pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 4

4

புலி உறுமும் நீல காடுகளில்

அலறி நடுங்குமென் ஆட்டுக்குட்டி இதயம்,

கனத்த மௌனங்களின் பின் மறைந்திருக்கும் கண்ணீர் துளிகள்,

கம்பளி போர்த்தப்பட்டிருக்குமென் 

கரிய வானம் ,

ஓடை பூக்களே ஓடி விடுங்கள்

எருமைத்தலை அரக்கர்கள் 

இப்போதும் இருக்கிறார்கள்…

 

 

 



 

 

” மருதாணி நீ எங்கே பார்த்தாய்  ? “கேட்டபடி மலையேறி கொண்டிருந்தால் தேவயானி.

” நான் பார்க்கவில்லை அக்கா .அந்த மலைக் காட்டில் இருக்குற பொண்ணு ஒன்னு வந்து சொல்லுச்சி. அங்கன மரக்கூட்டங்களுக்கு இடையில ஒரு மரம் இருக்குதாம் ” 

” சரிதான். இன்னும் எவ்வளவு தூரம் போகனும்னு தெரியலையே ” 

” அக்கா அந்த பலாப்பழ பள்ளத்தாக்கிற்கு இடையில் இருக்கிறதா அந்த பொண்ணு சொல்லிச்சு .இதோ  இந்தப் பக்கம்தான் .வாங்க மெல்ல இறங்கி பார்க்கலாம்  ” அவர்கள் அந்த பள்ளத்தாக்கில் இறங்க துவங்கினார்கள்.

புதர்களாக மண்டிக்கிடந்த புல் தரைகளில் நிறைய  கவனமாக கால் வைத்து இறங்க வேண்டி இருந்தது. வழியில் ஆங்காங்கே பலா மரங்கள் பழுத்து கனிந்து பழங்கள் வெடித்து கீழே சிதறிக் கிடந்தன .அந்த இடமே பலாப்பழ வாசனையில் நிரம்பி இருந்தது. இதனால்தான் இந்த பள்ளத்தாக்கிற்கு

பலாப்பழ பள்ளத்தாக்கு என்று அந்தப் பக்கத்து ஜனங்கள் பெயர் வைத்திருந்தனர்.

கீழே சிதறிக் கிடந்த சில பழங்களை எடுத்து தனது பாவாடையில் துடைத்துக் கொண்டு வாயில் போட்டு தின்றபடி நடந்தாள் மருதாணி .” அக்கா உங்களுக்கு  ” என்று சில சுளைகளை தேவயானிக்கும் கொடுத்தாள். கற்கண்டு இனிப்புடன் தொண்டையில் இறங்கியது இயற்கையில் விளைந்த அந்த பலாப்பழ சுளைகள் .




இன்னமும் சிறிது இறங்கியதும் அந்த மரம் அவர்கள் கண்களுக்கு தட்டுப்பட்டது .”மருதாணி அதோ அங்கே பார் ” தேவயானிதான்  முதலில் கண்டுபிடித்து காட்டினாள்.

” அட ஆமாங்கா இந்த மரம் இவ்வளவு நாட்களாக எப்படி நம் கண்ணில் படாமல் இருந்தது ? ஆஹா பழங்களை பார்த்தீர்களா எவ்வளவு பெரிதாக இருக்கிறது ” 

தேவயானியும் அப்போது அந்த பழங்களின் அளவை தான் ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள். அது பப்ளிமாஸ் மரம் .அதில் காய்த்துத் தொங்கிக் கொண்டிருப்பவை பப்ளிமாஸ்  பழங்கள் . ஆரஞ்சு பழம் போன்ற தோற்றத்தை கொண்டிருந்த அது வடிவத்தில் ஆரஞ்சினை ஒத்திருக்கவில்லை .கிட்டத்தட்ட சிறிய அளவு தர்பூசணி பழத்தின் விட்டத்தை ஒத்து மிகப்பெரியதாக இருந்தது.

” ஐ சூப்பர்கா கண்டுபிடித்துவிட்டோம் …கண்டுபிடித்து விட்டோம் ”  மருதாணி தேவயானியின் தோள்களை பிடித்துக்கொண்டு குதித்தாள்.




” ஷ் ,. ஏன் மருதாணி இப்படி கத்துகிறாய் ? சத்தமில்லாமல் வா .பக்கத்தில் போய் மரத்தை பார்க்கலாம் . சிகப்பு கலரா ?வெள்ளை கலரா ?என்று தெரியவில்லை ”  பேசிக்கொண்டே இருவரும் வேகவேகமாக மரத்தை  நெருங்கினர் .அருகில் செல்லச் செல்ல அவர்களுடைய நடையின் வேகம் குறைந்தது. நிறைய தயக்கம் வந்தது .எட்டுக்களாக  நடை மாறி கொஞ்ச தூரத்தில் நின்றே விட்டது.

காரணம் மரத்தின் அடியில் பரவிக்கிடந்த ஒரு இளைஞர் கூட்டம் .அவர்கள் ஐந்து பேர் இருந்தனர். அருவியில் குளித்து விட்டு வந்திருப்பார்கள்  போலும் .இடுப்பில் ஷார்ட்ஸும் மேல் வெற்றுடம்பில் ஒரு துண்டுமாக அமர்ந்திருந்தார்கள் .வெறுமனே அமர்ந்திருக்கவில்லை .அவர்களை சுற்றி நிறைய அசைவ உணவுகளுடன் போதை பானங்கள் பரிமாறப்பட்டு கிடந்தன .தங்களை நோக்கி வந்த இரண்டு பெண்களையும் குடியில் சிவந்த கண்களுடன் பார்த்தனர் அவர்கள்.

” ஹாய் க்யூட்டிஸ் ”  கையசைத்தான் அவர்களில் ஒருவன்.

” கமான்… கமான் …ப்ளீஸ் ஜாய்ன் வித் அஸ்”  இன்னொருவன் இரு கை நீட்டி அவர்களை அழைத்தான்.

மற்றும் இருவர் அவர்களை நோக்கி எழுந்து வரவே துவங்கினர்.

தேவயானியின் மனதிற்குள் அபாய மணி அடிக்கத் துவங்கியது. மருதாணியின் கையை பிடித்து தனக்குப் பின்னால் இழுத்து அவளை  மறைத்து கொண்டு மெல்ல பின்வாங்கி நடக்கத் தொடங்கினாள்.

” நோ …நோ …டோன்ட் கோ ” 

”  வேர் ஆர் யூ கோயிங் டார்லிங் ?  ப்ளீஸ் கம்…? ”  கோரசாக கத்தியபடி இருவர் அவர்களை நெருங்க இன்னமும் உட்கார்ந்திருந்த இரண்டு  பேரும் அவர்களை நோக்கி நடந்து வரத் துவங்கினர் . தேவயானி சட்டென்று திரும்பி மருதாணியின் கைகளை பற்றிக்கொண்டு ஓடத் துவங்கினாள்.

ஆனால் அந்த மலை ஏற்றத்தில் சிறுமியும் மென் பெண்ணுமான அவர்களால் எவ்வளவு தூரம் போக முடியும் ? இரண்டாவது நிமிடமே அந்த நான்கு பேர்களால்  இருவரும் சுற்றி வளைக்கப்பட்டனர்.

” கமான்… கமான்…”  போதையில் குழறியபடி இருவர்  அருகே நெருங்க 

அதில் ஒருவன் தன் ஷார்ட்சுக்குள் கைவிட்டு கொத்தாக ரூபாய் தாள்களை எடுத்து  காண்பித்தான் .

”  நிறைய… நிறைய… தருகிறோம் .வாங்க… வாங்க…”  கத்தியபடி அந்தப் பணத்தை அவர்கள் இருவர் மீதும் தூக்கி எறிய அந்த ரூபாய் தாள்கள் மழைபோல் அவர்கள் மேல் பொழிந்தன.




அருவருப்பில் உடல் சுருங்கிய தேவயானி மருதாணியை ஆதரவாக இழுத்து அணைத்துக் கொண்டு

” வேண்டாம் எங்களை விட்டு விடுங்கள் ” கத்தலாக சொன்னாள் .

” விடக் கூடிய நிலையில் நீ இல்லை பெண்ணே ” குழறலாய் பேசியபடி அவள் அருகே வந்து நின்றவன் பேராசை மின்னும் கண்களுடன் அவளை அளந்தான்.

” டேய் மச்சான்  பாருங்கடா இவளை .எவ்வளவு அழகு ?  அப்படியே தேவதை போல் இருக்கிறாள்டா ”   ஒரு வித  ஒருவித வெறியோடு கத்தினான் .

‘ எங்கே பார்க்கலாம் …” மற்றவர்களும்  கோணலான சிரிப்பு ஒன்றுடன்  அவர்களை நெருங்க துவங்க தேவயானி இப்போது தனது இடுப்பில் பாதுகாப்பிற்கு என எப்போதும் சொருகி வைத்திருக்கும் சிறிய கத்தியை கையில் எடுத்தாள். தன்னை சுற்றி நின்றிருந்த  நால்வர் முன்பும் கத்தியை அசைத்துக்  காட்டினாள் .

”  குத்தி விடுவேன். தள்ளிப் போங்க ” மிரட்டினாள் .




” ஏய்… நிறுத்து ”   இவ்வளவு நேரமாக அங்கே மரத்திற்கு அடியில் இருந்த ஒரு சின்ன பாறையின் மேல் அமர்ந்துகொண்டு இங்கே நடப்பதை வேடிக்கை பார்த்தபடி பாட்டிலை  வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டிருந்த ஐந்தாவது நபர் கத்தியபடி எழுந்து வந்தான்.

” சினிமாவில் காட்டுவது போல் கத்தியை எல்லாம் தூக்குகிறாய் ? ” வியப்பாய் கேட்டான்.

” என்மேல் யார் கைவைத்தாலும் அவர்களை குத்தி விடுவேன் ”  உறுதி தெறித்தது தேவயானியின் குரலில்.

.

கொஞ்சம் பயத்துடன் மற்ற நால்வரும்  நகராமல் அப்படியே  நிற்க அந்த ஐந்தாவது நபர் மட்டும் மெல்லிய புன்னகையோடு அவள் அருகில் நெருங்கினான். தவறாமல் நிமிடத்திற்கு ஒரு முறை கையில் இருந்த பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கொண்டான்.

அவன் கிட்டே வந்ததும் நேரடியாக கழுத்தில் ஒரு சீவு …முடிவு செய்து கொண்ட தேவயானி கத்தியை அதற்கு வசதியாக திருப்பி  பிடித்துக் கொண்டாள்.

அவன் இப்போது அவளுக்கு மிக அருகே வந்து விட்டான். ”  வாவ் …” அவ்வளவு அருகே தேவயானியை பார்த்ததும் அவன் வாய் திறந்து மூடியது .கண்கள் பிரமிப்பாய் விரிந்தன . ” ஏஞ்சல் …” முணுமுணுத்தன அவனது உதடுகள் .கண்கள் அவள் முகத்தை விட்டு இம்மியும் நகராமல் இமை தட்டாமல் நின்றன.

நொடியில் அவனது பிரமிப்பை உணர்ந்து கொண்ட தேவயானி தனது பாதுகாப்பற்ற நிலையில்  உள்ளே நடுங்கினாலும் வெளியே அதை காட்டிக்கொள்ளாமல் கத்தியை இறுகப் பிடித்தபடி நின்றாள் .அவன்  ஏதோ வசிய்த்துக்கு உட்பட்டவன் போல அவளை நெருங்கி அவள் முகம் நோக்கி தன் கையை உயர்த்தினான்.




தன் கன்னம் தொடும் உத்தேசத்துடன் வந்த அவன் கையை உணர்ந்த தேவயானி வினாடியும் தாமதிக்கவில்லை.  சட்டென தன் கையை வீசினாள் .வாயு வேகத்தில் பயணித்த கை கடைசி நொடியில்  குறி தப்பி அவனது கழுத்தை  விட்டு அவன் வெற்று தோளில் ஆழமான ஒரு கீறலை உண்டாக்கியது.

” ஏய் ..” அவளது வேகத்தை பார்த்த அவனது கண்களில் வியப்பு இருந்தது . அட என்ற பாராட்டும் கூட தெரிந்தாற் போலிருந்தது .கடகடவென ரத்தம் வடிய துவங்கிய தனது தோளை  துண்டினால் அழுத்தி மூடியவன் ” ஏய் ஏஞ்சல் ,பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிட வேண்டியதுதானே  …எதற்கு இந்த வன்முறை ?”  என்றான்.

தேவயானி அவனுக்கு பதில் சொல்லவில்லை. இப்போது கத்தியை மீண்டும் வாகாக பிடித்து அவனது கழுத்துக்கு குறி வைத்தாள். ஆனால் இப்போதும் அவளது குறி தப்பத்தான் செய்தது .காற்றில் வீசிய அவள் கை அப்படியே அந்தரத்தில் பற்றி நிறுத்தப்பட்டது.

” பேசிக்கொண்டிருக்கும் போதே இப்படி ஆயுதத்தை நீட்டுகிறாயே … இது நியாயமா  ? ” நியாயம் பேசியவனின் கையில் சிக்கிக் கொண்டிருந்த தனது கையை விடுவிக்க முடியாமல் திணறினாள் தேவயானி. தனது  தோழனின்  கைககளில்  அவளது கையும் ஆயுதமும் சிக்கிக் கொண்டதை அறிந்த மற்றவர்கள் இப்போது தைரியமாக அவளருகே நெருங்கி வந்தனர்.

” டேய் மச்சான் முதல்ல அந்த கத்தியை பிடுங்கி போடுடா. அதற்குப் பிறகு இவளை கவனித்துக் கொள்ளலாம் ” வேகத்துடன் அருகில் நெருங்கி வந்தவனை அப்படியே தேவயானியின் உயர்த்தி பிடித்த கையினாலேயே முகத்தில் அறைந்து தள்ளினான் அவன்.

” நான் பேசிக்கொண்டு  இருக்கிறேன் தானே ?   உனக்கு என்னடா அவசரம் ?/அந்தப்பக்கம் தள்ளிப் போ ”  அவனது கத்தலில் மற்ற நால்வருமே மெள்ள பின்வாங்கினார்கள்.

” இந்த சிறிய கத்தியை நம்பி இப்படி காட்டுப்பகுதிக்குள் வரலாமா ஏஞ்சல்  ? அவன் நிதானமாக இன்னமும் அவளுடன் விசாரணை நடத்திக் கொண்டிருந்தான் .அவனது தோள் காயத்தில் கசிந்த ரத்தம் பொத்திய துண்டையும் அவன் கையையும் தாண்டி கீழே வழியத் துவங்கியது.

” இது போன்ற தனிமையான இடங்களிலெல்லாம் எங்களை போன்ற கெட்ட பையன்கள் இருப்பார்கள் .உன்னை போல் கை தொட்டதற்கே கத்தி எடுத்துக் கொள்ளும் தேவதைகளெல்லாம் இங்கே வரலாமா ? ” அவனது பார்வை இன்னமும் ரசனையுடன் அவள் முகத்தை தொட்டு தடவிக் கொண்டு இருந்தது.

” அரக்கர்கள் …” வெறுப்பாக முணுமுணுத்தாள் தேவயானி .

போதை நிரம்பி லேசாக குரல் குழறிய அந்த நிலையிலும் அவளது மெல்லிய முணுமுணுப்பை தலை சாய்த்து கேட்டு விட்டவன் ” ஆ…யெஸ் .மகிஷாசுரன்கள் ….” என்று  போதை வழிய சிரித்தவன் தன் தலையை தடவிப் பார்த்து ” கொம்பு இருக்கிறதா ? ” தலை குனிந்து காட்டி அவளிடமே அபிப்ராயம் கேட்டான் .

ஏற்கெனவே  அவள்  கை மணிக்கட்டை தொட்டுக் கொண்டிருந்த அவனது கை கம்பளி பூச்சிகளை உடலெங்கும் ஓடவிட்டுக் கொண்டிருக்க…இப்போதைய அவனது அபிப்ராய அறிதல் வேறு தேவயானியை  கொதிக்க வைத்தது.அவன் தலை குனிந்து நின்ற நிலையை பயன்படுத்தி 

 தேவயானி தன்  கையை வளைத்து திருப்பி அதில் வைத்திருந்த கத்தியால் அவன் கையை கீறி விட முனைந்தாள்.




” ஆஹா …நோ ஏஞ்சல்  ” ராகம் போல் இழுத்து பேசியபடி அவள் மணிக்கட்டில் தனது கை அழுத்தத்தை அவன் அதிகரிக்க தேவயானியின் நரம்புகள் நசுக்கப்பட அனிச்சையாக அவளது கைவிரல்கள் விரிந்து கொண்டன. கத்தி கீழே விழுந்து  காட்டு சருகுகளுக்குள் மறைந்தது. தனது பலமே போய்விட்டதுபோல் பதறினாள் தேவயானி .இப்போது அவன் தன்  கை பிடியை விட்டு விட தேவயானி வேகமாக குனிந்து இலைச் சருகுகளுக்குள்  தனது கத்தியை பரபரவென தேடத் துவங்கினாள்.

அவள் பதட்டத்தை ஒரு நொடி கவனித்தவன்  மெல்ல குனிந்து அவள் தோள்களில் லேசாகத் தட்டினான் . உடனே அவள் கீழே கிடந்த கல் ஒன்றை சரேலென எடுத்து அவன் முகத்தில் ஏறிய தயாராக …சட்டென அவள் தோள் தொட்ட தன் கைகளை எடுத்துக் கொண்டான் . இரு கை உயர்த்தி சரண் காட்டினான் .மெல்லிய புன்னகை இருந்தது அவன் முகத்தில்.




” சரி… சரி உனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை… எனக்கு புரிகிறது.ம் … நீ போகலாம் ” என்றான் .தேவயானி அவன் அனுமதியை நம்பமுடியாமல் பார்த்தாள்.

” டேய் மச்சான் என்னடா சொல்ற  ? ” பதறியபடி ஒருவன் முன் வர முனைய …

” ம் …” என உறுமும் ஒற்றை எழுத்தில் அவனை கையசைத்து நிறுத்தியவன் 

” உண்மைதான் ஏஞ்சல்  நீ போகலாம் ”  புன்னகையோடு தலையசைக்க , வேகமாக எழுந்தவள் மருதாணியின் கைகளை பிடித்து இழுத்தபடி நடந்தாள் 

” பின்னால் திரும்பி பார்க்காதே மருதா ”  திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்த மருதாணியை அதட்டினாள் . 

” அக்கா யாரும் நின்ன இடத்தை விட்டு நகரலை .அந்த அண்ணன் உங்களையே  பாத்துட்டு நிக்கிறாரு ” 




” எவன்டி உனக்கு அண்ணன் .? அவன் ரொம்ப கெட்டவன் . அவனுக்கெல்லாம் உறவு முறை வைக்காதே. அரக்கன் மாதிரி அவன்.எருமைத்தலை வச்சிருப்பானே மகிஷாசூரன் அவன்தான் இவன் .”  பயமுறுத்தி வைத்தாள் .

” ஓ …அரக்கன்னாலும் பாவம்கா .நிறைய ரத்தம் அவருக்கு போகுது ” 

” போகட்டும்.அவன் உடம்பில் இருக்கிற கெட்ட ரத்தமெல்லாம் போகட்டும் ” வன்ம்மாய் பேசினாள் தேவயானி.

மலைமேட்டில் முடிந்த அளவு வேகத்தில்  இருவரும் ஏறி விரைவிலேயே அவர்கள் பார்வையிலிருந்து மறைந்தனர் .

What’s your Reaction?
+1
0
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!