Serial Stories

நந்தனின் மீரா-20

20

சிவப்பு வெல்வெட் பாப்பாத்தி பூச்சியாய்
கையாள்கிறாய் என்னை ,
கண்ணன் கை வெண்ணை உருண்டையாய்
நெகிழ்கிறேன் நான் .

கதவை திறந்த அன்பரசி மகளை பார்த்ததும் ” வாம்மா மீரா .நானே போன் பண்ணி உன்னை கூப்பிடலாம்னு நினைத்தேன் .நீயே வந்துவிட்டாய் …” சந்தோசமாக வரவேற்றாள் .

” எதற்கும்மா …எதுவும் விசயம் இருக்கிறதா ..? ” சோபாவில் அமர்ந்தபடி கேட்டாள் .

” ஒண்ணுமில்லைடா …நேற்று ஒரு இடத்தில் நில்லாமல் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தாயே .இங்கே நம் வீட்டிற்கு வந்தால் கொஞ்சநேரம் ஓய்வெடுப்பாயே என்றுதான் …”

மீரா அம்மாவின் மடியில் தலைவைத்து சோபாவில் காலை நீட்டிக்கொண்டாள் .அவள் தலையை வருடியபடி …

” என்னடா ரொம்ப டயர்டா இருக்கா …?”என்றாள் .

அசதி உடம்பிற்கு இல்லையம்மா .மனதிற்கு …தனக்குள் சொல்லிக் கொண்ட மீராவின் மனதில் நந்தகுமாரும் , மிருணாளினியும் அணைத்து நின்ற தோற்றம் வர ..சட்டென அவளையறியாமலேயே உடல் தூக்கிப் போட்டது .

” மீரா ..என்னடாம்மா செய்கிறது …? ” அன்பரசி கவலையோடு அவள் நெற்றியை தொட்டு பார்த்தாள் .

” ஒன்றுமில்லையம்மா .நீங்கள் சொன்னதுபோல் வேலை செய்த அலுப்புதான் .நான் உள்ளே போய் படுத்து கொஞ்சநேரம் தூங்குகிறேன் .அப்பாவும் , தம்பியும் வந்ததும் என்னை எழுப்புங்கள் ….” பெட்ரூமினுள் போய் கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

விழாக்கால கோலங்களையெல்லாம் வீட்டில் சரி செய்துவிட்டு மதிய உணவு வேலை முடிந்ததும் சுந்தரியிடம் கேட்டு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள் .

அந்த வீட்டிலிருந்து வெளியேறியதும்தான் அவள் சுவாசம் சீரானாற் போலிருந்தது .கீழே வீடு நிறைய உறவினர்கள் இருக்க மொட்டை மாடி அரை இருளில் அணைத்தபடி நின்ற அந்த ஜோடிகளின் தோற்றம் இப்போதும் அவளை கொதிக்க வைத்தது .

அவர்களை அப்படியே விட்டு வந்திருக்க கூடாது .அங்கேயே எல்லோரையும் கூட்டிவந்து காண்பித்திருக்க வேண்டும் …என நினைத்து விட்டு …சே …சே குடும்ப மானம் என்னாவது …என நினைத்துக்கொண்டாள் .

பிறகு ..பெரிய குடும்பம் ..எனக்காக பேசாத …செய்யாத குடும்பம் இவர்களுக்காக நான் ஏன் பார்க்க வேண்டும் …? ..முன்னுக்கு பின் முரணாக யோசனைகள் ஓடியபடி இருந்த போது …

” இந்த காபியை கொஞ்சம் சூடாக குடித்துவிட்டு படுத்துக்கொள்ளம்மா ….” அம்மாவை மறுக்க முடியாமல் காபியை விழுங்கி வைத்தாள் .

” உன்னை கூப்பிட மாப்பிள்ளை எத்தனை மணிக்கு வருவார் …? ” போகற போக்கில் அன்பரசி கேட்டு செல்ல மீராவிற்கு திக்கென்றது .




அவன் வருவானா …? மீராவிற்கென்னவோ வரமாட்டான் என்றுதான் தோன்றியது .அவன்தான் அந்த மிருணாளினி மயக்கத்தில் இருக்கிறானே .விழா முடிந்து எல்லோரும் போகும் வரை அவர்கள் மாமன் வீட்டினர் பின்தானே சுற்றிக் கொண்டிருந்தான் .வாசல் வரை போய் கையசைத்து அவர்களை அனுப்பிவிட்டு வந்த பிறகுதானே வீட்டினுள் இருந்த மற்றவர்கள் கண்ணுக்கு தெரிந்தனர் …

அவள் நினைவில் மூழ்கியிருப்பவன் என்னை எப்படி கூப்பிட வருவான் .நல்லவேளை தொலைந்தாள் என இருப்பான் .ஒரு வேளை வந்தாலும் அவன் அம்மா விற்காக வருவான் .நான் போகப்போவதில்லை .வரமாட்டேன் என்று சொல்லிவிடுவேன் .அவன் அம்மாவிற்கு என்ன பதில் சொல்கிறானென பார்ப்போம் ….

விழிகளை மூடியபடி தனக்குள் புலம்பியபடி இருந்தவள் கண்கள் சொருக தூங்கிப் போனாள் .

மென்மையாய் மீராவின் நெற்றியை ஒரு கை வருட ” இன்னும் கொஞ்சநேரம் தூங்குறேன்மா ப்ளீஸ் ..” என்றபடி அந்த கைகளை இழுத்து தனது கழுத்திற்குள் புதைத்துக் கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள் .

அம்மாவின் கை இவ்வளவு கடினமாக இருக்காதே …எனத் தோன்ற வேகமாக கண்களை திறந்தவளின் பார்வை முதலில் மங்கலாக இருந்தது .

எதிர் தெரிந்தது அவன்தானா ..? அம்மா வீட்டிற்கு தானே வந்தோம் .இல்லை மாமியார் வீட்டில்தான் இருக்கிறோமா ….? குழப்பத்துடன் சோம்பலாய் கண்ணிமைகளை தேய்த்தாள் .

” நான்தான் மீரா .என்னடா ரொம்ப டயர்டாக இருக்கிறதா ..? ” ஆதரவாக ஒலித்த குரல் நந்தகுமாருடையதேதான் .

அவசரமாக தன் கழுத்தை வருடியபடியிருந்த அவன் கைகளை தட்டியவள் வேகமாக எழுந்தாள் .

” ஏன்டா …படுத்திரு கொஞ்சநேரம் ….” அவள் தோள்களை பற்றி படுக்க வைத்தான் .

” அத்தை அனுப்பி வைத்தார்களா …? ” கண்களை மூடிக்கொண்டு கேட்டாள் .

” ஆமாம் …அம்மாதான் உன்னை கூட்டி வர சொன்னார்கள் …”

அதானே நீயாக ஏன் வரப்போகிறாய் ….கண்ணை திறக்காமலேயே நினைத்துக் கொண்டாள் .

” பரபரவென்று இவ்வளவு வேலை செய்து அவளுக்கு பழக்கமில்லை தம்பி .அதுதான் அசந்துவிட்டாள் ….” டிபன் தட்டோடு வந்தாள் அன்பரசி .

” ஓ…வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் .திடீரென்று வந்த விசேசமென்பதால் ஒன்றும் ஓடவில்லை ….”

” பரவாயில்லை .சாப்பாடெல்லாம்தான் ஹோட்டலில் சொல்லி விட்டீர்களே …வீடென்றால் இது போல் திடீர் வேலைகள் இருக்கத்தானே செய்யும் .இரண்டுநாள் மீரா இங்கேயிருந்தால் கொஞ்சம் சரியாகிவிடுவாள் …” நாசூக்காக தனது எண்ணத்தை மருமகனிடம் கூறிவிட்டு சென்றாள் .

” மீரா ரொம்ப அசதியாக இருக்கிறாயா …? ஓய்வெடுக்க போகிறாயா …? “

கண்களை திறக்காமலேயே ” ஆமாம் …” என்றாள் .




” ஆனால் ..நான் உன்னுடன் முக்கியமான விசயம் பேசவேண்டுமே .நம் வீட்டிற்கு வருகிறாயா ..அங்கேயே உனக்கு அதிக வேலையில்லாமல் பார்த்துக்கொள்கிறேன் …,” நந்தகுமாரின் குரல் மிக அருகே கேட்க கண்களை திறந்து பார்த்த மீரா திகைத்தாள் .

கட்டிலின் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தவன் இப்போது  அவளுக்கருகே கட்டிலில் அமர்ந்திருந்தான் .அவளுக்கு இருபுறமும் தன் கைகளை கட்டிலில் ஊன்றியவன் அவள் அருகே குனிந்து …

” வருகிறாயா மீரா …? ” என்றான் .குரலில் ஏதோ ஒன்று …இதுவரை மீரா அறியாத ஒன்று …மீரா விழிகளை அகற்றி விழி்த்தாள் .

” பேசும் விழிகள் மீரா உனக்கு .நீ வாயே திறக்க வேண்டியதில்லை .உன் கண்களே பாதி வேலையை செய்துவிடுகிறது …” ஆட்காட்டி விரலை நீட்டி அவள் கண்ணிமைகளை மெல்ல வருடினான் .

மீரா திணறலுடன் அவனை பார்த்த போது அவன் குனிந்தான் .அவளது கன்னங்களை குறி வைத்து முன்னேறிய அவனது இதழ்களை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தினாள் .

” நான் இரண்டு நாட்கள் இருந்துவிட்டுத்தான் வரப்போகிறேன் …” முகத்தை திருப்பிக்கொண்டான் .

” ஓ…” என நிமிர்ந்தவன் தனது ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு எழுந்து நாற்காலியில் அமர்ந்தான் .

காபி கொண்டு வந்த அன்பரசியிடம் ” மீரா இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுக்கட்டும் அத்தை .நாளை மறுநாள் நானே வந்து அழைத்து செல்கிறேன் .தயாராக இரு மீரா …” அழுத்தமான குறிப்பு கொடுத்துவிட்டு வெளியேறினான் .

இவன் …இப்போது என்ன செய்ய வந்தான் …? எழுந்து அமர்ந்து யோசித்தாள் மீரா .முத்தமிட வந்தானா …என்னையா …எப்படி ….ஆனால் ஏன் …?

முதல்நாள்தான் முழுவதுமாக அவனை அணைத்து நின்றபோதும் முத்தமிட்ட போதும் சிறிதும் நெகிழாமல் நின்றவன் , இரவு …அவன் காதலியை அணைத்து நெகிழ்ந்து நின்றவன் இப்போது எப்படி …என்னிடம் இப்படி …?

மீராவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது .மண்டையை தட்டி ..தட்டி யோசித்து அவள் முடிவு செய்தது …இவனுக்கு அவன் அம்மா சொன்னதை நடத்தியே ஆகவேண்டும் .எந்த வழியிலாவது என்னை அழைத்து சென்று ஆகவேண்டும் …அதற்குத்தான் இந்த அருகாமையும் , கொஞ்சலும் ….

அப்படியா நான் கைபொம்மையாகி விட்டேன்..? .பொங்கிய கண்களை தன் வீட்டினரிடம் காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள் மீரா .

ஒரு வாரத்திற்காவது உன் வீட்டு பக்கம் திரும்புகிறேனா பார் …மனதிற்குள் கணவனை கறுவிக்கொண்டாள் .

ஆனால் அந்த நினைப்பிற்கு எதிராக மறுநாளே மீரா அங்கே போகும் நிலைமை வந்தது .




What’s your Reaction?
+1
20
+1
30
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
12 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!