Serial Stories Uncategorized

நந்தனின் மீரா-4

4

உண்மை விளம்புவதாக
சொல்லி சொல்லி
உன்னை விழுங்கி
என்னைத் துப்புகிறாய் ,
உறவுச்சிக்கலில் நானிருக்க
உலக உருண்டையை
அலசிக்கொண்டிருக்கிறாய் ,

நந்தகுமாரின் அந்நியத்தன்மையை உணர்த்துவதற்காகவே இப்படி பதில் சொல்லிவிட்டு நகர்ந்தாள் மீரா .அதனை அவனும் உணர்ந்து கொண்டானென்பதை முதுகை துளைத்த அவன் பார்வை அவளுக்கு கூறியது .அது எப்படி முதுகில் பதியும் அவனது பார்வையை கூட என்னால் உணர முடிகிறது ..மனதிற்குள் வியந்தபடி வீட்டின் பின்பக்கம் வந்தாள் .

பின்புறம் ஒரு சிறிய எல். இ.டி லைட் வெளிச்சத்தில் நிறைய இருளோடு இருந்தது .வீட்டினுள்ளிருந்த வெக்கை வெளியே வந்ததும் வேப்ப மர காற்றில் மாறிவிட , ஆழ்ந்து அந்த காற்றை நாசிக்குள் இழுத்துக் கொண்டாள் .

” அண்ணி அசத்திட்டீங்க …” மாளவிகா கையில் பால் டப்பாவோடு வந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள் . மீரா  புன்னகைத்தாள் .

” அண்ணனை விட்டுடாதீங்க .இதே போல் இறுக்கி பிடித்து கொள்ளுங்கள் …” மீராவை கூர்ந்து பார்த்தபடி கூறினாள் .

” அப்படி பிடிபடுகிறவரா உன் அண்ணன் …? ” நாத்தனாரின் மறைமுக பேச்சுக்கு ஒரு மறைமுக கேள்வி கேட்டாள் .

” ஏன் பிடிபடாமல் …? அதெல்லாம் மாட்டுவார். …நீங்கள் மட்டும் வலையை கொஞ்சம் ஸ்ட்ராங்காக போட்டு வையுங்கள் …” என கண்களை சிமிட்டி விட்டு உள்ளே சென்றாள் அவள் .

இரண்டாவது இரவை எதிர் நோக்கியிருக்கும் அண்ணன் மனைவிக்கான நாத்தனாரின் சாதாரண கேலியாக இதனை எடுத்துக் கொள்ள முடியவில்லை மீராவால்  .இதில் ஏதோ அர்த்தம் இருப்பது போல் தெரிந்தது .

எவ்வளவு அடர்த்தியாக வலை விரித்தாலும் ,காற்று அதில் சிறைபடுமா …? இவன் காற்றைப் போல் அல்லவா பரவுகிறான் …வேப்ப மரத்தின் முன்புறமிருந்த நீளமான கருங்கல்லின் மேல் அமர்ந்து கொண்டாள் மீரா .அந்த இடம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது .ஏனோ மன இறுக்கங்களெல்லாம் அங்கே வந்ததும் தளர்வதாக உணர்ந்தாள் .

பாட்டி வீட்டினுள் குருநாதனுடன் , சுந்தரியும் , பிரவீணாவும் இருப்பது தெரிந்தது .மூவரும் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர் .சட்னி அரைத்துக் கொண்டிருந்த அத்தை எப்போது இங்கு வந்தார்கள் .நான் கவனிக்கவில்லையே …அவர்களை பார்த்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தாள் மீரா.

அப்போது வீட்டின் பின் வாசலில் நந்தகுமாரன் வந்து நின்றான் .அவன் பார்வை பாட்டி வீட்டை நோக்கி இருந்தது .மீரா இருக்குமிடம் இருளாக இருந்ததால் அவளை நந்தகுமார் கவனிக்கவில்லை .பாட்டி வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான் .

அவனும் அங்கே போனதும் ஒரு தீவிர விவாதம் அங்கே நடைபெறுவது தெரிந்தது .சத்தம் கேட்காமல் செய்கைகளை மட்டுமே பார்க்க முடிவது ஏதோ நிழற்படம் பார்ப்பது போல் மீராவுக்கு தோன்றியது .ஏனோ அவர்களின் விவாதம் அவளுக்கு வயிற்றினுள் அமிலம் சுரக்க செய்தது .ஏனோ அது தன்னைப் பற்றியதுதான் என தோன்றியது அவளுக்கு .

வாதத்தின் பெரும் பகுதியை நந்தகுமாரே ஆக்ரமித்திருந்தான் . கைகளை ஆட்டி எதையோ தீவிரமாக மறுத்துக் கொண்டிருந்தான் .ஒரு வேளை …அது என்னையோ …? மீராவின் மனம் தடதடத்தது .சே …அப்படியெல்லாம் இருக்காது ..வேறு ஏதோ பிரச்சினை .தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் .

உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்த குருநாதன் , சுந்தரியையும் , நந்தகுமாரையும் நோக்கி ஆட்காட்டி விரலை நீட்ட எச்சரிக்கை போல் ஏதோ கூறிவிட்டு , விடுவிடுவென வீட்டினுள் சென்று விட்டார் .

பிரவீணா சுந்தரியை சமாதானப் படுத்துவது போல் ஏதோ கூறியபடி , அவளை வீட்டினுள் அழைத்து சென்றாள் .

நந்தகுமார் நின்று பாட்டியிடம் ஏதோ சொல்லிவிட்டு , பாட்டி வீட்டின் கதவை மூடிவிட்டு , மெல்ல வீட்டை நோக்கி நடக்க துவங்கினான் .என்ன பிரச்சினை இவர்களுக்குள் ….? மிக தளர்ந்த நடையுடன் சென்று கொண்டிருந்த கணவனை கவலையாக பார்த்துக் கொண்டிருந்த மீரா திடுக்கிட்டு எழுந்தாள் .

வீட்டினுள் போக நடந்து கொண்டிருந்த நந்தகுமார் திடுமென நினைத்தாற் போல் நின்று , பின் இவள் இருக்கும் திசை நோக்கி வரத் துவங்கினான் .

என்னை பார்த்து விட்டாரா …? இல்லையே இங்கே இருட்டாக இருக்கிறதே …நான் தெரிய மாட்டேனே …நினைத்தபடி மெல்ல பின்னால் நகர்ந்து , மரத்தின் பின்னால் போய் நின்று கொண்டாள் .நேராக அவளிருக்கும் இடத்திற்கே வந்த நந்தகுமார் , அந்த கருங்கல்லின் மேல் அமர்ந்து கொண்டான் .

கைகளை பின்னால் ஊன்றி , கால்களை நீட்டி அமர்ந்து அண்ணாந்து வானத்தை பார்த்தவாறு ஏதோ யோசனையில் ஆழ்ந்து போனான் .ஓ…இவன் என்னைப் போலவே தனிமை வேண்டி இங்கே வந்துள்ளான் போல …




நிலவின் கீற்றொளியில் அண்ணாந்து பார்த்திருந்த அவனது அசையாதோற்றம் , எப்போதோ ஏதோ ஓர் கோவிலில் பார்த்த அரசனின்  சிற்பத்தை நினைவூட்டியது மீராவுக்கு .எடுப்பான அந்த மூக்கும் , நெற்றியில் படர்ந்த சுருள் முடியும் , அடர்ந்த மீசையும் அந்த அரை இருளில் வித்தாயாச தோற்றம் காட்ட ,முகம் தாண்டி இறங்கிய விழிகளில் பட்ட  அவனது விரிந்த தோள்கள் மீராவின் மனதை என்னவோ செய்தது . தன்னை மறந்து அவனால் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தவள் , அவன் திடீரென ஒரு கல்லை எடுத்து கீழே எறிந்தபடி ” சை ” என்க திகைத்தாள் .

மீண்டும் அடுத்ததாக அவன் எறிந்த கல் அவனது கோபத்தை …இயலாமையை சொன்னது .மீராவிற்கு உள்ளத்தில் சொரேலென்றது .யார் மீதுள்ள வெறுப்பை இப்படி காட்டுகிறான் …? தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு , அது நானாக இருக்காது …தனக்கு தானே சமாதானமும் செய்து கொண்டாள் .

அப்போது ” நந்து …” என அழைத்தபடி சுந்தரி வந்தாள் .அங்கே வந்து மகனின் அருகே கல்லில் அமர்ந்து கொண்டாள் .

” இங்கே என்ன செய்கிறாய் …? “

நந்தகுமார் பதில் சொல்லவில்லை .

” மீராவை  பார்த்தாயா …? வீட்டினுள் இருந்தாற் போலில்லை …”

அன்னைக்கு பதில் கூறும் எண்ணம் நந்தகுமாருக்கு இருப்பது போலில்லை .

” நந்து உன் பொண்டாட்டியை பார்த்தாயா என்று கேட்டேன் .” குரலை உயர்த்தி கேட்டாள் .

” ப்ச் …எனக்கு தெரியாதும்மா …” எரிச்சல் கொப்பளித்தது அவன் குரலில் .

” ம் …உள்ளே ரூமினுள் இருக்கிறாளோ என்னவோ …?போ …போய் பாரு …”

” சும்மா இருங்கம்மா .நீங்க போங்க நான் பிறகு வருகிறேன் …”

” தேவையில்லாததை யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாதேப்பா …,” மகனின் தலையை வருடினாள் .

” எதும்மா தேவையில்லாதது .பத்து வருடங்களாக இவள்தான் உன் மனைவி என்று ஒருத்தியை காட்டி வளர்த்து விட்டு , இன்று இன்னொருத்தியை மனைவி என்று கை காட்டுகிறீர்களே …இது என்னம்மா நியாயம் …? “

” தலையெழுத்துப்பா . என் தலையில் எழுதிய துரதிர்ஷ்டம் உன் தலையிலும் எழுதப்பட்டிருக்கிறது .நான் வேறு என்ன சொல்ல …? ” சுந்தரி மிகுந்த வருத்தத்துடன் கூறினாள் .

” உங்கள் இயலாமைக்கு எதையாவது காரணம் காட்டாதீர்கள் அம்மா .உங்களால் முடியவில்லையென்றால் என் பொறுப்பிலாவது எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும் . அதையும் பாட்டியை பேசாதே , அப்பா ஜாக்கிரதை என சொல்லி சொல்லி வளர்த்து …இதோ இப்போது அவர்கள் இருவரும் என் தலையிலேயே கை வைத்துவிட்டனர் ….”

” நான் வேறு என்னப்பா செய்யட்டும் .அப்படி உன் வாயை பொத்தி வளர்த்ததால்தான் உன் அப்பா இப்போது நம் வீட்டு வராண்டாவிலாவது தங்கிக் கொண்டிருக்கிறார் .இல்லையென்றால் எப்போதோ வீட்டை விட்டு போயிருப்பார் .”

” அப்படி கோபித்து கொண்டு போவதானால் போகட்டுமே …” சொல்லி முடிக்கு முன் அவன் வாயை பொத்தியிருந்தாள் சுந்தரி .

” நந்து …” அதட்டினாள் .” நான் இந்த வீட்டில் இருக்கவா …இல்லை போய்விடவா …? “

நந்தகுமார் அமைதியானான் .சிறிது நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர் .

” பத்து வருடங்கள் அம்மா .மிருணாளினியை என் மனைவியாகவே நினைத்து வந்திருக்கிறேன் .திடீரென நேற்று வந்த ஒருத்தியை இனி இவள்தான் உன் வாழ்க்கை என்கிறீர்களே .எனக்குள் இருப்பது இதயம் அம்மா .இரும்பு அல்ல …” குரல் நெகிழ பேசிய நந்தகுமார் அப்படியே தன் தாயின் மடியில் தலை வைத்து சாய்ந்து கொண்டான் .

” என்னப்பா செய்ய ..? மிருணாளினி என் அண்ணன் மகளாக பிறந்து தொலைத்து விட்டாளே …அதனால் தானே உன் அப்பாவிற்கும் , பாட்டிக்கும் அவளை பிடிக்காமல் போய்விட்டது ” சுந்தரி விசும்பியபடி மகனின் தலை கோதினாள் .

” இல்லைம்மா என்னால் இவளுடன் மனம் ஒன்றி வாழ முடியுமென்று தோன்றவில்லை .”

” நந்து நீ மீராவோடு நல்லபடியாக வாழாவிட்டால் , நான்தான் உன்னை ஏதோ சொல்லி வாழவிடாமல் செய்கிறேன் என என் மீது கூசாமல் பலி போடுவார்கள் உன் அப்பாவும் , பாட்டியும் .அவர்களை உனக்கு தெரியுமல்லவா …? “

” எப்படிம்மா …இது வாழ்க்கை அம்மா .நினைத்தபடி மாற்றிக் கொள்ள முடியாதம்மா மனதை …”

” முடியும்பா .உன் பாட்டியும் , அப்பாவும் தேர்ந்தெடுத்தாலும் மீரா அருமையான பெண்ணாக தெரிகிறாள் .நீயே பார்த்தாயல்லவா …?நிச்சயம் உன்னால் அவளுடன் ஒரு நல்ல வாழ்வு வாழ முடியும் “

” ம்ப்ச் …நான் அவளை பார்க்கவில்லை …”




” உஷ் ..நந்து அப்படி சொல்லாதே .அவள் உன் மனைவி .இந்த நிலையிலிருந்து நீ மாறுவாயானால் நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன் …”

” ஏன்மா நீங்களும் சேர்ந்து என்னை வதைக்கிறீர்கள் …? ” அம்மாவின் மடியிலிருந்து எழுந்து கொண்டு  வெறுப்பாக கேட்டான் .

” வதைக்கவில்லையடா .வாழ்ந்து பார் என்று சொல்கிறேன் .நீ எழுந்திரு .வா உள்ளே போகலாம் …” வலுக்கட்டாயமாக மகனை எழுப்பி உள்ளே இழுத்து சென்றாள் சுந்தரி .

அம்மா , மகன் பேசிய அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் தெளிவாக கேட்டுவிட்ட மீரா அளவில்லாத அதிர்ச்சியில் , மின்னல் தாக்கிய பூங்கொடியாக, அந்த மரத்தின் பின்புறம் சரிந்திருந்தாள் .

திருமணம் நிச்சயமான தினத்திலிருந்து புதிராக இருந்த பல விசயங்கள் , இப்போது அவளுக்கு எளிதாக விளங்கியது .

ஆக அவளது மணவாழ்வு , அடுத்தொருத்தியை இப்போது வரை மனதில் சுமந்து திரியும் , இவளை இன்னமும் கண்ணெடுத்தும் பாராத ஒரு ஆணுடன் .இது அவளது பெண்மைக்கு எவ்வளவு பெரிய அவமானம் …? இப்படி ஒரு வாழ்வு அவளுக்கு தேவையா …?

வேண்டாம் எவ்வளவு பெரிய பின்விளைவுகளை கொடுத்தாலும் இந்த வாழ்வு அவளுக்கு வேண்டாம் .பொழுது விடிந்தவுடனேயே தனது அம்மா வீட்டிற்கு சென்று விட வேண்டுமென்று முடிவெடுத்தபடி , அந்த இடத்தை விட்டு எழுந்து வீட்டினுள் சென்றாள் .

இதே முடிவே மனம் முழுவதும் நிறைந்திருக்க , இரவு அறையினுள் நுழைந்ததும் …

” ஒரு வாரமாக திருமண வேலைகள் .அலைச்சல் அதிகம் .அதனால் மிகவும் டய்ர்டாக இருக்கிறது .நான் தூங்க போகிறேன். ” நந்தகுமாரின் முகத்தை பார்க்காமலேயே இதை ஒப்பித்துவிட்டு , ஒரு பாயை எடுத்து தரையில் விரித்தவள் அவனுக்கு முதுகு காட்டியபடி படுத்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
இது போல்தானே நேற்று என்னிடம் பேசி , என்னை அலட்சியப்படுத்தினாய் .இன்று எனது முறை …மனதிற்குள்ளாக அவனுடன் பேசியபடி தூங்க முயற்சித்தாள் .

ஒரு ஐந்து நிமிடம் தயங்கிய பின்பு அறையின் விளக்கு அணைந்தது .பத்து நிமிடங்களில் நந்தகுமாரின் ஆழ்ந்த சுவாசம் கேட்டது .

நல்லவேளை தூங்கிவிட்டாளென்று நிம்மதியாக தூங்குகிறான் பார் …கணவனை பொறுமியபடி , இவ்வளவு நேரம் பயந்து , பயந்து விட்டுக் கொண்டிருந்த மூச்சை சுதந்திரமாக வெளியேற்றியவள் , தனது இந்த நிலைக்காக சத்தமின்றி விசும்ப ஆரம்பித்தாள் .




What’s your Reaction?
+1
22
+1
26
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
1 month ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!