Serial Stories சந்தியா ராகம்

சந்தியா ராகம் -14 (நிறைவு)

14

ஒரு முழு மாதம் கழிந்து விட்டது.ஜெயசூர்யா இங்கே யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.சென்னையில் அவனது வழக்கமான வேலைகளுக்கு திரும்பி விட்டது விசாரித்த போது தெரிய வந்தது.

இங்கேயும் தொழில் வேலைகள் நடப்பதில் எந்தக் குறைகளும் இல்லை.சுபாஷும்,சுசீலாவும் கூட பழைய பொறுப்பற்ற டம்பமான போக்குகளை வெகுவாக குறைத்துக் கொண்டிருந்தனர்.போனில் வரும் உத்தரவுகளுக்கேற்ப சுபாஷ் அமைதியாக தெளிவாக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

சுசீலாவிற்கு கொடுக்கப்பட்டிருந்த வேலை சந்தியாவை பராமரிப்பது மட்டும்தான் போலும். மறுத்தாலும் வலுக்கட்டாயமாக உணவை பானங்களை மகள் வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருந்தாள்.

சட்டநாதன் ,ரவிச்சந்திரன் மேல் போதை பொருட்கள் வைத்திருந்ததாக ஒரு குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டார்கள்.எங்கள் மேல் தவறில்லை.நாங்கள் பழி வாங்கப்படுகிறோம் என்ற அவர்களின் கதறலை யாரும் கண்டு கொள்வதாயில்லை.

கையால் பருப்புகளை உடைக்கும் பணி செவ்வனே ஆரம்பமாகி விட்டது.கை நிறைய பணமும் உற்சாகமுமாக ஊருக்குள் பெண்கள் வலம் வரத் துவங்கினார்கள்.ஒயின் தொழிற்சாலைக்காக கவர்ன்மென்ட் லைசென்ஸ் பெறப்பட்டு ஊருக்கு ஒதுக்குப்புறம் நிலம் வாங்கி தொழிற்சாலையும் உருவாக ஆரம்பமாகி விட்டது.

ஆக அவன் அங்கிருந்தாலும் இங்கே எல்லா வேலைகளையும் அவனால் செய்ய முடிகிறது.இருந்தும் இத்தனை நாட்களாக அவன் இங்கேயே தங்கியிருந்த காரணம்,நான்…எனக்காக பெருமையாய் தன நெஞ்சை தொட்டுக் கொண்டாள் சந்தியா.இப்போது கணவனின் அன்பில் சிறு சந்தேகமும் அவளுக்கில்லை.

கணவனின் பிரிவு தந்த ஆரம்ப அதிர்ச்சி தாண்டி இப்போதுதான் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்திருந்தாள் அவள்.தொழில்களையும்,சொத்துக்களையும்,சொந்தங்களையும் இங்கே எனக்கு உருவாக்கிக் கொடுத்து விட்டு நீ ஒதுங்கிக் கொள்வாயா? உன்னை விட மாட்டேன்டா…சந்தியா காலம் விடியலுக்காக சூரியனை தேடி புறப்பட்டது.

ஏற்கனவே குவிந்து கிடக்கும் வேலைகளுக்கு மேலேயும் வேண்டுமென்றே இழுத்துப் போட்டுக் கொண்ட வேலைகளும் சேர்ந்து கொள்ள ஜெயசூர்யா மிகுந்த சோர்வுடன்தான் பின்னிரவில் வீடு திரும்பினான். இன்றென்ன கூடுதலாக விளக்குகளை போட்டிருக்கிறார்களா? வீட்டிற்கே ஏதோ ஒளி தெரிகிறதே… யோசித்தபடி காரை நிறுத்தியவன் உள்ளே வந்தபோது உண்மையாகவே ஹாலில் கூடுதல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

 அத்தோடு தந்தையின் அறையில் எரிந்த விளக்கும் அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுக்க வேகமாக அங்கே போனான். அப்பாவிற்கு உடம்புக்கு ஏதாவது… உள்ளே எட்டிப் பார்க்க சபாநாயகம் அமைதியாக தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் நிம்மதியானான்.

 எதிர்பட்ட தவசியின் முகத்திலும் வழக்கத்திற்கு மாறாக உற்சாக ஒளி. “வயதானவர்கள் இடையில் விழித்தால் வெளிச்சமின்றி சிரமப்படுவார்கள் என்று இந்த குறைந்த விளக்கை அம்மா இங்கே மாற்றச் சொன்னார்கள் தம்பி”

“எந்த அம்மா?”

 தவசி புன்னகைத்தார் “உங்கள் வீட்டு அம்மாதான் தம்பி”




” என் வீட்டு அம்மாவா? யார்..?”

” சரிதான். வீட்டம்மா என்றால் மனைவி என்று அர்த்தம்” தவசி தெளிவாக விளக்க,பரபரப்பில் அதிர்ந்தான் ஜெயசூர்யா.

” சந்தியாவா? இங்கே வந்தாளா?”

” மாடியில்தான் இருக்கிறார்கள். போய் பாருங்கள்”

 வேகத்துடன் நான்கு நான்கு படிகளாக தாவி ஏறினான். அவனுடைய அறை மூலை முடுக்கெல்லாம் இருக்கும் சிறு விளக்குகள் கூட போடப்பட்டு மிகப் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது. நேர்த்தியான புடவையும் தலை நிறைய பூவும் முகம் நிறைய மகிழ்வுமாக அறை  நடுவில் அவனை எதிர்பார்த்து நின்றிருந்தாள் சந்தியா.

” சந்தியா நீ… நீ… எப்போது இங்கே…” குரல் தடுமாறினான்.

” நிறைய கொடுத்துவிட்டு வந்தீர்களே, அதற்கு பதில் கொடுக்க வந்திருக்கிறேன்” சந்தியா முறைத்தபடி சொல்ல குழம்பினான்.

” என்ன கொடுத்துவிட்டு வந்தேன்?”

 மெல்ல நடந்து அவனருகே வந்தவள் கையுயர்த்தி அவன் கருத்தில் கை கோர்த்தாள். “இதை…” என்றபடி எக்கி அவன் இதழோடு தன் இதழ்களை இணைத்தாள்.

 பிரமித்து நின்றவனின் கைகள் அவளை அரவமாய் சுற்றிக் கொண்டது. இடையில் சிறிது நிறுத்தியவள் “அவ்வளவு கொடுத்துவிட்டு கொஞ்சம் கூட பதில் வாங்காமல் வந்து விட்டால் எப்படி? கொடுத்ததில் பாதியாவது திருப்பிக் கொடுக்க வேண்டாமா?’ மீண்டும் தொடர்ந்தாள்.

 பல நிமிடங்களை விழுங்கி, இரு ஜோடி இதழ்களும் சோர்வுற்ற பிறகே அந்த முத்தப் போர் நின்றது. “இதனை இவ்வளவு நாட்களாக எதற்காகடி நிறுத்தி வைத்தாய்? அன்று நான் கொடுத்த போதே திருப்பி தந்திருக்க வேண்டியதுதானே?” ஜெயசூர்யா அவளை மென்மையாக உலுக்கினான்.

” அன்று எனக்கென்ன தெரியும்? திடீரென்று அப்படி முத்தமிட்டால்… முத்தம் என்றால் இப்படியா இருக்கும் என்று நானே அதிர்ந்து போய் இருந்தேன். இதில் பதில் எப்படி கொடுக்க ?”

“இப்போது மட்டும் பதில் கொடுக்க தெரிந்ததே…” சீண்டினான்.

” அது அன்று நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடம். எப்படி ஒழுங்காக சொல்லித் தந்திருக்கிறீர்களா வாத்தியாரய்யா?” பதிலுக்கு சீண்டினாள்.

” 100%” சட்டை காலரை உயர்த்தி விட்டுக் கொண்டான். அவன் கையை தட்டி விட்டு தான் அந்த காலரை இறுக்கி பற்றினாள்.

 “எதற்காக இப்படி என்னை விட்டு  ஓடி வந்தீர்கள்?”.

” நீ எதற்காக என்னை தேடி வர இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டாய்?”

 மனைவியின் கோப பற்றுதலுக்கு பதிலாக அவன் கைகள் காதலாக அவள் கழுத்தை வருடியது. “நானாக தேடி வர வேண்டும் என்று தான் இப்படி விட்டு வந்தீர்களா?” 

“இல்லை சந்தியா உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அன்று கஷ்டப்பட்டு என்னை சுற்றி போட்டுக் கொண்டிருந்த வேலிகளை உடைத்து உன்னை அப்படி முத்தமிட்ட பிறகு… நீ அதற்கு எதிர் செயலின்றி துவண்டு கிடந்த பிறகு… அங்கே நிற்கும் தைரியம் எனக்கு இல்லை. அதிர்ச்சியிலிருந்து மீண்ட பிறகு, என்னை எப்படிடா நீ தொட்டு முத்தமிடலாம்? உனக்கென்ன உரிமை இருக்கிறது? என்று நீ கேட்டு விட்டாயானால், அதனை தாங்கும் திடம் என்னிடம் இல்லை”

 அதெப்படி அப்படி கேட்பேன் என்று நினைத்தீர்கள்?” சீறினாள்.

” அதற்கு சில நிமிடங்கள் முன்பு தானே நீ ரவிச்சந்திரன் பக்கம் பேசியிருந்தாய்”

” முட்டாளா நீங்கள்? அவன் பக்கம் பேசவில்லை, அவன் பொருட்டு நீங்கள் ஏன் ரவுடித்தனம் செய்ய வேண்டும் என்றுதான் கேட்க வந்தேன். அவன் பேசியதில் கொஞ்சம் குழம்பினேன்தான். ஆனாலும் அவனையெல்லாம் ஒரு ஆளாக மதித்து நீங்களே நேருக்கு நேர் போய் நிற்க வேண்டுமா என்ற எண்ணம்தான் எனக்கு”

” இது எனக்கு அன்று தெரியாதே சந்தியா. இன்று செய்ததை அன்றே நீ செய்திருந்தால் எனக்கு புரிய வந்திருக்கும்…” என்று அவள் இதழ்களை வருடினான்.

 செல்லமாக அவன் மார்பில் அடித்தாள் சந்தியா.”பெரிய தொழிலதிபராம். சரியான மக்கு  மண்ணாந்தை. ஒன்றும் புரியாது”

” உண்மைதான் சந்தியா, எதிரில் நின்று பேசுபவரை 10 நிமிடங்களில் தொழிலில் புரிந்து கொள்வேன். ஆனால் உன்னை புரிந்து கொள்வதில் பெரிய தோல்விதான் எனக்கு. அப்படி நினைப்பாயோ இப்படி எண்ணி கொள்வாயோ, என்று எப்போதும் ஒரு படபடப்புடனே இருந்தேன். நானாக எதையாவது செய்யப் போய் எங்கே நீ என்னை விட்டு போய் விடுவாயோ என்று எவ்வளவு பயந்தேன் தெரியுமா?’

 சந்தியாவிற்கு சிரிப்பு வந்தது. எவ்வளவோ பெரிய பெரிய விஷயங்களை திட்டமிட்டு கச்சிதமாக செய்து முடிப்பவன் என்னிடம் பேச பயந்து நின்றானா… காதல் வழிய அவனைப் பார்க்க ,அவன் அவளது கைகளை எடுத்து தன்னிரு கன்னங்களிலும் பதித்துக் கொண்டான்.

” ரவிச்சந்திரனையும் உன்னையும் முதன்முதலில் காதலர்களாக பார்த்தபோது…” அவன் பேச்சு சந்தியாவின் உடலுக்குள் திடுக்கிடலை உண்டாக்க அவள் உடல் அதிர்ந்தது.

அதை உணர்ந்தவன் அவளை இழுத்து இறுக்கிக் கொண்டான். “தப்பாக பேசாதீர்கள், எனக்கு அருவருப்பாக இருக்கிறது. அவன்தான் என் பின்னால் காதல் ஊதல் என்று சுற்றிக் கொண்டிருப்பான். தொட்டு தொட்டு பேச வருபவனை விரல்களைக் கூட தொட விட்டதில்லை. அன்றுதான்… நாளை திருமணம்தானே இப்போது கூட தொடவிட மாட்டாயா என்று விரட்டிக் கொண்டு வந்து தோளை…” மேலே பேச முடியாமல் கரகரத்தவளின் முகத்தை மார்பில் அழுத்திக் கொண்டான்.

” நான் அன்றைய நிலையையில் என் மன நிலையைத்தான் சொன்னேன் சந்தியா. இனி அவன் பேச்சு நமக்குள் வேண்டாம்.என்னுடைய குழப்பத்தில் அவன் ஒரு சிறு இடறல் அவ்வளவுதான்”

” அந்த இடறலைத்தான் நீங்கள் வஞ்சம் வைத்து தூக்கி விட்டீர்களே” சந்தியா சொன்னதும் கவலையாக அவளைப் பார்த்தான்.

” அதில் உனக்கு எதுவும் ஆட்சேபனை…?” தடுமாறியவனின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

” தூக்கு தண்டனைப் போல் எதுவும்  அவனுக்கு வாங்கிக் கொடுத்திருந்தீர்களானால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்” என்றவளை முகம் நிமிர்த்தி பார்த்தான். “சந்தியா…?”

” கதிர் எல்லாவற்றையும் சொல்லி விட்டான்”

” முட்டாள் இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறான்?” முணுமுணுத்தான். 

” ஏன் சொல்லக்கூடாது?”

” உனக்கு தேவையில்லாத மனச்சங்கடம் தானே சந்தியா? அவனுடைய செயல்களையெல்லாம் உன்னால் ஜீரணிக்கவே முடியாது”




” உண்மைதான் இப்படியெல்லாம் அவன் செய்வான் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் இதெல்லாம் எனக்கு தெரிய வந்ததாலேதான் என் மன மூலையில் லேசாக அவனுக்காக இருந்த பரிதாபம் கூட இப்போது அழிந்து விட்டது .நீங்கள் சொல்வது போல் இனியொரு முறை அவன் பெயர் கூட நம் வாழ்வில் வராது”

“போதும் சந்தியா அவன் பேச்சு. இனி நம்மை பற்றி மட்டுமே பேசுவோம்”

” ஆமாம் அதுவே பேச நிறைய இருக்கிறது.  அங்கே செய்வது எல்லாம் செய்து விட்டு நானே வரட்டும் என்று இங்கே வந்து உட்கார்ந்து கொண்டீர்களா?” இடுப்பில் கைதாங்கி முறைத்துக் கேட்டாள்.

” இல்லையே, வந்து விட மாட்டாயா என்று ஏக்கத்துடன் இங்கு காத்திருந்தேன். நான் முன்பே சொன்னதுதான் சந்தியா. உன்னை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு சுத்தமாக இல்லை. நீயாக என் பக்கம் எட்டு எடுத்து வைத்தாயானால் தான் உண்டு. அதற்காகத்தான் காத்திருந்தேன். ஒருவேளை என்னை பிடிக்காமல் தனித்திருக்கும் முடிவை நீ எடுப்பதென்றாலும் உனக்கு அதில் தயக்கம் இருக்கக் கூடாது என்றுதான் உன் அம்மா அப்பா கதிர் முதல் உன்னை சுற்றி பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு வந்தேன்”

” தொழில் பணம் உறவுகள் நட்புகள் என்று ஆயிரம் சுற்றி இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு மன நிறைவே தருவது அவள் மனம் கவர்ந்தவனின் அருகாமை தான் என்பதை புரிந்து கொள்ளாமல் போனீர்களே” சந்தியா வருந்தினாள்.

” இது புரியாமல் இல்லை சந்தியா. நான் உன் மனம் கவர்ந்தவனா என்பதில்தான் பிரச்சனை…”பேசிக் கொண்டிருந்தவனின் இதழ்களை மீண்டும் தன் இதழ்களால் மூடினாள்.

” இப்போது அந்த பிரச்சனை தீர்ந்ததா?’ உதடுகளை துடைத்துக் கொண்டு கேட்டவளை வாரி தன்னோடு அணைத்துக் கொண்டான்.

” அந்தப் பிரச்சனை தீர்ந்தது. ஆனால் இப்போது வேறு ஏதேதோ சந்தேகங்கள் நிறைய வந்துவிட்டதே, அதையெல்லாம் தீர்ப்போமா?” என்றபடி தன் மனைவியை கைப்பிடிக்குள் கொண்டு வந்து ஆக்கிரமிக்க துவங்கினான் ஜெயசூர்யா. 

கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகங்களும் சங்கடங்களும் எங்கோ ஓடிப்போய் மறைய ,சந்தியா காலம் சூரியனுடன் இணைந்ததால் உலகிற்கே விடியல் துவங்கியது.

                          – நிறைவு-

  


What’s your Reaction?
+1
35
+1
20
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!