pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 2

2

புற்கள் மேல் முளைத்துள்ள பனித்துளிக்கு 

வைரத்தின் நிறம் ,

கையள்ளிய பிறகுதான் தெரிந்தது

அதிலுன் இதழ்களை …

தனது வீட்டை நெருங்க நெருங்க வீட்டின் பின்புறம் அமைந்துள்ள சமையலறை புகைப்போக்கியிலிருந்து நீராவியாய் புகை மேலே எழும்புவதை பார்த்த தேவயானி தனது நடையை விரைவுபடுத்தினாள் . அம்மா எழுந்து விட்டார்கள் போலவே… அம்மாவிற்கு உதவும் அவசரம் அவளுக்கு வந்திருந்தது.




முன் வாசலை தவிர்த்து வீட்டின் பின் வாசலை அடைந்தவள் மெல்ல பின் வாசல் கதவை தட்டினாள். பழங்கால தாழ்பாள் பலத்த ஓசை எழுப்ப கதவைத்திறந்த சொர்ணம் ” காலங்கார்த்தாலே எங்கே போனாய் ?தேவா ? ”  அவசர குரலில் கேட்டாள் . கேள்வியின் முடிவில் அவளது பார்வை மகளிலிருந்து அடுப்பிற்கு தாவிவிட்டது.

“இங்கே போனேன் அம்மா ”  தன் கையிலிருந்த மூலிகை சேகரிப்புகளை உயர்த்திக் காட்டிய தேவயானி பின் வாசல் அருகே இருந்த தாழ்வான பரணில் அவற்றை பத்திரப்படுத்திவிட்டு வேகமாக உள்ளே நுழைந்தாள்.”  என்ன வேலை இருக்கிறது அம்மா ? “கைகால்களை கழுவிக்கொண்டு சமையலுக்குள்  நுழைய ஆயத்தமானாள்.

” இந்த வெங்காயத்தை வெட்டு …அந்த தேங்காயை அரை… இந்த உளுந்தை ஆட்டு…”  என மகளுக்கு சமையல் ஏவல்களை சொர்ணம் சொல்லிக் கொண்டிருந்தபோது சுனந்தா உள்ளே வந்தாள்.

” தேவயானி மகாராணி காலையிலேயே என்ன வேலைக்கு போனீர்களா ? ” குத்தலாக கேட்டாள்

” கொஞ்சம் மூலிகை எடுத்து வர போனேன் அண்ணி ” மெல்லிய குரலில் சொன்னாள்.

” நேற்று மாலையே புதிதாக இரண்டு அறைகளுக்கு கஸ்டமர்கள் வந்துவிட்டது தெரியும் தானே ? காலையில் சமையல் வேலை கூடுதலாக இருக்கும் என்றும் தெரிந்திருக்கும் தானே ? பிறகும் மூலிகை பறிக்க போனேன் …முகம் கழுவப் போனேன் என்று இந்த வேலைகள் எதற்காக ? ” 

அதிகாலை எழுந்து மூலிகை வனங்களின் இடையே நடந்து சுத்தமான காற்றை குடித்து உணர்ந்து அனுபவித்து வந்திருந்த தேவயானியின் முகம் விடியல் தாமரை போல் சிவப்பாய் மின்னிக்கொண்டிருந்தது .காலை எழுந்ததும் முகம் கழுவி கொள்ளாமல் தேவயானி மூலிகைகள் பறிக்க  சென்றிருப்பாள் என்று சுனந்தாவிற்கு தெரியும் .எப்படி இவள் முகத்தில் இதுபோல் எப்போதும் ஒரு ஜ்வலிப்பு ? சுனந்தாவுக்கு எப்போதும் இந்த விஷயத்தில் தேவயானியின் மேல் எரிச்சல் தான்.




இதுபோல் மினுமினுத்துக் கொண்டிருந்த தன்னை அடுப்படிக்குள் அடைத்து இப்படி சோபை இழக்க செய்து விட்டார்கள் என்ற மனக்குறை சுனந்தாவிற்கு தேவயானி குடும்பத்தினர் மேல் எப்போதும் உண்டு .இப்போதும் அந்த எரிச்சல் வார்த்தைகளில் வெளிப்பட்டது. முன்பே இவற்றிற்கெல்லாம் பழகிப் போயிருந்த தேவயானி அவளது வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் உளுந்தை அலசி கல் உரலில் போட்டு ஆட்ட ஆரம்பித்தாள்.




” காய்ச்சல் கஞ்சி கொஞ்சம் ரெடி பண்ணி விடுங்கள் அத்தை ” மாமியாரிடம் சொல்லிவிட்டு அவிந்து கொண்டிருந்த இட்லிகளை பதம் பார்த்து எடுத்து துணிகளை  அகற்றி ஹாட்பாக்ஸில் தட்டலானாள் சுனந்தா.

” நான்காவது குடிலுக்கா அண்ணி ?  நான் அவருக்காக அமிர்தம் கொண்டுவந்திருக்கிறேன் ”  உரலை ஆட்டியபடி சொன்னாள் தேவயானி.

” அவருக்குத்தான். ராத்திரி முழுவதும் காய்ச்சல் எழுந்திருக்க முடியவில்லையாம் .கஞ்சியை கொடுத்து முடித்ததும் உன் மூலிகையை தயார் பண்ணிக் கொண்டு போய்க் கொடு ” சுனந்தா பரபரப்பாக அடுப்படியில் இயங்கத் தொடங்கினாள் .சொர்ணம் அவளுக்கு உதவ தொடங்க அடுத்த அரை மணியில் மருதாணியும் அவளது தாய் பஞ்சவர்ணமும் வந்துவிட வேலை கொஞ்சம் எளிதானது்

அந்தந்த குடிலினர் கேட்டிருந்த உணவுவகைகளை அண்ணன் சுந்தரேசன் எழுதி வைத்திருந்த நோட்பேடை பார்த்து அம்மாவும் அண்ணியும் தயார் செய்து வைத்திருந்தவற்றை கவனமாக தனித்தனியாக பேக் செய்தாள் தேவயானி. குட்டி குட்டி மண் பாண்டங்கள் மண் கலயங்கள் போன்றவற்றில் வைக்கப்பட்ட உணவு வகைகள் மருதாணி பஞ்சவர்ணத்தால்  அந்தந்த குடிலுக்கு கொண்டு போகப்பட்டன. 




” இன்று சாம்பார் சூப்பர் அண்ணி. வாசம் நம் ரிசார்ட்  வாசல் வரை வருகிறது “தேவயானி சுனந்தாவை பாராட்டினாள் .அதில் பிழை ஏதும் கிடையாது .சுனந்தா சமையல் கலையில் கை தேர்ந்தவள் .இயல்பான சமையல் பக்குவத்தோடு ஏட்டு படிப்பாக கேட்டரிங்கும் கற்று தேர்ந்தவள் .அவளுடைய நவீன சமையல் மற்றும் தனது தாய் சொர்ணத்தின் பாரம்பரிய சமையல் இவற்றை நம்பித்தான் அவர்களது அந்த ரிசார்ட்டின் சமையல் பொறுப்பை தன்வசமே வைத்திருந்தான் சுந்தரேசன்.

அது பச்சைமலையில் இருக்கும் ரிசார்ட் .பச்சைமலை என்பது திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் போகும் வழியில் கொப்பம்பட்டி அருகே அமைந்துள்ள ஒரு மலை வாசஸ்தலமாகும் .இன்னமும் அதிக மக்களைச் சென்றடையாத இந்த இடம் தனது  கன்னித் தன்மையை இழக்காமல் பெயருக்கேற்றபடி பசுமை பூத்துக் குலுங்க பச்சை பசேலென காணப்படுகிறது.

சங்கரன் –  சொர்ணம் தம்பதியர்க்கு பச்சைமலையில் சில ஏக்கர் நிலம் இருப்பது மிகத் தாமதமாகவே அவர்களுக்கு தெரிய வந்தது .இந்த இடத்திற்கு வந்து பார்த்த சங்கரன் சுற்றுலா ஸ்தலமான இங்கே இயற்கையோடு இணைந்த வகையில் ஒரு ரிசார்ட்டை ஆரம்பித்தால் வருமானம் அதிக அளவில் இருக்கும் என உணர்ந்து தனது கையில் சேர்த்து வைத்திருந்த சேமிப்புகள் முழுவதையும் போட்டு இந்த ரிசார்ட்டை தொடங்கினார்.

நகைகள் சேமிப்புகள் எல்லாம் கரைந்து மேலே கடனும் சேர்ந்து அதன் பிறகுதான் இந்த ரிசார்ட் உருவாகி நின்றது. இதனை ஆரம்பித்த புதிதில் அதிக சுற்றுலா பயணிகள் வருகையற்ற  இந்த இடத்தில் செலவழித்த பணத்திற்கு ஏற்ற வருமானம் கிடைக்கவில்லை .தவறான முடிவு எடுத்து விட்டோமோ என்ற  ஆழ் மன கவலையிலேயே் சங்கரனது வாழ்நாள் குறுகிக் கொண்டதோ என்னவோ …

அப்போதுதான் படிப்பை முடித்த சுந்தரேசன் அப்பாவின் கடனை அடைப்பதற்காகவேனும்  இந்த தொழிலை தொடர்ந்து நடத்தும் கட்டாயத்தில் இருந்தான் .எனவே கிடைத்த மாதச் சம்பள வேலையை உதறிவிட்டு குடும்பத்தோடு இங்கேயே வந்து தங்கினான். எங்கெங்கே எப்படி செலவுகளை குறைக்க வேண்டும் என கணக்கிட்டு இன்னமும் கொஞ்சம் அதிகமாக மெனக்கெட்டு அதிக சிறப்பாக இந்த ரிசார்ட்டை உருவாக்கினான்.

வாட்ஸ்அப்  , பேஸ்புக் , ட்விட்டர் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் உதவியுடன் இந்த ரிசார்ட்டின் விவரங்களை அவன் வெளியுலகுக்கு தெரியப்படுத்த பயணிகள் தொடர்ந்து வரத்துவங்கினர் .இது சீசன் பிசினஸ் போல… கோடை வாசஸ்தலங்கள் கோடையில் மட்டும் தான் வருமானத்தைக் கொடுக்கும் .இவர்களது பசுமை குடிலும்  அதேபோலத்தான். கோடை காலமான நான்கு மாதங்கள் மிக அதிக அளவில் வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் பசுமை குடில் வருடத்தின் மற்ற மாதங்கள் வெறிச்சோடிப்போய் வெற்றாய் கிடக்கும்.




எனவே வருமானம் வரும் 4 முதல் 6  ஆறு மாதங்களை அள்ளிக்கொள்ள துடித்துக் கொண்டிருப்பார்கள் சுந்தரேசனும் சுனந்தாவும் .இவர்களது பசுமை குடில் மிக அதிக அளவில் பார்வையாளர்களை கவருவதற்கு இன்னுமொர  முக்கிய அம்சமும் உண்டு .அது இவர்களது ரிசார்ட்டின் பின்புறம் இருக்கும் சிறிய அருவி ஒன்று.

மங்களம் அருவி, கோரையாறு அருவி, மயிலூற்று அருவி என பச்சைமலையில் மூன்று வகையான அருவிகள் இருந்தாலும் இவர்களது பசுமைக்குடில் ரிசார்ட் இன் பின்புறம் ஒரு சிறிய அருவியை சுந்தரேசன் வடிவமைத்திருந்தான் . இவர்களது இடத்திற்கு பின்னால் நீரோடையாக ஓடிக் கொண்டிருந்த நீரை சங்கரன் ஆற்றோட்டம் போல் ஓட  விட்டிருந்தார் .சுந்தரேசன் அதனையே பாறைகளைச் செதுக்கி சற்றே உயரத்தில் இருந்து கீழே விழுந்து போவது போல அருவியாக மாற்றி அமைத்தான். கூடவே பயணிகள் குளிப்பதற்கு வசதியாக பாறைகளை மேடைகளாக அமைத்தான்.

 

தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகிலேயே ஒரு அருவிக்குளியல் .அதுவும் கசகசவென்று ஜன சந்தடி இன்றி கிடைக்கிறதென்றால் அதனை யார் தவிர்ப்பார்கள் ? பசுமை அருவி என அவர்கள் பெயரிட்டிருந்த அந்த அருவி தான் இவர்களது பசுமை குடிலுக்கு தேடித்தேடி வாடிக்கையாளர்களை வர வைத்தது.

 

உயர் மட்டத்து ஆட்கள் தொடர்ந்து வர சுந்தரேசனின் ரிசார்ட்டின் மதிப்பு உயர்ந்தது. ஹோட்டல்களோ வேறு விடுதிகளோ இல்லாத அந்த காட்டுப்பகுதியில் உணவு சமைக்க  வேறு வசதிகள் இல்லாததால் ஆரம்பத்தில் சொர்ணம் தான் சமைத்து கொடுத்து கொண்டிருந்தாள் .அப்போது வந்த சொற்ப வாடிக்கையாளர்களுக்கு அது சரியாகவே போனது. ஆனால் இப்போது அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வர அவர்களுக்கென தனியான சமையல் எனும் வகையில் செலவு செய்ய விரும்பாத சுந்தரேசன் அதனை தனது குடும்பத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டான்.

 




இதற்கெனவே கேட்டரிங் முடித்திருந்த சுனந்தாவை தேர்ந்தெடுத்து மணந்து கொண்டான் .தாய் தங்கை மனைவி மற்றும் தம்பி என அனைவரின் துணையுடன் தனது ரிசார்ட்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தான் .பசுமைகுடிலின்  வெற்றிக்கு  இங்கே கிடைக்கும் இவர்களது பக்குவமான வீட்டுச் சாப்பாடும்  மற்றொரு காரணம்.

 

” இன்று சுதாகர் ஐயா வீட்டில் இருந்து வருவதாக தகவல் வந்தது சுந்தர் .மனோரஞ்சிதம் மேடம்  என்னிடம் போனில் பேசினார்கள் ” வரப்போகும் வாடிக்கையாளர் ஒருவரைப்பற்றிய தகவலை மகனிடம் சொன்னாள் சொர்ணம்.

 

” உங்கள் மனோரஞ்சிதம் மேடம்  மட்டும் எப்போதும் உங்களிடமே அறை புக் செய்கிறார்களே ? ” குறைபாடு போல் சிரித்தபடி சொன்னான் சுந்தரேசன்.

 




” அவர்கள் 15 வருடங்களாக உனது அப்பா காலத்தில் இருந்தே நமது விடுதியின் வாடிக்கையாளர்கள் . சுதாகர் சாரும்  உன்னுடைய அப்பாவும் நண்பர்கள் போலத்தான் பழகிவந்தனர். இப்போது அவர்  இறந்த பிறகும் மனோரஞ்சிதம் மேடமும்  அவர்களது குடும்பமும் தொடர்ந்து நமது ரிசார்ட்டையே தேடி வருகின்றனர் .அவர்கள் இங்கே வருவது தனிமையை தேடி மட்டுமல்ல .நமது குடும்பத்துடனான நட்பை விட்டு விடாமல் இருப்பதற்காகவும் தான் ”  பெருமையாக சொன்னாள் சொர்ணம் .




 

” சரிதானம்மா .அவர்கள் உங்களுடைய அந்தக்கால வாடிக்கையாளர்கள் .உங்களுக்காகவே இங்கே வருகிறார்கள் உங்கள் உடன்பிறவா அண்ணன்  போன்றவரின் குடும்பத்தை வரவேற்க நீங்கள் தயாராகுங்கள் ” போலி பவ்யத்துடன் அம்மாவை கிண்டல் செய்தான் சுந்தரேசன்.

 

அம்மா அண்ணனின் கிண்டல் பேச்சை கேட்டு புன்னகைத்தபடி அமிர்த கொடி தண்டுகளை பொடித்து கொதிக்கும் நீரில் போட்டு கசாயம் வடிக்கத் துவங்கினாள தேவயானி.

 

 

 

 

What’s your Reaction?
+1
1
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!