pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 6

6

சிறுத்தையின் புள்ளிகளுக்கு 

சில நேரம் உன் ஜாடை, 

மறுத்தலை மதித்து நீ 

தள்ளி நிற்கையில் 

மலையோர கிராமங்களில் 

சாமந்தி பூ வாசம் ,

மொட்டென தழுவுகிறது மலைமுகடை 

சடுதியில் வந்து விட்ட ஓர் மழை மேகம்.

” ஏதோ மூலிகைகளைப் பற்றிய புத்தகம் வெளியிட வேண்டும் என்று சொன்னாயே தேவயானி .எழுதி  வைத்திருக்கிறாயா  ? ” சசிதரன் தேவயானியிடம் கேட்டான் .அவன் கையில் சற்று முன்னால் தேவயானி கொண்டு வந்து கொடுத்த கருப்பட்டி பணியார தட்டு .




” ஆமாம் சார். நன்றாக தெளிவாக புத்தகம் போடுவதற்கு ஏற்றபடி எழுதி வேர்டில் கூட போட்டு வைத்துள்ளேன் .நீங்கள் சொன்னால் அப்படியே பப்ளிஸருக்கு   அனுப்பிவிடுவேன். சொல்லுங்கள் சார் எந்த பப்ளிகேசன் ?  அவர் புத்தகம் வெளியிட ஒப்புக் கொண்டாரா ?  ” ஆவலுடன் கேட்டாள் தேவயானி.

” எனக்குத் தெரிந்தவர்தான் .இதுபோல மூலிகை பற்றிய் புத்தகம் எல்லாம் விலை போகாது என்று சலித்துக் கொண்டு தான் இருக்கிறார் .ஆனாலும் எனக்காக செய்வார் .இதில் நீ பணம் என்று எதுவும் எதிர்பார்க்க முடியாது தேவயானி்”

“எனக்கு பணம் தேவையும் கிடையாது சார் .நம் நாட்டில் விளையும் இயற்கையான மூலிகைகள் மகத்துவம் வாய்ந்தவை .அவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் .இது மட்டும் தான் என் நோக்கமே தவிர வேறு எதுவும் இல்லை .நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்து தான் இருக்கிறேன் .அதனால் தான் நிறைய எழுதி போரடிக்காமல் நூறு பக்கங்களுக்குள் இருக்குமாறு எளிமையாக சில மூலிகைகளின் குணங்களை விளக்கி இருக்கிறேன் .இந்தப் புத்தகம் ஓரளவுக்கு விற்றால் மட்டுமே இரண்டாவது பாகமாக இன்னமும் சில மூலிகைகளை எழுதலாம் என்று இருக்கிறேன் ” 

” சரிதான் தேவயானி .நீ அந்த விபரங்களை நான் கொடுக்கும் ஈமெயில் அட்ரஸிற்கு அனுப்பிவிடு .அவரிடம் நான் பேசிக் கொள்கிறேன. ” 

” இது வேறு தனியாக நடந்து கொண்டிருக்கிறதாக்கும் ? ” கேள்வி வாசலில் இருந்து வர இருவரும் திரும்பிப் பார்த்தனர் . சுபாவும் அவளது கணவன் தருணும் நின்றிருந்தனர்.

” ஹாய் வாங்க எப்படி இருக்கீங்க  ? ” சசிதரனும் சரிதாவும் அவர்களை வரவேற்க…”  இதுபோல வேலைகளையெல்லாம் நீங்கள் இவளுக்கு செய்து கொடுக்காதீர்கள் சார் ” என்றபடியே உள்ளே வந்தாள சுபா.

” ஐயோ ஏன் சுபாக்கா என் மேல் உங்களுக்கு என்ன கோபம் ? “தேவயானி சிரித்தபடி கேட்டாள்.

” உன் வேலை இந்த மூலிகைகளை ஆராய்ந்து கொண்டு இருப்பது இல்லை .ஐஏஎஸ் பரீட்சைக்கு தயாராவது .அதனை மறந்து விட்டாய் போல…” 

” அப்படி ஒன்றும் இல்லை அக்கா .படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் .இந்த மூலிகைகள் பற்றி வெளி உலகம் அறிந்து கொள்ள….” 




“போதும் ” என கையை உயர்த்தி அவள் பேச்சை நிறுத்தினாள் சுபா. தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு கட்டு செய்தித்தாள்களை எடுத்து தேவயானியிடம் கொடுத்தாள்.”  உனது படிப்பிற்கு உதவும் ” 

” சரிதா நீங்கள் இவளுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா ? ” குறைபாட்டுடன் கேட்டாள். சரிதா புன்னகைத்தாள்.

” அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் சுபா .எனக்கு என்ன… என்னவென்று அவளாக வந்து நின்றால் தானே நாம் ஏதாவது செய்ய முடியும்  ? “சிறு குற்றச்சாட்டு சரிதாவிடம்.

” சில பிள்ளைகள் பசித்தாலும் தாங்கிக் கொண்டு அழுத்தமாக உட்கார்ந்து கொள்ளும். நாம் தான் பார்த்துப் பார்த்து ஊட்டிவிட வேண்டும் .இவள் அந்த ரகம் ”  சுபாவின் விவரிப்பில்  எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.

” உன்னுடைய எக்ஸாம் ப்ரிப்பரேசன் எந்த அளவில் இருக்கிறது தேவயானி ? ” சசிதரன் விசாரித்தான்.

” படித்துக் கொண்டிருக்கிறேன் சார் ” 

” இங்கே இந்த மலைக் காட்டுக்குள் மூலிகை பறித்துக்கொண்டே மேடம் படிக்கிறார்கள் ” சுபா சொல்ல…

” ஐஏஎஸ் எவ்வளவு கடினமான படிப்பு ? அதற்காக நீ கோச்சிங் கிளாஸ் போக வேண்டாமா தேவயானி ? ”  சரிதா கேட்டாள்.

” போகவேண்டும் தான் அக்கா .ஆனால் அதற்கு இங்கே வசதி இல்லையே  ” தயக்கத்தோடு இழுத்தாள் தேவயானி.




” எல்லா படிப்பும் நாம் இருக்கும் இடம் தேடி வந்து விடாது தேவயானி .நமக்குப் பிடித்த படிப்பை நாம்தான் தேடிப் போக வேண்டும் ” தருண் கண்டிப்பாக பேசினான்.

” தருண் சொல்வது சரிதான் தேவயானி .நீ ஏதாவது கோச்சிங் கிளாசில் சேர்ந்து கொள்ளேன் ” சசிதரன் சொல்ல தேவயானி யோசித்தாள்.

” சசி சந்திரசேகரிடம் கேட்டால்  இந்த  படிப்பு பற்றிய விபரங்கள் தெரியுமே .அவர் சொந்தக்காரப் பையன் படித்து முடித்திருப்பதாக சொன்னாரே ” சரிதா கணவனுக்கு ஒருவரை நினைவூட்டினாள் .

” அட அவரை மறந்து போனேனே ” என்ற சசிதரன் ஒரு பேப்பரில் வேகமாக ஒரு போன் நம்பரையும் முகவரியையும் எழுதி  தேவயானியிடம் நீட்டினான்.

” உன்னுடைய நேரம் , அந்த சந்திரசேகர் இங்கேதான் பெரம்பலூருக்கு ஒரு வேலையாக வந்திருக்கிறார் .இது அவர் தங்கி இருக்கும் ஹோட்டலின் அட்ரஸ் .நான் அவரிடம் போனில் பேசி விடுகிறேன் .அவரை நேரடியாகவே போய் சந்தித்து உனக்குத் தேவையான விபரங்களை வாங்கிக்கொள் .அவரே பேசி உன்னை கோச்சிங் சென்டரில் கூட சேர்த்துவிடுவார் ” 




தேவயானி தயங்கினாள் ” அந்த கோச்சிங் சென்டர் எங்கே இருக்கும் சார் ? ” 

” இதோ இங்கேதான் .பசுமை குடிலுக்கு பின்னால் ஒரு அருவி இருக்கிறது அல்லவா  ? அதற்கு பக்கத்தில்…”  கோபமாக நக்கல் செய்தாள் சுபா.

” கிண்டல் பண்ணாதீர்கள் சுபாக்கா  ” தேவயானி செல்லமாக கோபித்தாள் .

” கோச்சிங் சென்டர் சேலம் அல்லது திருச்சியில் இருக்கலாம் தேவயானி .நீ தூரத்தை எல்லாம் பார்க்காதே .அங்கேயே தங்கிக் கொள்ள இடம் இருக்கும் .உனக்கு தேவையான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம் .நீ முதலில் சந்திரசேகரை போய் பார்த்து விபரங்களை தெரிந்து கொண்டு வா  ” சரிதா ஆதரவாக பேசினாள் .

இந்த இடத்தைவிட்டு அவ்வளவு தூரம் தள்ளி போய் தங்கி படிக்க தன்னால் முடியாது என்று தேவயானிக்கு தெரிந்த போதும் தனது நன்மைக்காக பேசிக்கொண்டிருக்கும் இந்த நல்ல உள்ளங்களை மறுக்க அவளுக்கு விருப்பமில்லை .சந்திரசேகரை போய் பார்க்கத்தான் செய்வோமே என்ற எண்ணம் வந்து விட சசிதரன் கொடுத்த முகவரியை வாங்கி கொண்டாள்.

தருணும் சசிதரனும் ஏதோ தொழில் பேசத் தொடங்க ”  ஓய்வெடுக்க வந்த இடத்திலும் பிசினஸா ? ”  சலித்தபடி சரிதாவும் சுபாவும் தங்களுக்குள் ஏதோ பேசத் தொடங்கினர். பெரம்பலூருக்கு எப்படி போவது என்ற யோசனையுடன் தேவயானி அங்கிருந்து அகன்றாள்.

தேவயானி சொன்ன விபரங்களை சாப்பிட்டபடியே இடையிடாமல் கேட்ட சுந்தரேசன் ” சரி வா நான் பெரம்பலூர் தான் போகிறேன் .உன்னை அந்த ஹோட்டலில் விட்டுவிட்டு என் வேலையை பார்க்கப் போகிறேன் “என்றபடி தட்டில் கைகழுவி விட்டு எழுந்தான்.

” நீங்கள் சமையலுக்கான சாமான்கள் வாங்க போகிறீர்கள் .இப்போது இவளையும் கூட்டிக்கொண்டு எப்படி போக முடியும் ? சுனந்தா கோபமாக கேட்டாள்.

” போகிற வழி தானே சுனந்தா ? நான் பார்த்துக் கொள்கிறேன் ” 

” பைக்கின் பின்னால் நிறைய சாமான்களை கட்டி எடுத்து வரவேண்டும் .இந்த மஹாராணி எங்கே உட்கார்ந்து வருவார்களாம் ? ” சுனந்தாவின் கேள்வியில் நக்கல் இருந்தாலும் அதில் உண்மையும் இருந்தது .சுந்தரேசன் யோசிக்க தொடங்கினான் .

“எல்லாம் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் .இப்போது நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள் .வடைக்கு உளுந்தை ஊற போட்டு வைத்திருக்கிறேன் .நீ போய் உரலில் ஆட்டி எடுத்து விடு .கிரைண்டரில் போட்டால் நன்றாக இல்லை என்று ஆளாளுக்கு புகார்  ” முணுமுணுத்தபடி நாத்தனாரை வேலை ஏவினாள் சுனந்தா.

தேவயானி தயங்கினாள் ” அண்ணி அந்த சந்திரசேகர் பெரம்பலூரிலேயே இருப்பவர் கிடையாது. இங்கே ஏதோ வேலையாக வந்து தங்கி இருக்கிறாராம் .இன்று விட்டால் பிறகு அவரை பார்க்க முடியாமலேயே போய்விடும் .அதனால் நான் போய் விட்டு வந்து விடுகிறேனே “

” அதுதான் எப்படி போவாய் என்றேன் .பஸ்ஸில் தான் போக வேண்டும். இப்போது பஸ் வரும் நேரமும் கிடையாது .

காலை பஸ் போய் விட்டது.

இனி சாயந்தரம் தான் பஸ் வரும். அந்த நேரத்தில் கிளம்பினால் இங்கே வருவதற்குள்  இருட்டி விடும். அப்படி எல்லாம் உன்னை அனுப்ப முடியாது ” 

அவர்கள் விடுதி அமர்ந்திருக்கும் இடத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை தான் பஸ் வரும். காலை ஒன்று மாலை ஒன்று .இந்த காட்டு பகுதிக்குள் இருப்பவர்கள் அந்த நேரத்தை கவனித்து  பஸ்ஸில் ஏறி பக்கத்து ஊர்களுக்கு

 போய் தங்கள் வேலைகளை முடிப்பார்கள். 




” தேவயானி அக்காவை நான் கூட்டிக்கொண்டு போகிறேன் அக்கா ” என்றபடி வந்தாள்  மருதாணி .அவள் இவ்வளவு நேரமாக இங்கே நடந்த வாக்குவாதங்களை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

” நீயா …நீ எப்படி கூட்டி போவாய் ? ” 

“நான் பள்ளிக்கூடம் போகிறேனே …அந்த வேனில் அக்காவையும் கூட்டிக்கொண்டு போகிறேன் ”  என்று சொன்ன மருதாணி யூனிபார்ம் சுடிதார் அணிந்து தோளில் பள்ளிக்கூட பையுடன் இருந்தாள்.

” இது நல்ல யோசனைதான் .நீ மருதாணியுடன் போய்விட்டு வந்து விடும்மா ” முடிவு சொல்லிவிட்டு சுந்தரேசன் எழுந்து போய் விட சுனந்தா எரிச்சலோடு நின்றாள். இனி உளுந்தை அவள் தான் அரைக்கவேண்டும்.

“உன் பள்ளிக்கூட வேன் எங்கே நிற்கும் மருதாணி ? “கேட்டபடி அவளுடன் நடந்தால் தேவயானி.

இது போல் வேனிலோ பஸ்ஸிலோ ஏறுவதாக இருந்தாலும் அந்த நிறுத்தம் வரை அவர்கள் குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து தான் போக வேண்டியது இருக்கும் .” அதோ அந்த இச்சி மரத்திற்கு அடியில் பஸ் வந்து நிற்கும் அக்கா ” மருதாணி தூரத்தில்  அடர்ந்து பரந்து இருந்த மரத்தை காட்டினாள்.

அவர்கள் அந்த மரத்தடிக்கு வந்த பத்து நிமிடத்தில் அங்கே வந்து நின்ற வேனை ஆச்சரியமாக பார்த்தாள் தேவயானி .இது பிள்ளைகளை பள்ளிக்கு கூட்டி செல்லும் வேன் போல் தெரியவில்லையே .சொந்த உபயோகத்திற்கு வைத்திருக்கும் வேன் என அதன் நம்பர் பிளேட் சொல்ல கேள்வியாய் மருதாணியை பார்த்தாள்.

” இது என் ப்ரெண்டோட  வேன் அக்கா .இதில்தான் தினமும் போய்க்கொண்டிருக்கிறேன் ” 

இந்த மலைப்பகுதியில் படிக்கும் குழந்தைகளுக்கு இதுபோல் கிடைத்த வாகனங்களில் ஏறி கல்விக்கூடம்  போவதை தவிர வேறு வழி இருப்பதில்லை .இதோ இப்போது நான் வந்திருக்கிறேனே என்று நினைத்தபடி மருதாணிக்கு தலை அசைத்துக் கொண்டு தேவயானி வேனில் ஏறி உட்கார்ந்தாள்.

பெரம்பலூரில் சசிதரன் சொன்ன ஹோட்டலுக்கு எளிதாக போக முடிந்தது .ஸ்டார் ஹோட்டல் வகையறாவுடையது இல்லை என்றாலும் அந்த ஹோட்டல் பெரியதுதான் .பெரம்பலூர் போன்ற நடுத்தர ஊர்களுக்கு இது போன்ற நடுத்தர ஹோட்டல்களே ஸ்டார் ஹோட்டல்கள்.

கையிலிருந்த முகவரியில் அறை எண்ணை பார்த்துவிட்டு வரவேற்பில் விசாரித்தாள்.”  இரண்டாவது மாடி ” என்று  லிப்ட் இருக்கும் இடத்தை காட்டினாள்  வரவேற்பு பெண் .தேவயானி லிப்டை  நோக்கி நடந்தபோது…

” ஏய் நீயா …? ” என்று ஒரு குரல் அவள் பின்னால் கேட்டது.

யாரோ …யாரையோ… என்று நினைத்து தனது நடையை தொடர்ந்தாள் தேவயானி.

” யேய் ஏஞ்சல் …”  என்று இப்போது அந்த அழைப்பின் அடையாளத்தில் மனதிற்குள் அபாய மணி அடித்தது அவளுக்கு .விருட்டென்று திரும்பிப் பார்க்க அவள் ஊகம் சரிதான் .விரிந்த விழிகளுடன் அவளைப் பார்த்தபடியே அங்கே நின்று கொண்டிருந்தவன் அவனேதான் .அன்று வனத்திற்குள் சந்தித்த எருமைத்தலை  இல்லாத ….ஆனால்  அரக்கன்.

” மகிஷாசுரன் ‘  தானாகவே முணுமுணுத்தன அவள் இதழ்கள் .அவன் வேகமாக அவளருகில் வந்தான் .அவளை நெருங்க நெருங்க அவன் விழிகள் விரிந்து கொண்டே சென்றன .மின்னலை பிரமித்து பார்க்கும் பூமி வாசியின் பார்வை.





" என்னைத் தேடி தானே வந்தாய் ஏஞ்சல் ? " அவனது கேள்வியில் துணுக்குற்றாள் தேவயானி.

 இவனைத் தேடி வந்து இருக்கிறேனா ...? அப்படி என்றால் அந்த சந்திரசேகர் இவன் தானா  ? மிகுந்த ஏமாற்றம் அவளுள் .இவனிடம் கேட்டுப் பெற்று மாவட்டத்தை ஆள படிக்க வேண்டும் எனும் அவசியம் எனக்கு இல்லை தனக்குள் சொல்லிக் கொண்டவள் மறுப்பாய் தலையசைத்தாள்.

அந்த மறுத்தலை அவன் கண்டு கொள்ளவில்லை . " எனக்கு தெரியும் ஏஞ்சல் .நீ திரும்பவும் என்னை தேடி வருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டே தான் இருந்தேன் .ஏனென்றால் என்னை ஒரு தடவை பார்த்த பெண்கள் விடமாட்டார்கள் .திரும்பத் திரும்ப தேடி வருவார்கள் . என் கவர்ச்சி அப்படி " 

பெருமிதமாய் சொன்னபடி ஒற்றை கண் சிமிட்டினான்.

தேவயானி அதிர்ந்தாள். இவன் என்ன  கண்றாவியாக பேசிக் கொண்டிருக்கிறான் ...களத்தில் கொலை புரியும் வாளின் வேகம் அவளுள் வந்தது.

" ஹலோ யார் சார் நீங்க ? உங்களை நான் இதற்கு முன் பார்த்ததே கிடையாது .' அலட்சியத்தை சற்று அதிகமாகவே வார்த்தைகளில் கொட்டினாள்.

அவன் புருவங்கள் உயர்ந்தன . " என்னை நினைவில்லையா உனக்கு ? "  நம்ப முடியாமல் கேட்டான்.

" எங்கேயாவது தெருவில் போகும்போது வரும்போது பார்த்திருப்பேன் . அப்படி கண்ணில் படும் கண்டவர்களை எல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கு கிடையாது " 

தெரு பொறுக்கி நீ என்று சொல்லாமல் சொன்னாள் .கோபப்படுவான் என்று நினைத்ததற்கு மாறாக பளிச்சென்று பற்கள் தெரிய சிரித்தான் அவன் .தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து பற்ற வைத்துக் கொண்டான்.

" என்னை தெரு பொறுக்கி என்கிறாய்  ம் ... பட் ...இன்ட்ரஸ்டிங் "  என்று உதட்டை குவித்து புகையை வெளியே ஊதினான்.

தேவயானிக்கு சை என்றானது .என்ன மனிதன் இவன் ? இவ்வளவு கேவலமாக இவனை பேசிக்கொண்டிருக்கிறேன் சூடு சொரணை இல்லாமல் சிரிக்கிறானே ...வெறுப்பாய் அவனைப் பார்த்தபடி லிப்டினுள் நுழைந்தாள்  .சட்டென்று சிகரெட்டைக் கீழே வீசிவிட்டு அவனும் அவளுடன் சேர்ந்து கொண்டான்.

 




தேவயானிக்கு திக்கென்றது .இவனுடன் தனியாக லிப்டில் செல்லலாமா ? அவள் உடலில் மெலிதான நடுக்கம் பரவியது .

அவளது யோசனை முடிவதற்கு முன்னால் லிப்ட் மூடிக்கொண்டு விட்டது.

" எந்த மாடி ? " 

இவனிடம் ஏன் சொல்ல வேண்டுமாம் ..." எனக்கு நான் போய் கொள்வேன் " வெட்டென  பேசினாள்.

தோள்களை அலட்சியமாய் குலுக்கிக்கொண்டவனின் முகத்தில் புன்னகை மாறவில்லை " சோ நீ நிச்சயமாக என்னைப் பார்க்க வரவில்லை  ? " எதிர்பார்ப்பு தொடுக்கிக் கிடந்த அவனது கேள்வியில் தேவயானியினுள்  ஒரு புரளல் .

" உங்கள் பெயர் சந்திரசேகரா  ? " தனது சந்தேகத்தை கேட்டுவிட்டாள்.

" நீ சந்திரசேகரை பார்க்க வந்திருக்கிறாயா  ? " அவனது பதில் கேள்விக்கு சோர்ந்தாள் . கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டானா இவன் .

" என் பெயர் தெரிய வேண்டுமா ஏன்ஜல் ? " 

எதிர்பார்ப்பு மின்னல் அவன் விழிகளில் வெளிப்படையாக தெரிந்தது.

" தேவை இல்லை. "  கைகளை தன்னோடு சேர்த்து மடக்கி கட்டி தன்னை குறுக்கியபடி லிப்ட்டின் ஓரமாக பதுங்கி கிடந்தவளை சுவாரசியமாக பார்த்தான் அவன்.

" குளிர்கிறதா ஏஞ்சல் ? " அவனது விஷமமான விசாரிப்பில் தேவயானிக்கு வியர்த்தது.

" ஆனாலும் அநியாயம் .இப்படி பட்டென்று  தெரியாது என்று விட்டாயே ? "  உலக மகா வருத்தம் காட்டினான் .

லிப்ட் இரண்டாவது மாடியை தாண்ட தேவயானி கண்களில் லேசாக பதட்டம் .சொல்லாமா என யோசித்து வேண்டாம் தான் இறங்கும் இடம் இவனுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு பேசாமல் இருந்தாள் .லிப்ட் ஐந்தாவது மாடியை  அடைந்து நின்றது. அவன் லிப்டை விட்டு வெளியேறவும் நிம்மதி மூச்சு ஒன்றை  விட்ட தேவயானி இரண்டாவது எண்ணை அழுத்த போனபோது மூடிக்கொண்டிருந்த லிப்டின் நடுவே கை வைத்து நிறுத்தினான் அவன்.

இப்போது என்ன தேவயானி பயத்துடன் அவனைப் பார்க்க...

" கொஞ்சம் மெனக்கெட்டு நன்றாக யோசித்துப் பாரேன் .ஒரு ஓரமாக லேசாகவாது நினைவிற்கு வருகிறேனா நான்  ? " கெஞ்சுதல் போல் கேட்டவனை கோபமாக பார்த்தாள்.

" கையை எடுடா  " குரல் உயர்த்தி அதட்டினாள் .

" ரொம்ப தைரியம் ஏஞ்சல் உனக்கு "இயல்பாய் ஒரு பாராட்டை அவளுக்கு 

அளித்தவன் லிப்டின் பக்கவாட்டில் தன் கையை அழுத்திப் பிடித்து உள்ளிருந்தவளை நோக்கி தன் முகம் நீட்டி   வந்தான்.

 




 தேவயானி அதிர்ந்து பின் வாங்க " மகிசாசுரன்...? "  என்று ஒற்றை விரலால் தன்னைத் தானே சுட்டிக் கேட்டான்.

அய்யய்யோ அப்போது வாய்க்குள் சொன்னதை  இவன் கேட்டு விட்டானா  ? தேவயானி திருதிருவென விழிக்க அவன் புன்னகை மேலும் விரிந்தது.

" சீக்கிரமே உன்னை என்னிடம்  எதிர்பார்க்கிறேன் ஏஞ்சல் " என்று சொல்லி அவளை அதிர வைத்து  விட்டு தன் கையை எடுத்துக் கொண்டான்.  லிஃப்ட் கதவு மூடிக்கொள்ள திதும் திதும்  என குதித்த மனதுடன்

தான் செல்லவேண்டிய மாடி பட்டனை அழுத்தினாள் தேவயானி.

What’s your Reaction?
+1
1
+1
6
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!