Serial Stories நந்தனின் மீரா

நந்தனின் மீரா-21

21

வரிகளினாலே எனை வளைக்க
வாள் தீட்ட  வேண்டாமடா வசீகரா
வாசல் கடக்கையில் வீசும்
ஓர விழிப் பார்வை போதும்
உன் பல்லிடுக்கில் எழுத்துக்களாய்
வழிய ஆரம்பித்துவிடுவேன்.

நந்தகுமார் போன ஒரு மணிநேரத்தில் மீராவிற்கு போன் வந்துவிட்டது .சுந்தரியிடமிருந்து ….

” என்னாச்சு …உடம்பு ரொம்ப முடியலையா …? “

” இல்லை அத்தை …லேசான உடல் வலிதான் ….”

” அதற்கு இரண்டுநாள் எதற்கு …? “




இவனை ….அப்படியே போய் அம்மாவிடம் ஒப்பிக்க வேண்டுமா …? பற்களை கடித்தாள் மீரா .

என் அம்மா வீட்டில் கூட ஒருநாள் தங்க எனக்கு உரிமையில்லையா …அலறிய மனதை அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்தாள் .

” சரி …சரி …காலாகாலத்தில் வரப்பார் ….” போனை வைத்துவிட்டாள் சுந்தரி .

அம்மாவும் , மகனும் ரொம்பத்தான் பண்ணுகிறார்கள் .இருக்கட்டும் ஒரு வாரம் கழித்துத்தான் போகவேண்டும் துரித முடிவென்றை எடுத்துக்கொண்டாள் .

அன்று இரவே திவ்யாவிடமிருந்து போன் .பிரவீணாவும் , அவளும் பதினோரு நாள் கணக்கிற்கு அங்கேதான் தங்கியிருக்க முடிவு செய்யப்பட்டிருந்தது .முகத்தை சுளித்தபடி குமரேசன் மட்டும் கிளம்பி போயிருந்தான் .

” அத்தை நீங்கள் இல்லாமல் போரடிக்கிறது .சீக்கிரம் வாங்க அத்தை …,” சிணுங்கினாள் .

நாளையே வருகிறேன் என மீரா சொல்லும் வரை அவள் போனை வைக்கவில்லை .

பிறகு அவளிடமிருந்து போனை வாங்கி பிரவீணா வேறு .எப்போது வருகிறாளென்ற விசாரணை .

அரைமணி நேரத்தில் சசிகுமார் …” அண்ணி என்னதிது சொல்லாமல் கொள்ளாமல் இப்படி எஸ்ஸாயிட்டீங்க …? ” என்றான் .

” தப்பிச்சி வந்துட்டேன் பார்த்தீங்களா …? ” உள்ளே உண்மை வைத்து வெளிப்பேச்சில் விளையாட்டு காட்டினாள் .

” ம் …நீங்க லக்கி அண்ணி .என்னாலெல்லாம் தப்பிக்க முடியுதா ….? என் தலையெழுத்து காலம் பூராம் இதே வீடுதான்னு இருக்கு பாருங்க …” அலுத்துக்கொண்டான் .

” வர்றேன் …வந்து அத்தைகிட்ட சொல்றேன் …,” மிரட்டினாள் .

” அப்போ  நாளைக்கே வர்றேங்கிறீங்க …? “

” என்ன …நாளைக்கா …? “

” ஆமாண்ணி …நாளைக்கே ….” உறுதியாக்கிவிட்டு போனை வைத்தான் .

” நம்ம மீரா வந்து நான்கு மணிநேரம் ஆகவில்லை .அதற்குள் அவளுக்கு அங்கே அழைப்பை பார்த்தீர்களா …? ” அன்பரசி பெருமையாக கூறினாள் .

” என் பொண்ணாச்சே …எல்லோரும் அவளை தேடத்தான் செய்வாங்க ….” திருக்குமரன் மீசையை நீவிக்கொண்டார் .




அந்த வீட்டில் யாருக்கும் என் தேவையில்லை …என் நினைப்பில்லை நான் எதற்கு அங்கிருக்க வேண்டுமென நினைத்தவளுக்கு இந்த வரவேற்றல்  படையெடுப்பு ஆச்சரியத்தை அளித்தது .

இதையெல்லாம் விட கூடுதல் ஆச்சரியம் மறுநாள் அவளுக்கிருந்தது .சசிகுமாரின் போனிலிருந்து பாட்டி அவளை அழைத்தார் .

” பாட்டி …நீங்கள் …? “

” சசிகிட்ட உனக்கு போன் போட்டு தரச்சொல்லி கேட்டு வாங்கி பேசுகிறேன் ….,”

” சசிதான் பேச சொன்னாரா பாட்டி …? “

யார் பாட்டியை தூண்டிவிட்டிருப்பார்கள் என தெரிந்து கொள்ள கேட்டாள் .

” எனக்கு யாரும் செல்ல வேண்டியதில்லை .சசி கூட பக்கத்தில் இல்லை .அனுப்பிவிட்டேன் .சொல்லு என்ன விசயம் …? “

பாட்டியின் நேரடி கேள்வியில் அதிர்ந்தாள் .

” எ…என்ன பாட்டி …? “

” அந்த மிருணாளினி ஏதாவது சொன்னாளா …? ” அடுத்த அதிரடி .

” அ…அது வந்து …” ஒப்புதலுக்கும் , மறுத்தலுக்குமிடையே திணறினாள் மீரா .

” அவள் எதை சொன்னாலும் நம்பாதே …”

காதை வேண்டுமானால் நம்பாமலிருக்கலாம் .ஆனால் கண்களை …??? அது பார்த்ததை …கண்ணுக்குள்ளேயே உறைந்து நின்றிருக்கும் அந்த காட்சியை ….

” நீ நாளை கிளம்பி இங்கே வா .உன்னுடன் நிறைய பேசவேண்டும் ….”

” அ…அத்தையை பற்றியா பாட்டி …,? ” இது மீராவாக ஊகித்திருந்தது .பாட்டி தன்னிடம் பேச விரும்புவது சுந்தரி பற்றிய செய்திகள்தான் …அதாவது மாமியாரை பற்றி மருமகளிடம் புகார் ….என்றுதான் எண்ணியிருந்தாள் .

” அவளை பேச என்ன இருக்கு …? உன்னைத்தான் …உன் வாழ்க்கைதான் …அத்தோடு ….பிரவீணா .அவளை பற்றியும் பேச வேண்டும் .சீக்கிரம் வா …” உத்தரவு போல் கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள் .

பிரவீணா பற்றியா …என்னவாக இருக்கும் …? அதன் பிறகு மீராவிற்கு அம்மா வீட்டில் இருப்பு கொள்ளவில்லை .கிளம்பிவிட்டாள் .

மீரா போன போது .பிரவீணா வெளியே போயிருந்தாள் .டிவி பார்த்துக் கொண்டிருந்த திவ்யா ஓடி வந்து அணைத்து வரவேற்றாள் . சுந்தரி மதிய சமையலில் இருந்தாள்…

” நான் செய்கிறேன் அத்தை …” கரண்டியை வாங்க போனவளிடம் …

” நீ போய் படுத்திரு .நானே முடித்து விடுகிறேன் ” என்றாள் .

” அ..அந்த அளவு உடம்பு முடியாமல் இல்லை அத்தை .நான் நன்றாக இருக்கிறேன் …”

” அதனாலென்ன …கொஞ்சநேரம் படுத்திரு …” வேலையை தொடர்ந்தாள் .

” சாரி அத்தை …உடனே கிளம்பி அம்மா வீட்டற்கு போனதற்கு ….” சுந்தரிக்கு அதில் கோபமென நினைத்தால் மீரா .




” அம்மா வீட்டிற்கு போகும் உரிமையை ஒரு பெண் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்க கூடாது .நான்தான் அதை ஆரம்பத்தில் விட்டுக் கொடுத்து விட்டு இப்போது வரை அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறேன் நீயும் அதே தவறை செய்யாதே ….”

இப்போது இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் ..? மீராவிற்கு அலுப்பாக இருந்தது .இப்படி மண்டையை உடைப்பதற்கு போய் படுத்துக் கொள்வோம் என எண்ணி போய் படுத்துக்கொண்டாள் .

பாட்டி இந்நேரம் தூங்குவார் .எழுந்ததும் பேசலாம் நினைத்தபடி தூங்கிப் போனாள் .

எழுந்ததும் பாட்டிக்கு சாப்பாடு கொடுக்கும் வேலையை தான் வாங்கிக்கொண்டு பாட்டியிடம் போனாள் .

” அந்த மிருணாளினி சொன்ன எதையும் நம்பாதே ….” பாட்டி முதலில் இதைத்தான் சொன்னார் .

” அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை பாட்டி …”

” மரியாதையெல்லாம் அவளுக்கு வேண்டாம் .அவள் …இவளென்றே சொல்லு .ஒன்றும் சொல்லாமலிருந்திருக்க மாட்டாள் .சொல்லியிருப்பாள் .சாதாரண விசயத்தையும் பெரிதாக சொல்பவள் அவள் .எப்படியோ அவளிடமிருந்த இந்த குடும்பத்தை காப்பாற்றி விட்டேன் …”

மீராவின் நினைவுகளில் அன்றைய அவர்களின் நெருங்கிய தோற்றம் வந்து நின்றது .தலையை உலுக்கி அழித்தாள் .உங்கள் பேரனல்லாவா அவளை விலக்கி விட்டதாக சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டாள் .

” அவளை விடு …அவளெல்லாம் நமக்கு முக்கியமில்லை .நான் பிரவீணாவை பற்றி சொல்லத்தான் ….இதை பேச இந்த வீட்டில் நீ மட்டுமதான் சரியான ஆளாக தோன்றினாய் ….”

” சொல்லுங்க பாட்டி .அண்ணிக்கு என்ன …? “

” அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கறது .கொஞ்சநாட்களாக அவள் சரியில்லை .இதை இந்த வீட்டில் யாரும் உணரவில்லை .அவளிடமே துருவிப்பார்த்துவிட்டேன் அவள் வாயை திறக்க மாட்டேனென்கிறாள் .குருகிட்ட விவரம் சரியா தெரியாமல் சொல்ல முடியாது .அவன் ரொம்ப உணர்ச்சி வசப்படுவான்,மாளவியும் , சசியும் சின்ன பிள்ளைங்க …

” நந்து புரிந்து கொள்வான் .ஆனாலும் இந்த விசயத்தில் ஒரு பெண்ணாக இருந்தால் …பிரவீணாவை புரிந்து கொள்ள எளிதாக இருக்குமென்று நினைக்கிறேன் .

” சுந்தரி புரிந்து கொள்வாள்தான் .ஆனால் …பாவம் மகளுக்கு பிரச்சினையென்றால் ரொம்ப மனம் நொந்து போவாள் .மெல்லவே அவளுக்கு தெரியட்டுமென்று நினைக்கிறேன் ….”

இவர்களுக்கு ஆகாத மருமகளென்று தனது மாமியாரை நினைத்திருந்த மீரா பாட்டியின் கரிசனத்தை கேட்டு ஆச்சரியமானாள் .

” நீ மெல்ல பிரவீணாகிட்ட பேசி ஏதாவது சொல்றாளான்னு பாரேன் .இந்தப் பொண்ணு திவ்யா ….ஏன் தன் வீட்டை விட்டு பாட்டி வீட்டிற்கு ஓடி வந்தாள் …? அங்கே ஏதோ …குமரேசனிடம் பிரச்சினை இருக்கிறது …”

மீராவிற்கு தங்கள் திருமணத்திற்கு முன்பு குமரேசனை சந்தித்த சூழ்நிலை நினைவு வந்தது .அவனை பார்த்த முதல் நாளே அந்த நினைவில் குழம்பிய போதும் , பின்பு வீட்டு மாப்பிள்ளையாக அவனது நடவடிக்கையில் முன்தின நிகழ்வுகளை மறந்திருந்தாள் .

இப்போது அதனை கொஞ்சம் கிளறி பார்த்தால் என்ன …என தோன்றியது .பாட்டியிடம் சொல்ல வாயெடுத்து விட்டு …இல்லை வேண்டாம் …யாரை  பற்றியும் முழுதாக அறியும் முன்பு நாமாக எதுவும் சொல்லக்கூடாது …என நினைத்துக்கொண்டாள் .

பிரவீணா வந்ததும் அவளிடம் மெல்ல பேச்சு கொடுத்து பார்த்தாள் .அண்ணன் ரொம்ப கோபக்கார்ரோ ….நேற்று ரொம்ப கோபமாக இருந்தாரே …சாதாரணமாக இப்படித்தான் கோபித்துக்கொள்வாரா …? என மெல்ல நோட்டம் விட்டு பார்த்தாள் .

வேறு பேச்சுக்களில் கலகலவென பேசியவள் அவள் கணவன் பேச்சு வந்ததும்  வாயில் பசை போட்டு ஒட்டியது போல் மாறிப்போனாள் . அவளது அந்த மாற்றமே அவளுக்கிருந்த பிரச்சினையை கோடிட்டு சொல்லியது .

இதனை யாரிடம் பகிர்ந்து கொள்ள …? வேறு யாரும் இல்லாமல் கணவனிடமே சொல்ல எண்ணி காத்திருந்தாள் மீரா .

நந்தகுமாரின் பைக் சத்தம் தெருவில் கேட்டதுமே ” போய் கதவை திற …” சுந்தரி டிவியில் கண்ணை பதித்தபடி சொன்னாள் .

மீரா வாசல் விளக்கை போட்டுவிட்டு கதவை திறந்ததும் மெல்லிய விசில் சத்தமொன்று காதில் விழுந்தது .

” ஹேய் மீரா …வந்துட்டியா நீ …? “

” ஏன் வந்தேன்னு நினைக்கிறீங்களா ..? ” அவன் கை பையை வாங்கியபடி கேட்டாள் .

” ஏன் இவ்வளவு லேட்டா வந்தேன்னு நினைக்கிறேன் …” அவள் கைகளில் பையை கொடுத்துவிட்டு பையோடு கையை சேர்த்து இழுத்தான் .

” ப்ச் , பையை விடுங்க .அதென்ன சின்னபசங்க மாதிரி விசில் அடிச்சிட்டு ….”

” எல்லாம் ஒரு உற்சாகம்தான் …விளக்கை போட்டதும் கண் கூசியது .ஒரு நொடி இமை மூடி திறக்கும் போது நீ தேவதை போல் முன்னால் நிற்கிறாய் .விசில் தானாக வந்துவிட்டது …,”

இவனுக்கு என்ன ஆனது …? இப்படியெல்லாம் பேச மாட்டானே …முகத்தை நிமிர்ந்து பார்க்கவே மீட்டிங் போட்டு முடிவெடுக்கலாமா ….என யோசிப்பவன் .இப்போதென்னவோ ஒரு காதல் கணவன் போல் இது போன்ற பேச்சு ….

மீராவின் குழப்பத்திற்கான விடையை அன்று இரவே நந்தகுமார் சொன்னான் .

” போதும் மீரா ..நாம் தள்ளியிருந்தது . இனி திருமணம் முடிந்த இயல்பான கணவன் , மனைவி போல் நாமும் நம் வாழ்க்கையை இயற்கையாக தொடங்குவோம் ….ம் …சரியா …? ” குரல் குழைந்து வழிய கண் நிறைந்த வேட்கையோடு அவளை நெருங்கினான் கணவனாக .

தன்னை சுற்றி உலகம் தட்டாமாலை சுற்றுவதாக உணர்ந்தாள் மீரா .




What’s your Reaction?
+1
28
+1
26
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
12 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!