்றான் கிறிஸ்டியன் .

” வேண்டாம் .நீங்கள் எதற்கு எங்களோடு இருக்கவேண்டும் …? ” கிறிஸ்டியனை  தள்ள முயன்றான் சாந்தனு .

அவனை அப்படியே தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் …” ஏன்னா நான் உன் அப்பா ….அதனால்தான் …” என தன் உறவை குழந்தைக்கு சொன்னான் .

முகம் மலர்ந்த சாந்தனு அவர்கள் இருவரின்  தோள்களிலும் கையை போட்டு இழுத்துக்கொண்டு ” ஐ …அப்படியா …அம்மா அப்போது இனி நீங்க என்னை விட்டு போக மாட்டீங்களே …? ” என்றான் .

” நானும் உங்களோடுதான்டா கண்ணா இருப்பேன் …” ஜெபசீலி மலையாளம் பேசிக்கொண்டு அவர்களோடு சேர்ந்து தரையில் இறங்கி அமர்ந்து கொண்டாள் .

” ஐ…ஜாலி …” பிள்ளை உடனே பாட்டி மடிக்கு தாவினான் .
நிமிர்ந்து தாத்தாவை பார்த்தான் ” தாத்தா நீங்களும் வாங்க …,” தரையில் தன்னருகே இருந்த இடத்தை காட்டினான் .

இந்த பெரிய தொழிலதிபர் …இப்படி சாதாரணமாக தரையில் அமருவதா ….? ஆடம்ஸ் திகைக்க ….




” அட உட்காருங்க .இப்போ நீங்க தி கிரேட் வில்லியம் ஆடம்ஸ் இல்லை .ப்ரின்சோட தாத்தா …” என்று அவர் கைகளை பிடித்து தரையில் அமர வைத்தாள் ஜெபசீலி .

‘ ப்ரின்சோட தாத்தா .’ இதுவரை வாங்கிய எத்தனையோ விதம் விதமான பெயர்களை விட …உறவுகளை விட இந்த பெயரும் , உறவும் பிடித்துவிட…வித்தியாசமாய் தனக்கொரு உறவு சொன்ன பேரனுடன்  வில்லியம் ஆடம்ஸும் குழந்தையாய் மாறி ஒன்றாக கலக்க தொடங்கினார் .

வெகுநாட்களுக்கு பிறகு அந்த வீடு நிறைந்து புன்னகைக்க தொடங்கியது .தோட்டத்து மலர்களெல்லாம் ஒன்றாக மலர்ந்து வசந்தத்தை அந்த வீட்டிற்குரியதாக்கின . 

– நிறைவு –

                                                       ———————

What’s your Reaction?
+1
9
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Priya
Priya
4 years ago

Super mem

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!