karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 20

20

ஏணிக்கும் , பாம்புக்குமாக 
அல்லாடும் வாழ்வில் ,
கொத்துப்பட போகும் போதெல்லாம்
இடை இழுத்து இறுக்கி கொள்கிறாய், 
எனினும் ..
எத்தனை முறை ஏறினாலும்
மறுபுறம் நீ இருப்பதில்லை ,
இப்போதாவது தாயமா…?
மீண்டும் உருட்ட ஆரம்பிக்கிறேன்

 

” ம் …அப்புறம் …? ” டீயுடன் வந்திருந்த பிஸ்கெட்டுகளில் ஒன்றினை எடுத்து கடித்து கொண்டிருந்த வீரேந்தர் நிதானத்திற்கு வந்திருந்தான் .

” காயத்ரி என்று ஏதோ ஒரு பழைய தேய்ந்து போய் முகம் உதிர்ந்த ஒரு பெண்ணின் போட்டோவை காட்டி இதுதான் உன் அம்மா என்றான் கார்த்திக் .திருச்செந்தூர் பக்கம் ஏதோ ஓரு ஊர் என் அம்மாவின் ஊர் என்றான் .என் அப்பாவும் , அம்மாவும் குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் என்றான் .அதனால் சொந்தங்கள் ஒதுக்கியதால் நண்பரான என் அப்பாவும் , அம்மாவும் அவர்களுக்கு ஆதரவளித்ததாக சொன்னான் .திடீரென ஒரு ஆக்ஸிடென்டில் என் அம்மா , அப்பா இறக்க …இவர்கள் என் பொறுப்பேற்று என்னை இங்கே அழைத்து வந்த்தாக சொன்னான் …”

” ம் ..சரிதானே .இதில் நீ கவலைப்பட்டு இங்கே ஓடி வர என்ன இருக்கிறது …? “

முதலில் வாங்கிய அதிர்ச்சிக்கு நேர்மாறாக கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து தோரணையாக வீரேந்தர் கேட்டவிதம் சாத்வகாவிற்கு எரிச்சலை உண்டாக்கியது .என் வாழ்வின் ஆதார விசயத்தை பற்றி விவரித்து கொண்டிருக்கிறேன் .இதில் இவனுக்கு எவ்வளவு அலட்சியம் …?

” அவன் சொன்னது எல்லாமே பொய் ….” அடக்கிய பொறுமையில் சொன்னான் .

” அதெப்படி உனக்கு தெரியும் …? “

” அவன் சொன்ன விதத்தில் உணர்ந்தேன் . அவன் பேசியது எனக்கு  சிறுவயதில் ஒப்புவித்த திருக்குறள்போட்டியை நினைவுபடுத்தியது ….”

ஒரு நிமிடம் புருவங்களை உயர்த்தி யோசித்தவன் பிறகு புரிந்து கடகடவென சிரித்தான் .அவள் உச்சந்தலையில் கையை வைத்து செல்லமாக ஆட்டினான் .

” பேபி …நீ இருக்கிறாயே ….எல்லா சூழ்நிலையிலும் இப்படி காமெடியாக பேச உன்னால்தான் முடியும் …” என்றவன் இன்னமும் ஏதோ நினைவில் மேலும் மலர்ந்து சிரித்தான் .கேள்வியாய் நோக்கியவளிடம் …

” அன்று உன் காலேஜ் புரபசரை படுத்திய பாட்டை சொன்னாயே .அதை நினைத்தேன் …” என்றான் .

” அதை அன்று நீங்கள் கேட்டு கொண்டா இருந்தீர்கள் …? நான் உங்கள் காதில் அன்று பஞ்சு வைத்துள்ளீர்களோ என்று …” இழுத்தவள் அவன் முறைக்கவும் …

” அட குளிக்கும்போது நாம் காதில் தண்ணீர் நுழையாமல் இருக்க பஞ்சு வைத்து கொள்வதில்லையா …? அது போல் அன்று காலை வைத்த பஞ்சினை எடுக்காமலேயே வந்துவிட்டீர்கள் .நான் சொன்னது எதுவும் உங்கள் காதிலேயே விழவில்லையென நினைத்தேன் ….”

இப்போது அவள் தலையில் வலிக்காமல் கொட்ட துவங்கினான் .” வாய் …வாய் ….” பீறிட்ட சிரிப்பினூடே செல்லமாக வைதான் .

” அதே போல் பாவம் …இவருக்கு இன்று பல்வலி போல …என நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன்….”

” ஏன்  அப்படி நினைத்தாய் …? ” ரசனையோடு எதிர்பார்ப்பு நிரம்பிய குரலில் கேட்டான் .




” பல்வலி இருந்தால்தானே பேச முடியாது , சிரிக்க முடியாது , கடைவாய் வலியை வெளியே காட்டாமலிருக்க எப்போது பார்த்தாலும் முகத்தை இப்படியே வைத்துக்கொண்டு ரோபோட் போல , இப்படி நடக்கலாம் , திரும்பலாம் ….” என அப்போதெல்லாம் வீரேந்தரின் முகபாவனையை  நடை விரைப்பை இப்போது எழுந்து நின்று செய்து காட்டினாள் .

தலையை குலுக்கி சத்தமாகவே சிரிக்க ஆரம்பித்தான் வீரேந்தர் .” நீ டிவி சீரியல்களிலெல்லாம் நடிக்க போகலாம் பேபி .என்ன அழகாக பாவனை வருகிறது உனக்கு …” விரைப்பாய்  நடந்து கொண்டிருந்தவளை இழுத்து மீண்டும் அமர வைத்தான் .

” இப்போது இயல்பாக இருக்கிறீர்களே …அப்போது ஏன் அப்படி எந்திரமாய் இருந்தீர்கள் …? ” அவன் முகத்தை கூர்ந்தபடி கேட்டாள் .

” அப்போது நான் டியூட்டியில் இருந்தேன் பேபி .அதுவும் உன் தந்தையின் உயிரை காப்பாற்றும் வேலை. அது எவ்வளவு கடினமான சூழ்நிலை தெரியுமா …? அப்போது விளையாட்டுத்தனமாக இருக்க முடியுமா …? “

” நீங்கள் ட்யூட்டியில் ரொம்ப கரெக்ட் என்று எனக்கு தெரியும் .அதனால்தான் உங்களிடம் ஒரு ட்யூட்டியை ஒப்படைக்க வந்தேன்….” சாத்விகாவின் விளையாட்டுத்தனம் மறைந்திருந்த்து .

” என்ன ட்யூட்டி …? ” வீரேந்தரிடமும் கேளிக்கை மறைந்து கூர்மை கூடியிருந்த்து .

” நீங்கள் என் அம்மாவை …அப்பாவை எனக்கு கண்டுபிடித்து தரவேண்டும் …”

” வாட் …? ” முன்பை விட பலமடங்கு அதிர்ச்சி வீரேந்தரை தாக்கியது .

” ஆமாம் …என் அம்மா இங்கேதான் …இந்த டில்லியலோ …இதன் அருகிலுள்ள ஏதோ ஓர் ஊரிலோதான் வாழ்ந்திருக்கிறாள் .அந்த விபரங்கள் எனக்கு வேண்டும் ….”

” இதை யார் உனக்கு சொன்னது …? நீயாக எதையாவது கற்பனை செய்து கொள்வாயா …? “

” கற்பனை இல்லை .பாட்டி சொன்னார்கள் .அண்ணன் சொன்னதை நம்புவது போல் தலையாட்டி அவனை அனுப்பிவிட்டு இரண்டு நாட்கள் யோசித்தேன் .அண்ணன் சொன்ன விசயத்தையே அப்பாவும் , அம்மாவும் வேறு வார்த்தைகளை போட்டுக்கொண்டு , ஜெராக்ஸ் அடித்து கொண்டிருந்தார்கள் …இதனால் என் சந்தேகம் அதிகமானது …பிறகு நானாக மெல்ல பாட்டியை நோண்டினேன்.நிறைய தயக்கத்துடன் பாட்டி சொன்னது ‘, அம்மாவும் , அப்பாவும் டெல்லியிலிருந்து வரும் போது மூன்று மாத குழந்தையாக என்னை தூக்கி வந்தார்கள் என்று ….அப்போது அப்பா அங்கே டிபார்ட்மென்டில் இருந்திருக்கிறார் .மாற்றல் வாங்கிக்கொண்டு சென்னை வந்திருக்கிறார் .பிறகு கோயம்புத்தூர் , திருச்சி , மதுரை இப்போது குன்னூர் .

டெல்லியிலேயே என் அம்மாவுக்கு பிறந்த குழந்தை நானென என் மற்ற உறவினர்களுக்கு கூறப்பட்டிருக்கறது .ஆனால் பாட்டியையும், அத்தையையும் அப்படி நம்ப வைக்க முடியாதில்லையா …? அதனால் அவர்களுக்கு மட்டும் உண்மை சொல்லப்பட்டிருக்கிறது ….”

” எல்லாம் சரியாகத்தானே வருகிறது சாத்விகா .திருச்செந்தூர் எனபது டில்லியாக இருந்திருக்கலாமில்லையா …? மற்ற சம்பவங்கள் எல்லாமே நடந்தவையாக இருக்கலாமில்லையா …? “

” அப்படி ஊரை மாற்றிக் கூற வேண்டிய அவசியம் என்ன வந்த்து …? “

” அது ஏதாவது சிறிய விசயமாக இருக்கலாம் .எனக்கென்னவோ நீ சிறிய விசயத்தை பெரிதாக்குவதாக தோன்றுகிறது ….”

” இல்லை வீரா …என் வாழ்வில் சிறியதாக எதுவும் நடக்கவில்லை .பெரியதாக ஏதோ நடந்திருக்கிறது .என் அப்பா , அம்மா …என் பெற்ற தாயை உத்தமி என்று கூறுகிறார்கள் ்ஆனால் அத்தையும் பாட்டியும் …” என்றவள் நிறுத்தி தழுதழுத்து விட்ட  குரலை வெளிக்காட்டாதிருக்க முயற்சித்தபடி ” என்னை பெற்ற அம்மாவை தவறாக நினைக்கிறார்கள் …பேசுகிறார்கள்.ஏதேதோ …தப்பான வார்த்தைகளை போட்டு …என்னைன்னவோ மாதிரி அசிங்கமாக ….” அழுகையை மறைக்கும் சாத்விகாவின் முயற்சி தோற்று விட ..முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழுகையை மறைத்தாள் .

மெல்ல அவள் தலையை வருடிய வீரேந்தரின் உடல் இறுகியிருந்த்து .” யார் …யாரோ தவறாக பேசுவதால் உன் அம்மா தவறானவராகி விடுவாரா …? அவர் உன் அம்மா பேபி .நிச்சயம் அவர் ஒரு உத்தம் பெண்தான் …” என்றான் .




” நிச்சயமாகத்தான் சொல்கறீர்களா …? “

” நிச்சயமாக .உன் அம்மாவும் உன்னை போல் ஒரு மிக நல்ல பெண்தான் …”

” சரி …அப்போது நாம் அதை நிரூபிக்கவேண்டும் …'”

” யாருக்கு …? “

” என் பாட்டிக்கு ,அத்தை , மாமாவிற்கு …அந்த சுகுமாருக்கு ….”

” அவர்களுக்கு ஏன் …? “

” தப்பான ஒரு தாய்க்கு பிறந்த்தினால் நான் , என் அம்மா , அப்பா எல்லோரும் அவர்கள் குடும்பத்தினரிடம் கை கட்டி , வாய் பொத்தி நின்று சுகுமாரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென நினைக்கிறார்கள் .அது அப்படி அல்ல.என் தாய் உத்தமி  என்று நிரூபித்து  … “

” நிரூபித்து ….? “

” இப்போது என் பின்னால் வாடா ….என்னை கல்யாணம் செய்து கொள்ள …என்று நாய்க்குட்டியாக அந்த சுகுமாரை சொடக்கு போட்டு கூப்பிடுவேன் …” என்று அறிவித்த சாத்விகாவின் குரலில் பழிவாங்கும் தீவிரம் இருந்த்து .

What’s your Reaction?
+1
19
+1
11
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!