Serial Stories சந்தியா ராகம்

சந்தியா ராகம்-12

12

மறுநாள் காலை கீழே இறங்கி வராமல் மாடியிலிருந்தே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த கணவனை புன் சிரிப்புடன் கவனித்தபடி கீழே தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா.போதையில் கண்டபடி உளற வேண்டியது.பிறகு அதை எதிர் கொள்ள முடியாமல் ஒளிந்து திரிய வேண்டியது,செல்லமாய் அவனை வைதாள்.

முன்னொரு நாள் அவன் முகம் பார்க்க கூச்சப்பட்டு,தான் மறைந்து திரிந்தது நினைவில் வர,அவள் புன்னகையின் அளவு கூடியது.இன்று என் முறை. வரட்டும்,கவனிச்சுக்கிறேன் எண்ணியபடி அவன் வரவை எதிர்பார்த்திருந்தாள்.

வேலைக்கு வந்த கதிர்வேலன் வீட்டிற்குள் வராமல் தோப்பிற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்க சந்தியா போய் அவன் முன்னால் நின்றாள். இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு அவனை முறைக்க அவன் “ஐயையோ சந்தியா எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஒண்ணும் பண்ணல” அலறினான்.

“ஆமாம் நீ பச்சப்புள்ள வாயில விரல் வச்சா கடிக்க தெரியாது.நடிக்காதடா…ஏன்டா அப்படி பண்ணின?’

” அது…நம்ம சார்தான் இதை வைத்து பிசினஸ் பண்ணப் போறோம்,குடிச்சு பாருடான்னு சொன்னாரு.அதுதான் கொஞ்சமா குடிச்சேன்”அவன் காட்டிய கொஞ்ச அளவை பார்த்தவள்,”இது கொஞ்சமாடா?”கைகளில் அடித்தாள்.

“நீ வேற இத்தனூண்டு குடிச்சதுக்கே எனக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பிச்சுடுச்சு.இது சரிப்படாதுன்னு எஸ்ஸாயிட்டேன்.பாவம் சார்தான் என்ன செஞ்சாரோ?”

“ஏன் அப்படி சொல்கிறாய்?”

“அவர் நிறைய…இரு யோசித்து சொல்றேன்.அந்த ஆள் ஐந்து வகை கொண்டு வந்தார்.எல்லாவற்றிலும் இரண்டிரண்டு பாட்டில்கள்.நான் குடித்தது இரண்டே வகைதான்.சார் அப்போதே நான்கு வகைகளை டேஸ்ட் பண்ணி விட்டார்.அந்த ஆள் வேறு முழுக்க குடிங்க சார்,அப்போதுதான் ரிசல்ட் தெரியும்னு சொல்லிட்டே இருந்தார்.இன்னைக்கு நைட்டே டேஸ்ட் பார்த்து உங்களுக்கு சொல்றேன்னார்.பிறகு வரிசையாக ஊற்றி ஊற்றி குடித்து…ஏன் சந்தியா சார் நேற்று ஒரேடியாக ப்ளாட்டாயிட்டார்தானே?”

” அடேய் உங்களையெல்லாம்…” கையில் கிடைத்த குச்சியை அவன் மேல் எறிய ” ஐய்யய்யோ நானில்லை” என ஓடிப் போனான்.

 குடித்து கும்மாளம் போட பிசினஸ் ஒரு சாக்கு உங்களுக்கு…நான் யாருன்னு காட்றேன் இருங்க…தனக்குள் பேசியபடி நடந்தவள் குளக்கரைக்கு வந்திருந்தாள்.இதனை அழகாய் வடிவமைத்து சுத்தமாக பராமரித்து வருபவள் அவள்தான்.இந்த குளக்கரை அவள் மனதிற்கு எப்போதுமே  மிகுந்த இதத்தை தரும்.இன்றோ உற்சாகத்தோடு ஒரு வகை உல்லாசத்தையும் அவள் மனதிற்களித்தது.

அன்று ஜெயசூர்யா நின்றிருந்த மரத்தடிக்கு சென்றவள் அங்கிருந்து குளத்தை பார்த்தபடி சிறிது நேரம் நின்றிருந்தாள்.பிறகு அங்கேயே அமர்ந்து சுற்றுப்புற குளுமையையும்,காற்றையும் அனுபவித்தவள் மனம் முழுவதும் ஓர் மெல்லிய மயக்கம் பரவியிருக்க வீட்டிற்கு போனாள்.

“ஏன்டா நானே அவளுக்கு பயந்துட்டு கீழே இறங்காம இவ்வளவு நேரம் மாடியிலேயே இருந்துருக்கேன்.நீ அவகிட்ட நான் குடித்த கணக்கை ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறாயே…உன்னை என்ன செய்தால் தகும்?”

“ம்க்கும் சப்புக் கொட்டி குடிக்கும் போது தெரியலை.இப்போ கவலையா இருக்காக்கும்?இந்த லட்சணத்தில் இதை நீங்க பிசினஸா வேற பாக்க போறீங்க…இதுக்கு சந்தியா சம்மதிப்பான்னு நினைக்கிறீங்க?”

” பாவி…நல்ல பிசினஸ்டா இது.அவகிட்ட எதையாவது உளறி வைக்காதே.ஒயின் தயாரித்தால் தினமும் அதை குடிப்பேன்னு எப்படிடா நினைப்பாய்?”

“எல்லாம் நேத்து நீங்க குடிச்ச வேகத்தை பார்த்துதான்…”

“உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ?”

“ம்…இப்ப யோசிங்க. எனக்கு தெரியாது சாரே…உங்க பொண்டாட்டி காளியாத்தா அவதாரம் எடுத்து வந்துக்கிட்டிருக்கா.அவளை சமாளிக்கிறது உங்க சாமர்த்தியம்…”




” ஐய்யய்யோ எனக்கு அவ்வளவு சாமர்த்தியம் கிடையாதேடா…”

” ம்ம்…தொழில்ல மலையை புரட்டுவேன் வானவில்லை வளைப்பேன்னு அடிச்சு விடுவீங்கள்ல…அதுல பாதியை பொண்டாட்டி பக்கம் மடை மாத்தி விடுறது…”

“ஏன்டா நீ வேற..நல்ல நாள்லயே அவ கண்ணை பார்த்துட்டா எனக்கு பேச்சு வராது.இப்போ எப்படிடா…குடிச்சது கூட பெரிசில்ல..நிறைய அவகிட்ட உளறி வேறு வச்சிருக்கேன்னு நினைக்கிறேன்…”

” அப்படி எதை உளறினீங்க…?

“:ஐயோ…அதுதான்டா நினைவுக்கே வர மாட்டேங்குது.ஏதேதோ ஓவரா பேசுனேன்னு மட்டும் தெரியுது.என்ன பேசினேன்னு ஞாபகத்துல வர மாட்டேங்குது.என்னடா செய்வேன்…?”

ஜெயசூர்யாவும் ,கதிர்வேலனும் உள்ளே பேசிக்கொண்டிருந்ததை கேட்டவள் பீறிட்டு எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு வாசலில் நின்று சற்று நேரம் அவர்கள் பேச்சை கவனித்திருந்து விட்டு “நான் வேண்டுமானால் சொல்லட்டுமா?” என்றபடி உள்ளே வந்தாள். இருவரும் ஙே என்று விழித்து நின்றனர்.

“என்ன சந்தியா சொல்லப் போகிறாய்?”  கதிர்வேலன் கேட்க “உன் பிரண்ட் என்ன பேசினார் என்று..அந்த உளறல் எனக்கு நல்லாவே ஞாபகத்தில் இருக்கு, சொல்லவா?” கைகளைக் கட்டிக் கொண்டு நிதானமாக கேட்டபடியிருந்தவள் ஜெயசூர்யாவினுள் கலவரத்தை கிளப்பினாள்.

 ஐயையோ என்னென்ன உளறி வச்சேன்னு தெரியலையே… தவித்தான் அவன். எதையாவது பேசி காப்பாற்றுடா என்று கதிர்வேலை பார்க்க அவன் “பருப்பை மூட்டை கட்டுற வேலை இருக்குது. நான் வரேன்…” என்று ஓடிவிட்டான்.

 அடப்பாவி! உன்னை எல்லாம் சினேகிதன்னு நினைச்சு வச்சேனே… என்னை சொல்லணும் கதிர்வேலினை கரித்துக் கொட்டியபடி சந்தியாவை பார்த்து ஒரு மாதிரி ஹி…ஹி என இளித்து வைத்தான் ஜெயசூர்யா.

“ம்…அப்புறம் அந்த பிசினஸ்…” என்று சந்தியா இழுத்து நிறுத்தினாள்.

” அது நல்ல பிசினஸ்தான் சந்தியா. நீ பயப்படாதே நான் சாம்பிள் பார்ப்பதற்குத்தான் நேற்று குடித்தேன். தினமுமெல்லாம் குடிக்க மாட்டேன்.. இல்லை இனி குடிக்கவே மாட்டேன்”

” இதை நான் நம்ப வேண்டுமா? உண்மையை சொல்லுங்கள் நேற்று வேண்டுமென்றேதானே அதிகமாக குடித்தீர்கள் ?”சந்தியா ஆழ்ந்து பார்த்து கேட்க ஜெயசூர்யா தடுமாற்றமாய் தலை குனிந்தான்.

“வ… வந்து சந்தியா கொஞ்சமாக குடிக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்.வந்து உன்னிடம் கொஞ்சம் தைரியமாக பேச வேண்டும் என்று… என் மனதில் இருப்பதை உன்னிடம் சொல்ல வேண்டும் என்று அதற்கு சாதாரணமாக தைரியம் வராமல் இருந்ததால் கொஞ்சம் குடிக்கலாம் என்று நினைத்தேன். அது அப்படியே கூடிக் கொண்டே போய்விட்டது”

“பேச நினைத்தது உளறல் ஆகிவிட்டது சரியா?’

” உளறலா ? நிறைய உளறி விட்டேனோ?” அவளிடமே சந்தேகம் கேட்டான்.

” நிறைய…” அவள் கைகளை விரித்து காட்ட, விரிந்த கைகளைப் பற்றிக் கொண்டு “என்ன உளறினேன் சந்தியா?” என்றான் தயக்கமும் எதிர்பார்ப்புமாக.

 குப்பன்ற சந்தியாவின் முகம் சிவக்க ஜெயசூர்யாவினுள் ஆவல் வந்தது. “சொல் சந்தியா ப்ளீஸ்” அவள் தாடை  பற்றி முகம் உயர்த்தினான்.

” நான் குளிக்கும்போது ஒளிந்திருந்து பார்த்தீர்கள, அதை உளறினீர்கள்” சந்தியா வேண்டுமென்றே அவனை இடித்துக் கூற,ஒரு நொடி முகம் வாடி “ம்… பிறகு “என்றான் அவன் சாதாரணமாக.

” அதில் உங்களுக்கு பயம் இல்லையா?”

” எதற்கு பயம்? அப்போது என் மனதில் கல்மிஷம் இல்லையே. குடித்திருந்தாலும் அப்போதைய என்  உண்மை மன நிலையைத்தானே சொல்லியிருப்பேன்” ஜெயசூர்யாவின் உறுதியில் சந்தியாவின் மனம் லேசானது.

 இறகு போல் இலகுவாகி மேலே பறப்பதாக தன்னை உணர்ந்தாள். “ரொம்பவும் தன்னம்பிக்கைதான் ” பீறிட்ட தன் புன்னகையை அவனுக்கு காட்டாதிருக்க திரும்பினாள்.

திரும்பிய அவளின் தோளை பின்னிருந்து பற்றிக் கொண்டவன் “வேறு எதுவும் சொல்லவில்லை சந்தியா?” என்று குனிந்து காதுக்குள் கிசுகிசுத்தான்.

 “எதைப் பற்றி..?” கேட்கும்போதே சந்தியாவின் குரல் இன்பமாய் நடுங்கியது.

” இதைப் பற்றி…” என்றவனின் விரல் பின் நின்றபடி அவள் உதட்டில் படிந்தது. “எனக்கு நிச்சயம் தெரியும். இதனை நான் சொல்லி இருப்பேன். ஏனென்றால் இது நான் மிகவும் விரும்புவது…” அவளை தொடாமலேயே சுற்றியிருந்த அவனது வலக்கரத்தின் ஆட்காட்டி விரல் அவள் உதட்டின் வடிவை அளந்தது.

 சந்தியா இதழ்களை பிரித்து அவன் விரலை கடிக்க “ஏய்…”என்றபடி அவளை திரும்பியவன் அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி “சந்தியா…” என்று எதிர்பார்ப்போடு கண்களுக்குள் பார்த்து கேட்டான்.

 அவன் விழிகளை சந்திக்கும் தெம்பின்றி நாணத்துடன் சந்தியா விழிகளை தாழ்த்த “மை லவ்” என்று பிதற்றியபடி அவளை இறுக்க அணைத்துக் கொண்டான் ஜெயசூர்யா.

 இலக்கில்லாமல் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தவள்…வெகு நாட்கள் கழித்து தன்னிடத்தை அடைந்தது போன்ற பெருத்த நிம்மதி கிடைக்க சுகமாக அவன் அணைப்பிற்குள் அடங்கிக் கொண்டாள் சந்தியா.

 அப்போது “சார்..” என்ற குரல்கள் வெளியே கேட்க இருவரும் அவசரமாக பிரிந்து வெளியே வந்தனர். கொட்டை உடைக்கும் குடும்பத்தை சேர்ந்த சிலர் வெளியே நின்றிருந்தனர்.

” அந்த சட்டநாதனய்யா எங்களை ரொம்ப படுத்துகிறார் சார். முன்பு அவரிடம் கொஞ்சம் கடன் வாங்கி இருந்தோம். அந்த கடன் பத்திரங்களை வைத்துக் கொண்டு இப்போது அவரிடம்தான் வேலை பார்க்க வேண்டும். உங்களிடம் வேலைக்கு வரக்கூடாது என்று மிரட்டுகிறார். இதற்கு நீங்கள்தான் நியாயம் கேட்க வேண்டும்” என்றார்கள் கதறலாக.

“நான் பார்த்துக் கொள்கிறேன்.நீங்க போங்க…” என்று அவர்களை அனுப்பியவன் சட்டநாதனுக்கு போன் செய்தான்.

“அவர்களை என்னிடமிருந்து உன்னால் மீட்க முடியாது.யாரை வைத்து இங்கே நீ கொட்டை உடைப்பாயென்று பார்க்கிறேன்” சட்டநாதன் சவால் விட 

ஜெயசூர்யாவின் கண்கள் சிவந்தன.

“என்னிடம் மோதாதீர்கள் சட்டநாதன்.உங்களுக்கு தொழிலென்ற ஒன்றே இல்லாமல் செய்து விடுவேன்.ஆளே காணாமல் போய் விடுவீர்கள்”எச்சரித்தான். 

“நீதான்யா கொஞ்ச நாட்களில் காணாமல் போகப் போகிறாய்.பொண்டாட்டி குடும்பம் தொழில் என்று எதுவுமில்லாமல் பைத்தியம் போல் ரோட்டில் திரியப் போகிறாய் பாரேன்…” சட்டநாதன் மேலே பேசிக் கொண்டே போக கண்கள் சிவக்க இறுகிய முகத்துடன் கேட்டபடி இருந்தான்.பிறகு போனை நோண்டியபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.

 “என்ன ஆச்சு ?” சந்தியா அவன் தோள் தொட,தலை சாய்த்து அவள் கை மேல் கன்னத்தை பதித்துக் கொண்டவன்,” ஒன்றுமில்லை சந்தியா ,ஒரு அவசர வேலை , நான் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்” கிளம்பினான்.




” சட்டநாதன் சாரை பார்க்கப் போகிறீர்களா?”

” இல்லை வேறு வேலை கொஞ்சம் இருக்கிறது. அதை முடித்துவிட்டு பிறகு… சட்டநாதன் விஷயம் பேசலாம்” என்று கிளம்பிப் போனான்.

புறங்கையில் கணவனது கன்னக் கதகதப்பு படிந்து கிடக்க, குதூகலித்த உள்ளத்துடன் வீட்டிற்குள்ளேயே சுற்றிவர பிடிக்காமல் சந்தியா கோவிலுக்கு கிளம்பினாள். ஏனோ அவர்கள் ஊர் அம்மனுக்கு இன்று நன்றி சொல்ல வேண்டும் போல் இருந்தது.

 எதற்கு நன்றி…? எதற்கோ நன்றி சொல்ல வேண்டும்… தனக்குள் பேசியபடி கோவிலுக்குச் சென்று மனமாற அம்மனை வணங்கி விட்டு வெளியே வந்தாள். அப்போது குறுக்கு சந்திலிருந்து ஒருவன் ஓடி வந்து அவள் மேல் மோதி கீழே விழுந்தான். யாரது… கீழே கிடந்தவனை பார்த்தவள் அதிர்ந்தாள். அது ரவிச்சந்திரன். உடல் முழுவதும் அடி வாங்கிய இரத்த காயங்களுடன் இருந்தான். 

மிக பலவீனமாய் முனகியடி கிடந்தவனை பார்த்ததும் பரிதாபம் வர, “ஐயோ இப்படி யார் அடித்தார்கள்?” என்றாள்.

 அவன் பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “உன் புருஷன்தான் சந்தியா” என்றான்.




What’s your Reaction?
+1
28
+1
25
+1
3
+1
0
+1
3
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!