pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 9

9

பகலை துரத்தும் இரவுகள் 

பழுது சொல்ல முடியாதவை ,

கவலை சுரக்கும் உன் 

முனகல்களும் அப்படித்தான் , 

வெடித்து திறந்த பருத்திச் செடியில்

வெண்மையாய் தெரிவது 

உன் இதயம் தானோ ? 







சரசரவென தண்ணீர் குழாயோடு உள்ளே நுழைந்த தீயணைப்பு படையினர் அறையின் மேல் தண்ணீரை பீய்ச்சி அடிக்கத் தொடங்கினர் .” இதோ இந்த பக்கம் “ஒரு தீயணைப்பு வீரருக்கு   அவன் இருந்த பக்கத்தை சுட்டிக் காட்டியவள் அவரது வேகத்தில் திருப்தி வராது தானும் சேர்ந்து அவர் கை தண்ணீர் குழாயை தூக்கி நேராக உள்ளே இருந்தவன் மேல் படுமாறு அடித்தாள் .குபீரென வந்து விழுந்த நீரில் பற்றிக்கொண்டு எரிந்த சோபாவும் அவன் மேல் எரிந்த நெருப்பும் அணைந்தது . தீயணைப்பு வீரர் அடுத்து நெருப்பு எரிந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி போனார்.

இப்போது எரிந்து கொண்டிருந்த ஜன்னல் பகுதியிலும் நெருப்பணைந்து இடம் கிடைக்க தேவயானி மேலே யோசிக்காமல் அந்த சிறிய இடத்தின் வழியே உள்ளே குதித்து விட்டாள்.

இன்னமும் சோபாவில் அமர்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனருகில் போய் அவன் சட்டை காலரை சுருட்டி பிடித்து எழுப்பினாள் . ” ஐந்தறிவு மிருகம் கூட தன் உயிருக்கு ஆபத்து என்றால் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள ஓடும் .அந்த உணர்ச்சி கூட இல்லாத என்ன மனிதன்  நீ …? ” புகை படிந்து கறுப்படர்ந்து கிடந்த முகத்தை பார்த்து எரிச்சலாக கேட்க அவன்  கண்சிமிட்டவில்லை .

வெளியேவர தகராறு செய்வானோ என்ற ஐயத்துடன் தன் பிடியை அழுத்தமாக பற்றி தேவயானி அவனை இழுக்க அவனோ மிகவும் இலகுவாக அவளுக்கு நகர்ந்து வந்தான் .அவன் கண்கள் அவள் மீதே பதிந்திருந்தன. இத்தனை புகைக்கும் , வெப்பத்திற்கும் சிறிதும் இமைக்கவில்லை அவை .

 உள்ளே வந்த ஜன்னல் அருகிலேயே அவனை இழுத்து சென்றவள்  ” வெளியே போங்க ” தான் உடைத்த ஜன்னல் வழியை காட்டினாள்.




 ” முதலில் நீ போ ”  அவளைத் தள்ளினான் அவன் . அவள் தலையாட்டி மறுத்துக் கொண்டிருக்கும்போதே அருகே பாதி எரிந்து கிடந்த மர நாற்காலி ஒன்றை எடுத்து அந்த கண்ணாடி ஜன்னலை ஓங்கி அடித்து உடைத்து இன்னும் கொஞ்சம் வழியை பெரிதாக்கினான் .

”  இவ்வளவு சின்ன இடத்திற்குள் எப்படி புகுந்து வந்தாய்  ? உடம்பில் காயம் படாதா  ? ” இந்த நிலையிலும் தன்னை அதட்டியவனை அவள் ஆச்சரியமாக பார்க்க அவன் அவள் இடையில் கை கோர்த்து அவளைத் தூக்கி ஜன்னலின் மறுபுறம் இறக்கினான்.

வெளியே போன தேவயானி திரும்பி அவனுக்கு கை நீட்டினாள். அவள் கையைப் பற்றி கொண்டவன் தானும் வெளியே வந்தான் .பற்றிய கையை விடாமல் அந்த வெப்ப சூழலை விட்டு அவனை வெளியே இழுத்து வரும் வரை அவள் முகத்தை பார்த்தபடியே வந்தவன் வெளிக்காற்று முகத்தை தாக்கியதும் ” ஆர் யு ஷேஃப்  ? ” என்றான் அவளிடம்.

தேவயானி தலையசைத்து ” நாம் இரண்டு பேருமே பாதுகாப்பாக இருக்கிறோம் .இங்கே உட்காருங்கள்  ” அவன் தோள் பற்றி வரவேற்பு சோபாவில் உட்கார வைக்க தளர்ந்து அதில் அமர்ந்தவன் கண்கள் சொருக மயங்கி போனான். தேவயானிக்கு திக்கென்றிருந்த்து . அவசரமாக அவனது நாடித்துடிப்பை சோதித்தாள் .டிக் டிக்கென்ற மெல்லிய துடிப்பு அவளது கட்டைவிரல் வழியாக பேரிரைச்சலாக அவள் உடலெங்கும் பரவியது .

” டாக்டர் இதோ இவரை கொஞ்சம் பாருங்கள் .” ஆம்புலன்ஸுடன் வந்து உள்ளே விபத்து நடந்த இடத்திற்கு போய்க்கொண்டிருந்த டாக்டர் ஒருவரை இடைமறித்து அவனிடம் இழுத்தாள் . 

 அந்த டாக்டர் அவனை அவசரமாக ஆராய்ந்துவிட்டு”  ஒன்றுமில்லை அதிர்ச்சி மயக்கம்தான் .உடம்பில் எல்லாம் சிறு காயங்கள் தான்.கையில் மட்டும்தான் கொஞ்சம் அதிக காயம் தெரிகிறது .இவரை விட மோசமான காயம் பட்டவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள் நான் அவர்களை பார்க்க போக வேண்டும். நீங்கள் இவரை கவனித்துக் கொள்ளுங்கள் ” என்றுவிட்டு போய்விட்டார்.

இப்போது இவனை என்ன செய்வது இவனது உறவினர்கள் யாரும் இருக்கிறார்களா ? யாருக்கு தகவல் சொல்வது தேவயானி பதட்டத்துடன் கைகளை பிசைந்து கொண்டு நின்றபோது சந்திரசேகர் நிதானமாக உள்ளே நுழைந்தான். இங்கே இருந்த பதட்டமான சூழ்நிலையை கண்டதும் பரபரப்பானான். இவ்வளவு நேரமாக வெளியே போய் இருந்ததால் இங்கே நடந்த சம்பவங்கள் எதுவும் அவனுக்கு தெரியாது போலும்.

” என்ன ஆயிற்று …? ” ரிசப்சனில் விசாரித்து கொண்டிருந்தவனிடம் போய் நின்றாள் தேவயானி .

” சார் இவர் உங்களுக்கு தெரிந்தவரா  ? ” அவள் காட்டியதும்  சோபாவில் சரிந்திருந்தவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் சந்திரசேகர்.







” ஐயோ சாருக்கு என்ன ஆயிற்று ? என்ன இது உடம்பு முழுவதும் காயம் ? ”  பதறியபடி அவன் அருகில் ஓடி வந்தான்.

” தீவிபத்து சார் .இவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்  ” தேவயானி சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்திரசேகர் தனது போனை எடுத்து நம்பரை அழுத்த துவங்கினான்.

சோபாவில் சரிந்து கிடந்தவனை இரக்கத்துடன் பார்த்த தேவயானி அவன் போட்டிருந்த பாதி எரிந்து தொங்கிய சட்டையை அவன் உடலிலிருந்து விலக்கினாள். அந்த ஹோட்டலின் அருகே மருந்து கடை பார்த்த நினைவு வர வெளியே ஓடிப்போய் அங்கே சுத்தமான வெள்ளை வலைத் துணியை வாங்கி வந்தாள். ரிசப்சனில் பாட்டில் குடி தண்ணீரை கேட்டு வாங்கி அவனது காயங்களின் மேல் ஊற்றி ஓரளவு சுத்தப்படுத்தினாள். பின் தான் வாங்கி வந்த வலைத்துணியை அவன் காயங்களின் மேல் போட்டு மூடினாள்.

” என்ன ஆயிற்று  ? எங்கே இருக்கிறான்  ? ” பதட்டமாக பின்னால் கேட்ட குரல் பரிச்சயம் ஆனதாக இருக்க திரும்பி பார்த்த தேவயானி ஆச்சரியமானாள் . அங்கே வந்து கொண்டிருந்தவன் சசிதரன் .உடன்  மனோரஞ்சிதமும் . இருவரும் மிக அதிக பதட்டத்தில் இருந்தனர்.

” இதோ இங்கே மேடம் ”  சந்திரசேகர் அவர்களை அழைத்துக் கொண்டு வர காயங்களுடன் சோபாவில்  சரிந்திருந்தவனைப் பார்த்ததும் மனோரஞ்சிதம் கதறிவிட்டாள் . ” அடப்பாவி உனக்கு ஏன்டா இந்த கதி ? ” விம்மலுடன்  உணர்ச்சி வசப்பட்டு மேலே விழ  போனவளை பதறி தடுத்தாள் தேவயானி.

” மேடம் அவர் உடம்பு முழுவதும் காயங்கள் இருக்கிறது .அவரை மிக ஜாக்கிரதையாக தொடவேண்டும் ” 




” நீதான் இவனை கவனித்துக் கொண்டாயாம்மா  ? ” கையில் தண்ணீரும் வலைத் துணியுமாக இருந்தவளை பார்த்து கேட்க தேவயானி தலையசைத்தாள்.

” ரொம்ப நன்றி தேவயானி. இன்று இங்கே உன்னை நான் அனுப்பி வைத்தது கூட எங்கள் குடும்பத்திற்காகவே தான் போலும் ” சசிதரன் நன்றி சொல்ல தலையாட்டி அதனை மறுத்தாள் தேவயானி.

” கண்முன்னால் நடந்த விபத்து சார் .மனிதாபிமானத்தோடு என்னால் முடிந்த உதவியை செய்தேன் அவ்வளவுதான் .இவர் உங்களுக்கு ….? ” புரிந்துவிட்ட உறவை உறுதி செய்துகொள்ள கேட்டாள்.

” அன்பார்சுநேட்லி  என் தம்பி ரிஷிதரன்   ” ஒரு வித எரிச்சலோடு கூடப் பிறந்தவனை  அறிமுகம் செய்தான் 

சசிதரன்.

ஆக இந்த மகிஷாசுரன் தான் மனோரஞ்சிதம் மேடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் வீட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவரது இரண்டாவது மகனா ?.

தனது இரண்டாவது மகன் விஷயத்தில் மனோரஞ்சித்த்தின்  தாள முடியாத வேதனையை அவள் அறிவாள். அவளது வேதனைக்கு முற்றிலும் நான் உரியவன் என்று அறிவித்தபடி சுய நினைவின்றி படுத்து கிடந்தான் அவன்.

” அம்மா நமது காரிலேயே திருச்சிக்கு கூட்டி போய்விடலாம் ” சசிதரன் போனில் யாரிடமோ பேசிவிட்டு சொன்னான்.

” இங்கே பெரம்பலூரில் இருக்கும் மருத்துவமனை மிகவும் சிறியதுதானாம் .அதுவும் தீ புண்ணிற்கு என்று தனியாக சிகிச்சை அளிக்கும் வசதி எல்லாம் இங்கே இல்லையாம் .நாம் திருச்சிக்கே போய்விடலாம்  ” பேசிக் கொண்டிருந்தவன் இடைமறித்தாள் தேவயானி.

” சார் இங்கிருந்து திருச்சிக்கு போவதற்கு உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் .மயக்கம் ஆகும் அளவிற்கு இவருக்கு காயங்கள் இருக்கிறது .இந்த நிலைமையில் இவரை அவ்வளவு தூரம் அழைத்து போவதற்கு பதிலாக நமது பசுமை குடிலுக்கு அழைத்து வந்தீர்களானால் இரண்டு நாட்களுக்கு மூலிகை வைத்தியம் செய்து இவரது காயங்களை ஓரளவுக்கு என்னால் ஆற்ற முடியும். அதன் பிறகு நீங்கள் இவரை திருச்சிக்கு அழைத்து போகலாம் ” 

தேவயானி சொன்ன யோசனை அவர்கள் இருவருக்கும் ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க மயங்கிக் கிடந்த மகனுக்கு உடனடி தேவையான வைத்தியத்திற்காக பச்சைமலை வருவதற்கு அவர்கள் ஒத்துக் கொண்டனர்.






சுத்தமான காற்றோட்டமுள்ள ஒரு குடில் ரிஷிதரனுக்காக ஒதுக்கப்பட்டது. வேம்பு மர பலகையின் மீது வாழை இலைகளை விரித்து அதன்மேல் ரிஷிதரனை படுக்க வைக்க ஏற்பாடு செய்தாள் தேவயானி.

அவனது காயத்திற்கான மருந்துகளை தயாரிக்க ஆரம்பித்தாள்.

லேசான அனத்தலுடன் கூடிய புலம்பலில் மருந்தை கலந்து கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தாள் .உடல் வலி காரணமாக இன்னமும் கண்களை திறக்காமல் மெல்லிய முனகலுடன் அசைந்து கொண்டிருந்தவன் புரண்டு்  தன் காயத்தை தானே அழுத்தி விடாமல் தடுக்க வேகமாக அவனருகே போனாள்.

அந்த அரை மயக்க நிலையிலும்  

ரிஷிதரனின் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

"  ஏஞ்சல்... ஏஞ்சல்..." 

What’s your Reaction?
+1
4
+1
5
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!