Serial Stories

சதி வளையம்-16

16 கலைடோஸ்கோப் – அரக்கில் கோவிலகம்

தன்யா தொடர்ந்தாள்.

“ஆனால் இப்போ இரண்டு நபர்கள் நம் பிக்சருக்குள்ள நுழைறாங்க. பாலாஜி, டாக்டர் திலீப்.

“இவர்கள் இரண்டு பேர்களின் முக்கியத்துவம் நம் முந்தைய கேள்வியில் இருக்கிறது. அரக்கில் கோவிலகத்து ஏஜண்ட் யார் என்பது. அணிமங்கலத்தைச் சேர்ந்த யாரும் அவ்வாறு செயல்படச் சம்மதிக்க மாட்டார்கள். அப்போ நம் சந்தேக வட்டத்துக்குள் உள்ளவர்கள் – பாலாஜி, டாக்டர் திலீப், அய்யாக்கண்ணு, மேஜர் கமல்.

“முதலில் பாலாஜி. அவன் அரக்கில் கோவிலகத்தின் ஏஜண்ட் என்பதை அவனே ஒப்புக்கொண்டு விட்டான்.”

எல்லோரும் பாலாஜியை முறைத்தார்கள். பாலாஜி வியர்த்து வழிந்தான்.

“இந்த மோதிரத்தை எடுக்க அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்ததாகச் சொன்னான். அதிலே ஒண்ணு இப்போ சேது சொல்வான்.”

சேது தயக்கமாய் எழுந்தான். “ஒரு நாள் ராத்திரி பாஸ்கரய்யா சினிமாவுக்குப் போயிருந்தாங்க. அன்னிக்கு மோதிரம் எங்கியோ கீள விளுந்திருச்சு. அதை ஏமா எடுத்து வச்சிட்டு, எங்கிட்டயும் சொன்னா. மறுநாள் அவர்கிட்டக் கொடுத்துட்டா. அன்னிக்கு ராத்திரி பத்து மணி வாக்கில பாலாஜி சார் வந்தார். பாஸ்கரய்யா ரூமுல ஏதோ தவற விட்டுட்டதாவும், அதை எடுத்துப் போகணும்னும் சொல்லி, கதவைத் திறந்து விடச் சொன்னார். நான் சரின்னு திறந்து விட்டேன். நேரே அய்யா ரூமுக்குப் போய் ரொம்ப நேரம் தேடிட்டு வெளியே போயிட்டார்.”

“அவ்வளவு தானா சேது?” என்று லேசான மிரட்டும் தொனியில் கேட்டாள் தன்யா.

“வந்து, இந்த விஷயம் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி ஆயிரம் ரூபா கொடுத்தார்” என்று திக்கித் திக்கிச் சொன்னான் சேது.

“அன்னிக்கும் மோதிரத்தைத்தானே தேடினே பாலாஜி?” என்று கேட்டாள் தன்யா. பாலாஜி மௌனமாய்த் தலைகவிழ்ந்தான்.

“ஆக, பாலாஜிக்கு அந்த மோதிரத்தை எடுக்க வலுவான காரணம் இருக்கு…” என்று தன்யா சொல்லிக் கொண்டு வரும்போதே பத்மா இடைவெட்டினாள்.

“ஒரு நிமிஷம் தன்யா. அய்யாக்கண்ணு மற்றும் மேஜர் கமல் இவங்க ஸ்டேட்மெண்ட்படி அன்னிக்கு என் தம்பி கடைசியாத்தான் பாஸ்கர் ரூமுக்குள்ள போனான், அதுக்கு முன்னாடியே மோதிரம் களவு போயிடுச்சு ….”

“பத்மா, மேஜர் கமலோட ஸ்டேட்மெண்ட் என்ன? மோதிரத்தை அவர் பார்க்கலைங்கறது தான். அது கீழே உருண்டு விழுந்திருந்தா? வேறு நோக்கத்திற்காக ரூமுக்குள்ளே போனவங்க, மேஜர் கமல், சுஜாதா, இல்ல விஜய், இவங்க கண்ணில் அது பட்டிருக்கும் சான்ஸ் ரொம்பக் கம்மி, பட் உங்க தம்பி அந்த மோதிரத்தை எடுக்கும் நோக்கத்தோடுதான் அந்த அறைக்கே போயிருக்கார், தேடியதாகவும் ஒப்புக்கொண்டிருக்கார்.”

பத்மா தவித்த விழிகளோடு தன்யாவைப் பார்த்தாள்.

“இத்தனை இருந்தும் பாலாஜியிடமிருந்து எங்க சந்தேகம் விலகிடுச்சு. ஏன் தெரியுமா?” பத்மாவும் பாலாஜியும் சற்றே தெளிவானார்கள். “ஒன்று – பாலாஜி ஹேமாவைக் கொன்றிருக்க முடியாது. பாலாஜி பாஸ்கர் அறைக்குள் நுழைந்த நேரம் ஹேமா தன் வீட்டிற்குப் போய் விட்டாள். இது எப்படித் தெரிகிறதென்றால் அவள் தன் ப்ளாக்மெய்ல் செய்தியைச் சொல்லும்போது அங்கே பாலாஜி இல்லை. அப்போதிருந்து கொலை நடந்த நேரத்துக்குள் அதைப் பாலாஜி தெரிந்து கொண்டிருக்கவும் முடியாது.

“இரண்டு – மோதிரம் இன்னும் அரக்கில் உன்னி முகுந்தன் கைக்குப் போய்ச் சேரவில்லை. அவர் சென்னையில்தான் தங்கியிருக்கிறார்!”

பத்மா ஒரு நிம்மதிப் பெருமூச்சோடு பாஸ்கரைப் பார்த்தாள். பாஸ்கர் நேர்ப்பார்வை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“இப்போ இன்னொரு கேள்வி தோன்றுகிறது. அரக்கில் உன்னி முகுந்தன் பாலாஜியை மட்டும்தான் தொடர்பு கொண்டாரா, இல்லை வேறு யாருக்காவது அவரோடு சம்பந்தம் இருக்கா?

தன்யா சற்று நிறுத்தினாள்.

“பாலாஜி! இந்த மோதிரத்தை எடுக்கல, ஓகே. ஆனா நீ விஜய்யை உன்னி முகுந்தன் இருந்த ரிஸார்ட்டுக்குக் கூட்டிப் போயிருக்கே. உண்மை தானே?” என்று அவள் கேட்டதும் எல்லோரும் அதிர்ச்சியானார்கள்.

“அடப்பாவி, உன்னால் என் பையனுக்கு …” என்று ஆரம்பித்த சதானந்தனிடம் “ஒரு ஆபத்தும் வந்திருக்காது ஹைனஸ். அது அவங்க நோக்கம் இல்லே” என்ற தன்யா, “இங்கிருந்து விஷயம் அதிகமாய் அரக்கில் கோவிலகத்துக்குக் கசியணும்னா அவங்க உள்ளேயே ஒரு ஸ்பை வெச்சிருக்கணும்னு நாங்க முடிவு பண்ணினோம். கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சதும் இன்னொரு ஆள் மாட்டியது … சமையல் மாமி.”




சமையல் மாமி விசுக்கென்று எழுந்து நின்றாள். “என்னடீது! ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு …”

“இந்தப் பழமொழியெல்லாம் இப்போ உதவாது, மாமி! நீங்க உன்னிமுகுந்தனை அடிக்கடி சந்திக்கிறீங்க, பார்ட்டி அன்னிக்கும் அவரைத் தான் சந்திக்கப் போயிருக்கீங்கங்கறதெல்லாம் போலீஸ் தெளிவா கண்டுபிடிச்சுட்டாங்க” என்று தன்யா கண்டிப்பாய்ச் சொன்னாள்.

“இதோ பாருடீ சுஜாதா! எப்போ என் மேல இப்படில்லாம் பழி சொல்லிட்டேளோ, இனி ஒரு நிமிஷங்கூட இங்க தங்க மாட்டேன். வேலையை விட்டு நின்னுக்கறேன்” என்ற மாமி விருவிருவென்று வெளியே போனாள். போஸை அவள் கடக்கும்போது “மாமி, போயிட்டு வாங்க, ஆனா எங்க கண் உங்கமேல இருக்குங்கறத மறந்துராதீங்க! திருப்பி ஏதாவது விவகாரத்துல மாட்டினா, மாமிக்கு மாமியார் வீடு தான்! ஜாக்கிரதை!” என்றார் சிரிப்போடு.

மாமி முகவாய்க்கட்டையைத் தோளில் இடித்துவிட்டு, வேகமாய் வெளியில் போய் விட்டாள்.

சுஜாதா வாய்விட்டுச் சிரித்தாள். “அபாரம் தன்யா! மாமிகிட்ட ஏதோ தப்பு இருக்குன்னு எனக்குத் தோணிக்கிட்டே இருந்தது.”

தன்யா சுஜாதாவைப் பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டு, தொடர்ந்தாள். “இப்போ இந்த மாமி விவகாரத்தைக் கிளப்ப என்ன காரணம்னு நீங்க கேட்கலாம். நாங்க அன்னிக்கு வந்து செய்த விசாரணை எல்லாம் விலாவாரியா உன்னிமுகுந்தன் காதுக்கு மாமி மூலமா போயிருக்கு. நாம எல்லோரும் வந்த அதே முடிவுக்கு அவரும் வந்திருக்கார் – அதாவது, இந்த மோதிரத்தை எடுத்தது ஒண்ணா சதானந்தன், அல்லது விஜய். விஜய் மூலமா இந்த மோதிரத்தை அடையணும்னுதான் அவனை அன்னிக்கு ரிஸார்ட்டுக்கு வரச் சொல்லியிருக்கார். ஆனா விஜய் ஏதோ போதை மருந்துப் பார்ட்டிக்கு உள்ளே போய் மயக்கமாயிட்டதால, அவரால விஜய்யை சந்திக்கவே முடியல.

“ஆக, அரக்கில் கோவிலகம் அந்த மோதிரத்தை அடைய எவ்வளவோ முயற்சிகள் செய்த போதும், அவர்களுடைய ஏஜண்ட் அதைத் திருடவில்லை. அட் லீஸ்ட், இன்னும் கோவிலகத்தின் கைக்கு மோதிரம் வரவில்லை!”




What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!