Serial Stories சந்தியா ராகம்

சந்தியா ராகம்-11

11

அந்த இடத்தில் காற்று முழுவதும் ஒருவகை பழ வாசனை விரவியிருப்பதை உணர்ந்த சந்தியா ஆட்காட்டி விரலால் லேசாக மூக்கை தட்டியபடி உள்ளே வந்தாள். அவள் கண்கள் அந்த கண்ணாடி பாட்டில்களில் இருந்தன.

” என்ன இது?” அவளது கேள்விக்கு ஜெயசூர்யா உடனே பதில் சொல்லவில்லை. “என்னுடைய மனைவி” ஆங்கிலத்தில் அருகில் இருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தினான். அப்போதுதான் அவன் எதிரே அமர்ந்திருந்த இருவரையும் கவனித்த சந்தியா வரவேற்பாய் தலையசைத்தாள்.

“உங்கள் மனைவி கம்பீரமான அழகு” அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் ஆங்கிலத்தில் சொல்ல “யா” என்று பெருமையாய் தலையசைத்துக் கொண்டவன் குவளையில் மீதமிருந்ததை வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டான். நாக்கை சப்தித்து சொட்டா எழுப்பியவன் “வெரி டேஸ்ட்” என்று சர்டிபிகேட் கொடுத்தான்.

 சந்தியா சட்டென அந்த பாட்டில்களை எடுத்து முகர்ந்து பார்த்து உணர்ந்து கொண்டு ஜெயசூர்யாவை முறைத்தாள். “சந்தியா இது…” பேச வந்தவனை நிறுத்து என்பதாக கையுயர்த்தியவள் விடுவிடுவென்று மாடியேறிப் போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

 அதன் பிறகும் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக கீழே இருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு வாசல் வரை போய் அவர்களை வழியனுப்பி விட்டு மாடியேறி வந்தான் ஜெயசூர்யா. அப்போதும் கையில் அந்த கண்ணாடி பாட்டில்களுடன் வந்தவனை எரிப்பது போல் பார்த்தாள்.

” இது என்ன கெட்ட பழக்கம்? ஏற்கனவே இந்த பழக்கமெல்லாம் உங்களுக்கு இருக்கிறதா?” கோபமாக கேட்டாள்.

” எது ஒயின் சாப்பிடுவதா? விஸ்கி பிராந்தி ஸ்காட்ச்  எல்லாமே சாப்பிடுவேன். அதற்காக குடிகாரன் என்று பட்டம் கட்டி விடாதே, பிசினஸ் பார்ட்டிகளில் இதெல்லாம் சாப்பிடுவது சாதாரணம்தான். ஆனால் இந்த வகை ஓயின் இப்போதுதான் ருசிக்கிறேன். ரொம்பவும் டேஸ்டி. நீயும் ட்ரை பண்ணி பார்க்கிறாயா சந்தியா?” கேட்டபடி அந்த குட்டி கண்ணாடி கோப்பையில் அவன் ஒயினை ஊற்ற சந்தியா பத்ரகாளியானாள்.

“எவ்வளவு தைரியம்? இந்தக் கன்றாவியையெல்லாம் நீங்கள் குடிப்பதே தவறு, இதில் எனக்கு வேறு சஜெக்ட்  செய்கிறீர்களா?”

” ஹேய் இது பிசினஸ்மா”

” எது வீட்டிற்குள்ளேயே ஆட்களை கூட்டி வந்து குடித்து கூத்தடிப்பதா?”

” ஸ்டாப்… ஸ்டாப் நான் என்ன கூத்தடித்துக் கொண்டிருக்கிறேன்? சந்தியா இது கேசோ ஒயின்(cashew wine).கேரளாவில் பாரம்பரியமாக தயாரிக்கும் பெனி(Feni)ஒயின் வகை”

“ஓஹோ பாரம்பரியமானதென்றால் ஆள் வைத்து வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிற்குள் குடிக்கலாமா?”

” ஏய் இது முந்திரி ஒயின்டி. முந்திரி பழங்களில் இருந்து தயாரிக்கப்படுவது. இதை கேரளாவில் பாரம்பரியமாக கிறிஸ்தவர்கள் அவர்கள் வீட்டிலேயே தயாரிப்பார்கள். இப்போது வந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக வீட்டில் இந்த ஒயின் தயாரித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களிடம் பார்முலா கேட்டு நாமும் அதனை தயாரிக்கலாம் என்று நினைத்து வரவழைத்தேன். இது பிசினஸ் சந்தியா”

” சை  இதென்ன பிசினஸ்? கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?”

” இங்கே பார் புரியாமல் பேசாதே, படித்த பெண் போல் புரிந்து நடந்து கொள். முந்திரிப்பழ ஒயினிற்கு மார்க்கெட்டில் இருக்கும் வேல்யூ உனக்கு தெரியாது. கோவாவில் இந்த வகை ஒயின் நான் குடித்திருக்கிறேன். ஆனால் அதைவிட இந்த கேரள பெனி மிக அருமையாக இருக்கிறது.சரியான முறைப்படி அவர்களின் வீட்டு தயாரிப்பு போன்றே இதனை செய்தோமானால் இது மிகப் பெரிய தொழிலாக உருவாகும்”

” இப்படி ஒரு தொழில் செய்து அதில் லாபம் பார்க்க வேண்டுமா?”

” தொழில் என்றால் எல்லாமே தொழில்தான் சந்தியா. விஷம் தயாரிப்பதும் ஒரு தொழில்தான். விஷத்தை போய் உற்பத்தி செய்வாயா என்று அந்த தொழிலை பழிக்க முடியுமா சொல் “

“விஷம் தயாரிப்பதற்கும் நீங்கள் செய்யும் தொழிலிற்கும் பெரிதான வித்தியாசம் கிடையாது”

” விஷம் சில இடங்களில் மருந்தாகும் தெரியுமா? இந்த ஒயின் கூட நிறைய இடங்களில் மருந்தாகும். அளவாக எடுத்துக் கொண்டால் எதுவுமே நல்லதுதான்.கேரளாவில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் சமயங்களில் இந்த ஒயினை வீட்டிலேயே தயாரிப்பது அந்த வீட்டுப் பெண்கள்தான். வீட்டினர் எல்லோருமே இதை அருந்துவதும் வழக்கம். அப்படி பாரம்பரியமாக வீடுகளில் தயார் செய்யும் ஒயினின் சுவையை நம்முடைய கம்பெனி ஒயினிலும் கொண்டு வரப் போகிறேன். அதற்கான பேச்சுவார்த்தையில்தான் இருக்கிறேன்”

 சந்தியா நெற்றியை பிடித்துக் கொண்டாள்.இவனை வாதாடி வெல்ல முடியாதென உணர்ந்தாள்.”என்னவோ செய்யுங்கள்.இதிலெல்லாம் என்னை இழுக்காதீர்கள்” சொல்லிவிட்டு சோபாவில் கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.




 ஜெயசூர்யா அறைக்குள் சென்று எல்லா வகையிலும் சிறிது சிறிதாக குடித்து டேஸ்ட் பார்த்துக் கொண்டிருந்தான். தனது லேப்டாப்பில் சில குறிப்புகள் எழுதிக் கொண்டான்.சரியான குடிகார பயலா இருப்பான் போலவே… சற்று முன் ஜெயசூர்யா சொன்னது போலவே அவனை நினைத்தவள், அவ்வளவு நேரமாக ஓரக்கண்ணால் அவனை கவனித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு உறங்க முயன்றாள்.

  நள்ளிரவு வரை ஜெயசூர்யாவின் வேலை நீடித்துக் கொண்டே போக தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். இறுதியாக லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு அறை விளக்கை அணைத்து இரவு விளக்கை எரிய விட்டவன் அறை வாசலில் வந்து நின்று “சந்தியா வா, உள்ளே வந்து படு” என அழைத்தான்.

 சந்தியா தூங்குவது போல் கண்களை இறுக மூடிக் கொள்ள மெல்ல நடந்து அவள் அருகே வந்தவன் “நீ தூங்கவில்லை தெரியும். எழுந்து வா” என்றான்.

” இல்லை தூங்கி விட்டேன்”வெடுக்கென  சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

” சரி தூங்கிவிட்டாய் வா.உள்ளே வந்து படு” தோள் தொட்டவனின் கையை தட்டிவிட்டாள்.

” நான் இங்கேதான் படுத்துக்கொள்ள போகிறேன்”

” ஏனோ? இப்போதெல்லாம் நாம் ஒரே பெட்டில்தானே படுக்கிறோம்.இன்று எதற்கிந்த ஊடல்?”

” ஊடலா? செம கோபத்தில் இருக்கிறேன். மூக்கு முட்ட குடித்துவிட்டு போதையில் இருப்பவர் பக்கத்திலெல்லாம் படுத்துக்கொள்ள மாட்டேன்”

” நீ நினைப்பது போல் அளவில்லாமல் குடிக்கவும் இல்லை, என்னை மறந்த போதையிலும் நான் இல்லை. இதை உனக்கு அறிய வைக்க, வேறு வழியில்லை, நீ என் அருகில்தான் படுத்துக்கொள்ள வேண்டும்”

” மாட்டேன்” குழந்தை போல் தலையாட்டி மறுத்துக் கொண்டிருக்கும் போதே “ஏய் “என்று பதறினாள்.

 ஜெயசூர்யா குனிந்து அவளை தன் இரு கைகளிலும் அள்ளியிருந்தான். “என்னை நான் நிரூபிக்க வேண்டுமே..” கிசுகிசுத்தபடி பூச்செண்டை போல் மென்மையாய் அவளை சுமந்து சென்று கட்டிலில் பத்திரமாய் இறக்கி விட்டான்.

” எப்படி இது போல் பாரமே இல்லாமல் இலகுவாய் பஞ்சு போல் இருக்கிறாய் சந்தியா?” கேட்டபடி அவன் அருகே அமர படபடத்த நெஞ்சுடன் சுவர் பக்கம் ஒடுங்கிக் கொண்டாள் அவள்.

” பேசாமல் படுத்து தூங்குங்கள்”

“ம் ” என்றவன் அவளைத் தாண்டி கை நீட்டி  எக்கி சுவர் பக்கம் இருந்த ஜன்னல்களை திறந்து விட்டான். சில்லென்ற இரவு நேர காற்று உள்ளே நுழைய வானில் இருந்த முழுமதியின் வெளிச்சமும் அறை முழுவதும் பரவியது.

” இந்த நிலவு வெளிச்சத்தில் அப்படியே வெள்ளியால் உருக்கி செய்த கோவில் சிலை போல் இருக்கிறாய் சந்தியா.வளைவும் நெளிவுமாக உன் உடல் ஷேப் ரொம்ப அழகு” அவன் கண்கள் தன் மேனி முழுவதும் பதிவதை உணர்ந்தவளின் உடல் சிலிர்த்துக் கொண்டது.தன் நினைவற்ற போதையில் இல்லையென்றாலும் மிதமாயொரு போதையுணர்வு அவனை ஆக்ரமித்திருப்பதை உணர்ந்தாள்.

” சரி…சரி இதெல்லாம் காலையில் பேசிக் கொள்ளலாம், படுங்க” 

அவனுடன் சரி மல்லுக்கு நின்று சண்டையிடக் கூட தெம்பிருக்கும்…இந்த வகையான அவனது பேச்சுக்களை ஏற்கும் தெம்பு தன்னிடம் கிடையாதென நினைத்தாள்.மிக உடனே அவன் பேச்சுக்களை நிறுத்த முயன்றாள்.ஆனால் ஜெயசூர்யாவிற்கு வாயை மூடும் எண்ணமில்லை.

” விடிந்து விட்டால்…இந்த நிலவு முடிந்து விட்டால்… என்னால் இப்படியெல்லாம் பேச முடியுமென்று தோன்றவில்லை சந்தியா. இன்றென்னவோ மனமும் உடலும் கூண்டை விட்டு பறக்கும் பறவை போல சிலிர்த்து கிடக்கிறது”

 பாட்டில் பாட்டிலாக ஊற்றி முழுங்கினால் அப்படித்தான்டா இருக்கும்… மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் குடிகாரனிடம் பேசி பலனில்லை என்று மௌனம் சாதித்தாள்.




” இதுபோல் ஒரு முழு நிலவு காலத்தில்தான் உன்னை முதன்முதலாக பார்த்தேன் சந்தியா” போதையின் பிடியில் ஜெயசூர்யா பேசிக் கொண்டே போக சந்தியா உடல் விதிர்த்தாள்.இதுதான்  அவளுக்கு தெரியுமே…

 இதுவரை ஜெயசூர்யாவின் கண்ணியமான புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால் அவன் பக்கம் ஈர்க்கப்பட்டாலும் முதன்முதலாக அவனை சந்தித்த பொழுது அபஸ்வரமாக அவளுள் இன்னமும் ஓங்கரித்துக் கொண்டேதானே இருக்கிறது.இப்போது தன் காதுகளுக்கு இமைகளில்லையே என மிக வருத்தப்பட்டாள்.

 “இந்த சொத்துக்கள் விஷயமாக உன் அப்பா பேசிய பேச்சுக்களால் எரிச்சலுற்று தோப்புக்குள் நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த குளத்தை பார்த்தேன். அழகான குளம் என்று அதனை ரசித்தபடி நின்றிருந்த போதுதான் நீருக்குள்ளிருந்து தாமரை போல் நீ எழுந்து வந்தாய். கந்தர்வப் பெண்ணொருத்தி குளக்கரையில் நீராடுகிறாள் என்றுதான் பிரமித்து உன்னை பார்த்தபடி நின்றேன். அம்மாவை இழந்து அப்பா இருந்தும் இல்லாமல் இருப்பவன்,அப்படி சொந்தங்களற்ற அனாதரவான நிலையிலிருந்த எனக்கு வரமளிக்க வந்த தேவதை போல் அப்போது என் மனதிற்கு பட்டாய்”

” ஓடி வந்து உன் மடியில் தலை சாய்த்து கொள்ள வேண்டும் போல் எனக்குள் ஓர் உந்துதல்.இதென்ன உணர்வென பிரமித்து நான் நின்று கொண்டிருந்த போதுதான் கதிர் வந்தான்.நீ ‘ச்சீ’ என்றுவிட்டு போனாய் பார்…அப்போது நான் உள்ளுக்குள் மரித்திருந்தேன்”ஜெயசூர்யாவின் குரல் கரகரத்தது.

சந்தியா மூச்சு விடக் கூட மறந்து அவன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.சற்று முன் காதுகளுக்கு இமைகளை விரும்பியவள் இப்போது உடல் முழுவதும் காதுகளாகி அவன் பேச்சுக்களை கேட்டிருந்தாள்.

“ரவிச்சந்திரனுடன் உன்னை தோப்பில் பார்த்த கணம்…” ஜெயசூர்யா நிறுத்த சந்தியா மனம் படபடத்தாள்.அவளுமே மறக்க விரும்பும் நிமிடங்கள்தானே அவை.

” அவன் பார்வை சரியில்லை சந்தியா.உன்னை தப்பாக பார்த்தான்.அவன் கண்களில் நரியின் தந்திரம் தெரிந்தது.உன் தோளை தொட்ட போது கூட…ச்சை அருவறுப்பாக நடந்து கொண்டான்.அந்த இடத்திலேயே அவனை ஒரே அடியில் பிளக்க வேண்டுமென்ற வெறி எனக்கு.ஆனால் நீ அவனுடன் இருந்தாய்.என் கைகளுக்கு எட்டாமல்…மிக தொலைவில்…அவன் பிடியில்…” 

உட்கார்ந்து அவள் முகம் பார்த்து பேசிக் கொண்டிருந்தவன் துவண்டு சரிந்து படுத்திருந்தவளின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான்.

“உடலை விட்டு உயிர் பிரிவது நமக்கு தெரியாது என்பார்கள்.ஆனால் அப்போது எனக்கு தெரிந்தது சந்தியா.என் உயிர் என்னை விட்டு பறந்து போவது போலிருந்தது” அதிர்ச்சியில் அவன் உடல் நடுங்குவதை உணர்ந்தாள்.சில நிமிடங்கள் பேச்சின்றி அவள் வயிற்றில் கன்னம் பதித்து படுத்துக் கிடந்தவன் தொண்டையை செறுமிக் கொண்டு மீண்டும் பேசத் துவங்கினான்.

 “உன் அப்பா கொடுத்த கல்யாண பத்திரிக்கையில் சந்தியா என்ற பெயரைப் பார்த்ததுமே அது நீதான் என்று மனதிற்கு பட்டுவிட்டது.வேறெந்த சிந்தனையுமின்றி வேகமாக திருமணத்திற்கு ஓடி வந்தேன். மணமேடையில் உன்னை மணமகளாக பார்த்தபோது நொறுங்கிப் போய் அமர்ந்திருந்தேன்.ஆனால் கடவுளின் கருணையால் சூழல் மாறி நானே மணமகனாகும் நிலைமை வந்த போது நிறைய குழப்பங்களிலிருந்தாலும்,மன மகிழ்வுடனேயே உன் கழுத்தில் தாலி கட்டினேன்”

” உன் அம்மா அப்பாவையே நீ ஒதுக்கியது எனக்கு பேரதிர்ச்சி.என்னையும் ஏற்றுக் கொள்ள மாட்டாயென நான் நினைத்திருக்க பலி பீட ஆடு போல் தலை நீட்டி நின்றாய்.அப்படியா என்னுடனான குடும்ப வாழ்வு உன்னை பழி கேட்கிறது? சொல் சந்தியா ஏன் அப்படி நினைத்தாயா?”தலையுயர்த்தி அவள் முகம் பார்த்து கேட்டான்.

“அது…அன்று நான் என் பெற்றோரின் பாவங்களை தலையில் சுமந்து கொண்டிருந்தேன்.நம் திருமண வாழ்வு எனக்கு விதிக்கப்பட்ட விதி என்று நினைத்துத்தான்…”

“அதாவது தலையெழுத்தே என வாழ எண்ணியிருக்கிறாய்..ம்…இத்தனை நாட்களில் நான் என்றாவது உன்னை அப்படி நடத்தியிருக்கிறேனே…சொல் சந்தியா”

அவள் மௌனமாக இருக்க,மெலிதாய் அவள் இடை பற்றி உலுக்கினான்.” பேசு சந்தியா.இப்படி மௌனமாகவே இருந்து என்னை கொல்லாதே.என்னுடைய இயல்பான ஆசைகளையெல்லாம் உன் மனம் நினைத்தே அடக்கிக் கொண்டிருந்திருக்கிறேன்.எத்தனையோ முறை உன்னை முத்தமிட வேண்டுமென தோன்றுவதை உனக்கு பிடிக்காதென்பதாலேயே செய்ததில்லை. 

இதோ இப்போது கூட உன்னை இறுக்கியணைத்து உன் இதழ்களை சுவைக்க ஆசையாக இருக்கிறது.ஆனால் இப்படி தள்ளியிருந்து புலம்பிக் கொண்டிருக்கிறேன். இதெல்லாம் உனக்கு புரிகிறதா சந்தியா..சொல்  சந்தியா சொல்”

 ஜெயசூர்யா தொடர்ந்து அவளை உலுக்க துவங்கினான்.அவன் உலுக்கலில் உடல் முழுதும் அதிர்ந்து கொண்டிருக்க, சந்தியா தனது கையை நீட்டி உயர்ந்திருந்த அவன் தலையை அமுக்கி  தன் வயிற்றோடு அழுத்தி படுக்க வைத்தாள்.”உஷ்” என்று மெலிதாய் சத்தமின்றி இருக்குமாறு ஓசை எழுப்பினாள்.

 வேகம் குறைந்தாலும் “எனக்கு பதில் சொல்லு சந்தியா” என்று முணுமுணுத்தபடியே கிடந்தான். தன் ஆட்காட்டி விரலை அவன் வாயின் மேல் வைத்து அழுத்தி பேச்சை நிறுத்தினாள்.

 அவன் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. உறக்கத்தின் பிடிக்குள் அவன் சென்று கொண்டிருப்பதை உணர்ந்த சந்தியா அவன் தூங்கிய பிறகும் வெகு நேரம் அவன் தலையை வருடிக் கொடுத்தபடியே இருந்தாள்.




What’s your Reaction?
+1
27
+1
20
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!