Serial Stories நந்தனின் மீரா

நந்தனின் மீரா-19

19

ஐவிரலால் தலைகோதி
நுனிவிரலால் மீசை வருடி
முதுகு சாய்த்து டிவி பார்த்து
இயல்பாய் இருந்து தொலையாதே,
பெண்ணியல் தொலைந்து
தடுமாறுகிறது என் மனது .

” குழந்தையை கூட்டிட்டு போய் கிணற்றடியில் உட்கார வைங்க …” வெளியே குரல் கேட்க ,

” மீரா போம்மா .நீதான் தலைக்கு தண்ணி ஊத்தனும் …” அடுப்படியில் மகளுக்கு உதவியாக நின்றிருந்த மீராவின் அம்மா சொல்ல விளக்குமாற்றை கீழே போட்டுவிட்டு மீரா பின்னால் கிணற்றடிக்கு போனாள் .

சுற்றிலும் பெண்கள் சூழ்ந்திருக்க திவ்யா மனையில் உட்கார வைக்கப்பட்டிருந்தாள் .அவளது தலையில் தேய்ப்பதற்கு சீகைக்காயுடன் , எண்ணெய்யும் எடுத்துக் கொண்டிருந்தாள் மிருணாளினி .

வேக நடையுடன் போன மீரா அவள் கையிலுருந்த பொருட்களை ‘ வெடுக்கென ‘ பறித்துக்கொண்டாள் .

” இது திவ்யாவின் அத்தை செய்ய வேண்டிய சடங்கு .நான்தான் செய்வேன் …” சண்டையிட தயாராக நின்றபடி சொன்னாள் .

” நானும் அவள் அத்தைதான் ….” மிருணாளினியும் சண்டைக்கு தயாரானாள் .

” திவ்யாவின் தாய் மாமா மனைவியான அத்தைக்குரிய சடங்கு இது .இதனை நான் மட்டுமே செய்ய முடியும் .நீ தள்ளி நில்லு ….”

” எவ்வளவு திமிர் …சொந்தமென்று இவ்வளவு நாட்களாக நாங்கள் வாழ்ந்ததெல்லாம் வீணா …? ” சங்கீதாவும் , மிருணாளினியும் சண்டையை பெரிதுபடுத்த ஆரம்பிக்க….சுற்றியிருந்த உறவின பெண்கள் திகைக்க , உள்ளே வேலையாக இருந்த சுந்தரி பதட்டமாக வந்தாள் .

” மிருணா …மீரா கையில் சீகைக்காயை கொடுத்துட்டு உள்ளே வா …” என்றாள் .

” இப்படி அவமானப்படுத்தத்தான் எங்களை வர வைத்தீர்களா அண்ணி …” சங்கீதா கத்தினாள் .

” அத்தை …உங்களுக்கு அப்பாவை தெரியும்தானே .சும்மாவே உங்களை இங்கே அழைத்ததற்காக கோபித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியிலேயே உட்கார்ந்திருக்கிறார் .இப்போது இப்படி பிரச்சினையென்றால் அவ்வளவுதான் …” பிரவீணா கெஞ்சினாள் .

பிரவீணாவும் , குமரேசனும் சேர்ந்து போனில் சண்முகசுந்தரத்தையும் , சங்கீதாவையும் அழைத்திருந்தனர் .ஏற்கெனவே நந்தகுமாரின் திருமணத்தில் பிரிந்திருந்த தங்கை குடும்பத்துடன் இந்த சந்தர்ப்பத்தை வைத்து சேர்ந்து கொள்ளலாமென்று சண்முகசுந்தரம் குடும்பத்தோடு வந்திருந்தார் .

குருநாதன் இதற்காக பிரவீணாவை கோபித்துக்கொள்ள குமரேசன் இடையில் வந்து நான்தான் அவர்களை அழைத்திருக்கிறேன் .என் மகளின் விசேசம் என ஆரம்பிக்க ….ஏற்கெனவே மனத்தாங்கலுடன் இருக்கும் மாப்பிள்ளையை மேலும் கோபிக்க வழியின்றி குருநாதன் பேசாமல் இருக்க வேண்டியதாயிற்று .


ஆனாலும் சண்முகசுந்தரத்தை …வா என்று அழைக்கவில்லை .அவர் வீட்டில் முன்பக்கம் இருந்தால் குருநாதன் பின்பக்கம் இருந்தார் .குருநாதன் அழைக்கவில்லையென சண்முகசுந்தரமும் வீட்டினுள்ளேயே வராமல் வீட்டு முன் ஒரு சேரை போட்டு அதிலேயே அமர்ந்திருந்தார் .

சுந்தரிதான் பாவம் ….வாசலுக்கும் , பின்கட்டுமாக மாறி …மாறி அண்ணனுக்கும் , கணவனுக்குமிடையே அலைந்து கொண்டிருந்தாள் .அவள் இப்போது சங்கீதாவிடம் …

” அண்ணி இப்போது பிரச்சினை வந்தால் பிறகு நாம் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்க முடியாமலேயே போய்விடக்கூடும் .தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள் ….” கெஞ்சினாள்.

சங்கீதாவும் , மிருணாளினியும் மூஞ்சியை  தூக்கிக் கொண்டு வீட்டினுள் போய்விட்டனர் .சுந்தரி மீராவை கடுமையாக முறைத்தாள் .உள்ளே போய்விட்டாள் .

மீரா கனத்த மனத்துடன் திவ்யாவிற்கு எண்ணெய் வைத்து , சீகைக்காய் தேய்த்து குளிக்க வைக்க ஆரம்பித்தாள் .

சேலையின் முன்பக்க கொசுவத்தை சீராக எடுத்து விட்டு விட்டு திருப்தியாக எழுந்தாள் மீரா .தலை அலங்காரத்தை சரி செய்து , மல்லிகைசரங்களை கையில் எடுத்து அழகாக தலையில் வைக்க ஆரம்பித்தாள் .

” அத்தை நான் அழகாக இருக்கிறேனா …? ” கண்ணாடியில் பார்த்தபடி கேட்டாள் திவ்யா .

குச்சிக்கு கனமான போர்வையை சுற்றி விட்டது போன்ற தோற்றத்தில் நின்ற மருமகளை பார்த்தாள் மீரா .கனத்த சேலையும் , அடுக்கிய மல்லிகையுமாய் இச்சிறு பெண்ணிற்கு எதற்கிந்த பாரம் …என தோன்றினாலும் மலர்ந்த முகத்தோடு தன் அலங்காரத்தை பார்த்துக் கொண்டிருந்த அந்த குழந்தையை கண்டதும் …தானும் முகம் மலர்ந்து …

” உனக்கென்னடா அப்சரஸ் மாதிரி இருக்கிறாய் ….” கன்னம் வலித்து திருஷ்டி கழித்தாள் .

” பொய்தானே சொல்றீங்க …சோளக்கொல்லை பொம்மை போல இருக்கேன் …” சிணுங்கினாள் திவ்யா .
” அத்தை பொய் சொல்வேனாடா …? அழகா இருக்கிறாய் நீ …”

” ஆமாம்டா உன் அத்தை பொய் சொல்ல மாட்டாங்க .இன்னைக்கு நீ நிஜம்மாவே ரொம்ப அழகாய் இருக்கிறாய் …” சசிகுமார் உள்ளே வந்தான் .

” ஐ…அப்படியா சசி மாமா சொன்னா சரியாத்தான் இருக்கும் …” என்ற திவ்யாவின் திருப்தியை …

” இத்தனூன்டு உருவத்துக்கு இவ்வளவு பெரிய பட்டுச்சேலையை சுத்தினா எப்படி இருக்கும் …கண்ணால் பார்க்க முடியலை …” சிதறடித்தபடி வந்தாள் மிருணாளினி .

திவ்யாவின் முகம் விழுந்து விட்டது .

” சின்ன பிள்ளைகிட்ட இப்படித்தான் பேசுவியா மிருணா …? ” சசிகுமார் முறைத்தான் .

” அவளை அண்ணின்னு கூப்பிடுன்னு உன்னை எத்தனை தடவை சொல்லியிருக்கேன் …” சசிகுமாரை முறைத்துக் கொண்டே சங்கீதா வந்தாள் .

” அண்ணியா …அப்படிக் கூப்பிட எனக்கு எங்க அண்ணி இருக்காங்க இவள் எனக்கு மாமா மகள் மட்டும்தான் ….” சசிகுமாருக்கு கை தட்ட வேண்டும் போல இருந்தது மீராவிற்கு .




” தப்பு சசி .அவள் உன்னை விட ஒரு வயது மூத்தவள் .அவளை நீ சொந்தம் சொல்லித் தான் கூப்பிட வேண்டும் …” குரலை உயர்த்தியபடி வந்தான் நந்தகுமார் .

சசிகுமார் எப்படியும் போங்க ரீதியில் தோள்களை குலுக்கிவிட்டு வெளியே போய்விட்டான் .

இவன் ஒருத்தன் …பஞ்சாயத்து தலைவர் மாதிரி நியாயம் சொல்ல மட்டும் எங்கேயிருந்தாலும் ஓடி வந்துடுவான் …கணவனை முறைக்க கூட அவன் முகம் பார்க்க விரும்பாது திவ்யாவின் அலங்காரத்தை சரி செய்ய தொடங்கினாள் மீரா .

அந்த மிருணாளினியை பார்த்ததும் இவன் எப்படி உறைந்து நின்றான் .சுற்றிலும் நடப்பதே இவனுக்கு தெரியவில்லையே …

” மிருணா …நீ…நீயா …நீ …எப்படி …? ” கீழே விழுந்த சாமான்களை …அருகிலிருந்த மனைவியை மறந்து அவன் மாமன் மகளிடம் பார்வை பதித்திருக்க …உடல் கொதிக்க அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள் மீரா .

இப்போதும் தேடி வந்து இவளுக்கு சப்போர்ட்டா …?

நந்தகுமார் தன் பக்கம் பேசியதில் மகிழ்ந்த மிருணாளினி புதிதாய் தோன்றிய பாசத்தில் ” திவ்யா குட்டி வாடா ..உன்னை அத்தை கூட்டிட்டு போறேன் …” என அவள் கைகளை பிடிக்க …

” நான் மீரா அத்தையோட  வர்றேன் ….” திவ்யா மீரா கையை பிடித்தாள்.

” திவ்யா மிருணா கூட போடா …” அவளுக்கு முதுகு காட்டி நின்ற கணவனின் முதுகில் ஒன்று போட்டாலென்ன என தோன்றியது மீராவிற்கு .

திவ்யா மிருணாளினியின் கையை பிடித்து வெளியே நடக்க அவர்கள்  பின்னால் போன மீராவின் பின்னால் வந்த நந்தகுமார் ” முதுகில் ஒன்று போடுவதனால் இந்த ரூமிற்குள்ளேயே வைத்து போட்டுவிடு மீரா …” என்றான் தாழ்ந்த குரலில் .

அப்படித்தான் இவனை அடித்துக் கொண்டிருக்கிறேனாக்கும் ….

” ஆஹா …அப்படி முதுகை காட்டுவீர்களே …? ” முகத்தை நொடித்தாள் .

” நிச்சயம் காட்டுவேன் .உள்ளே வா …” என்றவன் குரலில் குறும்பு இருக்க …அவன் உள்ளே வந்து அவளுக்கு அடிக்க தோதாக முதுகை திரும்பி காட்டும் காட்சி மனதினுள் விரிய , மீராவின் இதழ்கள் விரிந்தன.

” ஹப்பா ..சிரிச்சாச்சா …இதற்காக சட்டையை சுழட்டி அடியெல்லாம் வாங்க வேண்டியதாயிற்று …” பலமாக அடி வாங்கியது போல் முதுகை தடவிக்கொண்டான் .

படக்கென சிரித்துவிட்டாள் மீரா .இந்த சத்தத்தில் திரும்பி பார்த்த மிருணாளினியின் கண்கள் கனன்றன.  .
” என்ன நீங்க இரண்டு பேரும் இப்படி கொஞ்சிக்கிட்டே நிற்க போறீங்களா …? ” கண்களை உருட்டியபடி கேட்டாள் .

” திவ்யா ..வா நாம் பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு பிறகு போகலாம் …” மீரா திவ்யாவின் கையை பிடித்திழுத்துக் கொண்டு பாட்டி வீட்டினுள் நுழைந்தாள் .

பாட்டி சந்தோசமாக பேத்தியை ஆசீர்வதித்து தலையணைக்கடியில் இருந்த சிறிய பெட்டியிலிருந்து ஒரு இரட்டை வட சங்கிலியை எடுத்து திவ்யாவின் கழுத்தில் போட்டார் .தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் .

பிறகு விருந்தினர்கள் ஒவ்வொருவராய் திருநீறு பூசி திவ்யாவை ஆசீர்வதித்தனர் .

மருமகளுக்கான சீர்வரிசை தட்டை கொடுக்கும் போது மீராவையும் அழைத்து அவளோடு சேர்ந்து கொடுத்தான் நந்தகுமார் .மிரணாளினி முகம் கருப்பதை திருப்தியாக ஓரக் கண்ணால் பார்த்தாள் மீரா .

பிறகு சாப்பாட்டு பந்தி .குனிந்து குனிந்து பரிமாறி இடுப்பு வலித்தது மீராவிற்கு .சசிகுமாரும் , குமரேசனும் , பிரவீணாவும் சேர்ந்து பரிமாறினாலும் மீராவால் சமாளிக்க முடியவில்லை .

” நந்துவை கூப்பிட்டு பரிமாற சொல்லிவிட்டு …நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா மீரா …” அவளது அசந்த தோற்றத்தை பார்த்துவிட்டு சொன்னாள் பிரவீணா .

சரியென்று விட்டு …வீடு முழுவதும் நந்தகுமாரை தேடினாள் .கண்ணில் படவில்லை .திடீரென ஒன்று தோன்ற மிருணாளினியை தேட அவளும் கண்ணில் படவில்லை .

ரயில் ஓடும் நெஞ்சத்துடன் பின்பக்கம் பார்த்துவிட்டு காணாமல் உள்ளே திரும்பியவள் ..திடீரென ஓரமாக இருந்த மொட்டை மாடி படிகளை பார்த்துவிட்டு தயக்கத்துடன் அதில் ஏறினாள் .

அங்கே …மொட்டை மாடியில் ஒருவரையொருவர் அணைத்தபடி நின்றிருந்தனர் நந்தகுமாரும் , மிருணாளினியும் .




What’s your Reaction?
+1
21
+1
23
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
13 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!