Serial Stories சந்தியா ராகம்

சந்தியா ராகம்-13

13

“அவர் எதற்கு உங்களை அடித்தார்?  நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்?”

“நான் ஒன்றுமே செய்யவில்லை சந்தியா”

“பொய் சொல்லாதீர்கள்.பருப்பு உடைக்கும் குடும்பத்தார்களை நீங்கள் மிரட்டவில்லை?”

” இல்லை சந்தியா. உனக்கே தெரியும் தொழில் விஷயங்களில் அப்பாதான் எல்லாம் செய்வார். நான் சும்மாதான் இருப்பேன். இவ்வளவு நாட்களாக அப்பாவிற்கு கட்டுப்பட்டு தான் இருந்தேன். நம் காதல் விஷயத்தில் கூட …’அவன் சொல்ல சந்தியா முகம் சுளித்தாள்.

” காதலா? உங்களோடா…? இது எப்போதிருந்து…?’ கிண்டலாக கேன்டாள்.

 ரவிச்சந்திரனின் முகம் வாடியது. “நீ எப்படியோ சந்தியா, நான் உன்னை என் மனமார காதலித்தேன். அதனால்தான் என் அப்பாவுடன் போராடி உன்னையே மணமுடிக்க கேட்டு வர வைத்தேன்”

” ஆனால் மணமேடை வரை வந்துவிட்டு அப்பா பின்னாலேயே எழுந்து ஓடினீர்கள்” சந்தியா நினைவூட்டினாள்.

” கொஞ்சம் யோசி சந்தியா, அவ்வளவு தூரம் அப்பாவுடன் போராடி திருமணம் வரை வந்தவன் பாதியில் விடுவேனா? அப்பா மனது போல் அவர் பின்னால் போய் ,மெல்ல பேசி அவரை சமாதானப்படுத்தி மீண்டும் நம் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தேன். நீயோ அரை மணி நேரத்திற்குள் அடுத்தவனுக்கு மனைவியாகி விட்டாய். இதில் என்னுடைய தவறு எங்கே இருக்கிறது?”

 சந்தியா குழம்பினாள். ரவிச்சந்திரன் சொல்வது நிஜம்தான். அவன் வீட்டில் சட்டநாதனின் அதிகாரம்தான் எப்போதும். உனக்காக அப்பாவை எதிர்த்து பேசியிருக்கிறேன் தெரியுமா? என்று முன்பும் பலமுறை சொல்லியுருக்கிறான். ஒருவேளை அன்று இன்னும் சிறிது நேரம் காத்திருந்திருந்தால் அப்பாவை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வந்திருப்பானோ என்னவோ…

ப்ச் இதென்ன புது  அவஸ்தை…சந்தியா எரிச்சலுடன் நெற்றியை பிடித்துக் கொண்டாள்.

“தொழில் விஷயமாக என்றால் உன் புருஷன் என் அப்பாவைத் தானே தாக்க வேண்டும்? என்னையே ஏன் அடிக்கிறான். இதன் காரணமே வேறு. சந்தியாவை நினைப்பாயா? அவள் முன்னால் வருவாயா? இப்படி கேட்டு கேட்டுத் தான் என்னை அடித்தான்” ரவிச்சந்திரன் வலியுடன் திணறியபடி சொல்ல சந்தியா தலையசைத்து மறுத்தாள்.

” நான் நம்ப மாட்டேன்”

” நீ நம்ப மாட்டாய் என்று தெரியும் சந்தியா.ஏனென்றால் இப்போது அவன் அந்த அளவிற்கு உன்னை மயக்கி வைத்திருக்கிறான்”

” ரவிச்சந்திரன் என்ன பேசுகிறீர்கள்?”

 ” தவறாக இல்லை சந்தியா, நல்லவன் போல் வேடமிட்டு உன்னை அவன் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொண்டிருக்கிறான்.இவனை பற்றி சென்னையில் விசாரித்தோம்.இவனது தொழில் முறையே ரவுடியிசம்தானாம்.அடியாட்களை சுற்றிலும் வைத்துக் கொண்டு தாதா போல் இருப்பினும்”

தற்காப்பு கலைகள் பயின்றிருக்கிறேன், துப்பாக்கி வைத்திருக்கிறேன் என்ற ஜெயசூர்யாவின் குரல் மனதிற்குள் ஒலித்தாலும் மறுப்பாகவே தலையசைத்தாள் சந்தியா.”எதையாவது மனம்போல் உளராதீர்கள்”




” நான் இல்லை சந்தியா, இது அவனே என்னிடம் சொன்னதுதான். இப்போதுதான் உன்னை அவன் வழிக்கு இழுத்துக் கொண்டிருக்கிறானாம். உன்னை வைத்து நிறைய தொழில்களை இங்கே திட்டமிட்டிருக்கிறானாம். இந்த நேரத்தில் நான் இடையில் வந்து உன்னை கலைத்து விடக் கூடாதாம். என்னை பார்த்தாலே உன் மனம் மாறிவிடுமோ என்ற பயம் அவனுக்கு இருக்கிறதாம். அதனால் நான் இந்த ஊரிலேயே இருக்கக் கூடாதாம். எங்கேயாவது ஓடிவிட வேண்டுமாம்” இப்படி சொல்லிச் சொல்லித்தான் அடித்தான்.

 ரவிச்சந்திரன் தெளிவாக நீளமாக பேசியதில் மனம் கலங்கினாலும் மறுப்புடனேயே நின்றாள் சந்தியா.

” நான் சொல்வதை நம்பவில்லை என்றால் நீயே உன் புருஷனிடம் கேளேன். என்னை அடித்தானா என்று கேட்டுப் பாரேன்”

சந்தியா கணவனிடம் இந்தக் கேள்வியை கேட்க முடிவெடுத்தாள்.

ஜெயசூர்யா இரவு வெகு நேரம் கழித்துத்தான் வீடு திரும்பினான். “நாளை காலையில் கொஞ்சம் தாமதமாக வந்தால் போதும் கதிர்” என்று கதிர்வேலனை வீட்டிற்கு அனுப்பி விட்டு உள்ளே வந்தவன் அவனை எதிர்பார்த்து நின்றிருந்த சந்தியாவை கண்டதும் இறுகியிருந்த முகம் மாறி இலகுவானான்.

 இரு கைகளையும் விரித்துக்கொண்டு அவளை நெருங்கியவன் “சாரி டியர் கொஞ்சம் லேட்டாகிவிட்டது” என்றபடி அணைத்துக் கொண்டான்.

சந்தியா அசையாமல் நிற்க குனிந்து அவளை பார்த்தவன் “ஒரே வியர்வை நாற்றமில்ல.. குளித்துவிட்டு வந்து விடுகிறேன்” என்றபடி மாடியேறினான்.

 சந்தியா அவனுக்கான உணவை எடுத்து வைத்தாள்.குளித்துவிட்டு வந்தவனுக்கு சூடாக பரிமாறியபடி “ஏன் இவ்வளவு நேரம்?” விசாரித்தாள்.

” ஒரு முக்கியமான வேலை, தஞ்சாவூர் வரை போய்விட்டு வந்தேன்”

” என்ன வேலை?”

” அது… பிறகு சொல்கிறேனே, இப்போது ரொம்ப டயர்டாக இருக்கிறது”

” சரி இங்கே சட்டநாதனை போய் பார்த்தீர்களா?”

” இல்லையே… அவர் வேலை நாளைதான் பார்க்க வேண்டும்”

“ரவிச்சந்திரனை…?”

“அவன் முகத்தில் விழிக்க கூட நான் விரும்பவில்லை” கை கழுவி விட்டு எழுந்தவனின் முதுகை வெறித்தாள்.

” பொய்” என்றாள் அழுத்தமான குரலில்.

 திரும்பி அவளைப் பார்த்து புருவம் சுருக்கியவன் “என்ன பொய்?” என்றான்.

“நீங்கள் இன்று ரவிச்சந்திரனை சந்திக்கவில்லை? ” அவனை குற்றவாளியாக்கி நிறுத்தினாள்.

இல்லையென அவன் தலையசைக்க,ரௌத்ரமானாள்.” ஏன் சிறு விசயத்திற்கும் பொய் சொல்கிறீர்கள்.இன்றும் குடித்திருக்கிறீர்களா?”

ஜெயசூர்யா முகம் ரத்தமிழந்த நாளம் போல் சுருங்கியது.”பொய் இல்லை.அந்த ரவிச்சத்திரனை சும்மா சந்திக்கவில்லை.அடித்தேன்..ரத்தம் வருமளவு அடித்து நொறுக்கினேன்” என்றான் வேக குரலில்.

சந்தியாவிற்கு சே என்றானது.”செய்வதெல்லாம் பக்கா பொறுக்கித்தனம்.இதற்கு தொழில் காரணமென்ற சாயப்பூச்சு.இதை நீங்கள் செய்திருக்க மாட்டீர்களென நம்பினேன்.என் நம்பிக்கையை குலைத்து விட்டீர்கள்.நான் உங்களை வெறுக்கிறேன்” கத்தி விட்டு சந்தியா மாடியேற பின்னேயே வேகமாக சென்று பாதிப் படிகளில் அவளை மடக்கினான்.

” பொறுக்கி என்று பட்டம் சூட்டி விட்டாய்.பிறகும் உன்னிடம் நல்லவனாகவே நடித்துக் கொண்டிருப்பது எதற்கு? வாங்கிய பட்டத்திற்கேற்ப நடந்து கொள்ள வேண்டாமா? பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா?” ஒரு வித வெறியோடு குனிந்து அவள் இதழ்களை கவ்வினான்.

இந்த எதிர்பாரா தாக்குதலில் தடுமாறிய சந்தியா மூச்சுக்கு தவிக்க,அவள் இதழ்களை விடுவித்தவன்,”குடித்திருக்கிறாயா என்றாயல்லவா? குடிகாரன் நிதானமின்றி என்ன செய்வான் தெரியுமா?” மீண்டும் அவள் இதழ்களை ஆக்ரமித்தான்.

சந்தியா கால்கள் நடுங்க படிகளில் தடுமாற அவள் இடை பற்றி உயர்த்தி தன்னோடு இறுக்கி கொண்டான்.அவனது முத்தம் தொடர்ந்தது. அவள் கொஞ்சம் கொஞ்சமாக தன் வயமிழந்து கொண்டிருந்தாள்.நாளை என்றொரு நாள் வராது போகப் போவது போல் இன்றே அனைத்தையும் முடித்தேயாக வேண்டும்  போல் ஜெயசூர்யா சந்தியாவின் இதழ்களோடு யுத்தம் நடத்திக் கொண்டிருந்தான்.

அவன் வேகம் தாளாது சந்தியா தலையை பக்கவாட்டில் சரிக்க,அவள் தலையை பற்றி தன் தோளில் வாகாக  சாய்த்துக் கொண்டு மீண்டும் முத்தத்தை தொடர்ந்தான்.அவள் உதடுகள் வழியே உயிரை உறிஞ்சி எடுத்து விட துடித்துக் கொண்டிருந்தான்.




பல…நீள்…நெடு முத்தங்களுக்கு பிறகு கொஞ்சம் அவனது வேகம் மட்டுப்பட ,அப்போதும் மனமின்றியே அவளிடமிருந்து இதழ்களை பிரித்துக் கொண்டவன்,கண்கள் சொருக துவண்டு தோளில் கிடந்தவளை மெல்ல தன்னை விட்டு பிரித்தான்.உடன் அவள் தடுமாறுவதைக் கண்டவன் தாங்கி படியில் அமர வைத்தான்.படியேறி மேலே போனான்.

திண்மையும் கதகதப்புமாக அவ்வளவு நேரம் கணவனின் அரவணைப்பில் இருந்த சந்தியாவின் உடல் இப்போது அவனது விலகலை ஏற்றுக் கொள்ள முடியாது முரண்டியது.என்ன நடந்தது? ஏன் அப்படி அணைத்தான்? பிறகு ஏன் இப்படி விலகிப் போனான்?சந்தியா இரு கால்களையும் மடித்து உடலோடு இறுக்க கட்டிக் கொண்டு அண்ணார்ந்து மாடியை பார்த்தாள்.

நேரே போய் கேட்டு விடலாமா? ஆனால் எப்படி அவன் முகத்தை பார்ப்பது? ம்கூம் என்னால் முடியாது.அவனேதான் வர வேண்டும்.வருவான்தானே…? ஆமென்றது தண்ணென்று தடித்திருந்த அவள் உதடுகள்.சந்தியா எதிர்பார்ப்போடு படியிலேயே அமர்ந்து காத்திருக்க,ஜெயசூர்யா வந்தான்.

படியிறங்கும் அவனது காலடியோசையை கேட்டபடி திதும் திதும்மென துடிக்கும் இதயத்தை கால்களை இறுக கட்டி மறைத்தபடி அமர்ந்திருந்தாள் சந்தியா.அவள் அமர்ந்திருந்த படியில் அரை நொடி தயங்கிய அவன் கால்கள் உடனே தொடர்ந்து இறங்கின.

படபடவென கீழிறங்கியவன் முதுகு காட்டி நின்றபடி “நான் கிளம்புகிறேன்” என்றுவிட்டு வாசலுக்கு நடந்தான்.

சந்தியா ஒரு மாதிரி மலங்க மலங்க விழித்தபடி அவன் செல்வதை பார்த்திருந்தாள்.பார்வை மங்கலாகி காட்சிகள் மசமசப்பாகவும், வேகமாக கண்களை சிமிட்டி நீரை துடைத்துக் கொண்டு பார்த்த போது அவன் வீட்டை விட்டு வெளியே போயிருந்தான்.சந்தியாவின் மூளை வேலை செய்ய எடுத்துக் கொண்ட இன்னும் சில நிமிடங்களில் அவன் காரை எடுத்துக் கொண்டு போயே விட்டிருந்தான்.

எங்கே போகிறான்? எதுவும் போன் வந்ததோ? திடுமென வேலை வந்து விட்டதோ?இந்த ராத்திரியில் என்ன வேலை? இனி எப்போது வருவான்? விடிந்து விடுமோ? விதம் விதமான கேள்விகள் மனதுக்குள் மோத தவிப்புடன் வாசல் படியில் நின்றிருந்தாள்.

“எதுக்கம்மா இந்நேரத்தில் வெளியே நின்னுக்கிட்டு…ஐயா சீக்கிரம் வந்துருவாரு.கதவை பூட்டிக்கிட்டு உள்ளே போய் பத்திரமாக படுங்கம்மா” தோப்பு காவலுக்கென அவன் நியமித்திருந்த வாட்ச்மேன்.தோப்பு நுழைவு வாயிலில் இருப்பவரை அவன்தான் இங்கே அனுப்பியிருக்க வேண்டும்.

” அவர் எப்போது வருவார் வாட்ச்மேன்?” குழந்தை போல் அவரிடம் கேட்டாள்.

கருணை மின்னும் கண்களுடன் பார்த்தவர் ” வந்துடுவாரும்மா.நீங்க போய் தூங்குங்க.நான் இப்படி வாசலில் படுத்துக்கிறேன்” அங்கேயே பாய் விரித்து படுத்து விட்டார்.

சாவி கொடுத்த பொம்மையாய் மாடியேறி போய் படுத்தவளுள் தனிமையும்,வெறுமையும் மண்டிக் கிடந்தன.அந்த இரவு நீண்டு கொண்டே போனது.

மறுநாள் விடிகாலையிலேயே வந்து விட்ட கதிர்வேலன் “என்னாச்சு சந்தியா?” என இவளிடம் விசாரித்தான்.

“என்ன கதிர்…”

“நேற்று இரவு சார் என் வீட்டிற்கு வந்தார்.அவருக்கு ஏதோ அவசர வேலை வந்து விட்டதாம்.சந்தியாவை நீதான்டா கூடவே இருந்து பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்னு சொல்லிட்டு போய் விட்டார்.அப்படி என்ன வேலை?”

இதயத்தை யாரோ கையால் பற்றி பிசைந்தது போலொரு உணர்வில் தவித்தாள் சந்தியா.அவள் முகத்தை உற்றுப் பார்த்த கதிர்வேலன் ” இரவு சாரோடு சண்டை போட்டாயா?” என்றான்.




” நா…நான்…அ…அவர் அந்த ரவிச்சந்திரனை நன்றாக அ…அடித்திருக்கிறார்.அ…அதற்காக…”

“ஓஹோ…அந்த தகுதியில்லாதவனுக்காக நீ சாரிடம் சண்டை போட்டாயா?”

” க…கதிர் நா…நான்”

“அவனுக்காக நீ உன்னவரிடம் சண்டை போட்டாயானால்…அது அவரது மனதை எவ்வளவு பாதிக்கும்? உனக்கு புரியவில்லையா சந்தியா?”

” இல்லை கதிர்.அவர் என்னிடம் எதையோ மறைக்கிறாரென்றுதான்…”

” புடலங்காய் அப்படி எதை மறைத்தாரோ…நேற்று தஞ்சாவூர் முழுவதும் அலைந்து உனக்காக பார்த்து பார்த்து சேலைகளும்,நகைகளும் வாங்கி வந்தார்.எதற்கு தெரியுமா…அடுத்த மாதம் வரப் போகும் உன் பிறந்த நாளுக்காக.சந்தியாவிற்கு சர்ப்பிரைஸ் கொடுக்க பெரிய ஏற்பாடு செய்திருக்கிறேன் கதிர்.இப்போதிற்கு அவளிடம் எதுவும் சொல்லாதே என்றார்.இதையா மறைத்தாரென்கிறாய்?”

சந்தியாவின் கண்கள் கலங்கின ” இல்லை கதிர்.ரவிச்சந்திரன் விசயமாக…”

“‘ச்சீ திரும்ப திரும்ப அவனையே பேசாதே.எனக்கே இவ்வளவு கோபம் வருகிறதே…சாருக்கு எப்படியிருக்கும்.ஆமாம் அவனை தேடிப் போய் அடித்து உதைத்தார்தான்.காரணம் தெரியுமா? அவனோடு உனக்கு நிச்சயதார்த்தமான போது நீங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை கண்டபடி மார்பிங் செய்து நெட்டில் உலவ விட்டிருக்கிறான்.அதனை அந்த சட்டநாதனே  சாரிடம் சொல்லி இனி உனக்கு குடும்பமே கிடையாதென்று எக்காளமிட்டிருக்கிறார். உன் கடவர் அவன் வீட்டிற்கே போய் மிரட்டி  நெட்டில் ஏற்றிய புகைப் படங்களை அவனை வைத்தே டெலிட் பண்ண வைத்தார்.பிறகுதான் ஆத்திரம் தீர அவனை அடித்தார்”

சந்தியா மிகவும் தொய்ந்து போனாள்.” இதை நான் கேட்ட போதே அவர் சொல்லியிருக்கலாமே”

“இந்தக் கண்றாவியை எப்படி சொல்ல சொல்கிறாய்.விசயம் தெரிந்தால் நீ மிகவும் கூசிப் போவாயென்று எதுவும் பேசக் கூடாதென என்னையும் எச்சரித்து வைத்திருந்தார்”

சந்தியாவிற்கு ஐயோவென்றிருந்தது.தன் கன்னத்திலேயே சப் சப்பென்று அறைந்து கொள்ளலாம் போலிருந்தது. ” கதிர் நான் அவரை உடனே பார்க்க வேண்டும். என் போனை எடுக்க மாட்டேனென்கிறார்.உன் போனிலிருந்து கால் பண்ணேன்”

“நேற்று இரவே போன் செய்யாதே எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டுத்தான் போனார்”

“இ..இப்போ நான் என்ன செய்வது கதிர்”

“வேறு வழியே இல்லை.அவருக்காக காத்திருக்க வேண்டியதுதான்”

” ம்…உன் அந்த பெரிய ப்ரெண்ட்…இப்படியா மனைவியை தனியாக விட்டுப் போவார்?” இயலாமை கோபமாக மாறியிருக்க சந்தியா வெடித்த போது வாசல் பக்கம் அந்த சத்தம் கேட்டது.

எட்டிப் பார்த்த கதிர்வேலன்”இல்லை  சார் உனக்கு துணையையும் ஏற்பாடு செய்து விட்டுத்தான் போயிருக்கிறார்.பார் சந்தியா ” என்றான்.

அங்கே சுபாஷும் ,சுசீலாவும் மலர்ந்த முகத்துடன் வந்து கொண்டிருந்தார்கள்.




What’s your Reaction?
+1
25
+1
29
+1
1
+1
3
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!